சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

“கமல் கேள்வி கேட்கலைன்னா அதுவே பாராட்டுதான்!”

மேஸ்திரி ராமலிங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
மேஸ்திரி ராமலிங்கம்

சாபு சார் - ப்ரியதர்ஷன் சார் கூட்டணியில பல படங்கள் செட் போட்டிருக்கேன். சாபு சார் மிகச்சிறந்த கலை இயக்குநர்.

சினிமாவில் கலை இயக்கம் என்பது ஒரு கடல். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கிறேன் என்று சொல்வதையே செட்டில் இருக்கிறேன் என்று சொல்லுமளவிற்குக் கலை இயக்கப் பணிகளுக்கும் அவர்களால் போடப்படும் செட்டுகளுக்கும் மிகப்பெரிய பங்குண்டு. கலை இயக்குநர்கள் ஸ்கெட்ச் பண்ணித் தரும் வரைபடங்களில் உள்ள டிசைன்களை நேரில் கொண்டு வரும் பணியாளர்களுக்கென்று தனிச் சங்கமே இருக்கிறது. அந்தச் சங்கத்தின் தலைவரும் 1000 படங்களுக்கு மேல் செட்டமைத்துக் கொடுத்து நம்மை பிரமிக்கச் செய்தவருமான மேஸ்திரி ராமலிங்கத்தை ஒரு படத்தின் செட் அமைக்கும் பணிக்கிடையில் சந்தித்தேன்.

‘‘என் சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் குருவாடிப்பட்டி கிராமம். ஏதோ ஒரு வேலைக்குப் போயிடுவோம்னு நினைச்சு 1978-ல சென்னைக்கு வந்தேன். அப்போ நான் முதன்முதல்ல கால் வெச்சது வாஹினி ஸ்டூடியோவுலதான். ஆனா, எனக்கு விவசாயத்தைத் தவிர எதுவும் தெரியாது. கொஞ்சம் கொஞ்சமா கார்ப்பென்டர் வேலையைக் கத்துக்கிட்டேன். ராஜீவன் சார், பிரபாகர் சார், முத்துராஜ் சார்னு எல்லா ஆர்ட் டைரக்டர்களும் எனக்கு உறுதுணையா இருந்தாங்க’’ என உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.

“கமல் கேள்வி கேட்கலைன்னா அதுவே பாராட்டுதான்!”

‘‘ஏவிஎம், பிரசாத் மாதிரியான தயாரிப்புல உருவான படங்களுடைய டைட்டில் கார்டுல ‘அரங்க அமைப்பு’ன்னு போட்டு எங்களுடைய பெயர் வரும். ஆனா, இப்போல்லாம் டைட்டில் கார்டுல எங்களுடைய பெயர் வர்றதில்லை. அதை நாங்களும் எதிர்பார்க்கிறதில்லை. நான் சினிமாவுக்குள்ள வந்து 43 வருடங்களாகிடுச்சு. அதுக்குப் பிறகுதான், எங்களுக்கான யூனியனே ஆரம்பிச்சாங்க. சின்னையான்னு ஒருத்தர் சாபு சிரில் சார்கூட இருந்தார். நானும் சாபு சார்கூடதான் இருந்தேன். சின்னையாதான் இந்தப் படத்துக்குப் போ, அந்தப் படத்துக்குப் போன்னு சொல்லுவார். அங்கெல்லாம் போய் செட் போட்டுத் தருவேன். ‘சிறைச்சாலை’ படத்துக்காக ரெண்டு மாசம் அந்தமான்ல தங்கியிருந்து செட் வேலை பண்ணியிருக்கேன். ஆர்ட் டைரக்டர் பிரபாகர் சார்கூட பல படங்கள் வேலை செஞ்சிருக்கேன். அதுல ‘அன்பே சிவம்’ ரொம்ப முக்கியமான படம். ரயில் விபத்து நடக்கிற சீன் எடுக்க அவ்ளோ மெனக்கெட்டோம். உண்மையாவே விபத்து நடந்திடுச்சுன்னு எதிர்ல வந்த ரயில் டிரைவர் ரயிலை நிறுத்திட்டார்’’ என்றவர், ‘விருமாண்டி’ படம் பற்றி நினைவுகூர்ந்தார்.

“ஜெயில், ஜல்லிக்கட்டுன்னு எல்லாமே செட்தான். சென்ட்ரல் ஜெயில் எப்படி இருக்கணும்னுகூடத் தெரியாது. கமல் சார்தான் நிறைய ரெஃபரென்ஸ் கொடுத்தார். ‘சிறைச்சாலை’ பண்ணியிருந்த அனுபவம் ‘விருமாண்டி’ ஜெயில் செட் போட கொஞ்சம் உதவியா இருந்தது. ஜல்லிக்கட்டு நடக்கிற வாடிவாசல், வீடு, தெருக்கள்னு அந்தப் படத்துல 90% செட்தான். ஆனா, படம் பார்க்கும்போது எதுவும் செட் மாதிரி தெரியாது. ‘ஹே ராம்’, ‘அன்பே சிவம்’, ‘சிங்காரவேலன்’, ‘விருமாண்டி’, ‘தசாவதாரம்’ படத்துல கிருஷ்ணவேணி பாட்டி வீடு, ரங்கராஜ நம்பியுடைய போர்ஷன், ‘மருதநாயகம்’னு நிறைய படங்கள் கமல் சார்கூட வேலை செஞ்சிருக்கேன். செட் நல்லாருந்ததுன்னா எந்தக் கேள்வியும் கேட்கமாட்டார் கமல் சார். அவர் கேள்வி கேட்கலைன்னாலே அது பெரிய பாராட்டுதான்’’ என்றவர், ‘மதராசப்பட்டினம்’ படத்தின் செட் பணிகளைப் பற்றிப் பேசுகிறார்.

‘‘அந்தப் படத்துக்கு செல்வாதான் ஆர்ட் டைரக்டர். சாபு சார்கிட்ட அசிஸ்டென்டா இருந்தவர். முதல்ல அவங்க பிளான் பண்ணுனபடி நடத்த முடியலை. அப்புறம் என்னைக் கூப்பிட்டார் செல்வா. இயக்குநர் விஜய் சார் அப்போதான் எனக்கு அறிமுகம். மைசூர்ல செட் போட்டுக் கொஞ்சம் எடுத்தோம். அப்புறம், சென்ட்ரல் ரயில்வே ஜங்ஷனை அப்படியே செட்டா போடணும்னு ஒரு பேக்கேஜ் பேசி அந்த வேலையை என்கிட்ட ஒப்படைச்சாங்க. அந்த செட்டுக்குக் கொடுக்கப்பட்ட பட்ஜெட் குறைவுதான். இருந்தாலும் கொடுத்த பட்ஜெட்ல செட் போட்டுக் கொடுத்தேன். அந்த செட் இன்னிக்கு வரை பேசப்பட்டுக்கிட்டிருக்கு. அதிலிருந்து இப்போ வரை விஜய் சார் என்ன படம் பண்ணினாலும் என்னைக் கூப்பிடாமல் இருக்கமாட்டார். ‘மதராசப்பட்டினம்’ ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு செட் போடணும்னு பிளான் பண்ணினாங்க. கமல் சார்தான் விருந்தினர். ‘ட்ராம் செட் போட்டு அதுல கமல் சார் வந்து இறங்கி, சென்ட்ரல் ஜங்ஷனுக்குள்ள போகுற மாதிரி தத்ரூபமா ப்ளக்ஸ் போடுறோம். உள்ள டிரெயின் செட் போட்டுத் தர்றேன். அதுல கமல் சார் ஏறினவுடன் நான் அதைத் தள்ளுறேன். நீங்க பேக் கிரவுண்ட்ல சவுண்டு கொடுத்திடுங்க. ஒரு இடத்துல வந்து அந்த செட் டிரெயின் நிற்குது. அங்க கமல் சார் என்ட்ரி’ன்னு சொன்னேன். விஜய் சார் பயங்கரமா சிலாகிச்சுட்டார். அதைத்தான் பண்ணினோம். ‘தலைவி’ படத்துல ராஜாஜி ஹால், ஒரு பாடலுக்கான செட், ப்ளைட்டுடைய இன்டீரியர் இதெல்லாம் பண்ணிக் கொடுத்தேன்’’ என்றவரிடம் “சாபு சிரில்கூட அத்தனை படங்களுக்கு செட் போட்டுக் கொடுத்திருக்கீங்க. இப்போவும் அவருடன் தொடர்பில் இருக்கீங்களா ?” என்று கேட்டேன்.

“கமல் கேள்வி கேட்கலைன்னா அதுவே பாராட்டுதான்!”

‘‘சாபு சார் - ப்ரியதர்ஷன் சார் கூட்டணியில பல படங்கள் செட் போட்டிருக்கேன். சாபு சார் மிகச்சிறந்த கலை இயக்குநர். 2000-ல இந்தியில அனுபம் கேர் ஒரு படம் இயக்கினார். அப்போ சாபு சிரில் சார்கூட போய் நான்தான் செட் போட்டேன். ‘மும்பை வந்திடுங்க ராமலிங்கம். இங்க வொர்க் பண்ணலாம்’னு சொன்னார். நான்தான் போகலை. அவர் மும்பைக்குப் போகுற வரைக்கும் சாபு சாருக்கு நான்தான் செட் போட்டுக் கொடுப்பேன். இப்போவரை நல்ல தொடர்புல இருக்கோம்” என்றார்.

‘‘ஆர்ட் டைரக்டர்கள், தயாரிப்பு நிறுவனம், இயக்குநர்கள்னு ஒவ்வொரு படத்துக்கு ஒவ்வொருத்தர் மூலமா வாய்ப்புகள் வரும். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் படங்களுக்கு என்னைக் கூப்பிடுவாங்க. இப்போகூட நயன்தாரா நடிக்கிற படத்துக்கு பஸ் செட் போட்டுக் கொடுத்தேன். அந்த பஸ் நகராது. ஆனா, உண்மையான பஸ் மாதிரியே இருக்கும். அதே மாதிரி ‘அன்பறிவு’ங்கிற படத்துக்கு 45 அடியில ஒரு தேர் செட் போட்டுக் கொடுத்தேன். செம கம்பீரமா இருக்கும். ‘கர்ணன்’ படத்துக்காகத் திருநெல்வேலியில செட் போட்டாங்க. அதுக்கு என்கிட்ட வேலை செஞ்ச பையன்தான் செட் போட்டான். ரொம்ப நல்லா பண்ணிருந்தாங்க’’ என்று பெருமையாகச் சொன்னவரிடம், ‘பார்க்க நடிகர் மாதிரி இருக்கீங்களே! உங்களுக்கு நடிக்க ஏதும் வாய்ப்பு வந்ததா?’ என்று கேட்டேன்.

‘‘ம்ம்... வந்ததே! ‘விருமாண்டி’ படத்துக்காக கமல் சார் நடிக்கக் கூப்பிட்டார். அந்தச் சமயத்துல பிரபாகர் சார், ‘ராமலிங்கம் நடிக்க வந்துட்டா, செட் யாரை வெச்சுப் போடுறது’ன்னு சொல்லிட்டார். அதனால, நடிக்கலை. தவிர, ஒரு துறையில நான் பலமா இருக்கேன். அதை விட்டுட்டு வேற ஒண்ணு செய்யப் போய், உள்ளதும் போயிடுச்சுன்னா என்ன பண்றதுன்னு ஒரு தயக்கமும் இருந்தது. இப்போ நான் ‘ஆயிரம் பொற்காசுகள்’னு ஒரு படத்தைத் தயாரிச்சிருக்கேன். அதுலகூட ஒரு கேரக்டர்ல நடிக்கக் கேட்டாங்க. நான் மறுத்துட்டேன். நமக்கு இதுதான் சரி’’ என்று சிரித்தார்.

‘‘ஒரு செட் போடும்போது எவ்வளவு சந்தோஷமா இருக்கோ அதே அளவுக்கு ஒரு செட்டைப் பிரிக்கும்போது மனசு ரொம்பக் கஷ்டமா இருக்கும். ஆனா, வேற வழியில்லை. நம்ம சொந்த வீட்டை இடிக்கிற மாதிரி இருக்கும். என் வாழ்நாள் முழுக்க சினிமாவுல செட் போடணும். நான் போட்ட செட்லதான் என் உயிர் பிரியணும். அதுதான் என் ஆசை. என் தொழில்தான் எனக்குக் கடவுள். செட்தான் எனக்குக் கோயில். ‘கடவுள் யாருன்னு யார் பார்த்தா, அதைக் கண்ணில் காட்டினது சினிமாதான்’னு ‘குசேலன்’ படத்துல ஒரு பாடல் வரி வரும். அப்படி நமக்குக் கற்பனையில இருக்கிற பல விஷயங்களைக் கண்முன் நிறுத்துற அளவுக்கு வல்லமை வாய்ந்த சினிமாவுல வாழுறதும் வேலை செய்றதும்தான் எனக்குப் பெருமை’’ என்று தன் மீசையைத் தடவியபடி கம்பீரமாக விடைபெற்றார், ராமலிங்கம்.