Published:Updated:

``நடிகர் விஜய் அம்மா மெசேஜ் அனுப்பினாங்க!" - சாதனாவின் நவராத்திரி டான்ஸ்

சின்னப் பொண்ணா இருந்தாலும் என்னால முடிஞ்ச அளவுக்கு கிளாசிக்கல் டான்ஸை மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்ப்பேன்.

sadhana
sadhana

`தங்கமீன்கள்', `பேரன்பு' திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர், சாதனா. தற்போது துபாயில் வசித்துவருகிறார். வெளிநாட்டில் வசித்துவந்தாலும், நம் பாரம்பர்ய பண்டிகைகளை அங்கிருந்தபடியே சிறப்பாகக் கொண்டாடிவருகிறார். கிளாசிக்கல் டான்ஸரான சாதனா. நவராத்திரியையொட்டி வித்தியாசமான முறையில் பக்திப் பாடல்களுக்கு நடனமாடி அதை யூடியூபில் தொடர்ந்து வெளியிட்டுவருகிறார்.

sadhana
sadhana

நவராத்திரியின் கடைசிநாளான நேற்று இறுதி வீடியோவை வெளியிட்டார். இந்தப் புதுமையான முயற்சி குறித்து சாதனாவிடம் பேசினோம். உற்சாகமாகப் பேசினார்.

``ஒவ்வொரு வருஷமும் நவராத்திரியைச் சிறப்பா கொண்டாடுவோம். இந்த வருஷம் புதுமையா கொண்டாடணும்னு வீட்டில் திட்டமிட்டோம். நவராத்திரியில் பாடக்கூடிய பக்திப் பாடல்களைத் தேர்வு செஞ்சு, அதற்கு நான் கிளாசிக்கல் டான்ஸ் ஆடறேன்னு பெற்றோர்கிட்ட யோசனை சொன்னேன். நான் கிளாசிக்கல் டான்ஸர். அம்மாதான் என் குரு. அவங்கதான் என்னுடைய ஐடியாவுக்கு ஏற்ப, டான்ஸ் சொல்லிக்கொடுத்தாங்க. நேற்று முன்தினம் நவராத்திரி முடிய, நேற்று விஜயதசமியையும் சேர்த்து மொத்தம் பத்து நாள்களுக்குப் பத்துப் பாடல்களுக்கு டான்ஸ் ஆடினேன்.

sadhana
sadhana

ஒரேநாள்ல நாலு பாடல்கள் வீதம், மூணு நாள்கள்ல பத்து பாடல்களையும் எங்க வீட்டுலயே ஷூட் பண்ணிட்டோம். அதை நானே எடிட் செய்தேன். தினம் ஒரு வீடியோ வீதம், நேற்றுடன் சேர்த்து 10 நாள்களும் யூடியூப்ல வீடியோக்களை வெளியிட்டோம். `நான் ஒரு விளையாட்டுப் பொம்மையா'னு நாலாவது நாள் வெளியிட்ட வீடியோவுல, எழுந்திரிக்காமல் உட்கார்ந்தபடி அபிநயம் மட்டுமே செய்திருப்பேன்.

என் நடனத்தைப் பார்த்தப் பலரும் நேரில், போனில், மெசேஜ் வாயிலாக என்னைப் பாராட்டினாங்க. நடிகர் விஜய் சாரின் அம்மா ஷோபா மேடம், `நல்ல முயற்சி! நேர்த்தியான நடனம். பெருமையாயிருக்கு. வாழ்த்துகள்'னு சொல்லி வாட்ஸ்அப்ல மெசேஜ் அனுப்பினாங்க.

sadhana
sadhana

புதுப்புது மக்களைச் சென்றடைந்தால்தான், எந்த ஒரு கலையும் அழியாமல் இருக்கும். அதுபோல, சின்னப் பொண்ணா இருந்தாலும் என்னால முடிஞ்ச அளவுக்கு கிளாசிக்கல் டான்ஸை மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்ப்பேன். டான்ஸ்ல அதிக ஆர்வம் செலுத்தினாலும், படிப்புக்குத்தான் முதல் முன்னுரிமை. இப்ப பிளஸ் டு படிச்சுட்டு இருக்கேன். எதிர்காலத்துல என் வாழ்க்கை எப்படி இருந்தாலும், நிச்சயம் டான்ஸை கைவிடமாட்டேன்" என்கிறார் மகிழ்ச்சியுடன்.