Published:Updated:

கோடம்பாக்கம் புள்ளைங்க என்னைக் கைவிடமாட்டாங்க! - மனம் திறக்கும் புலியூர் சரோஜா

புலியூர் சரோஜா
பிரீமியம் ஸ்டோரி
புலியூர் சரோஜா

குரூப் டான்ஸராவும் ஆடுவேன். சோப்ரா மாஸ்டர் இல்லாதப்போ, அவர் சார்பா நானே கொரியோகிராபியும் செய்வேன்

கோடம்பாக்கம் புள்ளைங்க என்னைக் கைவிடமாட்டாங்க! - மனம் திறக்கும் புலியூர் சரோஜா

குரூப் டான்ஸராவும் ஆடுவேன். சோப்ரா மாஸ்டர் இல்லாதப்போ, அவர் சார்பா நானே கொரியோகிராபியும் செய்வேன்

Published:Updated:
புலியூர் சரோஜா
பிரீமியம் ஸ்டோரி
புலியூர் சரோஜா

பளீர் நிற பட்டுப் புடவையில் சிரித்த முகமாக வரவேற் கிறார் புலியூர் சரோஜா. வரவேற் பறையை அலங்கரிக் கிறது, மகன் சத்யநாராயணனை அவர் கட்டித்தழுவும் புகைப்படம். ஒரே மகனை விபத்தில் பறிகொடுத்தவர், சினிமாவிலிருந்து மட்டுமல்ல, வெளி யுலகத் தொடர்புகளிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டது பெரும் சோகம்.

தமிழ் சினிமாவின் முதல் பெண் நடன இயக்குநரான சரோஜா, தென்னிந்திய திரை நட்சத்திரங்கள் பலரையும் ‘ஆடவைத்த’ பெருமைக் குரியவர். இவரை, வீடே கதியாக முடக்கிவைத்திருக்கிறது காலத்தின் இருண்ட பக்கம். மனதில் பொதிந்திருக் கும் வலிகளைக் காட்டிக்கொள்ளாதவ ராக, வாஞ்சையுடன் உபசரிப்பவருக்கு வயது 83.

“என் வீட்டுக்காரருக்கு 91 வயசா கிடுச்சு. ஆரம்பகாலத்துல இருந்தே மீடியா வெளிச்சம் படாம ஒதுங்கியே இருப்பார். ‘நீ வேணா பேட்டி கொடுத்துக்கோ...’ன்னு சொல்லிட்டு, ஸ்கூலுக்குக் கிளம்பிட்டார்” என்பவர், மகனின் நினைவாக சென்னையில் பள்ளி ஒன்றை நடத்துகிறார். அதை நிர்வகித்து வருகிறார் சரோஜாவின் கணவரும், குணச்சித்திரம் மற்றும் வில்லன் நடிகராக பன்முகம் காட்டியவருமான சீனிவாசன்.

திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்ட சரோஜா, வளர்ந்ததெல்லாம் கேரளாவிலுள்ள ஆலப்புழாவில். செல்வாக்கான குடும்பம். ஆனால், சகலத்தையும் விட்டுவிட்டு சென்னைக்கு இவரை அழைத்து வந்திருக்கிறது, நடனத்தின்மீதான காதல்.

கோடம்பாக்கம் புள்ளைங்க என்னைக் கைவிடமாட்டாங்க! - மனம் திறக்கும் புலியூர் சரோஜா

“ஏழு வயசுல அரங்கேற்றம் செஞ்சேன். அப்பவே நவரத்தினங்களால என்னை அலங் கரிச்சு அழகு பார்த்தாங்க என் பெற்றோர். அவங்க, எனக்கும் என் அக்காக்கள் ரெண்டு பேருக்கும், முதல்கட்டமா தலா நூறு சவரன் நகைகளை வாங்கி வெச்சிருந்தாங்க. பருவத் துக்கு வந்ததுமே என்னை ஸ்கூல்லேருந்து நிப்பாட்டிட்டாங்க. ஆனா, தொடர்ந்து டான்ஸ் கத்துகிட்டேன். சினிமா போட்டோ கிராபரா இருந்தார் என் அண்ணனோட ஃபிரெண்டு ஒருத்தர். ‘சினிமாவுல முயற்சி பண்ணு’னு அவர் சொன்னது, என் மனசுல ஆழமா பதிஞ்சுடுச்சு. பெரிய போராட்டத்துக்குப் பிறகு வீட்டுல சம்மதம் வாங்கிட்டு சென்னை வந்தேன்”

- ஜெமினி ஸ்டூடியோவில் ‘ஒளவையார்’ படத்தின் குரூப் டான்ஸருக்கான ஆடிஷனில் கலந்துகொண்ட சரோஜாவை, டபுள் ஓகே சொல்லி தேர்வு செய்திருக்கிறார், அந்தப் படத்தின் நடன இயக்குநரான சோப்ரா. பின்னர், அவரின் உதவியாளராகப் பத்து ஆண்டுகளில் பல நூறு படங்களில் பணியாற்றி யிருக்கிறார் சரோஜா.

“குரூப் டான்ஸராவும் ஆடுவேன். சோப்ரா மாஸ்டர் இல்லாதப்போ, அவர் சார்பா நானே கொரியோகிராபியும் செய்வேன். என்.டி.ராம ராவ், நாகேஸ்வர ராவ், ஜெயலலிதா, ராஜ் குமார்னு பெரும்பாலான நட்சத்திரங்களுக்கும் டான்ஸ் சொல்லிக்கொடுத்திருக்கேன். ஷூட்டிங்ல சிவாஜி அண்ணனைப் பார்த்தா பலரும் நடுங்குவாங்க. ஆனா, அவரையே மிரட்டி வேலை வாங்குவேன். ‘புலி மாதிரி வேலையை முடிக்கிறே’னு எனக்கு ‘புலியூர்’ங் கிற அடைமொழியைக் கொடுத்தார் எம்.ஜி.ஆர். எவ்வளவோ மறுத்தும், ‘இதய மலர்’ படத்துல என்னை மாஸ்டராக்கி அழகு பார்த்ததும் அவர்தான்!” - சினிமாவில் காலூன்றிய கதையைப் பகிர்ந்தவர், அதன்பிறகு நடன இயக்குநராகப் புகழ்பெற்றிருக்கிறார். 80’ஸ் திரை நட்சத்திரங்களின் வளர்ச்சியில் இவரின் பங்கு முக்கியமானது. அதனால்தான், அவர்களுக்கு சரோஜா என்றென்றுமே அன்புக்குரிய அக்கா.

கணவருடன்...
கணவருடன்...

“ ‘அக்கா’னு வாய் நிறைய கூப்பிடுவார் ரஜினி. நான் இல்லாட்டி டான்ஸ் ஆட மறுக்குற அளவுக்கு, அவரோட பெரும்பாலான படங்கள்லயும் நான்தான் டான்ஸ் மாஸ்டர். ‘மாமியாரே’ன்னு என் மேல பாசமா இருக்குற கமல், என்ன மூவ்வென்ட் கொடுத்தாலும் மறுக்காம ஆடுவார். பாக்யராஜ், மோகன், பிரபு, ராமராஜன்னு ஒவ்வொருத்தருக்கும் ஏத்த மாதிரி டான்ஸ் சொல்லிக் கொடுத்தேன். ஹேமமாலினி, ஸ்ரீதேவி, ராதிகா, ராதா, ரேவதினு நான் கண்டிப்புடன் ஆடவெச்ச பலருமே, ‘ஓஹோ’ன்னு பேர் எடுத்தாங்க. எந்த ரெஃபரன்ஸும் இல்லாம, பாடலோட சிச்சுவேஷனைக் கேட்ட உடனேயே டான்ஸ் ஸ்டெப்ஸை திட்டமிட்டுடுவேன்” - சரோஜாவின் கண்களும் ஃப்ளாஷ்பேக் பேசுகின்றன. ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு’, ‘காதலின் தீபம் ஒன்று’, ‘இளமை இதோ இதோ’, ‘பொட்டு வைத்த ஒரு வட்டநிலா’ உள்ளிட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல் களுக்கு நடனம் அமைத்திருக்கிறார். சரோஜாவின் வருகைக்காக, அமிதாப் பச்சன் காத்திருந்தது, சினிமா வரலாறு.

1960-களில் ஏராளமான மேடை நாடகங்களிலும் நடித்திருக்கிறார். அப்போது தனி நாடகக்குழு நடத்திவந்த சீனிவாசனின் நாடகங்களில் நடித்தபோது, காதல் மலர்ந்து, இருவரும் கரம்பிடித்துள்ளனர். இவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைப் பயணத்தில், அச்சு முறிந்ததுபோன்ற துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது, மகனின் இழப்பு. அதுகுறித்துப் பேச ஆரம்பிக்கும்போதே, சரோஜா வின் உடலும் குரலும் நடுங்கு கின்றன.

“காதல் கல்யாணத்தால, என் பிறந்த வீட்டின் அன்பை இழந்தேன். அதனால, கணவரும் நானும் தனித்தனி ட்ராக்ல வேலை செஞ்சோம். எதிர் காலத்துல யாரையும் நம்பி இருக்கக் கூடாதுனு சம்பாதிக்க ஓடுன ஓட்டத்துல, பையனுடன் நேரம் செலவிட தவறிட்டேன். பி.வாசு உட்பட பலரும் என் மகன் சத்யாவை ஹீரோவா நடிக்கக் கேட்டாங்க. அவனுக்கு சினிமாவுல ஈடுபாடே இல்ல. 1991-ல காலேஜ் படிப்பை முடிக்குற நேரத்துல, ஒரு ஆக்ஸிடென்ட்ல அவனோட விதி முடிஞ்சுடுச்சு. பிள்ளையோட இழப்பைத் தாங்கிக்க முடியாத தவிப்புல சுயநினைவை இழந்துட்டேன். கமல், விஜயகாந்த், சத்யராஜ் உட்பட பலரும் என்னைக் குணப்படுத்த ரொம்பவே உதவினாங்க. எஸ்.பி.முத்துராமனும் மனோரமாவும் தினமும் என் வீட்டுக்கு வந்து, எனக்குப் பழைய நினைவுகள் திரும்ப மெனக்கெட்டாங்க. இயல்பு நிலைக்குத் திரும்பினாலும், என் மனசுல எந்நேரமும் சத்யாவோட நினைப்புதான்.

டைட்டிலுக்காகவே ‘நான் பெத்த மகனே’ படத்துல ஆர்வமா வேலை செஞ்சேன். ‘இதுதான்டி என் கடைசிப் படம்’னு அழுதுகிட்டே மனோரமாகிட்ட சொன்னேன். அதுக்கப்புறமா, எத்தனையோ வாய்ப்புகள் வீடு தேடி வந்தும் விடாப்பிடியா தவிர்த்துட்டேன். பையனைப் பறிகொடுத்ததுக் காக, எனக்கு நானே பல வகையிலும் தண்டனை கொடுத்து கிட்டேன். ‘உன் முடிவு எதுனாலும் எனக்கும் சம்மதம்’னு ஆறுதலா இருந்தார் என் கணவர். எல்லா சொத்துகளையும் வித்து, நிறைய தானதர்மம் செஞ்சோம். அவன் நினைவா ஸ்கூல் ஆரம்பிச்சு, 30 வருஷங்களா நடத்திட்டிருக்கோம்...” தடதடவென கண்ணீர் சிந்த, சரோஜாவின் மெளனம் கலைய சில நிமிடங்கள் காத்திருந்தோம்.

“பக்கத்திலிருக்குற கோயிலுக்கு அடிக்கடி போறது மட்டும்தான். மத்தபடி வீடே கதியா இருக்கேன். சத்யாவைத் தவிர, டான்ஸ் பத்தின சிந்தனைதான் என் மனசுக்குள்ள அலைபாயும். இதுவரைக்கும் வாழ்ந்ததே போதும்பா... ஆண்டவனோட அழைப்புக்காக நானும் அவரும் காத்திட்டி ருக்கோம். எங்களுக்கு ஒண்ணுன்னா, நான் வளர்த்த கோடம் பாக்கத்து மகன்களும், தம்பிகளும் எல்லா காரியத்தையும் நிறைவா செய்வாங்கன்னு முழு நம்பிக்கை எனக்கிருக்கு...” என்று முந்தானையால் கண்களைத் துடைத்தபடியே சிரிப்பவருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இன்றி விடைபெற்றோம்.

புலியூர் சரோஜாவின் சுவாரஸ்யமான வீடியோ பேட்டி: