Published:Updated:

மீண்டும் மீளுமா தமிழ் சினிமா?

மீண்டும் மீளுமா தமிழ் சினிமா?
பிரீமியம் ஸ்டோரி
மீண்டும் மீளுமா தமிழ் சினிமா?

2020... எல்லோரின் இயல்பு வாழ்க்கையையும் திருப்பிப்போட்ட ஆண்டு. எல்லாத் தொழிலும் முடங்கி செய்வதறியாது நின்ற ஆண்டு.

மீண்டும் மீளுமா தமிழ் சினிமா?

2020... எல்லோரின் இயல்பு வாழ்க்கையையும் திருப்பிப்போட்ட ஆண்டு. எல்லாத் தொழிலும் முடங்கி செய்வதறியாது நின்ற ஆண்டு.

Published:Updated:
மீண்டும் மீளுமா தமிழ் சினிமா?
பிரீமியம் ஸ்டோரி
மீண்டும் மீளுமா தமிழ் சினிமா?

கண் மூடித் திறப்பதற்குள் 2020 ஓடிவிட்டது. ‘2021 நமக்கானது’ என்ற நம்பிக்கையில் எல்லாத் தொழில்களும் ஆரம்பமாகின. சினிமாத் துறையைப் பொறுத்தவரை மிகவும் பாதிக்கப்பட்டு, சமீபமாகத்தான் இயல்புநிலைக்குத் திரும்பியது. கொரோனா வைரஸின் அச்சம் சிறிது சிறிதாக நீங்கி வந்த வேளையில், தன்னுடைய இருப்பை மீண்டும் அழுத்தமாகப் பதிவு செய்தது கொரோனா. சென்ற வருடத்தைவிட இந்த முறைதான் அதிகமான நபர்கள் கொரோனாத் தாக்குதலுக்கு உள்ளாகிவருகின்றனர். இதனால் திரைத்துறை மீண்டும் பெட்டிக்குள் சுருண்டிருக்கும் நிலை.

மக்களின் பொழுதுபோக்காக இருக்கக்கூடிய இந்தத் துறையை நம்பி லட்சக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன. பெரிய முதலீடு தேங்கிக் கிடக்கிறது. எனவே, கொரோனாவின் இரண்டாவது அலையில் திரையுலகம் சிக்குமா, இதுவரை நடந்தது என்ன, இதன்பின் நடக்கவிருப்பது என்ன ஆகியவற்றை ஒரு சின்ன ரீவைண்டோடு பார்க்கலாம்.

இதுவரை...

2020... எல்லோரின் இயல்பு வாழ்க்கையையும் திருப்பிப்போட்ட ஆண்டு. எல்லாத் தொழிலும் முடங்கி செய்வதறியாது நின்ற ஆண்டு. மார்ச் மாதம் தொடங்கிய லாக்டெளன் படிப்படியாக ஒரு வருடத்தையே தின்றுவிட்டது. படப்பிடிப்புகள் இல்லை, பட வெளியீடுகள் இல்லை, திரையரங்குகள் இல்லை என அடுத்தடுத்த அறிவிப்புகளால் ஒட்டுமொத்தத் திரையுலகும் பாதித்தது. திரையுலகை நம்பி லட்சக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன. முன்னணி நட்சத்திரங்கள் பலர் தொழிலாளர்களின் அமைப்பான பெஃப்சி-க்கு நன்கொடை வழங்கினர். நடிகர்கள் இந்த லாக்டெளன் காலத்தைத் தங்களின் குடும்பத்துடன் செலவழித்தனர். இயக்குநர்கள் அடுத்தடுத்த படங்களுக்கான கதை எழுதுவதற்காக இந்த இடைவெளியைப் பயன் படுத்திக்கொண்டனர். இந்த இடைவெளியில், ‘சூரரைப் போற்று’, ‘மூக்குத்தி அம்மன்’ எனப் படங்கள் ஓ.டி.டி தளத்தில் வெளியாகின.

மீண்டும் மீளுமா தமிழ் சினிமா?

கொஞ்ச கொஞ்சமாக, பாதுகாப்பான முறையில் படப்பிடிப்பு நடத்துவதற்கும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், திரையரங்குகள் திறப்பதற்கான அறிவிப்பு ஏதும் வரவில்லை. நவம்பர் மாதம் 50% சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுத்துத் திரையரங்குகளைத் திறக்க அரசு வழிவகை செய்தது. சின்னச்சின்னப் படங்கள் புதிதாக வெளியானாலும், மக்களின் வரத்து என்பதோ குறைவாகவே இருந்தது. அந்தச் சமயத்தில் அனைவரும் எதிர்பார்த்தது ‘மாஸ்டர்’ திரைப்படத்தைத்தான். நூறு சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் முதல்வரைச் சந்தித்துப் பேசிவந்தனர். ‘மாஸ்டர்’ படத்திற்கு 100 சதவிகித இருக்கை வசதி அளிக்க வேண்டும் என்று விஜய்யும் தமிழக முதல்வரைச் சந்தித்துவிட்டு வந்தார். ஓரிரு நாள்களிலேயே அதற்கு அனுமதி வழங்கப்பட்டது. பின், மத்திய அரசின் வலியுறுத்தலாலும் நீதிமன்ற உத்தரவினாலும் அது 50 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. முதல் நாள் அதைக் கடைப்பிடிக்கவில்லை என்றாலும் அடுத்தடுத்த நாள்களில் அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

அதன்பின் மத்திய அரசு, 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி வழங்கி, ‘போதிய பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியது. மீண்டும் பெரிய படங்கள், சின்னப் படங்கள் என இந்தியா முழுக்க சினிமாத்துறை உயிர்த்தெழுந்ததை சினிமாத்துறையினர் கொண்டாடினர். குறிப்பிட்ட சில நாடுகளைத் தவிர, மற்ற வெளிநாடுகளுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டது. ‘போதும்டா சாமி’ எனப் பெருமூச்சு விட்டு எல்லாப் படக்குழுவும் தங்களது பணிகளைச் செய்யத் தொடங்கின. முடிந்த படங்கள் எல்லாம் வெளியீட்டுக்குத் தயாராகிக்கொண்டிருந்தன. முடியாத படங்களையெல்லாம் விரைவில் முடிக்கத் தீவிரம் காட்டினர். இந்நிலையில், மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகம் இருப்பதால், திரையரங்களுக்கு மீண்டும் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்திருக்கிறது அரசு. தவிர, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்துள்ளது. இரவுநேர ஊரடங்கால், தினசரி மூன்று காட்சிகளை மட்டுமே நடத்த முடியும் என்ற நிலை. இந்தச் சூழல் திரைத்துறையினர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மீண்டும் மீளுமா தமிழ் சினிமா?

கோலிவுட்டைப் பொறுத்தவரையில், ‘மாஸ்டர்’, ‘ஈஸ்வரன்’ ஆகிய இரண்டு பெரிய படங்களைத் தொடர்ந்து, நிறைய சின்ன பட்ஜெட் படங்களும் மீடியம் பட்ஜெட் படங்களும் வெளியாகின. பின், கார்த்தியின் ‘சுல்தான்’, தனுஷின் ‘கர்ணன்’ ஆகிய பெரிய படங்கள் வெளியாகின. ‘கர்ணன்’ வெளியாகி மறுநாளில் இருந்தே 50% அனுமதிதான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அடுத்ததாக, சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ வெளிவரத் தயாராக இருக்கிறது. சிம்புவின் ‘மாநாடு’, விக்ரமின் ‘கோப்ரா’ போன்ற படங்கள் ஷூட்டிங் நிறைவடையும் தறுவாயில் இருக்கின்றன. பலரும் எதிர்பார்த்து இருக்கும் ‘வலிமை’ படத்திற்கான அப்டேட்டும் மே 1-லிருந்து அடுத்தடுத்து வெளியாகும் என அறிவித்திருந்தனர். இப்போது அதுவும் தள்ளிப்போகிறது. தவிர, ‘அண்ணாத்த’, ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்கள் கடைசிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கின்றன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவிருக்கிறது. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ஜார்ஜியாவிலும், ‘அண்ணாத்த’ ஹைதராபாத்திலும் சூர்யா - பாண்டிராஜ் படம் மதுரையிலும் தீவிரமாக எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவை தவிர, ஏகப்பட்ட படங்கள் வெளிவரத் தயார் நிலையில் இருக்கின்றன. முடித்து வைத்திருக்கும் படங்களுக்கு வட்டி கூடிக்கொண்டே போகும், நடிகர்களின் கால்ஷீட் மாறும் என ஏராளமான பிரச்னைகள் காத்திருக்கின்றன. ஆகவே, மீண்டும் கோலிவுட்டின் நிலை என்னவாகும் என்பது குறித்து, தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் மற்றும் திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் ஆகியோரிடம் பேசினேன்.

“முதல் எட்டு மாசம் தியேட்டரைப் பூட்டிப் வெச்சிருந்து ஈ.பி. பில், சொத்து வரி, கார்ப்பரேஷன் வரின்னு கட்டினோம். 50% இருக்கைகளுக்கு அனுமதி கொடுத்த பிறகும், பெருசா எந்தப் பயனும் கிடைக்கலை. ஏதோ இந்த ரெண்டு மூணு மாசம் பரவாயில்லாமல் இருந்தது. ‘மாஸ்டர்’, ‘சுல்தான்’, ‘கர்ணன்’னு வெளியாகி தியேட்டர் வியாபாரம் நல்லா வந்துகிட்டிருந்தது. இப்போ மறுபடியும் 50 சதவிகிதம்தான்னு சொன்னா, பெரிய படங்கள் எதையும் ரிலீஸ் பண்ணமாட்டாங்க. சின்னச்சின்னப் படங்கள்தான் வரும். 50 சதவிகிதம்னு சொல்றோம். அதுல 25 சதவிகிதம்தான் கூட்டம் வரும். சாதாரணமாவே தியேட்டர்கள் 50 சதவிகிதத்துலதான் ஓடிட்டிருக்கு. பொதுவாக, வாரக் கடைசியில மட்டும்தான் தியேட்டர்கள் ஃபுல்லாகும். மத்த நாள்கள் எல்லாம் 50 சதவிகிதம் மக்கள் வர்றதே கஷ்டம். இப்போ ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்குன்னு வேற சொல்லிட்டாங்க. போன முறையாவது, தியேட்டர்ல வேலை செஞ்சுட்டு இருந்தவங்களுக்குப் பாதிச் சம்பளம் கொடுத்திட்டு இருந்தோம். இனி அப்படிக் கொடுக்கமுடியுமான்னு தெரியலை.

இன்னொரு பக்கம், 80 சதவிகிதம் கொடுங்கன்னு தயாரிப்பாளர்கள் ஷேர் கேட்குறாங்க. எங்கேயோ கோடிகோடியா சம்பளத்தைக் கொடுத்துட்டு, ஓடிடிக்குப் படத்தையும் வித்துட்டு, எங்ககிட்ட வந்து ஷேர் கேட்டா, நாங்க என்ன பண்ண முடியும்? ஓடிடிக்குப் படத்தை நேரடியா கொடுத்திடுறாங்க. ஹீரோயிசம் தெரிய ணும்னா, ஓடிடி வேலைக்கு ஆகாது. கேட்க வேணா ஃபேன்ஸியா இருக்குமே தவிர, அது சினிமாவைக் காப்பாத்தாது. எல்லாப் படங்களையும் ஓடிடி நிறுவனங்கள் வாங்க மாட்டாங்க. பெரிய ஹீரோக்களுடைய படங்கள்தான் அவங்க டார்கெட். மீதிப் படங்களையெல்லாம் தியேட்டர்ல வெளியாகி என்ன ரெஸ்பான்ஸ் இருக்குன்னு பார்த்துட்டுதான் வாங்குவாங்க. அவங்களுக்குத் தமிழ்ப் படங்கள் மட்டும் முக்கியமில்லை. ‘ஓடிடிக்குப் போகாதீங்க. ஒரு குறிப்பிட்ட நாளுக்குப் பிறகு போங்க... நியாயமான ஷேர் கேளுங்க’ன்னு நாங்களும் தயாரிப்பாளர்கள்கிட்ட நிறைய முறை சொல்லிச் சொல்லிப் பார்த்துட்டோம். தமிழ்நாட்டுல இருக்கிற 1,112 தியேட்டர்கள்ல 152 தியேட்டர்களை நிரந்தரமா மூடிட்டாங்க. மல்டிப்ளக்ஸைத் தவிர, தமிழ்நாட்டுல இன்னும் இரண்டு மூணு வருஷத்துல சிங்கிள் தியேட்டர்களே இருக்காது. இன்னிக்கு மும்பையில அதுதான் நிலைமை. முழுக்க முழுக்க மல்டிப்ளக்ஸ்தான். நாளைக்கு நம்ம ஊர்லயும் அதுதான் நடக்கும். டிக்கெட் ஆன்லைன்ல புக் பண்ணிக்கிறாங்க. சானிட்டைசர் வெச்சிருக்கோம். மாஸ்க் போட்டிருந்தால் அனுமதிக்கிறோம். உள்ள வந்தா அவங்க முகம் திரையை நோக்கித்தான் இருக்கும். தியேட்டருக்குள்ள பேசுறதுக்கான வேலையே இல்லை. சொல்லப்போனா, தியேட்டர்ல கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு. அதைப் புரிஞ்சுக்கமாட்டேங்கிறாங்க. சீக்கிரமாவே தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் எல்லோரும் சேர்ந்து முதல்வரையும் ஆளுநரையும் சந்திக்கலாம்னு இருக்கோம்” என்றார் திருப்பூர் சுப்ரமணியன்.

தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், “ரொம்ப ரொம்ப சவாலான சூழல்தான் இது. யாரும் எதிர்பார்க்காதது. 100 சதவிகிதம் அனுமதி இருந்ததால்தான் ‘கர்ணன்’ படம் முதல்நாள் மட்டும் தமிழ்நாட்டுல 10 கோடி ரூபாய் வசூல் பண்ணியிருக்கு. 50 சதவிகிதத்துல இந்தத் தொகை வசூல் பண்ணியிருக்க முடியாது. இன்னும் ஷூட்டிங் முடியாமல் இருக்கிற படங்களைவிட, ரிலீஸுக்குத் தயாரான படங்களுக்குத்தான் தலைவேதனை. இந்த மாதிரியான சூழலை எப்படிக் கையாளப்போறோம்கிறது கேள்விக்குறி. ‘மக்கள் என்ன ஆனாலும் பரவாயில்லை. சினிமா பிசினஸ் நடக்கணும்’னு சொல்லமுடியாது. ரெண்டையும் பார்க்கணும். சீக்கிரமா கொரோனா பாதிப்பு குறையணும். அப்போதான் அரசாங்கத்துக்கிட்ட போய்க் கேட்கமுடியும்.

தயாரிப்பாளர்களைப் பொறுத்தவரையில், பெரிய படங்களை வெளியிடணும்னா, 100% தேவைப்படுது. வார இறுதியில்தான் பெரிய கூட்டம் வரும். இப்போ அதுக்கு வாய்ப்பில்லை. இப்போ ‘டாக்டர்’ படத்தை மே மாதம் வெளியிட பிளான் பண்ணியிருக்காங்க. சிவகார்த்திகேயனுக்கு முதல் நாள் மினிமம் 10 கோடி வசூலாகும். அதனால, அவங்க 100% எதிர்பார்ப்பாங்க. ‘புலிக்குத்தி பாண்டி’, ‘ஏலே’, ‘மண்டேலா’ன்னு நேரடியா சில படங்கள் டிவியில ரிலீஸாகி புது விஷயத்தை செட் பண்ணிடுச்சு. அதனால, டிவி சேனல்களும் இதைத் தொடர்ந்து பண்ணத் தயாராகிட்டாங்க. மீடியம் பட்ஜெட் படங்கள், சின்ன பட்ஜெட் படங்களுக்கு இது நல்ல ஆப்ஷன். படமே வெளிவராமல் இருக்கிறதுக்கு, இது எவ்வளவோ மேல். எந்த ஒரு ஓடிடி நிறுவனமும் சின்னப் படங்களை வாங்கிறதா இல்லை. பெரிய படங்கள்தான் வாங்கணும்னு நினைக்குது. ஆனா, தயாரிப்பாளர்கள் பெரிய படங்களைக் கொடுக்கமாட்டாங்க. காரணம், அவங்க எதிர்பார்க்குற தியேட்டர் வருமானம் ஓடிடியால கொடுக்கமுடியாது.

மீண்டும் மீளுமா தமிழ் சினிமா?

முதல்ல தமிழ்நாட்டுல கொரோனாத் தாக்கம் குறையணும். புது ஆட்சி வந்ததும் கொரோனா குறைஞ்சிடுச்சு, தியேட்டர் 100 சதவிகிதம் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டா, நமக்கு எந்தப் பிரச்னையுமில்லை. இப்போதைக்கு இதைத் தற்காலிகமான பிரச்னை யாகத்தான் நான் பார்க்கிறேன். மே 2-ம் தேதிக்குப் பிறகு, தீர்வு கிடைக்கும்னு நம்பிக்கையோடு இருக்கேன்” என்றார்.

தமிழகத்தின் நிலை இது என்றால், இதேபோல பாதிப்பு உள்ள மற்ற மாநிலங்களில் என்ன நிலை?

டோலிவுட்: நூறு சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி வழங்கியதுடன், ராணாவின் ‘விரட்டப்பர்வம்’ - ஏப்ரல் 30, சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’ - மே 13, வெங்கடேஷின் ‘நாரப்பா’ (‘அசுரன்’ ரீமேக்) - மே 14, ரவிதேஜாவின் ‘கில்லாடி’, பாலகிருஷ்ணாவின் புதிய படம் - மே 28, பிரபாஸின் ‘ராதே ஷியாம்’ - ஜூலை 30, அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ - ஆகஸ்ட் 13, விஜய் தேவரக்கொண்டாவின் ‘லைகர்’ செப்டம்பர் 9, ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘RRR’ - அக்டோபர் 13 என டோலிவுட்டிலிருந்து அடுத்தடுத்து பெரிய படங்களின் வெளியீட்டு தேதியை அறிவித்தனர். சமீபமாக பவன் கல்யாண் நடித்த ‘வக்கீல் சாப்’ படத்திற்குத் தெலங்கானா, ஆந்திராவில் ஏகபோக வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் அங்கேயும் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படவிருக்கிறது என்கிறார்கள். நாக சைதன்யாவின் ‘லவ் ஸ்டோரி’ படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளி வைத்திருக் கிறார்கள். இதன்பின், வெளியாகவிருக்கும் படங்களைப் பற்றிய அவர்களின் முடிவு எப்படியிருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், தெலுங்கு சினிமா பிசினஸோடு தமிழ் சினிமாவை ஒப்பிட்டுப் பேசமுடியாது. பெரிய ஹீரோக்களின் படங்களை யெல்லாம் நிச்சயம் அவர்கள் நேரடியாக ஓடிடியில் வெளியிட மாட்டார்கள். இந்த லாக்டெளனில் அல்லு அர்ஜுனுடைய ‘ஆஹா’ ஆப் மிகவும் பிரபலமாகிவிட்டது. அதில் அங்குள்ள எல்லா முன்னணி நடிகர்களுக்கும் குறிப்பிட்ட ஷேர் இருப்பதாகச் சொல்கிறார்கள். அந்தத் தளத்திற்கென்று படங்களும் வெப் சீரிஸ்களும் தயாரிக்கின்றனர். தமன்னா மாதிரியான முன்னணி நடிகைகளும் அதில் நடிப்பது அந்தத் தளத்தைப் பெரிய அளவில் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. படங்கள், சீரிஸ்கள் மட்டுமல்லாது ரியாலிட்டி ஷோக்களையும் தயாரித்துவருகின்றனர். அவர்களுடைய கான்செப்டே, நெட்ஃபிளிக்ஸ், அமேசான் மாதிரி வெளியிலிருந்து ஸ்ட்ரீமிங் தளங்களை அதிகம் ஆதிக்கம் செலுத்தவிடாமல் நம்முடைய படைப்புகளை நம்முடைய தளத்திலேயே வெளியிட வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது.

மீண்டும் மீளுமா தமிழ் சினிமா?

பாலிவுட் : கடந்த வருட லாக்டெளனில் ரிஷி கபூர், இர்ஃபான் கான், சுஷாந்த் சிங் என முக்கியமான நட்சத்திரங்கள் பலரை இழந்திருக்கிறது பாலிவுட். முன்னணி நடிகர்கள் ஷாரூக் கான், ஆமீர் கான், சல்மான் கான், ரன்வீர், ரன்பீர் ஆகியோர் இந்தப் புதுப்பட ரேஸில் இல்லை. அக்‌ஷய் குமார் கைவசம் நிறைய படங்கள் இருக்கின்றன. ‘மாஸ்டர்’ முதன்முதலாக நேரடியாக இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியானது. அதனைத் தொடர்ந்து, தன்னுடைய ‘ராதே’ திரைப்படம் ரம்ஜானுக்கு வெளியாகும் என்பதை அறிவித்தார், சல்மான் கான். ஆனால், அங்கு கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. அதனால், ‘ராதே’ படத்தை ஒரே நேரத்தில் தியேட்டர்களிலும் ஜீ பிளக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியிட உள்ளனர். உலகம் முழுக்க இந்தப் படம் மே 13 அன்று வெளியாவதால், தியேட்டர் இருக்கும் இடங்களில் தியேட்டர்களிலும் இல்லாத இடங்களில் ஓடிடி தளத்திலும் வெளியிடப்பட இருக்கிறது. வெளியீட்டிற்குத் தயாராக இருக்கும் பெரிய படங்களும், சின்ன பட்ஜெட் படங்களும் எப்போது வெளியாகும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. கங்கனா ரணாவத் நடித்த ‘தலைவி’ படம் ஏப்ரல் 23-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாவதாக இருந்தது. மும்பையில் தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளி வைத்திருக்கின்றனர்.

மல்லுவுட் : கேரளாவில் தற்போது வரை 50% இருக்கைகளுடன்தான் தியேட்டர்கள் இயங்கிவருகின்றன. 2020 மார்ச் இறுதியில் வெளியாவதாக இருந்த ‘மரக்கர் : அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ திரைப்படம் 50 சதவிகிதம் மட்டுமே அனுமதி இருப்பதால் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. காரணம், மலையாளத் திரையுலக வரலாற்றில் முதன்முறையாக 100 கோடி பட்ஜெட்டில் தயாரான படம் அது. ‘சுஃபியும் சுஜாதையும்’, ‘சி யு சூன்’, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என லாக்டெளனில் வெளியான பல மலையாளத் திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. மோகன்லாலின் ‘த்ரிஷ்யம் 2’ படமும் நேரடியாக அமேசான் ப்ரைமில்தான் வெளியாகிப் பேசப்பட்டது. பகத் பாசில் நடிப்பில் நெட்ஃபிளிக்ஸில் ‘இருள்’, அமேசான் ப்ரைமில் ‘ஜோஜி’ என அடுத்தடுத்து ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. கொரோனாவின் தாக்கம் அங்கும் அதிகமாக இருப்பதால், தியேட்டரில் வெளியாகவிருந்த சில படங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள். மலையாளப் படங்கள் பெரும்பாலும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும், ஃபாரின் சென்றெல்லாம் படப்பிடிப்பு நடத்தமாட்டார்கள். ஆதலால், அவர்கள் வேலையைச் செய்துகொண்டே இருக்கின்றனர்.

சினிமாத் துறை மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகமே இந்த இன்னலில் இருந்து மீண்டு இயல்புநிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான் அனைவரின் எண்ணமாக இருக்கிறது.