Published:Updated:

Cinema Bandi : மசாலா மணக்கும் தெலுங்கு தேசத்தில் எளிய மனிதர்களின் சினிமா எப்படி சாத்தியமானது?!

Cinema Bandi
News
Cinema Bandi

எளிய மனிதர்களை வைத்துக்கொண்டு மசாலாக்கள் மணக்கும் தெலுங்கு தேசத்தில் இம்மாதிரியான ஒரு படத்தை எடுப்பது எல்லா படைப்பாளிகளுக்கும் சாத்தியப்படுமா என்பது தெரியவில்லை.

வெறிகொண்டு விரலசைத்த மாத்திரத்தில் விலகி நகரும் ரயில் பெட்டிகள் இல்லை, ‘’நான் யாரு தெலுசா?’’ என டெம்ப்ரேச்சர் கூட்டி டார்ச்சர் செய்யும் வசனங்கள் இல்லை, வெரைட்டியான லொகேஷன்கள் இல்லை, மைக்கேல் ஜாக்சனுக்கு டஃப் கொடுக்கும் அல்லு அர்ஜுனின் ஆஹ்ஹா ரக நடன அசைவுகளும் இல்லை…

மனதை கனக்கச் செய்யும் கதைக்களமோ, கருவோ இல்லை. இவை எல்லாவற்றிற்கும் மேல் பெரும் நட்சத்திர அந்தஸ்து எனப்படும் ஸ்டார் வேல்யூ என்பது இல்லவே இல்லை. ஆனால் இருப்பதை வைத்துக் கொண்டு இரண்டு பேர் சினிமா எடுக்க முயற்சிப்பதாக நகரும் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கும் ‘சினிமா பண்டி’ (Cinema Bandi) திரைப்படத்தில் இருப்பது அம்புட்டும் அழகியல்!

தன் குடும்பம் , தனது ஊரே உலகமென வாழும் ஆட்டோ டிரைவர் வீரபாபு (விகாஸ் வசிஷ்டா)வின் கையில் ஒரு சோனி கேமரா லென்ஸுடன் சிக்குகிறது.

Cinema Bandi
Cinema Bandi

அதை அவ்வூரின் ‘பெரும்’ புகைப்படக்காரரான தனது நண்பன் கணபதி (சந்திப் வாரநாசி) இடம் காட்டி இதை விற்றால் எத்தனை தேரும்? எனக் கேட்க நண்பனோ இதை வைத்துதான் மகேஷ் பாபு, பிரபாஸ், பவன் கல்யாண் போன்ற நடிகர்களின் படங்கள் எடுக்கப்படுவதாக சொல்கிறார். ஒரு கட்டத்தில், நாமும் அதை வைத்து படம் எடுக்கலாம் என்ற முடிவுடன் படத்திற்கான நடிக நடிகையர் தேர்வுக்கு கிளம்புகிறார்கள் இருவரும். மறுபுறம் கேமராவை தொலைத்த சிந்து அதை தேடிக் கொண்டு வருகிறார்.

சினிமா எடுப்பதால் ஊரின் கெளரவம் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டுகிறார்கள் ஊரார். ஊர்மக்களின் பகையை மீறி தங்களது படப்பிடிப்பை நடத்தி, தாங்கள் விரும்பிய சினிமாவை எடுத்தனரா, ஊரின் கோபத்தை சம்பாதித்தனரா அல்லது சமாளித்தார்களா, கேமராவின் சொந்தக்காரரிடம் கேமரா சென்றடைந்ததா, வீராவின் கனவு திரைப்படம் என்னவானது என்ற மிக சாதாரணமான கதையை வைத்துக் கொண்டு நம்மை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் பிரவீன் கண்டரேகுலா!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தொழில்நுட்பத்தின் ஆக்டோபஸ் கரங்களுக்குள் அகப்படாத, மூன்று வருடங்களாக வானம் பார்த்த பூமியாக இருக்கும் ஊர் தெலுங்கானாவின் கோளப்பள்ளி கிராமம்! அவ்வூரில் இருந்தபடியே, “சிட்டி வாழ்க்கைதான் பெஸ்ட் … அங்கே கரன்ட் கட் கிடையாது தெரியுமா?” எனும் சாமானிய மனிதர்களின் ஊடாக நகரும் கதை (வசந்த் மரிகண்ட்டி ) அருமை. பள்ளியில் பத்தாம் வகுப்பில் டாப்பாக வந்த மாணவிகளை கதாநாயகிகளாக தேர்வு செய்ய முடிவெடுக்கும் காட்சியில் சிரிக்கத் தொடங்கி இறுதியில் “A film by gollapally village “என்று வரும் போது நம்மை அறியாமல் நம்மை நெகிழச் செய்த விதத்தில் வெற்றி கண்டிருக்கிறார்கள் திரைக்கதை ஆசிரியர்களான பிரவீன் கண்டரேகுலா , கிருஷ்ண பிரத்யுஷா மற்றும் வசந்த் மரிகண்ட்டி.

Cinema Bandi
Cinema Bandi

அபத்தமாக தோன்றிய கதையில்தான் எத்தனை அழகியலை சேர்த்து இருக்கிறார் இயக்குநர்? ஒரு கேமரா இருந்தால் சினிமா எடுத்து லட்ச லட்சமாக பணம் சம்பாதிக்க அதன் மூலம் ஊரை மேம்படுத்தலாம் என்று சிந்தனையுள்ள முதன்மை கதாபாத்திரம் விகாஸ் வசிஷ்டா தொடங்கி ஹீரோவாக நடிக்கும் மரிதேஷ் பாபு( ராக் மயூர்) , மங்கா(உமா Y.G) என இம்மியளவு பிசகினாலும் “இவங்க நாட்டிக்கிறாம்பா” என்று சொல்லி கலாய்த்து காலி செய்துவிடும் சாத்தியங்கள் உள்ள கதை. ஆனால் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவருமே நடிக்காமல் பாத்திரங்களாகவே பொருந்திப் போவதுதான் படத்தின் ஆகப் பெரும் பலம்.

எதுவுமே துருத்திக்கொண்டு தெரியாமல் படம் கதையின் போக்கிலேயே போவது இன்னும் சிறப்பு. அதிலும் டாப் ஆங்கிள் ,ட்ராலி ஷாட் என ஒவ்வொன்றுக்கும் அவர்கள் பயன்படுத்தும் மாட்டுவண்டியும், ஆட்டோவும், காதலை ஏற்றுக் கொண்டதும் கூரை மேல் அமர்ந்தபடி தாத்தா தூவும் பூவும் என இருப்பதை வைத்து ரணகளப்படுத்தி இருக்கிறார்கள

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாழ்வின் மீதும் சக மனிதர்களின் மீதுமான நம்பிக்கையை பிரசார தொனியில் சொல்லாமல் சொல்லிய விதமும், நடிகர்கள் தொடங்கி கேமரா, இசை, வசனங்கள், ஆடை வடிவமைப்பு என எதுவும், யாருமே ஸ்பெஷல் இல்லை… ஆனால், எல்லாமே ஸ்பெஷலாக இருக்கிற அம்சமுமே படத்தின் ஸ்பெஷல்.

அபூர்வா சாலிகிராம் மற்றும் சாகர் YVV யின் ஒளிப்பதிவும், சீரிஸ் சத்யவோலுவின் இசையும், தர்மேந்திரா காகர்லா மற்றும் ரவிதேஜா கிரிஜாலாவின் படத்தொகுப்பும் படத்துக்கு எது தேவையோ அதை சரியாகக் கொடுத்திருக்கின்றன.

Cinema Bandi
Cinema Bandi

கண்ணில் நீர் வர சிரிக்க செய்யும் படத்தில் எல்லோரும் நல்லவர்களாகவே இருப்பதும் அல்லது ஒரு கட்டத்தில் நல்லவர்களாக மாறுவதும் மாத்திரமே “ஏன் இவங்க எல்லாருமே இவ்வளவு நல்லவங்களா இருக்காங்க?” என யோசிக்க வைக்கிறது

முடிவில் EVERYONE IS A FILM MAKER … AT HEART என்கிறது திரைப்படம் . ஆனால் எளிய மனிதர்களை வைத்துக் கொண்டு மசாலாக்கள் மணக்கும் தெலுங்கு தேசத்தில் இம்மாதிரியான ஒரு படத்தை எடுப்பது எல்லா படைப்பாளிகளுக்கும் சாத்தியப்படுமா என்பது தெரியவில்லை. அதை சாத்தியப்படுத்திய இயக்குனர் பிரவீன் கண்டரேகுலாவுக்கும், தயாரிப்பாளர்களான ராஜ் நிடிமோர் மற்றும் கிருஷ்ணா DK உள்ளிட்ட படக்குழுவினருக்கும் ‘சினிமா பண்டி’ படத்திற்காக வண்டி வண்டியான பாராட்டுகள்!