Published:Updated:

சோ - ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!

Cho Ramasamy - A Reporter's Diary
பிரீமியம் ஸ்டோரி
Cho Ramasamy - A Reporter's Diary

சோ... எதற்கும் அஞ்சமாட்டார். அவரிடம் ஒளிவு மறைவு கிடையாது!

சோ - ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!

சோ... எதற்கும் அஞ்சமாட்டார். அவரிடம் ஒளிவு மறைவு கிடையாது!

Published:Updated:
Cho Ramasamy - A Reporter's Diary
பிரீமியம் ஸ்டோரி
Cho Ramasamy - A Reporter's Diary

★ சினிமாத் துறையைச் சேர்ந்தவர் என்பதைவிட, பத்திரிகை ஆசிரியர் - நண்பர் - என்ற முறையில் பழக்கம் அதிகம். இவர் நாடகங்களில் பிரபலமாகும் முன் இவர் எழுதிய ரேடியோ நாடகம் ஒன்றில் நடித்திருக்கிறேன்.

★ ​​​​​​​சோவின் எழுத்தில்தான் கோபமும் வேகமும் இருக்குமே தவிர, பழகும் போது இரக்க சுபாவமே அதிகம் காணப்படும்.

★ ​​​​​​​இவரது 1000-வது நாடகம் மியூஸிக் அகாடமியில் நடக்கும்போது இடையே இவர் பேசினார். தன் நண்பர்களுக்கு நன்றி சொன்னார். சொன்ன விதத்தில் தவறு நேர்ந்து விட்டதோ என்னவோ - சரியாக நினைவில்லை - அது ரசிகர்களைச் சிரிக்க வைத்துவிட்டது.உடனே சோ சிம்ம கர்ஜனையில், ``ஸ்டாப் இட்... ப்ளீஸ் ஸ்டாப் இட்!" என்று குரல் கொடுத்தார்.கப்பென்று ஒரு நிசப்தம்!சோ தொடர்ந்தார் : `உண்மையிலேயே சொல்கிறேன், `விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் நண்பர்கள் இல்லையென்றால் என்னால் இந்த அளவு வளர்ந்திருக்க முடியாது. நான் பெற்றிருக்கும் பெயருக்கும் புகழுக்கும் அவர்கள்தான் காரணம்." - மேடையிலேயே சோ கண் கலங்கினார்.சிரித்தவர்கள் 'சூ' கொட்ட ஆரம்பித்தனர். அந்தக் கூட்டத்தின் பரிகாசச் சிரிப்பை அடக்கித் தன் பேச்சைக் கவனிக்க வைத்த சோவின் திறமை வியப்பை அளித்தது.

★ ​​​​​​​இது மட்டுமல்ல; பல மேடைகளில் கூட்டத்தினரோடு அவர் பேசுவது, கேள்விக்குப் பதில் சொல்லுவது எல்லாமே சுவையாக இருக்கும்.

Cho - A Reporter's Diary
Cho - A Reporter's Diary

★ ​​​​​​​முன்பு சில சினிமா விழாக்களில் எம்.ஜி.ஆரும் சோவும் பேசினார்கள். அப்போது இருவரும் மாற்றி மாற்றிக் கேள்வி கேட்டுப் பதில் சொல்லிக் கொள்வார்கள்; அல்லது ஒருவர் பேசும்போது மற்றவர் இடையே புகுந்து தன் எண்ணத்தைச் சொல்லுவார். கேட்பவர்களுக்குச் சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகிவிடும். அந்தக் கூட்டங்களை நான் தேடிக் கொண்டு போய் ரசித்திருக்கிறேன்.

★ ​​​​​​​சாதாரணமாகப் பெரிய பேச்சாளர்கள்கூட கல்லூரிக் கூட்டங்களுக்குப் போனால் மிக ஜாக்கிரதையாகப் பேசி விட்டு வந்து விடுவார்கள். ஏனென்றால், மாணவர்கள் கலாட்டா செய்து விடுவார்களோ என்ற பயம். ஆனால் பல கல்லூரிகளில் சோ பேசிக் கேட்டிருக்கிறேன். மாணவர்கள் செய்யும் தவறுகளைத் துணிச்சலாக எடுத்துச் சொல்லுவார். ``ஆசிரியர்களையும், போலீஸ்காரர்களையும் மதிக்காத மனிதனும் நாடும் உருப்படாது" என்று அடிக்கடி அடித்துச் சொல்லுவார்.

★ ​​​​​​​ஒருமுறை உடல்நலக் குறைவால் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார் சோ. அதற்குப் பிறகு - என்ன காரணமோ தெரியவில்லை - அவர் தலைமுடி உதிர ஆரம்பித்தது - தலை மொட்டையாயிற்று. முடி இல்லாத குறையை மறைக்க பம்பாயிலிருந்து ஒருவர் வந்து 800 ரூபாய்க்கு 'விக்' செய்து கொடுத்தார்.`விக்' வந்ததும் தலையில் மாட்டிப் பார்த்தார் சோ. ஒரு முறை காரில் ஏறி ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வந்தார். கண்ணாடி முன் நின்றார். சுற்றி இருந்தவர்கள், `ரொம்ப இயற்கையாக இருக்கிறது!' என்று பாராட்டினர்.

சோ மட்டும் ஏதோ சிந்தித்துக் கொண்டிருந்தார். திடீரென்று `விக்'கைக் கழற்றியெறிந்தார்.``என் தலை மொட்டையாக இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே... உலகத்தில் யாருமே இப்படிப்பட்ட தலையோடு இல்லையா? எதற்காக நான் அதை மூடி மறைத்து ஏமாற்ற வேண்டும்? உருவத்திற்கும் எண்ணத்திற்கும் என்ன சம்பந்தம்? இனி நான் இப்படியே மொட்டைத் தலையோடுதான் இருப்பேன்" என்று சொல்லி அப்படியே இருக்க முடிவெடுத்தார்.

★ ​​​​​​​அவர் எண்ணத்திலும் உண்மை இருந்தது. எதற்கு, யாரை, ஏன், ஏமாற்ற வேண்டும்?

★ ​​​​​​​சோவிற்குத் தைரியம் அதிகம். சில வருடங்களுக்கு முன் அண்ணா சாலையில் தி.மு.க-வின் மாபெரும் ஊர்வலம் ஒன்று போய்க் கொண்டிருந்தது.கூட்டத்தின் நடுவே சோ வந்து மாட்டிக் கொள்ளப் போகிறாரே என்று அலுவலகத்திலிருந்த நாங்கள் யோசித்துக் கொண்டிருந்தோம். ஏனெனில், அப்போது அவர் தி.மு.க-வின் கொள்கைகளைக் காரசாரமாக விமரிசித்துக் கொண்டிருந்தார்.சோ, டி.வி.எஸ்-ஸூக்குப் பக்கத்திலிருக்கும் ஸ்மித் ரோடில் காரை நிறுத்திப் பூட்டிவிட்டு, நடந்தே, ஊர்வலத்திற்குள் புகுந்து, அண்ணா சாலையைக் குறுக்கே கடந்து துக்ளக் ஆபீஸ் வந்துவிட்டார். சரியான துணிச்சல்!

★ ​​​​​​​எதற்கும் அஞ்சமாட்டார். ஒளிவு மறைவு கிடையாது. தவறு செய்தவர்களைக் கடிந்து கொள்வார். பின்னர், ``ஏதோ வேகத்திலே கோபிச்சுக்கிட்டேன். இருந்தாலும் நீ செய்தது தப்பு..." என்று வெளிப்படையாக வருத்தம் தெரிவிப்பார். 

– பாலா

(21.12.1980 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism