Published:Updated:

``விஷால் சார் என்னை தம்புள்ஸ் மாதிரி யூஸ் பண்ணுவார்..!’’ - ’புட்சட்னி’ நித்தியராஜ்

`மேயாத மான்', `சண்டக்கோழி 2', `கோமாளி' உள்ளிட்ட படங்களில் நடித்த நித்தியராஜ், பட அனுபவங்களை நம்மிடம் பகிர்கிறார்.

நித்தியராஜ்
நித்தியராஜ்

``எங்க அப்பா, அம்மா ரெண்டு பேரும் வேலைக்குப் போறதுனால, என்னை பாட்டி வீட்டுல விட்டுட்டுப் போவாங்க. பாட்டி வீட்டுக்கு பக்கத்துல இருந்த பரத் அங்கிள் என்னைப் பார்த்துட்டு, 'ஷார்ட் ஃபிலிம் எடுத்துக்கிட்டு இருக்கேன் வர்றீயா'னு கேட்டார். நானும் அவர்கூட நடிக்கப் போயிட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு பாட்டி வீட்டுக்கு வந்த அப்பா, என்னைத் தேட ஆரம்பிச்சிருக்கார். அப்போதான் பரத் அங்கிள்கூட ஷூட்டிங் போயிருக்கேன்னு எங்க பாட்டி சொல்லியிருக்கு. உடனே என்னைத் தேடிட்டு வந்துட்டார். நான் புத்தகம் விக்குற மாதிரி உட்கார்ந்து நடிச்சிட்டிருந்தேன். அப்போ என்னைப் பார்த்த அப்பா, 'டேய் புத்தகமெல்லாம் இப்படி தூசித் தட்டி விக்கணும்டா'னு சொல்லிக் கொடுத்தார். நான்கூட அப்பா என்னைத் திட்டுவாரோனு பயந்து போயிருந்தேன். கடைசில அப்பாவே எனக்கு முழு சப்போர்ட் பண்ணுனார். அப்படியே சில ஷார்ட் பிலிம்ஸ் நடிச்சேன். `புட்சட்னி’ டீம்ல ஒரு புரொமோ கன்டென்ட்ல நடிச்சேன். அதைப் பார்த்துட்டு நிறைய சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பிச்சிருச்சு.

Nithiraj
Nithiraj

``என்னோட முதல் படம் 'சிம்பா'. ஆனா, எடிட்டிங் வெர்ஷனில் நான் நடிச்ச காட்சியைத் தூக்கிட்டாங்க. அதுக்குப் பிறகு, தனுஷ் சாரின் பையனா 'மாரி 2' வில் நடிக்க வேண்டியது; அதுவும் மிஸ் ஆகிருச்சு. அப்புறம்தான் என்னோட நடிப்புல 'மேயாதமான்' ரிலீஸானது. அதே மாதிரி 'சூப்பர் டீலக்ஸ்' படத்துல ராசுக்குட்டி கேரக்டரில் முதலில் நான்தான் கமிட்டாகி நடிச்சேன். இடையில் கொஞ்சநாள் ஷூட்டிங் தள்ளிப்போனது. அந்த இடைவெளியில் நான் கொஞ்சம் வளர்ந்துட்டேன். அதனால என்னை படத்திலிருந்து தூக்கிட்டாங்க. ஆனா, அதுக்காக டைரக்டர் என்கிட்ட ஸாரி சொன்னார். நானும் 'ஓகே'ண்ணானு சொல்லிட்டேன். என்னைப் பார்க்குறவங்க பலரும் நான் ஏதோ சின்ன பையன்னு நினைச்சுக்குவாங்க. ஆனா, நான் பத்தாவது படிச்சிட்டிருக்கேன். நிறைய பேர் குள்ளமா இருக்கிறது வெச்சுக்கிட்டு என்னைக் கலாய்ப்பாங்க. ஆனா, குள்ளமா இருக்கிற சச்சின், மெர்ஸியெல்லாம் சாதிச்சிருக்காங்க. அதுமாதிரிதான் நானும்.’’

உங்களோட பேரன்ட்ஸ் அண்ட் டீச்சர் உங்க சினிமா ஆசைக்கு எவ்வளவு உறுதுணையா இருக்காங்க?

Nithiraj
Nithiraj

``ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எப்போவும் அப்பாதான் கூட வருவார். வீட்டுல எனக்கு நிறைய பேர் சப்போர்ட் பண்ணுவாங்க. முக்கியமா எங்க அக்காவுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் முழுக்க என்னோட வீடியோதான் இருக்கும். சினிமாவுல முதலில் நடிக்க வந்தப்போ அம்மா படிப்பு கெட்டுப் போயிரும்னு பயந்தாங்க. அப்பாதான் அவனுடைய திறமையை அவன் நிரூபிக்கட்டும்னு எனக்கு ஆதரவா வீட்டுல பேசுனாங்க. ஸ்கூல்ல என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் என்னை அதிகமா கலாய்ப்பாங்க. அவங்ககூட எங்கேயாவது வெளியே போற கமிட்மென்ட் இருக்கும். அந்த நேரம்னு பார்த்து ஷூட்டிங்லயிருந்து போன் வந்துரும், நடிக்கப் போயிருவேன். பசங்கதான் கோபப்படுவாங்க. இருந்தாலும் என்னோட படம் பார்த்துட்டு உற்சாகப்படுத்துவாங்க.’’

நிறைய ஹீரோக்கள்கூட நடிக்கிறப்போ எப்போதாவது அவர்களைப் பார்த்து பயந்ததுண்டா?

Nithiraj
Nithiraj

``பயம் இருக்கும். ஆனா, ஷூட்டிங் ஸ்பாட் போய், அவங்களைப் பார்த்ததுக்குப் பிறகு, அந்த பயமெல்லாம் போயிரும். இவங்களும் மனுசங்கள்தானேனு என்னோட வேலையைப் பார்க்கப் போயிருவேன். 'சண்டக்கோழி 2' படத்தோட ஷூட்டிங்போது வரலட்சுமி மேடம் நிறைய பிஸ்கட் கொண்டு வருவாங்க. அதை நானும் விஷால் சாரும் பிளான் போட்டு திருடி சாப்பிடுவோம். வரலட்சுமி மேடம், 'ஏன்டா திருடி சாப்பிடுறீங்க’னு கேட்டுட்டு அவங்களே பிஸ்கட் கொடுத்துட்டுப் போயிருவாங்க. விஷால் சாருக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் ரொம்ப போர் அடிச்சா என்கூடதான் பேசிட்டிருப்பார். 'நான் நிறைய வெயிட் போட்டுட்டேன்டா'னு சொல்லிட்டு என்னை தம்புள்ஸ் மாதிரி தூக்கிட்டு இருப்பார். 'பையனை ஏன் இப்படி கஷ்டப்படுத்துறீங்க’னு வரலட்சுமி மேடம் விஷால் சாரைத் திட்டுவாங்க.’’

நடிப்பைத் தவிர உங்களுக்குள்ள நிறைய திறமைகள் இருக்குனு கேள்விப்பட்டோமே?

``நிறைய எழுதுவேன். நானே கதை எழுதி முடிச்சிட்டு அதைக் குறும்படமா எடுத்து முடிச்சிருக்கேன். எனக்கு த்ரில்லர் ஜானர் படம் எடுக்கணும்னு ஆசை. சண்டைக் காட்சிகளும் பிடிக்கும். அதனால நிறைய சண்டைக் காட்சியிருக்கிற படமும் டைரக்‌ஷன் பண்ண ஆசையிருக்கு. இப்போ எடுக்கிற படமெல்லாம் என்னோட போனில்தான் ஷூட் பண்ணிட்டிருக்கேன். சீக்கிரமே நல்ல கேமரா வாங்கணும். எனக்கு தனுஷ் சார் மாதிரி நல்ல ஹீரோவா வரணும்னு ஆசை. அப்புறம் டைரக்‌ஷன் மற்றும் தயாரிப்பாளர் ஆகணும். இதுதான் இப்போதைக்கு என்னோட ஆசை.'’

விஜய்கூட நடிச்ச அனுபவம்?

`` `பிகில்' படத்துல அவர்கூட நடிச்சிருக்கேன். சின்ன ரோல்தான். நிறைய அவர்கூட பேச முடியல. ஆனா, நான் நல்லா நடிக்கிறேன்னு சொன்னார். அதே மாதிரி அட்லி சார் ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னை 'பட்டு'னுதான் கூப்பிடுவார். நல்லா பேசுவார்.’’