Published:Updated:

"இதில் ஏன் தனிவழி ரஜினி!?"- போலீஸ் தாக்குதலுக்கு எதிராகத் திரளும் தமிழ் சினிமா! #JusticeForJayarajAndBennix

ரஜினி
ரஜினி

#JusticeForJayarajAndBennix என்கிற ஹேஷ்டேகில் முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர் என எல்லோருமே ஒன்றுதிரண்டு தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்துவருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸின் தாக்குதலால் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் மரணமடைந்தது நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் இறப்புக்குக் காரணமான போலீஸார் மீது இரட்டை கொலைவழக்குகளைப் பதிவுசெய்து விரைவில் கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என ஒன்றுதிரண்டிருக்கிறது தமிழ்த் திரையுலகம். #JusticeForJayarajAndBennix என்கிற ஹேஷ்டேகில் முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர் என எல்லோருமே ஒன்றுதிரண்டு தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்துவருகிறார்கள்.

ஹாசிப்கான்
ஹாசிப்கான்

கமல்ஹாசன்

உயிரிழப்புகளைத் தடுக்க ஊரடங்கு, அதன் விதிகளை மீறியதற்காகக் காவல் துறையின் நடவடிக்கையில் இருவர் மரணம். மனித உரிமை மீறல், அதிகார துஷ்பிரயோகம், மன அழுத்தம் எனக் காவல் துறையின் சட்டமீறல்கள் பல உள்ளன. சட்டத்தின் காவலர்கள் சட்டம் மீறுதல் மன்னிக்கக் கூடாத குற்றம்.

பா.இரஞ்சித்

இன்னொரு ஜெயராஜ், பென்னிக்ஸைக் காவல்துறை பயங்கரவாதத்திற்க்கு ஆளாகாமல் தடுப்பது நம் கடமையாகும். தனிமனித உரிமை & பாதுகாப்பை உறுதிசெய்தல் வேண்டும். எளிய மக்களைப் பயமின்றி அடித்து நொறுக்கும் ஒவ்வொரு காவலரும் குற்றவாளிகளாக்கப் பட வேண்டும்! விழித்துக்கொள்வோம்.

இமான்

ஜெயராஜும், பென்னிக்ஸும் அனுபவித்த சித்ரவதையைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அவர்கள் இருவரும் இந்தியாவின் ஜார்ஜ் ஃப்ளாய்ட்கள்.

ஜெயம் ரவி

சட்டத்தைவிட உயந்தவர் யாரும் இல்லை. மனிதத்தன்மையற்ற இந்தச் செயலுக்குச் சரியான நீதி வேண்டும்.

யுவன் ஷங்கர் ராஜா

போலீஸே கொலை செய்யும்போது நீங்கள் யாரை அழைப்பீர்கள்?

பென்னிக்ஸ் - ஜெயராஜ்
பென்னிக்ஸ் - ஜெயராஜ்

விஷால்

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸுக்கு நடந்த கொடூரத்தில் அநீதி இழைக்கப்பட்டது ஏன்? இடமாற்றம் என்பது தண்டனையல்ல. நீதி கிடைக்கும்வரை தொடர்ந்து குரல் கொடுப்போம்.

மாளவிகா மோகனன்

ஜெயராஜுக்கும், பெனிக்ஸுக்கும் என்ன நடந்தது என்று கேள்விப்பட்டதிலிருந்து அதிர்ச்சியில் உறைந்துப்போயிருக்கிறேன். சொல்லவே முடியாத அளவுக்கு போலீஸின் கொடூரமான மனிதத்தன்மையற்ற செயலாக இருக்கிறது.

டாப்ஸி

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸின் மீதான தாக்குதல் குறித்த விவரங்களைக் கேட்கும்போதே குலை நடுங்குகிறது.

குஷ்பு

தமிழ்நாடு நீதிக்காகக் காத்திருக்கிறது.

ஜி.வி.பிரகாஷ்

பிறருக்கு மரணத்தை ஏற்படுத்தும் செயலும், அதிகாரமும் இப்புவியில் யாருக்கும் இல்லை... நீதி வழங்காவிடில் பாதிக்கப்பட்ட சமூகம் அதற்கான நீதியைப் பெற்றுக்கொள்ளும் என்பதே வரலாறு... இருவர் மரணத்தை மனித குலத்தோடு சேர்ந்து நானும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

சாத்தான்குளம் சம்பவம் மிகவும் கொடூரமானது. தாமதிக்கப்படும் நீதி அநீதியாகிவிடும்.

ஹன்சிகா

சாத்தான்குளம் சம்பவம் பற்றித் தெரிந்ததும் பதறிப்போனேன். சட்டத்தின் முன் அனைவரும் சமம். எக்காரணத்தைக்கொண்டும் குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது. அவர்கள் உடனடியாக தண்டிக்கப்படவேண்டும்.

ரஜினி ஏன் மெளனம்?

இதற்கிடையே 2018-ம் ஆண்டு காவிரி விவகாரம் தொடர்பாக சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படக்கூடாது என்கிற போராட்டங்கள் நடந்தபோது காவலர் ஒருவரை சாமன்யர் தாக்கிய வீடியோவை ட்விட்டரில் ரஜினிகாந்த் வெளியிட்டிருந்தார். அதில், ''வன்முறையின் உச்சக்கட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவதுதான். இத்தகைய வன்முறை கலாசாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களைத் தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்'' என்று ட்வீட் வழியே தன்னுடைய கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார் ரஜினிகாந்த். தற்போது போலீஸின் கொடூரத்தாக்குலால் இரு சாமான்யர்கள் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் நிலையில் ஏன் ரஜினி இன்னும் தன்னுடைய கண்டனத்தைப் பதிவுசெய்யவில்லை என்று எதிர்ப்பு வலுத்துவருகிறது.

Rajinikanth
Rajinikanth
சாத்தான்குளம்: மிரட்டிய போலீஸ்; 3 மணிநேரம் போராடிய மருத்துவர்! -பதறவைத்த பரிசோதனைச் சீட்டு

சோஷியல் மீடியாவில் ''எல்லோரும் பேசிவிட்டார்கள். நீங்கள் எப்போது மெளனத்தைக் கலைக்கப்போகிறீர்கள்'' என்று பலரும் பதிவிட்டுவருகிறார்கள். ரஜினி மட்டுமல்லாது விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஜய் சேதுபதி என உச்சநட்சத்திரங்கள் பலரும் #JUSTICEFORJAYARAJANDBENNIX விவகாரத்தில் தங்கள் கருத்தைப் பதிவுசெய்யவில்லை.

அடுத்த கட்டுரைக்கு