
ஐந்து வருடங்களில் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து நடிக்காமலேயே இருந்தார்கள்.

‘சில்லுனு ஒரு காதல்’ படத்துக்குப் பிறகு சூர்யாவும் ஜோதிகாவும் மீண்டும் சினிமாவில் சேர்ந்து நடிக்கவிருக்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த ஜோதிகா, கடந்த ஐந்து வருடங் களாக மீண்டும் படங்களில் நடித்துவருகிறார். ஆனால், இந்த ஐந்து வருடங்களில் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து நடிக்காமலேயே இருந்தார்கள். தற்போது இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படத்திற்கான வேலைகள் ஆரம்பமாக விருக்கின்றன. ‘சில்லு கருப்பட்டி’ பட இயக்குநர் ஹலிதா ஷமீம், மலையாள இயக்குநர் அஞ்சலி மேனன் இருவரில் ஒருவர் இந்தப் படத்தை இயக்க வாய்ப்புண்டு.

‘` ‘மருதநாயகம்’ படத்தை மறுபடியும் எடுப்பதாக இருந்தால் ராஜ்கமல் நிறுவனம் அதைத் தயாரிக்கும். ஆனால், அதில் நான் நடிக்க மாட்டேன்’’ என விகடன் பிரஸ்மீட்டில் கமல்ஹாசன் கூறியிருந்தார். இது உண்மையாகும் நேரம் வந்துவிட்டது என்கிறார்கள், கமலுக்கு நெருக்கமானவர்கள். கமல்ஹாசனின் கனவுப் படமான `மருதநாயகம்’ படத்தை எடுப்ப தற்கான வேலைகளை ஆரம்பிக்கச் சொல்லியிருக்கிறாராம். இதில் எந்த நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்பது மட்டும் இப்போதைக்கு முடிவாக வில்லையாம்.

தெலுங்கு சினிமாக்கள் அவ்வப்போது ட்ரோல் செய்யப்படுவதற்கு காரணம், அசாத்திய ஸ்டன்டுகளும் அளவுக்கு மீறிய ஹீரோயிசமும்தான். அதில் நந்தமுரி பாலகிருஷ்ணா முக்கியமானவர். பார்த்தாலே பனைமரம் பற்றி எரிவது, தொடையைத் தட்டினால் ரயில் ரிவர்ஸில் செல்வது போன்றவை இவரின் சாகசங்கள். இருந்தாலும் இவர் படங்கள் பிளாக்பஸ்டர்கள் ஆகியிருக்கின்றன. இவருக்கென ரசிகர் பட்டாளமும் உள்ளது. இயக்குநர் ’பொயப்படி னு’வை டோலிவுட் பேரரசு எனலாம். அந்த அளவுக்கு பன்ச் டயலாக்குகள், ஆக்ஷன் காட்சிகள் என தன் படங்களில் மாஸ் காட்டுவார். இவர்கள் இருவரும் மூன்றாவது முறையாக இணையும் படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார் சாயிஷா.

கன்னடத்தில் சிவராஜ் குமாருக்கு டூயல் ஹீரோ சப்ஜெக்ட் ஒன்றைக் கூறியிருக்கிறார், யோக்ராஜ் பட். மற்றொரு ஹீரோவாக யார் நடிக்கலாம் என்ற யோசனை வர பிரபுதேவா பெயரைச் சொல்லிருக்கிறார், அந்த இயக்குநர். பிரபுதேவாவிற்கும் அந்தக் கதை பிடித்துப்போக, தம்ஸ் அப் காட்டியிருக்கிறார். ஆக்ஷன் டிராமா ஜானரில் உருவாகும் இப்படத்தில் நடிப் பதன் மூலம் 18 வருடங்களுக்குப் பிறகு, கன்னட சினிமாவுக்குச் செல்கிறார் பிரபுதேவா.

பல்லாவரத்தில் இருந்து கிளம்பி டோலிவுட்டில் முதன்மை நாயகியாகிவிட்டார், சமந்தா. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் கவனம் செலுத்திவருபவர், சமீபமாக ஓடிடி தளங்களில் தடம் பதிக்க நினைத்து கதைகள் கேட்டு வருகிறார். அப்படித்தான் ‘பேமிலி மேன்’ இரண்டாவது சீசனில் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார். நாகர்ஜுனாவுக்கு ஷூட்டிங் இருந்ததால் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை சில நாள்கள் சமந்தா தொகுத்து வழங்கி அசத்தினார். தற்போது, ஆஹா ஒரிஜினல்ஸ் எனும் அல்லு அர்ஜுனுடைய ஓடிடி தளத்தில் இடம்பெறும் டாக் ஷோ ஒன்றையும் தொகுத்து வழங்கவிருக்கிறார் சமந்தா.

சுரேஷ் கோபியின் 250வது படம் ‘ஒட்டக்கொம்பன்’, மஞ்சு வாரியரின் 50வது படம் ‘9MM’ ஆகியவை குறித்து மல்லிவுட்டில் எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் ஜெயசூர்யாவின் நூறாவது படம் குறித்த அறிவிப்பும் வெளியாகி யுள்ளது. ‘சன்னி’ என்று பெயர்சூட்டப்பட்டுள்ள இந்தப் படத்தில் இசைக்கலைஞராக நடிக்கிறார் ஜெயசூர்யா.