Published:Updated:

``48-ல 40... இதுதான் `மாநாடு’ சிம்புவுக்கு போட்ட ஸ்கெட்ச்!’’ - ராபர்ட் மாஸ்டர்

`சிம்பு இப்போ சபரிமலைக்கு மாலை போட்டிருக்கார். 48 நாள் விரதம் இருப்பார். அதுல 40 நாள் ’மாநாடு’ ஷூட்டிங்.’

சிம்பு
சிம்பு

டிராப் என அறிவிக்கப்பட்ட ’மாநாடு’ படம் தற்போது மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது. சபரிமலைக்கு மாலை போட்டு வந்திருக்கும் சிம்பு, சீக்கிரமே ’மாநாடு’ ஷூட்டிங்கிற்குக் கிளம்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ’சிம்புவுக்கு என்னதான் ஆச்சு’ எனக் கேட்க, அவரது நண்பரும் நடன இயக்குநருமான ராபர்ட்டிடம் பேசினோம்.

சமீபத்தில் நீங்கள் நடித்து வெளிவந்திருக்கும் ’அராத்து’ படத்தின் டிரெய்லரில், உங்க கெட்டப் சிம்பு மாதிரியே இருக்கே?

’’பலபேர் அப்படித்தான் சொல்றாங்க. இந்த டீஸரை நான் சிம்புகிட்ட காட்டினப்போ, அவரும் ‘என்னடா என்னை மாதிரியே இருக்க’ன்னு சொன்னார். 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ பட அஸ்வின் தாத்தா கெட்டப் மாதிரி, ’அராத்து’ படத்தில் என் கெட்டப் இருக்கும். ’கெட்டப் மட்டுமல்ல, நடக்கிற ஸ்டைலும் சிம்பு மாதிரியே இருக்கு’ன்னு சொல்றாங்க. ’சிலம்பாட்டம்’ படத்தில் நான் டான்ஸ் கோரியோகிராஃபி பண்ணிக்கிட்டிருக்கும்போது, அந்தப் படத்தோட இயக்குநர் சிம்புகிட்ட, ’ராபர்ட் உங்களை மாதிரியே பண்றார்ல’னு சொன்னதுக்கு, ‘நான்தாங்க அவனை மாதிரி பண்றேன்’னு சிம்பு சொன்னார். சின்ன வயசுல இருந்தே நானும், சிம்புவும் ரஜினி ரசிகர்களா இருந்ததால, அவரை மாதிரியே பண்ணிக்கிட்டு இருப்போம். இப்போவரை அது தொடருது." 

சிம்பு படங்களில் நீங்க கேமியோ டான்ஸ் பண்ணுவீங்க. இப்போ உங்க படத்துல சிம்பு கேமியோ பண்ணியிருக்காரா?

’’நான் கேட்டிருந்தா சிம்பு கண்டிப்பா பண்ணியிருப்பார். ஆனா, நான் அவர்கிட்ட கேட்கல. இந்தப் படத்தில் நான் ஒரு பாட்டு பாடியிருக்கேன். அதை சிம்புகிட்ட போட்டுக்காட்டி, ’ஷூட் பண்றதுக்காகத்தான் நான் பாடினேன். இந்தப் பாட்டை நீதான் பாடணும்’னு சொல்லியிருக்கேன். ரொம்பநாளா நாங்க ரெண்டுபேரும் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க ஆசை. ‘வேட்டை மன்னன்’ படத்துல அப்படி நானும், சிம்புவும் சேர்ந்து நடிக்கிறதா பேச்சுவார்த்தை நடந்தது. சிம்பு ஹீரோ, நான் வில்லன். அப்பறம் அந்தப் படம் டிராப் ஆகிடுச்சு. சீக்கிரமே நானும், சிம்புவும் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்.’’

சிம்பு படங்கள் தொடர்ந்து டிராப் ஆகிட்டே இருக்கே?

சிம்பு
சிம்பு

’’ஒரு படம் டிராப் ஆகுதுன்னா, அதுக்கு ஒரு காரணம் மட்டும் இருக்க முடியாது. பல காரணங்கள் இருக்கும். ஆனா, சிம்பு படம் டிராப் ஆகும் போது, சிம்புவை மட்டுமே காரணமா சொல்றாங்க. ஏன்னா, என்னை மாதிரி சிம்புவும் ஒரு முட்டாள். அதனால, அவர்மேல எல்லோரும் பழிபோடுறாங்க. பொதுவாகவே சிம்பு ராத்திரி தூங்கமாட்டார். கீ போர்டு வாசிக்கிறது, பாட்டு பாடுறதுன்னு நண்பர்கள்கூடதான் இருப்பார். அதிகாலை நான்கு மணிக்குத்தான் அவர் தூங்கப் போவார். அதனால, காலையில் எந்திருக்க லேட் ஆகும். அதனால, ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு லேட்டா வருவார். லேட்டா போனாலும், டக்கு டக்குனு ஒவ்வொரு ஷாட்டையும் ஓகே பண்ணிடுவார். இதையெல்லாம் கணக்கு பண்ணிதான் ’தொட்டிஜெயா’ படத்தோட ஷூட்டிங் முழுக்க நைட்ல நடத்துனாங்க. எந்தப் பிரச்னையும் இல்லாம 40 நாள்ல ஷூட் முடிஞ்சது. அதுக்காக, சிம்புவை வெச்சு ராத்திரி மட்டுமே ஷூட்டிங் எடுங்கனு சொல்லல. அவருக்கு ஏத்தமாதிரி பிளான் பண்ணிக்கோங்கனு சொல்றேன்!"

திடீர்னு சிம்பு சபரிமலைக்கு மாலை போட்டுட்டு வந்திருக்காரே?

சிம்பு - சுரேஷ் காமாட்சி
சிம்பு - சுரேஷ் காமாட்சி

``ஆமாங்க. எனக்கே ஷாக்கிங்கா இருந்துச்சு அது. ஒருவகையில் இதுவும் நல்ல விஷயம்தான். 'மாநாடு' படத்தை மறுபடியும் ஆரம்பிச்சிட்டார். எல்லோருடைய வாழ்க்கையிலும் ஏற்றம், இறக்கம் இருக்கும். சிம்புவுக்கு இப்போ இறக்கமா இருக்கு. கண்டிப்பா ஒரு ஏற்றம் வேணும். அது இப்போ கடவுளால நடக்கப்போகுதுன்னு நம்புறேன். ஆரம்பத்தில் `மாநாடு’ படம் பண்ணப்போறது உறுதியானதும், நானும் அதில் கோரியோகிராஃபி பண்றதுக்கான பேச்சு நடந்தது. இப்போ படம் தொடங்கப்போறதால, கண்டிப்பா அந்தப் படத்துல ஒரு மாஸ் பாட்டுக்கு நான் வொர்க் பண்ணுவேன்னு நினைக்கிறேன்.’’

சின்ன வயசுல இருந்தே சிம்புவுக்கு ஆன்மிக நாட்டம் இருந்துச்சா?

``சின்ன வயசுல இப்படியெல்லாம் சாமி கும்பிடமாட்டார். காதல் தோல்விக்குப் பிறகுதான் சிம்புவுக்கு ஆன்மிக ஆர்வம் வந்துச்சு. நல்ல விஷயம்தான். இப்போ சபரிமலைக்கு மாலை போட்டிருக்கார். 48 நாள் விரதம் இருப்பார். அதுல 40 நாள் ’மாநாடு’ ஷூட்டிங். விரதத்துல இருக்கிறதால, ராத்திரி சீக்கிரமா தூங்கி, காலையில் சீக்கிரமா எந்திருச்சு, சாமி கும்பிடணும். அதனால, எல்லாம் சரியா நடக்கும்னு நம்புறேன்."

``டென் டூ சிக்ஸ்... `மாநாடு’ ஷூட்டிங் சிம்பு வருவார்... கன்ஃபர்ம்!’’ - சொல்வது யார்?