Published:Updated:

“படத்தின் நீளம் என்பது ஒரு மித்!”

ரூபன்
பிரீமியம் ஸ்டோரி
ரூபன்

‘நான் எதிர்பாராத விதமா இந்தத் துறைக்கு வந்தவன். என் வீட்ல எல்லோரும் நான் பெரிய இன்ஜினீயராகணும், சயின்டிஸ்டாகணும்னு ஆசைப்பட்டாங்க

“படத்தின் நீளம் என்பது ஒரு மித்!”

‘நான் எதிர்பாராத விதமா இந்தத் துறைக்கு வந்தவன். என் வீட்ல எல்லோரும் நான் பெரிய இன்ஜினீயராகணும், சயின்டிஸ்டாகணும்னு ஆசைப்பட்டாங்க

Published:Updated:
ரூபன்
பிரீமியம் ஸ்டோரி
ரூபன்

ரூபன்... தமிழ் சினிமா எடிட்டிங் வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர். எடிட்டர் ஆண்டனியின் சீடர். தன் குருவிடம் கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் இறக்கி, எடிட்டிங் சாம்ராஜ்யத்தின் இளவரசனாக இருக்கிறார். 10 வருடங்கள், 60க்கும் மேற்பட்ட படங்கள். ஒரே சமயத்தில் பல படங்களை எடிட் செய்யும் திறமைசாலி. கடந்த பத்து வருடங்களில் சூப்பர்ஹிட்டான பெரும்பாலான படங்கள் இவரது கத்தரியால் மெருகேறி வந்தவைதான். `எதற்கும் துணிந்தவன்', `நெஞ்சுக்கு நீதி', `சர்தார்', அட்லி - ஷாரூக் கான் படம் என செம பிஸியாக இருக்கும் கோலிவுட்டின் மோஸ்ட் வான்டட் எடிட்டர் ரூபனை சந்தித்தேன்.

“படத்தின் நீளம் என்பது ஒரு மித்!”

``சினிமாவுக்குள்ள வந்து பத்து வருடங்கள் நிறைவடைஞ்சிருக்கு. எப்படியிருக்கு?’’

‘‘நான் எதிர்பாராத விதமா இந்தத் துறைக்கு வந்தவன். என் வீட்ல எல்லோரும் நான் பெரிய இன்ஜினீயராகணும், சயின்டிஸ்டாகணும்னு ஆசைப்பட்டாங்க. ஆனா, அதுக்கெல்லாம் படிக்கணுமே. அது நமக்கு செட்டாகலை. அந்தச் சமயத்துலதான் விஷுவல் கம்யூனிகேஷன்னு ஒரு கோர்ஸ் இருக்கு. அதுக்குப் படிக்கத் தேவையில்லைன்னு பொய் சொன்னாங்க. அங்க போனா, அங்கேயும் படிக்க வேண்டியதா இருந்தது. அங்கதான் பிலிம் மேக்கிங்ல ஆர்வம் வந்தது. அப்போ கெளதம் மேனன் சாரை சந்திக்க வாய்ப்பு கிடைச்சது. அவர்தான், ‘உனக்கு எடிட்டிங் தெரியும்னா, அதைப் பண்ண வேண்டியதுதானே'ன்னு ஆண்டனி சார்கிட்ட அனுப்பி வெச்சார். அங்கிருந்துதான் என் வாழ்க்கையே ஆரம்பமானதுன்னு சொல்லலாம். 2011-ல ஓட ஆரம்பிச்சேன். இப்போவரை இரவு பகல் பார்க்காமல் ஓடிக்கிட்டே இருக்கேன்.''

“படத்தின் நீளம் என்பது ஒரு மித்!”

``உங்க குரு ஆண்டனி சொன்னதில் இப்போவும் கடைப்பிடிக்கிற விஷயம் என்ன?’’

‘‘எடிட்டிங்கின் அர்த்தம் என்ன, எடிட்டரின் பொறுப்பு என்னன்னு அவர்கிட்டதான் கத்துக்கிட்டேன். முதன்முதல்ல நான் அசிஸ்டென்ட் எடிட்டரா வேலை செஞ்ச படம், ‘வேட்டையாடு விளையாடு'. அந்தப் படத்துடைய ஃபுட்டேஜை ஆண்டனி சார் எப்படிக் கையாளுறார்னு பார்க்கும்போது அவ்வளவு பிரமிப்பா இருந்தது. ஸ்கிரிப்ட் டேபிள்ல ஒரு கதை உருவாகுது; எடிட் டேபிள்ல ஒரு படம் உருவாகுதுன்னு அங்கதான் தெரிஞ்சுக்கிட்டேன். ஆடியன்ஸ் மனநிலையிலதான் அந்த ஃபுட்டேஜைப் பார்க்கணும். இருந்தாலும் பிரேம்ல எங்கேயாவது குறை இருந்தால், நிச்சயம் கண் அதைக் கண்டுபிடிச்சிடும். ‘ஒரு ஃபிரேம்ல என்னெல்லாம் இருக்கு, என்னெல்லாம் தேவையில்லாமல் இருக்குன்னு பார். அதே சமயம், ஓகேவான டேக்கை மட்டும் பார்க்கக் கூடாது. ஓகே ஆகாத டேக்கையும் பார்க்கணும். அதுல நிச்சயமா ஏதாவது சின்னச்சின்ன ரியாக்‌ஷன்கள் இருக்கும். அதை எடுத்துக்கணும். எதிர்பார்க்கிறது ஏதாவது இல்லாமல் இருந்தால், இருக்கிறதை வெச்சு சமாளிக்கணும்'னு நிறைய கொடுத்தார். இப்போ வரை நான் எடிட் பண்ணும்போது, எனக்குப் பின்னாடி நின்னு அவர் பார்த்துக்கிட்டு இருக்கிற மாதிரியே தோணும். ஒழுங்கா பண்ணலைன்னா திட்டுவிழும்ங்கிற பயமும் பதற்றமும் எப்போவும் இருக்கும். நான் வொர்க் பண்ணின படங்கள் வந்தா, பார்த்துட்டு கமென்ட் சொல்லுவார். அடிக்கடி நான் போய் அவரைப் பார்த்துட்டு வருவேன்.''

“படத்தின் நீளம் என்பது ஒரு மித்!”

``இந்த சீன் வொர்க்கவுட்டாகும், ஆகாதுன்னு எடிட்டர் எடுக்கிற முடிவுக்குப் பின்னாடி எவ்வளவு யோசனைகள் இருக்கும்?’’

‘‘உண்மையாவே அது பெரிய ப்ராசஸ்தான். கிரிக்கெட்ல அம்பயரா இருக்கிற மாதிரிதான். தப்பா கணிச்சு முடிவெடுத்துட்டோம்னா, மேட்ச்சே மாறிடும். முதல்ல, அந்தப் படத்தை பர்சனலா கனெக்ட் பண்ணிக்கக்கூடாது. அப்படிப் பண்ணிக்கிட்டா, அதை ஆடியன்ஸ் மனநிலையில இருந்து பார்க்க முடியாது. ஒரு சீன் கதையோட்டத்துல இருந்து விலகியிருக்கு. ஆனா, ‘இவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்திருக்காங்களே, இவ்வளவு பிரமாதமா நடிச்சிருக்காங்களே’ன்னு பார்த்தா, படம் வீணாகிடும். குறை இருந்தா இயக்குநர்கிட்ட சொல்லிடணும். அதுதான் எங்க வேலை. அப்படிச் சொல்லாமல் இருந்தால் அது இந்த வேலைக்குச் செய்ற துரோகம். நீங்க சொன்ன மாதிரி முடிவெடுக்கிறதுக்குப் பின்னாடி நிறைய யோசனைகள் இருக்கும்.''

``எப்படி ஒரே சமயத்துல இத்தனை படங்களுக்கு வேலை செய்றீங்க?’’

‘‘ஒரு பட வாய்ப்பு நமக்குக் கிடைச்சிடாதான்னு இருந்த நாள்கள் அதிகம். சில படங்கள் என் கை வரைக்கும் வந்து மிஸ்ஸாகியிருக்கு. அதுக்கெல்லாம் நாள் முழுக்க அழுதிருக்கேன். இப்போ ரொம்ப பிஸியா ஓடிக்கிட்டே இருக்கிறது சந்தோஷமா இருக்கு. என்ன, தூக்கம்தான் இல்லை. அடுத்தடுத்து வேலைகள் இருந்துக்கிட்டே இருக்கு. வேலை செய்யும்போது, சாப்பிட்டா தூக்கம் வந்திடும்னு ஜூஸ், டீ இந்த மாதிரி நிறைய எடுத்துக்குவேன். ஒரே இடத்துல வேலை செய்யமாட்டேன். ஒவ்வொரு படத்துக்கும் வெவ்வேற இடங்கள்ல போய் வேலை செய்வேன். அப்போ ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்குப் போற இடைவெளியிலதான் நான் போன் பேசுறது, ரிலாக்ஸ் பண்றது எல்லாமே. போன் ரிங்கானாலே ‘ஐயய்யோ, இவங்ககிட்ட டெட்லைன் சொல்லி வெச்சிருக்கோமோ'ன்னு எனக்குள்ள பதற்றமாகிடும். இன்னைக்குள்ள இந்த வேலையை முடிச்சாகணும்னு நினைச்சு வேலை செஞ்சா க்ரியேட்டிவிட்டி போயிடும். எடிட்டிங் டேபிள்ல உட்கார்ந்தா நேரம் போறதே தெரியாது. அதுதான் ப்ளஸும் மைனஸும். இன்னொரு விஷயமும் சொல்றேன். இதை மத்த எடிட்டர்கள் சொல்லி யிருக்காங்களான்னு தெரியலை. எடிட்டிங் டேபிள்ல உட்காரும் போதுதான் நல்லா தூக்கம் வரும். லீவ் நாள்கள் சீக்கிரம் எழுந்திடுவோம். ஆனா, ஸ்கூலுக்குப் போற நாள் நல்லா தூக்கம் வரும்ல. அந்த மனநிலைதான்.''

“படத்தின் நீளம் என்பது ஒரு மித்!”

``படத்துடைய நீளம் எவ்வளவுன்னு முன்னாடியே தெரிஞ்சிடுது. அதைப் பார்த்தே அயர்ச்சியாகிடுறாங்க. ஒரு படத்துடைய நீளத்தைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?’’

‘‘படத்துடைய நீளம்ங்கிறது ஒரு மித். ‘அவதார்', ‘அவெஞ்சர்ஸ்' இந்த ரெண்டுமே மூணு மணி நேரம். ஒவ்வொரு சீனும் சுவாரஸ்யமா எமோஷனலா இருந்ததுன்னா படத்துடைய நீளம் ஒரு விஷயமே இல்லை. ரன் டைமைப் பார்த்துப் படத்தைக் கணிக்காதீங்க. ஒரு படத்தை தியேட்டர்ல பார்க்கணும்னா, அதுக்குத் தயாராகிப் போங்க. அதுக்கான நேரத்தைக் கொடுங்க. என்னதான் எடிட்டர் படத்தை எடிட் பண்ணிக் கொடுத்தாலும் இயக்குநருடைய முடிவே இறுதியானது. நான் ஒரு படத்துடைய நீளத்தை முடிவு பண்றேன்னா, நிறைய பேர்கிட்ட கருத்து கேட்பேன். அதுல பெரும்பாலும் என்ன கருத்து வருதோ அதை எடுத்துக்குவேன். இது பிடிக்கலைன்னு எனக்குத் தோணும். ஆனா, அது நல்லாருக்குன்னு பத்துப் பேர் சொன்னாங்கன்னா, அதை வெச்சிடுவேன்.''

``நடிகர்கள் சில குறிப்பிட்ட சீனை எதிர்பார்த்து இருப்பாங்க. ஆனா, அதை நீங்க எடிட்ல தூக்கியிருப்பீங்க. அப்படி யாராவது டென்ஷனாகி உங்ககிட்ட கோபப்பட்டிருக்காங்களா?’’

‘‘ஐயோ, நிறைய பேர். ‘நம்ம வீட்டுப் பிள்ளை' படத்துடைய சக்சஸ் மீட்ல சூரி அண்ணன் என்கிட்ட, `என்ன தம்பி, நான் சில இடங்கள்ல எமோஷனல் டயலாக் எல்லாம் பேசி நடிச்சிருந்தேன். அதெல்லாம் கட் பண்ணிட்டீங்க'ன்னு கேட்டார். ‘நல்லா பண்ணியிருந்தீங்க அண்ணே. ஆனா, அந்த இடத்துல தேவைப்படலைண்ணே'ன்னு சொன்னேன். ‘ஏப்பா, அந்த ஒரு வசனம்தானே'ன்னார். ‘நீங்க சொல்றது புரியுதுண்ணே. ஆனா, இந்த ஒரு வசனம் ஒரு வசனம்னு பார்த்து எல்லாத்தையும் வெச்சுட்டா, ரொம்ப நீளமாகிடும்ணே'ன்னு சொன்னேன். இருந்தாலும் அவருக்கு என் மேல கோபம். ‘மெர்சல்' படத்துல வடிவேலு சார் டப்பிங் பண்ணும்போது, அட்லிகிட்ட ‘ஏப்பா. என்னப்பா அந்தப் பையன் என் வாய்க்குள்ள கத்திரியை விட்டு கட் பண்ணியிருக்காப்ல'ன்னு சொல்லியிருக்கார். எனக்கு கேட்டவுடன் சிரிப்பு வந்திடுச்சு. அடுத்து ‘பிகில்' சக்சஸ் மீட். யோகிபாபு அண்ணன் என் சட்டையைப் பிடிச்சு சுவத்துல சாய்ச்சு, ‘என்னாப்பா, நான் போட்ட கவுன்டர் எல்லாத்தையும் தூக்கிட்ட'ன்னு மிரட்டிக்கிட்டு இருந்தார். விஜய் சார் வந்து ‘என்ன பிரச்னை’ன்னு கேட்டார். ‘இல்லைண்ணா. நான் போட்ட கவுன்டர் எதுவுமே வரலைண்ணா. எல்லாத்தையும் கட் பண்ணிட்டான்'னு யோகிபாபு அண்ணன் சொன்னார். ‘கவுன்டர் வரலையா? படத்துல நான் வந்ததே பெரிய விஷயம். அப்படி கட் பண்ணிருக்காப்ல'ன்னு சொன்னார். இதெல்லாம் மீறி ‘பிகில்' கிட்டத்தட்ட மூணு மணி நேரம்.''

``இயக்குநர் பாண்டிராஜ் கூட ‘எதற்கும் துணிந்தவன்' படத்துல மூணாவது முறையா இணைஞ்சிருக்கீங்க. எப்படி வந்திருக்கு?’’

‘‘ ‘கடைக்குட்டி சிங்கம்', ‘நம்ம வீட்டுப் பிள்ளை' படங்களுக்குப் பிறகு, இந்தப் படத்துல வேலை செய்றோம். இதுவரை ஒரு நாள்கூட அவர் எடிட்ல உட்கார்ந்ததில்லை. என் மேல அவ்வளவு நம்பிக்கை வெச்சிருக்கார். ஜாலியான சூர்யா சாரை சமீபமா நாம பார்க்கலை. இதுல செம கேஷுவலா ஜாலியா இருப்பார். சூர்யா சார்கூட இன்னும் வொர்க் பண்ணலையேன்னு ஒரு சின்ன குறை இருந்தது. இந்தப் படத்துல நிறைவேறியது சந்தோஷம். எடிட்டிங்லயும் புது பேட்டர்னை முயற்சி பண்ணியிருக்கேன். நான் ‘புஷ்பா' வேலையில இருக்கும்போது என் சூழலைப் புரிஞ்சுக்கிட்டார். ‘எதற்கும் துணிந்தவன்', ‘புஷ்பா' ரெண்டுமே டிசம்பர் 17’ம் தேதிதான் ரிலீஸாகுறதா இருந்தது. சூழலைப் புரிஞ்சுக்கிட்டு படத்தைத் தள்ளி வைக்கலாம்னு முடிவெடுக்கிறதுக்குத் தனி மனசு வேணும். பாண்டிராஜ் சாருக்குத்தான் நன்றி சொல்லணும்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism