சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

“மக்கள் புத்திசாலிகள்... அவங்களை ஏமாத்த முடியாது!”

ஸ்ரீகர் பிரசாத்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீகர் பிரசாத்

ஸ்கிரிப்ட் படிக்கும்போது, ‘இது அதிகமா இருக்கிற மாதிரி இருக்கு, கொஞ்சம் குறைச்சுக்கலாம்’னு சொன்னா சிலர் கேட்கறதில்லை

எட்டு தேசிய விருதுகள், அதிக மொழிப் படங்களை எடிட் செய்ததற்காக லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என விருதுகள் குவிந்திருக்கும் அலுவலகம், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்துடையது. பெரிதும் எதிர்பார்க்கப்படும், திரையில் வந்த பின் விசில், கைத்தட்டல்கள் பறக்கச் செய்யும் பல முக்கியமான இந்தியத் திரைப்படங்கள் எடிட் செய்யப்படும் இடம், சென்னை வளசரவாக்கத்தில் இருக்கும் இவரது அலுவலகம். எடிட்டிங்கில் இருக்கும் ஆரவாரம், ஆர்ப்பரிப்புக்கு முற்றிலும் மாறாக அத்தனை எளிமையாய் அமைதியாய் நம்மை வரவேற்றுப் பேசத் தொடங்கினார், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்.

``பட விழாக்களில் ஏன் எடிட்டர்கள் பெரும்பாலும் பேசுவதில்லை?’’

‘‘நான் பெரும்பாலும் பட விழாக்களுக்குப் போறதையே தவிர்த்திடுவேன். காரணம், அங்கே எல்லோருடைய கவனமும் ஹீரோமீதும் இயக்குநர் மீதும்தான் இருக்கும். பல பேர் சேர்ந்து ஒரு வேலை செய்றோம். மக்கள் அதை எப்படி ஏத்துக்குவாங்கன்னு நம்மளால நிச்சயமா சொல்லமுடியாது. அவங்களுக்கு ஏதோ ஒரு விஷயம் பிடிக்காமல்கூடப் போகலாம். அதனால, படத்துக்கு முன்னாடி அதைப் பத்தி நான் எதுவும் பேச விரும்பமாட்டேன். ஆனா, இயக்குநருக்கோ நடிகருக்கோ அப்படியில்லை. அவங்க அந்தப் படத்தை புரமோட் பண்ணணும். அதனால பேசித்தான் ஆகணும். மேலும், எடிட்டர்கள் எப்போதும் திரைக்குப்பின்னால் இருப்பவர்கள். மக்களுக்கு அதிகம் அறிமுகம் ஆகாதவங்க என்பதும் அவர்கள் அதிகம் பேசாததற்குக் காரணமாக இருக்கலாம்.’’

“மக்கள் புத்திசாலிகள்... அவங்களை ஏமாத்த முடியாது!”

``நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள், கலை இயக்குநர்கள்கிட்ட இயக்குநர்கள் கதை சொல்லுவாங்க. எடிட்டர்கள்கிட்ட கதை சொல்லுவாங்களா?”

‘‘ஆரம்பத்துல சொல்ல மாட்டாங்க. இப்போ நிலைமை மாறியிருக்கு. ஷூட்டிங் போறதுக்கு முன்னாடியே ஸ்கிரிப்டைக் கொடுத்திடுறாங்க. இது ரொம்ப ஆரோக்கியமான விஷயம். எடிட்டருக்கு ஸ்கிரிப்ட் படிக்கும்போதே மனசுக்குள்ள எடிட்டிங் குறித்த திட்டம் உருவாகியிருக்கும். ஸ்கிரிப்ட் படிக்கும்போதே சில விஷயங்கள் தேவையில்லாமல் இருக்குன்னு தெரிஞ்சா, அதை இயக்குநர்கள்கிட்ட சொல்லி மாத்த முடியும். அதனால, புரொடக்‌ஷன் செலவும் மிச்சமாகும். 3 மணி நேரம் கன்டன்ட் எடுத்துட்டு வந்து, அதை இரண்டே கால் மணி நேரத்துக்குக் குறைச்சுக் கொடுங்கன்னு சொல்றதைவிட, எடுக்கும்போதே தேவையானதை எடுக்கும்போது பெட்டர் அவுட்புட் வரும்.’’

``இயக்குநர்கள் நிறைய ஃபுட்டேஜ் எடுத்துட்டு வந்து, அதைக் குறைங்கன்னு உங்ககிட்ட சொல்றாங்க. அப்படி சில இடங்களில் ஜம்ப் தெரிஞ்சா எடிட்டங் சரியில்லைன்னு எடிட்டர்கள் மேல விமர்சனம் வந்திடுதே! அதை எப்படி எடுத்துக்கிறீங்க?’’

‘‘ஸ்கிரிப்ட் படிக்கும்போது, ‘இது அதிகமா இருக்கிற மாதிரி இருக்கு, கொஞ்சம் குறைச்சுக்கலாம்’னு சொன்னா சிலர் கேட்கறதில்லை. ‘எதையும் குறைக்க வேண்டாம். நினைச்சதெல்லாம் எடுத்திடலாம், அப்புறம் பார்த்துக்கலாம்’னு இயக்குநர்கள் எடுத்திட்டு வந்திடுவாங்க. மூணு மணி நேரக் காட்சிகள் எல்லாத்தையும் சுருக்கி சுருக்கி ரெண்டு மணி நேரத்துக்குக் கொண்டு வரலாம். ஆனா, முழுமையான காட்சிகள்ல இருந்த எந்த எமோஷனும் இதுல பதிவாகாது; அதனால, நான் அதை எப்பவும் பண்ணமாட்டேன். கதையை சுருக்க முயற்சி செய்வேன். எந்த சீன் வொர்க் அவுட்டாகும்னு நினைக்கிறோமோ அதுல கையே வைக்கமாட்டேன். அதை ஆடியன்ஸ் நல்லா என்ஜாய் பண்ணட்டும். ‘இந்த சீனை ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்திருக்காங்களே’ன்னு எதையும் அனுதாபத்துடன் பார்த்து வைக்கக்கூடாது. அந்த சீன் கதையில என்ன பண்ணும் அப்படிங்கிறதுதான் முக்கியம். உதாரணத்துக்கு, ‘துப்பாக்கி’ படத்துல 12 பேரை ஷூட் பண்ற சீன். இன்னொண்ணு, ‘ஆயுத எழுத்து’ படத்துல மாதவன் - மீரா ஜாஸ்மின் எப்படி வாழ்ந்திருக்காங்கன்னு காட்ட அவ்வளவு ஃபுட்டேஜ் இருந்தது. அதையெல்லாம் சுருக்கி ஒரு மான்டேஜ் சாங்கா மாத்தி அதுல கதை சொல்லிட்டோம். அதையும் மீறி சில காரணங்களுக்காக வேற வழியில்லாமல் படத்துக்குள்ள அந்த சீனை வைக்கும்போது எங்க மேல விமர்சனம் வந்திடுது.’’

``ஒரு காமெடி சீனோ அல்லது ஒரு மாஸ் சீனோ அதை ஆடியன்ஸ் கைதட்டி என்ஜாய் பண்ண ஒரு இடைவெளி தேவைதானே? அதுக்காக எப்படி எடிட் பண்ணுவீங்க?’’

‘‘உண்மைதான். ஒரு காமெடி சீனுக்கு ஆடியன்ஸ் சிரிச்சு முடிக்கிறதுக்குள்ள அடுத்து உடனே இன்னொரு சீன் ஆரம்பமானால், அதை மக்களால கவனிக்க முடியாது. அதனால, காமெடி சீனோ அல்லது மாஸ் சீனோ, மக்கள் என்ஜாய் பண்ண அந்த ஷாட்ல ஒரு சின்ன இடைவெளி விடணும். அதே மாதிரி ஹீரோவுடைய என்ட்ரி. அவங்களுக்கான மாஸ் சீனைப் பொறுத்தவரை, நான் படம் பார்த்தா எவ்வளவு நேரம் என்ஜாய் பண்ணுவேனோ, அவ்வளவுதான் அந்த மாஸ் எலிமென்டை வைக்கணும். அதிகமா வெச்சுட்டா, திகட்டும். ஹீரோ மாஸா நடந்து வர்றார்னா அதிகபட்சம் ஏழெட்டு நொடிதான். அதுக்குள்ள மியூசிக்கலா ஒரு விஷயமும் சேரும்போது ஒரு ஹைப் கிடைக்கும். அதை ரசிச்சு முடிச்சு அடுத்த காட்சிக்குச் செல்ல ஒரு சின்ன இடைவெளி மிக மிக அவசியம்.’’

``நீங்க சினிமாவுக்கு வந்த 30 வருடங்களில் மக்களுடைய ரசனை மாறியிருக்கும். பழைய படங்களில் வருகிற காட்சிகள் இப்போ ட்ரோல் செய்யப்படுது. ஒரு டெக்னீஷியனா மக்கள் ரசனையை எப்படிப் புரிஞ்சுக்கிறீங்க?’’

‘‘நான் தியேட்டருக்குப் போய் மக்களோடு மக்களா உட்கார்ந்து படங்கள் பார்ப்பேன். அப்போ அவங்களுடைய ரெஸ்பான்ஸ் எதுக்கு வருது, வரலைன்னு புரிஞ்சுக்க முடியும். காலத்துக்குத் தகுந்த மாதிரி நம்மளும் மாறிக்கணும். பிலிம்ல எடிட் பண்ணிக்கிட்டிருந்தேன். சாஃப்ட்வேர் வந்து டிஜிட்டலா மாறுச்சு. அதுக்கு நான் மாறலைனா, என்னால இந்தத் துறையில இருந்திருக்கவே முடியாது. அப்போ ஒவ்வொரு ஷாட்டுக்கு இடையேயும் கட் இருக்கும். இப்போ ஷாட்டுக்குள்ளேயே கட் பண்ணலாம். ரெண்டு பேர் பேசிக்கிற சீன்ல ஒரு டேக்ல ஒருத்தர் நல்லா நடிச்சிருக்கார். இன்னொரு டேக்ல இவர் சொதப்பி இன்னொருத்தர் நல்லா நடிச்சிருக்கார்னா ரெண்டையும் இணைச்சு எடிட் பண்ணலாம். இந்த மாதிரியான வசதிகள் நிறைய வந்திடுச்சு.’’

``ஒளிப்பதிவுல யதார்த்தமா, தத்ரூபமா இருக்குன்னு சொல்றது பெரிய பாராட்டு. அதே மாதிரி, எடிட்டிங்ல ரியலிசம்னா என்ன?’’

‘‘சினிமாவுல மக்களைக் கவர்றதுக்காக ஒரு விஷயத்தை மிகைப்படுத்திக் காட்டுறது அதிகம். ஆனால் மக்கள் இப்போ ரொம்ப புத்திசாலியா இருக்காங்க. அவங்களை ஏமாத்த முடியாது. எங்கேயாவது தவறுகள் தெரிஞ்சா, அதுதொடர்பா கேள்வி கேட்கிறாங்க, மீம் பண்றாங்க. நான் நிறைய ரியலிஸ்டிக் படங்களும் எடிட் பண்ணியிருக்கேன்; சாதாரண வாழ்க்கையைத் தாண்டிய கற்பனைப் படங்களும் எடிட் பண்ணியிருக்கேன். எவ்வளவு யதார்த்தமா காட்ட முடியுமோ அப்படி காட்டணும்னு நினைக்கிறேன். தேவையில்லாமல் எஃபெக்ட்ஸ், கட்ஸ் இருக்கக்கூடாது. யதார்த்தப் படங்கள்ல என்ன கத்துக்கிறேனோ, அதை கமர்ஷியல் படங்கள்ல பயன்படுத்துறேன்.’’

``நிறைய படங்களுக்கான எடிட்டிங் வேலைகள் போகும்போது எப்படி நேரம் ஒதுக்குவீங்க?’’

‘‘எடிட்டிங்ல ரெண்டு ஸ்டேஜ் இருக்கு. ஷூட்டிங் போக போக, அதுக்கான ரஷ் ஃபுட்டேஜ் வந்திடும். அதை ரஃப் கட் பண்ணி வெச்சுக்கிட்டே இருப்போம். அதெல்லாம் கதையுடைய ஆர்டர்லயே இருக்காது. அன்னிக்கு என்ன எடுத்தாங்களோ அதை மட்டும் எடிட் பண்ணுவோம். எடிட்டிங்குடைய ரெண்டாவது ஸ்டேஜ், படத்தின் ஷூட்டிங் முடிஞ்சுதான் ஆரம்பமாகும். எடிட் பண்ணின எல்லா சீன்களையும் ஒட்டிப் பார்க்கும்போதுதான், ஒரு படமா தெரியும். அப்போ இயக்குநர் கூட உட்கார்ந்து அதுல என்ன பண்ணலாம், எப்படிப் பண்ணலாம்னு பார்த்துப் பண்ணுவோம். ஒரு படம், இரண்டாவது ஸ்டேஜுக்கு வந்திடுச்சுனா, அந்தச் சமயத்துல வேற எந்தப் படத்தையும் எடிட் பண்ணமாட்டோம். இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்களை ஒப்பிடும்போது, எடிட்டர்களுக்குப் பெரிய சம்பளம் கிடையாது. அதனாலதான், ஒரு எடிட்டர் ஒரே சமயத்துல அத்தனை படங்கள் பண்றாங்க. இயக்குநர்கள் எடிட்டர்களுடைய வேலையைப் புரிஞ்சுக்கிறாங்க. ஆனா, தயாரிப்பாளர்கள் எடிட்டிங்கைப் பெரிய வேலையா நினைக்கிறதில்லைன்னு வருத்தமா இருக்கு. எப்படி குறைவான சம்பளத்துல எடிட்டிங்கை முடிக்கலாம்னு மட்டும்தான் நினைக்கிறாங்க. இந்த நிலைமை மாறணும்.’’

“மக்கள் புத்திசாலிகள்... அவங்களை ஏமாத்த முடியாது!”

`` ‘எடிட்ல பார்த்துக்கலாம்’னு இயக்குநர்கள் சொல்றது உங்களுக்கு எவ்வளவு பிரஷர்?’’

‘‘நிச்சயமா பெரிய பிரஷர்தான். இயக்குநர்களுக்கு ஷூட்டிங் ஸ்பாட்ல பிரஷர் இருக்கும். எதையாவது எடுக்காமல் விட்டுட்டா, மறுபடியும் எடுக்க முடியாது. அதனால, அவங்க நினைக்கிறதை எடுத்துட்டா, வேணும், வேணாம்னு எடிட்ல முடிவு பண்ணிக்கலாம்னு நினைக்கிறாங்க. அதைத் தப்புன்னு சொல்லமுடியாது. எடிட்டர்கள் ஒரு படத்துக்கு கமிட்டாகிட்டாங்கன்னா, அந்தப் படத்துக்கு எத்தனை நாள் வேலை செஞ்சாலும் ஒரே சம்பளம்தான். ஆனா, நடிகர்களுக்கு அப்படியில்லை. அதனால, எல்லாத்தையும் எடுத்து வெச்சிக்கிறது நல்லதுன்னு நினைக்கிறாங்க.’’

``ராஜமெளலியுடன் முதல்முறையா ‘RRR’ படத்துல இணைஞ்சிருக்கீங்க. அவர்கூட வேலை செஞ்ச அனுபவம்?’’

‘‘என்னுடைய வொர்க் அவருக்கு நல்லாத் தெரியும். அப்படித்தான், இந்தப் படத்துக்கு எடிட் பண்ணக் கூப்பிட்டார். 2018-ல ஆரம்பிச்ச இந்தப் படம் கொரோனாவால் தாமதமாகிடுச்சு. அவருடைய ஸ்கிரிப்ட் டிஸ்கஷன்ல டெக்னிஷீயன்களும் இருப்பாங்க. அவர்கூட வேலை செஞ்சது ரொம்ப நல்ல அனுபவமா இருந்தது. எதையும் பிரமாண்டமா யோசிக்கிறவர். மக்களுடைய பல்ஸ் என்னன்னு ரொம்பத் தெளிவா புரிஞ்சு வெச்சிருப்பார். அவ்ளோ திட்டமிடுறார், அதுக்காக அவ்ளோ மெனக்கெடுறார். அதனாலதான் எல்லோரும் வியக்கிற மாதிரியான அவுட்புட் வருது. ராஜமெளலி, மணிரத்னம் மாதிரியான இயக்குநர்கள் ஒவ்வொரு படத்துக்கும் ஸ்கிரிப்டைத் தாண்டி டெக்னிக்கலாகவும் புதுமைப்படுத்தணும்னு நினைக்கிறாங்க. அந்த வகையில ஒரு டெக்னீஷியனா நிறைய சுவாரஸ்யமான சவால்கள் இருக்கு. அதுல நிறைய தெரிஞ்சுக்க முடியுது.’’

``எல்லோரும் எதிர்பார்த்துட்டிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ எந்த அளவில் இருக்கு?’’

‘‘இப்போ மார்க்கெட் பெரிசாகிடுச்சு. உலகத்துல எங்கிருந்துவேணாலும் நம்ம படத்தைப் பார்க்கமுடியுங்கிற ஆப்ஷன் வந்த பிறகு, அதுக்காக செலவு பண்ணத் தயாரிப்பாளர்களும் வர்றாங்க. அப்படித்தான் ஆரம்பமானது ‘பொன்னியின் செல்வன்.’ மணிரத்னம் நினைச்ச நடிகர்களெல்லாம் படத்துக்குள்ள வந்தாங்க. அவ்வளவு பெரிய கதையை ஒரு பாகத்துல சொல்ல முடியாது. அதனால, ரெண்டு பாகமா பண்ணலாம்னுதான் ஆரம்பிச்சோம். ரெண்டு பாகங்களும் சேர்த்து 70% முடிஞ்சது. இந்தப் படத்துல வேலை செய்ய அவ்வளவு ஆசையா இருந்தது. அதே ஆசையுடனும் ஆர்வத்துடனும் வேலை செஞ்சுக்கிட்டிருக்கேன். மணி சார் படங்களுக்குன்னு உண்டான அழகியலோடு படம் தயாராகிட்டிருக்கு.’’