கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

“எனக்கான முழு சுதந்திரம் பாடல்களில் இல்லை!”

பிலோமின் ராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
பிலோமின் ராஜ்

நான் யார்கிட்டேயும் அசிஸ்டென்டா வேலை செய்யலை. ‘நாளைய இயக்குநர்’ மூணாவது சீசன்ல நிறைய எடிட் பண்ணியிருக்கேன்.

கோலிவுட்டின் எடிட்டிங் துறையில் தற்போதைய ஸ்டார், பிலோமின் ராஜ். இவர் எடிட் செய்த படங்களின் எண்ணிக்கை என்னவோ ஏழுதான். ஆனால், ஒவ்வொரு படத்திலும் எடிட்டிங்கில் மாஸ் காட்டி செம ஹிட் ஆக்கியதில் இவரின் பங்கு முக்கியமானது. தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் எடிட்டராக இருக்கும் இவர், ‘ஜெய்பீம்’, ‘டாணாக்காரன்’, ‘விக்ரம்’ என பயங்கர பிஸி. இந்த மூன்று படங்களின் எடிட்டிங்கிற்கு இடையே இவரது பயணத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“எனக்கான முழு சுதந்திரம் பாடல்களில் இல்லை!”

``யார்கிட்ட அசிஸ்டென்ட் எடிட்டரா வேலை செஞ்சீங்க?’’

“ ‘அழகு குட்டி செல்லம்’னு ஒரு படத்துல மட்டும் தெரிஞ்சவங்க அப்படிங்கிறதால வொர்க் பண்ணினேன். நிறைய விளம்பரங்கள் எடிட் பண்ணிட்டிருந்தேன். நான் யார்கிட்டேயும் அசிஸ்டென்டா வேலை செய்யலை. ‘நாளைய இயக்குநர்’ மூணாவது சீசன்ல நிறைய எடிட் பண்ணியிருக்கேன். அப்படிப் பழக்கமாகி நானும் லோகேஷும் சேர்ந்து கார்ப்பரேட் விளம்பரங்கள் பண்ணினோம். அப்புறம் டெலி பிலிம் பண்ணினோம். அப்புறம், லோகேஷ் மூலமா ‘மாநகரம்’ அமைஞ்சது. ஒரு அறிமுக இயக்குநர் படத்துல யாராவது ஒரு டெக்னீஷியனாவது சீனியரா இருப்பாங்க. ‘மாநகரம்’ படம், எல்லா டெக்னீஷியன்களுக்கும் முதல் படம். நமக்குக் கிடைச்சிருக்கிற இந்த வாய்ப்பை ரொம்ப சரியா பயன்படுத்திக்கணும்னுதான் எல்லோரும் வேலை செஞ்சோம். முதல் படமே ஹைப்பர் லிங் கதைங்கிறதனால, எடிட்டிங்கிற்கு நிறைய ஸ்கோப் இருந்தது. ரொம்ப பயமா இருந்தது. அந்தப் படத்தை வெவ்வேற தியேட்டர்கள்ல பத்து முறை பார்த்திருப்பேன். என் பெயர் வரும்போது அவ்வளவு சந்தோஷமா இருக்கும். இதுக்குப் பிறகு, எத்தனை படங்கள் பண்ணினாலும் அந்த உணர்வு தனிதான்.’’

``எடிட்டர்கள் பாடல்களில் நிறைய வித்தியாசமா முயற்சி பண்ணிப் பார்க்கலாம்னு சொல்றாங்க. நீங்க எடிட் பண்ணுன படங்களில் பெரும்பாலும் மான்டேஜ் பாடல்கள்தான், ‘வாத்தி கம்மிங்’, ‘குட்டி ஸ்டோரி’ தவிர. உங்களுக்கு எப்படி?’’

‘`எனக்கான முழு சுதந்திரம் காட்சிகளில்தான் இருக்கு, பாடல்கள்ல இல்லைன்னு நினைக்கிறேன். பாடல்கள்ல டான்ஸ் மாஸ்டர் கோரியோ பண்ணிருவார். அதை வேற எங்கேயும் மாத்தி முயற்சி பண்ண முடியாது. ஷாட்டை வேணா மாத்தலாம். ஆனா, ஒரு சீனை எடிட் பண்ணும்போது அதைப் பாதியில இருந்து ஆரம்பிக்கலாம், வாய்ஸ் முதல்ல கொடுத்துட்டு அப்புறம் விஷூவல் வர மாதிரி பண்ணலாம். அந்த சீனையே என்னால எடிட்ல மாத்த முடியும். கோரியோகிராபருடைய வொர்கை நான் எப்படிக் காட்டுறேங்கிறதுதான் பாடல்கள்ல இருக்கிற சவால்கள். மான்டேஜ் பாடல்கள்ல கதை சொல்லலாம். அது வேற. என்னைப் பொறுத்தவரை சீன்தான் என்னுடைய களம்.’’

“எனக்கான முழு சுதந்திரம் பாடல்களில் இல்லை!”

``டீசர், டிரெய்லர் கட் பண்ணும்போது உங்களுக்கான மனநிலை எப்படி இருக்கும்?’’

‘`ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு மாதிரி கட் பண்ணணும்னு நினைப்பேன். கதையைச் சொல்லாமல் கட் பண்றது ஒரு ரகம். படத்துடைய ஒன் லைன் சொல்லி கட் பண்றது ஒரு ரகம். உதாரணத்துக்கு, ‘கைதி’ டீசர்ல கார்த்தி சாரைக் காட்ட வேண்டாம், யார்ரா அவன்னு அவரை எல்லோரும் தேடுற மாதிரி இருக்கலாம்னு முடிவு பண்ணியாச்சு. டில்லி யார், டில்லி யாருன்னு போகும். அர்ஜுன் தாஸ் லைஃப் டைம் செட்டில்மென்ட் டயலாக் சொன்னது வேற ஒருத்தருக்கு. ஆனா, டீசர்ல கார்த்தி சாரைக் குறிக்கிற மாதிரி இருக்கும். இப்போ ஹீரோவை பில்டப் பண்ணியாச்சு. எப்படி முடிக்கலாம்னு யோசிச்சப்போ வந்த ஐடியாதான் பிரியாணி சாப்பிடுறது. மாஸா இருந்தது. உடனே ஓகே பண்ணியாச்சு. ‘மண்டேலா’, ‘டாணாக்காரன்’ டீசர்ல படத்துடைய ஒன்லைனையே சொல்லிட்டோம். டீசர், டிரெய்லர் கட் பண்றதே பெரிய மெனக்கெடல்தான்.’’

“எனக்கான முழு சுதந்திரம் பாடல்களில் இல்லை!”

``ஒரு படம் கமிட்டானவுடன், நீங்க பண்ற விஷயம் என்ன?’’

‘`அந்தப் படம் என்ன ஜானர்ல இருக்கோ அது தொடர்பான எல்லாப் படங்களையும் பார்ப்பேன். காரணம், அதுல இருந்து நாம என்ன வித்தியாசமா பண்ணப்போறோம்னு நிறைய டிஸ்கஸ் பண்ணுவேன். ‘ஜெய் பீம்’ மாதிரி கோர்ட் டிராமா படம் பண்ணும்போது, நிறைய கோர்ட் ரூம் டிராமா படங்கள் பார்த்தேன். இதுல கொஞ்சம் வித்தியாசமா அணுகியிருக்கேன்.’’

``நீங்க இதுவரை எடிட் பண்ணினதிலேயே ஹீரோயின் சென்ட்ரிக் படம் ‘ராட்சசி’தான். இந்தப் பட அனுபவம் இருந்தது?’’

‘`இந்தப் படம் கமர்ஷியலாவும் இருக்கணும். அதே சமயம், முக்கியமான மெசேஜ் சொல்ற படமும்கூட. ஜோ மேமை எப்படி ஹீரோவா காட்டப்போறோம்னு சவாலா இருந்தது. அதுக்குன்னு ரொம்ப பில்டப் கொடுக்கவும் கூடாது. அவங்க கேரக்டர்ல ஒரு ஹீரோயிசமும் இருந்தது. ஹீரோயின் சென்ட்ரிக் படம் எடிட் பண்ணும்போது, எங்கேயுமே தப்பா தெரிஞ்சிடக் கூடாதுன்னு ரொம்ப கவனமா இருப்பேன். இப்போவும் ஒரு ஹீரோயின் சென்ட்ரிக் படம் பண்ணிக்கிட்டிருக்கேன். அதுலயும் அப்படிதான்.’’

“எனக்கான முழு சுதந்திரம் பாடல்களில் இல்லை!”

`` `டாணாக்காரன்’ டீசருக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. அந்தப் படத்துக்கு எடிட் பண்ணின அனுபவம்?’’

‘`போலீஸ் பயிற்சி பத்தி காட்டுறப்போ ஜம்ப், ரன்னிங் ரேஸ், கயிறு ஏறுறதுன்னு காட்டி முடிச்சுடுவாங்க. ஆனா, நாம பார்க்காத ஒரு வாழ்க்கையைச் சொல்லியிருக்கார் இயக்குநர் தமிழ் சார். அவர் போலீஸா வேலை செஞ்சுட்டு வந்ததனால, அங்க நடக்கிற விஷயங்களை அப்படியே பதிவு பண்ணியிருக்கார். எனக்கு இந்த சப்ஜெக்டே புதுசா இருந்ததனால, ரொம்ப சுவாரஸ்யமாவும் சவாலாவும் இருந்தது. நிறைய தெரிஞ்சுக்கிட்டேன்.’’

பிலோமின் ராஜ்
பிலோமின் ராஜ்

``விக்ரம்?’’

‘` `விக்ரம்’ நானும் லோகேஷும் பண்ற நாலாவது படம். அவன் கதை சொல்ற விதம் சூப்பரா இருக்கும். ரொம்ப டீட்டெய்லிங் பண்ணியிருப்பான். அவனுடைய கதை சொல்லல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஸ்கிரிப்ட்ல அடிக்கடி மாற்றங்கள் இருக்கும். அதனால, ஸ்கிரிப்டைக் கையில கொடுக்கமாட்டான். ஷூட் ஆரம்பிச்சுப் போய்க்கிட்டிருக்கு. ‘மாஸ்டர்’ படத்துக்கும் இதுக்கும் கொஞ்சம்கூடத் தொடர்பு இருக்காது. நான் லீனியர் கதைதான். திரைக்கதையை அணுகுறதுல ‘விக்ரம்’ வேற மாதிரி இருக்கும்.’’