Published:Updated:

`சினிமாவின் வணிகச் சூழல்;கைகூடாமல் போன மாற்று சினிமா!’-பாலாசிங் குறித்து நாடகவியலாளர் கருணா பிரசாத்

அவதாரம், புதுப்பேட்டை மற்றும் விருமாண்டி போன்ற படங்களில் தனது நடிப்பால் கவனம் பெற்றவர் பாலா சிங்.

பாலா சிங்
பாலா சிங்

திரையுலகில் சில நடிகர்கள் மட்டுமே தம் தனித்துவமான நடிப்புத் திறமையால், தாம் நடித்த கதாபாத்திரங்களால் நினைவு கூறப்படுவர். பாலாசிங் அப்படியான தனித்துவமிக்க கலைஞர். இன்று அதிகாலை 1 மணியளவில் உடல் நலக்குறைவு காரணமாக பாலா சிங் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். நாடகத் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர் பாலா சிங். நவீன நாடகங்களில் தொடர்ச்சியாக இயங்கி வந்தவர். மறைந்த நாடகவியலாளர் ஞாநியின் பரீக்‌ஷா நாடகக் குழுவில் இணைந்து செயல்பட்டுள்ளார். அவரது நாடக அனுபவங்கள் குறித்து அவரின் நண்பரும், நாடகவியலாளருமான கருணா பிரசாத்திடம் பேசினோம். "சென்னையில் நான் கூத்துப்பட்டறையில் இயங்கிக்கொண்டிருந்த காலம் முதலே எனக்கு அவர் பழக்கம். ஞாநியின் பரீக்‌ஷா மற்றும் ருத்ரனின் நாடகக் குழுவிலும் இணைந்து இயங்கிக்கொண்டிருந்தார். ஞாநியுடைய தொலைக்காட்சி முயற்சிகளிலும் உடனிருந்தார்.

பாலா சிங்
பாலா சிங்

திரைத்துறைக்கு மிகத் தாமதமாக, நடிகர் நாசரின் முயற்சியாலேயே அறிமுகப்படுத்தப்பட்டார். மாற்று சினிமா குறித்த நல்லதொரு பார்வை அவரிடம் இருந்தது. வணிகச் சூழல் நிறைந்த சினிமாவில் அது அவருக்குக் கைகூடாமல் போயிருக்கலாம். அவரது திறமைக்குத் தகுந்த அளவில் சினிமாத்துறை அவரை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவரது தனிப்பட்ட திறமையாக நான் பார்ப்பது அவரது நடிப்பிலுள்ள 'மௌன வாசிப்பு'. நவீன நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்திருந்தாலும் அவரிடம் மிகை நடிப்பிருக்காது. சினிமா நடிப்புக்குத் தன்னை இயல்பாகப் பழக்கப்படுத்திக் கொண்டார். இரண்டு வாரத்துக்கு முன்தான் அவரின் மகள் திருமணம் நடந்தது. அதற்குள் இப்படி நடந்திருப்பது வருந்தத்தக்கது" என்றார் வேதனையுடன்.

பாலா சிங் தனது கலைப் பங்களிப்பால் எந்நாளும் வாழ்வார்.