கட்டுரைகள்
ஆன்மிகம்
சினிமா
பேட்டிகள்
Published:Updated:

சினிமா களஞ்சியம்!

சினிமா களஞ்சியம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சினிமா களஞ்சியம்!

சினிமா

ந்தியத் திரையுலகில் தமிழ் சினிமாவுக்கு ஏராளமான சிறப்புகளும் பெருமைகளும் உண்டு. காலத்தால் அழியாத படைப்புகளை உருவாக்கியது; இங்கிருந்து பல மொழி களுக்கும் சென்று கோலோச்சியது; சினிமாவிலிருந்து ஆட்சியாளர்களாக உயர்ந்தது எனத் தமிழ் சினிமாவுக்கு தனி அடையாளம் உண்டு.

இத்தகைய தனித்துவம் கொண்ட தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த தகவல்களையும் சேகரித்து வெளிக்கொண்டுவந்தவர் `பிலிம் நியூஸ்' ஆனந்தன் மட்டுமே. அவரிடம் இல்லாத அரிய தகவல் களையும் கடந்த 27 ஆண்டுகளாகச் சேகரித்துவருகிறார் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சட்டநாதன். 1931 முதல் 2020 வரையிலான மொத்த தமிழ் சினிமா தகவல்களும் இவரிடம் இருக்கின்றன.

சினிமா களஞ்சியம்!
 • விஜய்யின் முதல் படமான `நாளைய தீர்ப்பு'க்கு இசையமைத்தது 14 வயதுச் சிறுமி.

 • இளையராஜா அதிகம் இசையமைத்தது ரஜினியின் படங்களுக்கா, கமலின் படங் களுக்கா?

 • நகைச்சுவை நடிகர் ஒருவர் ஒரே ஆண்டில் 90 படங்களில் நடித்து, அதே ஆண்டில் மரணமடைந்துள்ளார். அவரது படங்கள் பல ஆண்டு களாகப் படிப்படியாக வெளியாகியுள்ளன.

சினிமா களஞ்சியம்!
 • இந்திய அளவில் எந்த நாயகியும் செய்யாத சாதனையை ராதா நிகழ்த்தியிருக்கிறார்.

 • ஒரு பெண் இயக்குநர் தனது கணவரை வைத்து 31 படங்களை இயக்கியிருக்கிறார்.

 • உங்கள் அபிமான திரைக்கலைஞர்கள் பணியாற்றிய படங்கள் எத்தனை?

இதுபோன்று நமக்குத் தெரிந்த சினிமாவின் தெரியாத சுவாரஸ்யமான தகவல்களைத் தொகுத்துவரும் சட்டநாதன், தனது சினிமா சேகரிப்புப் பணிகள் குறித்துப் பேசுகிறார்.

சினிமா களஞ்சியம்!

``உதவி இயக்குநராகும் ஆர்வத்துல 1993-லிருந்து தமிழ் சினிமா வரலாறுகளைச் சேகரிக்கத் தொடங்கினேன். நூலகத்துக்குப் போய் பழைய நியூஸ் பேப்பர்களையெல்லாம் புரட்டினேன். பழைய படங்களின் டி.வி.டி கேசட்டுகளைத் தேடிப் பிடிச்சு வாங்கி படங்கள் பார்த்தேன். ஒவ்வொரு படங்களின் ரிலீஸ் நேரம், அதில் பணியாற்றிய கலைஞர்கள், படத்தின் வெற்றி தோல்வி உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் தொகுத்தேன்.

`ராஜகுமாரன்' பிரபுவின் 100-வது படம்னு விளம்பரம் வெளியாச்சு. ஆனா, அது பிரபுவுக்கு 103-வது படம். அப்போல்லாம் சினிமா கலைஞர்களின் பட விவரங்களைத் தொகுப்பதுடன், ஆண்டுதோறும் வெளியாகும் படங்கள் குறித்துப் பத்திரிகைகளுக்கு `பிலிம் நியூஸ்' ஆனந்தன் சார்தான் தகவல் அனுப்புவார். எனவே, பிரபுவின் படங்கள் குறித்த என் சந்தேகத்தை ஆனந்தன் சாரிடம் கேட்டேன். `மூணு படங்கள் கெளரவ வேடத்தில் சேர்க்கப்பட்டிருக்கு. முக்கியமான திரைக்கலைஞர்களின் 50, 100-வது படங்களுக்காகச் சில படங்களைக் கெளரவ வேடமாகக் கருதுவது வழக்கம்'னு பதில் கடிதம் அனுப்பினார்.

சினிமா களஞ்சியம்!

ஒவ்வொரு வருஷமும் பத்திரிகைகளுக்கு அவர் அனுப்பும் பட விவரங்களில் சில படங்கள் விடுபட்டிருக்கும். அந்தப் படங்கள் குறித்து தகவல் தெரிவிப்பேன். அதை அவரும் ஏத்துக்கிட்டு பதில் கடிதம் அனுப்புவார். `மிகச்சிறந்த சினிமா சேகரிப்பாளர்'னு என்னைப் பாராட்டியிருக்கார். என் நண்பருக்காக இளையராஜா இசையமைச்ச பிற மொழிப் பட விவரங்கள் முழுவதையும் மூணு வருஷ தேடலில் சேகரிச்சேன். அந்த ஆர்வத்தில் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் படங்களைப் பார்த்து அவற்றில் பணியாற்றிய முன்னணிக் கலைஞர்களின் பட விவரங்களையும் சேகரிச்சேன்.

சினிமா பிரபலங்கள் பலரின் பட விவரங்கள் குறித்தத் தகவல்கள் மாறுபட்டதாகவும் தவறானதாகவும் வெளியாகி, அதுவே இப்போவரை உண்மையென ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கு. உண்மையான தகவல்களை ஆதாரத்துடன் பல்வேறு சினிமா கலைஞர்களுக்கும் தயாரிப்பு நிறுவனங் களுக்கும் கடிதம் அனுப்புவேன். இதற்கிடையே, உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டு நிறைய இயக்குநர்களைச் சந்திச்சேன். இதுவரை சினிமா வாய்ப்பு கிடைக்காட்டியும்கூட சோர்வின்றி சினிமா தகவல்களைச் சேகரிக்கறேன். விஜய் டி.வி-யில் இயக்குநர் வெங்கட்பிரபு தொகுத்து வழங்கிய `கோலிவுட் கிங்' நிகழ்ச்சியில், பல எபிசோடுகளுக்கு என்னிடம் சினிமா தகவல்களை வாங்கினாங்க. தனியார் வேலைக்கு முயற்சி செஞ்சும் வாய்ப்பு கிடைக்கலை. சினிமா தகவல்களைச் சேகரிக்கிறதுதான் என் முழுநேர பணி. இதனால வருமான வாய்ப்புகள் எதுவும் இல்லை. ஆனாலும், தமிழ் சினிமா தகவல்கள் பல தலைமுறை ரசிகர்களுக்கும் போய் சேரணும்ங்கிற எண்ணத்துலதான் சினிமா தகவல்களைச் சேகரிச்சுக்கிட்டிருக்கேன்" என்று உற்சாகமாகக் கூறுகிறார் சட்டநாதன்.

சினிமாவும் சுவாரஸ்யங்களும்!

எம்.ஜி.ஆரை வைத்து அதிகபட்சமாக ப.நீலகண்டன் 17 படங்களை இயக்கியுள்ளார். எம்.ஏ.திருமுகம், எம்.ஜி.ஆரை வைத்து இயக்கிய 16 படங்களுமே தேவர் ஃபிலிம்ஸ் தயாரித்தவை. ஆனால், சின்னப்ப தேவர் சிவாஜியை வைத்து ஒரு படம்கூட எடுக்கவில்லை.

சினிமா களஞ்சியம்!
 • நடிகர் கே.பாலாஜி, சிவாஜியை வைத்து 17 படங்களைத் தயாரித்திருக்கிறார். ஆனால், எம்.ஜி.ஆரை வைத்து அவர் ஒரு படம்கூட எடுக்கவில்லை.

 • எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா 28 படங்களிலும், சரோஜாதேவி 26 படங்களிலும் நடித்துள்ளனர்.

 • எம்.ஜி.ஆருக்கு 73 படங்களில் நம்பியாரும், 58 படங்களில் அசோகனும் வில்லனாக நடித்துள்ளனர்.

 • சிவாஜியை வைத்து அதிகபட்சமாக ஏ.சி.திருலோகசந்தர் 21 படங்களை இயக்கியுள்ளார்.

 • சிவாஜியுடன் கே.ஆர்.விஜயா 42 படங்களிலும், பத்மினி 38 படங்களிலும் நடித்துள்ளனர்.

சினிமா களஞ்சியம்!
 • சிவாஜியும் பிரபுவும் இணைந்து 19 படங்களில் நடித்துள்ளனர்.

 • சிவாஜி நடித்த `அந்த நாள்' படத்தில் பாடல்களே கிடையாது.

 • சிவாஜி நடித்த `ராஜராஜ சோழன்'தான் தமிழின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படம்.

 • எம்.ஜி.ஆரை வைத்து சி.வி.ஸ்ரீதர் இயக்கிய `அன்று சிந்திய ரத்தம்' என்ற பெயரில் எடுக்கப்பட்ட படம் பாதியில் நின்றுவிட்டது. பிறகு, அதே கதையில் மாற்றம் செய்து சிவாஜியை வைத்து `சிவந்த மண்' படத்தை இயக்கினார் ஸ்ரீதர்.

 • கலைஞர் கருணாநிதி 70 படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். இதில் பல படங்களுக்கு கதை, திரைக்கதை, பாடல்களையும் சேர்த்தே எழுதியுள்ளார்.

 • பிரபல திரைக்கலைஞர்களின் ஐம்பதாவது, நூறாவது படங்களுக்காக அவர்களின் முந்தைய படங்களில் சிலவற்றைத் தவிர்ப்பதும் சேர்ப்பதும் வாடிக்கை. ‘புதியபூமி’தான் எம்.ஜி.ஆரின் 100-வது படம். பிறகு `கணவன்' படத்துக்குப் பின்னர் வெளியான ‘ஒளிவிளக்கு’ படத்தை அவரது 100-வது படமாக அறிவித்தார்கள். அதற்காக, எம்.ஜி.ஆர் நடித்த தலா ஒரு தெலுங்கு மற்றும் இந்திப் படங்களைப் பட்டியலில் இருந்து நீக்கினார்கள்.

 • சிவாஜி நடிப்பில் பி.ஆர்.பந்துலு இயக்கிய ‘முரடன் முத்து’, ஏ.பி.நாகராஜன் இயக்கிய ‘நவராத்திரி’ படங்கள் இரண்டுமே 1964-ம் ஆண்டு தீபாவளியில் வெளியானது. `சிவாஜியின் நடிப்பில் தான் இயக்கிய படமே 100 வது படமாக அமைய வேண்டும்' என இரண்டு இயக்குநர்களும் உறுதியாக இருந்தனர். ஆனால், சிவாஜியின் விருப்பம் ‘நவராத்திரி’தான். தீபாவளி தினத்தில் காலை 6 மணி காட்சியில் ‘முரடன் முத்து’வை ரிலீஸ் செய்தனர். பிறகு, 10 மணி காட்சியில் ‘நவராத்திரி’யை ரிலீஸ் செய்து அந்தப் படத்தையே சிவாஜியின் 100 வது படமாக்கினார்கள்.

 • ‘ராஜ பார்வை’ திரைப்படத்தை கமலின் 100-வது படமாக்க, ‘குறத்தி மகன்’ உட்பட அவர் நடித்த சில படங்களை கெளரவ வேடத்தில் சேர்த்தனர். அதேநேரம், ‘ஆளவந்தான்’ படத்தை 200-வது படமாக்க, ஏற்கெனவே கெளரவ வேடத்தில் சேர்த்தப் படங்களை மீண்டும் பிரதான படங்களின் பட்டியலில் சேர்த்துள்ளனர்.

 • விஜய் குழந்தை நட்சத்திரமாக ஐந்து படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், அந்தப் படங்களை அவரின் பட பட்டியலில் சேர்ப்பதில்லை. `மங்காத்தா' அஜித்துக்கு 50-வது படம் என்கிறார்கள். ஆனால், `பில்லா 2'தான் அவரின் 50-வது படம்.

 • கமல் 72 மற்றும் ரஜினி 26 கறுப்பு - வெள்ளை படங்களில் நடித்துள்ளார்.

 • ரஜினியை வைத்து அதிகபட்சமாக எஸ்.பி.முத்து ராமன் 25 படங்களை இயக்கியிருக்கிறார். கமலை வைத்து 11 படங்களை இயக்கியுள்ளார்.

 • கமலை வைத்து அதிகபட்சமாக கே.பாலசந்தர் 32 படங்களை இயக்கியிருக்கிறார். அதில், `தில்லு முல்லு' படத்தின் தெலுங்கு பதிப்பு மட்டும் வெளியாகவில்லை.

 • ரஜினியுடன் ஸ்ரீதேவியும் ஸ்ரீபிரியாவும் தலா 19 படங்களில் நடித்துள்ளனர்.

 • கமலுடன் ஸ்ரீதேவி 24 படங்களிலும், ஸ்ரீபிரியா 23 படங்களிலும் நடித்துள்ளனர்.

 • ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்துடன் வெளியான ரஜினியின் முதல் படம் 1980-ல் வெளியான ‘நான் போட்ட சவால்’.

 • குறுகிய காலத்தில் அதிக படங்களில் நடித்தவர்கள்: 12 ஆண்டுகளில் சிவாஜி 100 படங்களிலும், பத்தே ஆண்டுகளில் கே.ஆர்.விஜயா 100 படங்களிலும் நடித்து சாதனை படைத்தனர். பின்னர், ஏழே ஆண்டுகளில் ராதிகா 100 படங்களில் நடித்தார். அந்த சாதனைகள் எல்லா வற்றையும் முறியடித்த ராதா, ஆறே ஆண்டுகளில் 100 படங்களில் நடித்தார். அவர் 10 ஆண்டுகளில் 162 படங்களில் நடித்துள்ளார். இதுவும் இந்திய அளவில் எந்தக் கதாநாயகியும் செய்யாத சாதனை.

 • அதிக நாள்கள் ஓடிய படம்: எம்.ஜி.ஆருக்கு ‘உலகம் சுற்றும் வாலிபம்’ 217 நாள்கள். சிவாஜிக்கு ‘பராசக்தி’ 294 நாள்கள். ரஜினிக்கு `சந்திரமுகி' 888 நாள்கள். கமலுக்கு ‘மூன்றாம் பிறை’ 329 நாள்கள். விஜய்க்கு ‘பூவே உனக்காக’ 285 நாள்கள். அஜித்துக்கு ‘ஆசை’ 285 நாள்கள்.

 • 1931-ல் வெளியான `காளிதாஸ்' தமிழில் வெளியான முதல் நேரடிப் படம். அந்தப் படம் முதல் கடைசியாக அக்டோபர் மாதம் ஓ.டி.டி-யில் வெளியான `வர்மா' வரை 6,759 நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன.

 • 1943-ல் கன்னடத்தில் இருந்து தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியான `ஹரிச்சந்திரா', இந்தியாவில் வெளியான முதல் மொழி மாற்றுத் திரைப்படம். அதை ஏவி.எம் நிறுவனம் வெளியிட்டது. தற்போது திரைக்கு வராமலேயே பல்வேறு ரீமேக் படங்கள் டி.வி-யில் ஒளிபரப்பப்படுகிறது. இதுவரை 3,006 மொழி மாற்றுப் படங்கள் தமிழில் வெளியாகியுள்ளன.

 • இந்தியாவிலேயே அதிக அளவாக தாசரி நாராயண ராவ் 135 படங்களையும், தமிழ் இயக்குநர்களில் இராம.நாராயணன் 109 படங்களையும் இயக்கி சாதனை படைத்துள்ளனர்.

 • இளையராஜா இசையமைத்த `தாரை தப்பட்டை' படம் அவரது 1000-வது படம் என்பது தவறு. 1994-ல் வெளியான `செந்தமிழ்செல்வன்'தான் அவர் இசையமைத்த 1,000-வது படம். அவர் இசையமைத்த நேரடித் தமிழ்ப் படங்கள் பலவும் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளன. அப்போது அந்தந்த மொழி களுக்கேற்ப பாடல்களை மாற்றி எழுதி, அந்தப் படங்களுக்கும் அவரே இசையமைத்திருக்கிறார். அந்த வகையில் இதுவரை 1,551 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

 • ரஜினியின் 65 படங்களுக்கும், கமலின் 61 படங்களுக்கும் இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

 • எம்.எஸ்.விஸ்வநாதன் – இளையராஜா இணை, ‘மெல்ல திறந்தது கதவு’, ‘செந்தமிழ்ப்பாட்டு’, `செந்தமிழ் செல்வன்', `இரும்புப் பூக்கள்', `என் இனிய பொன் நிலாவே', `விஸ்வ துளசி', `அம்மா கொடுக்கு' (தெலுங்கு) ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.

 • 1980-ல் மரணமடைந்த சுருளிராஜன், அதே ஆண்டில் 90 படங்களில் நடித்துள்ளார். அதில், 51 படங்கள் அதே ஆண்டிலும், மற்ற 39 படங்கள் 2001-ம் ஆண்டு வரையிலும் வெளியாகியுள்ளன.

 • எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயகாந்த்தை வைத்து 18 படங்களை இயக்கியிருக்கிறார்.

 • 14 வயதில் `நாளைய தீர்ப்பு' படத்துக்கு இசையமைத்தவர் மணிமேகலை. இசையமைப்பாளர் மரகதமணியின் நெருங்கிய உறவினரான அவர் எம்.எம்.ஸ்ரீலேகா என்ற பெயரில் தெலுங்கில் 73 படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்திருக்கிறார்.

 • `தேவகி' படத்தில் ஒரு பாடலில் மட்டும் நடித்த டி.எம்.செளந்தரராஜன், பிறகு நான்கு படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். `பலப்பரீட்சை' படத்துக்கு மட்டும் இசையமைத்திருக்கிறார்.

 • ரஜினியின் ‘துடிக்கும் கரங்கள்’ உட்பட 48 படங்களுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசைமைத் திருக்கிறார். மலேசியா வாசுதேவன் ஏழு படங்களுக்கு இசையமைத்திருப்பதுடன், ஒரு படத்தை இயக்கி யிருக்கிறார்.

 • பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி `மெளன போராட்டம்' என்ற தெலுங்குப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். அதே பெயரில் அந்தப் படம் தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டது.

 • 44 படங்களில் நடித்துள்ள ராமராஜன், 12 படங் களை இயக்கியிருக்கிறார்.

 • 132 படங்களில் நடித்த தெலுங்கு நடிகை விஜய நிர்மலா, 43 படங்களை இயக்கி கின்னஸ் சாதனை படைத்தவர். அதில், 31 படங்களைத் தன் கணவரும் நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணாவை வைத்து இயக்கியிருக்கிறார்.

சினிமா களஞ்சியம்!
சினிமா களஞ்சியம்!
சினிமா களஞ்சியம்!
சினிமா களஞ்சியம்!
சினிமா களஞ்சியம்!