Published:Updated:

``நயன்தாரா, ஐஸ்வர்யா ராய், அசின், மல்லிகா ஷெராவத் எல்லாமே நான்தான்!" - `ஹீரோயின் டூப்' நசீர்

Stunt Dupe Artist Nazeer
Stunt Dupe Artist Nazeer

`நான் ஒரு ஆண்தான். ஆனா, காஸ்ட்யூம் போட்டா அடுத்த நிமிடம் முழுக்க ஒரு பெண்ணைப்போல மாறிடுவேன். ஷூட்டிங்ல ஹீரோயின் எப்படி நிற்கிறாங்க, நடக்குறாங்கன்னு எல்லாத்தையும் பார்த்துப் பழகுவேன். கீழ விழுற சீன் எடுத்தா, பொண்ணுங்க எப்படி விழுவாங்களோ அதேமாதிரி விழுவேன்.’

இயக்குநர்கள் ஷங்கர், மணிரத்னம் முதல் புதிதாக அறிமுகமாகும் இயக்குநர்கள் வரை அனைவரும் இவரின் கால்ஷீட்டுக்காகக் காத்திருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அத்தனை மொழிகளிலும் நடிக்கிறார். `எந்திரன்' படத்தில் ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த அதே பல லட்சம் மதிப்புள்ள பட்டுப்புடவை இவருக்காகவும் வாங்கப்படுகிறது. தனி கேரவன், பிரத்யேக மேக்அப் கலைஞர் என அத்தனை வசதிகளும் இவருக்கும் வழங்கப்படுகிறது. ரஜினி, கமல் உட்பட அத்தனை பெரும் கலைஞர்களுக்கும் நெருக்கமாக நடிக்கிறார். ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, த்ரிஷா, சிம்ரன், ஜோதிகா, சதா, கோபிகா, ப்ரியாமணி என 17 ஆண்டுகளாக எல்லா ஹீரோயின்களும் இவர்தான்.

பெயர் : நசீர்

தொழில் : சினிமாவில் ஸ்டன்ட் கலைஞர்

சிறப்பு : ஹீரோயின்களுக்கான டூப் ஆர்ட்டிஸ்ட். பெருமையும், வலியையும் ஒருசேரக் கலந்திருக்க, தன்னுடைய திரைப் பயணத்தின் சுவாரஸ்யங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

With Sneha
With Sneha

நீங்கள் ஸ்டன்ட் துறைக்கு வந்தது எப்படி?

`` எங்க அப்பா ஒரு ஸ்டன்ட்மேன். அவரைப் பார்த்து எனக்கும் இந்தத் துறைமேல ஆசை வந்திடுச்சு. சின்ன வயசுல அவர் ஷூட்டிங் போகும்போது கூட கூட்டிக்கிட்டுப் போங்கன்னு அடம்பிடிப்பேன். படிக்கச் சொன்னா எனக்குப் பிடிக்காது. ஆனா, அவர் கூட்டிக்கிட்டுப் போகமாட்டார். அப்படியும் ஒருநாள் கூட போனேன். அன்னைக்கு அவர் பண்ணது கார் ஜம்ப், ரொம்ப ரிஸ்க்கான காட்சிதான். அதுல அவர் நடிச்சு விழும்போதுதான், அது என் அப்பான்னு எனக்குத்தோணுது. ஒரு நிமிடம் அதிர்ச்சி ஆகிட்டேன். ஆனா, எனக்கும் ஆசை வந்தது. இதெல்லாம் நானும் பண்ணனும்னு. அப்படித்தான் எங்க அப்பாகிட்டச் சொல்லி இந்தத் துறைக்கு வந்தேன்."

உங்கள் முதல் படம் பற்றி?

``ஸ்டன்ட் யூனியன் உறுப்பினர் ஆனதும், ஒரு வருடம் வேலை கிடைக்கல. தினம் யூனியன் ஆபீஸுக்குப் போயிடுவேன். அப்படி ஒருநாள், `எனக்கு 20 உனக்கு 18' படத்துக்காக அஞ்சு லேடி டூப்ஸ் வேணும்னு எங்களைக் கூட்டிக்கிட்டுப் போனார், பீட்டர் ஹெய்ன் மாஸ்டர். என்னைப் பார்த்ததுமே, `இவர்தான் த்ரிஷாவுக்கு டூப்'னு சொல்லிட்டார். அது குண்டு வெடிக்கிற காட்சி. வெடிச்சதும் ஆளுக்கொரு பக்கமா போய் விழணும். அன்னைக்கு என் தோள்பட்டையில நல்ல அடி! ஆனா, யாருகிட்டேயும் சொல்லலை. ஆறு மாசம் கஷ்டப்பட்டேன். ஆனா, அந்த முதல் படம் எனக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. த்ரிஷா உட்பட பல ஹீரோயின்களுக்கு நான்தான் நிரந்தரமான டூப் ஆர்ட்டிஸ்ட். அன்னையில இருந்து இன்னைக்குவரை பிஸியா இருக்கேன்."

With Reema Sen
With Reema Sen

ஸ்டன்ட் கலைஞர்களிலேயே வித்தியாசமா `ஹீரோயின் டூப்'பா இருக்கிறதை எப்படி எடுத்துக்கிறீங்க?

``அது எனக்குப் பெருமைதான். கடவுள் எனக்கு அந்தத் திறமையைக் கொடுத்திருக்காரு. அதுக்கு உண்மையா இருக்கணும்னு நினைப்பேன். நான் ஒரு ஆண்தான். ஆனா, காஸ்ட்யூம் போட்டா அடுத்த நிமிடம் முழுக்க ஒரு பெண்ணைப்போல மாறிடுவேன். ஷூட்டிங்ல ஹீரோயின் எப்படி நிற்கிறாங்க, நடக்குறாங்கன்னு எல்லாத்தையும் பார்த்துப் பழகுவேன். கீழ விழுற சீன் எடுத்தா, பொண்ணுங்க எப்படி விழுவாங்களோ அதேமாதிரி விழுவேன். அப்போதான் காட்சி நேர்த்தியா இருக்கும். நான் செய்ற வேலை எனக்கு அவ்ளோ பிடிக்கும்."

உங்க குடும்பம் பற்றி சொல்லுங்க. பெண் வேடம் போடுறதை அவங்க எப்படி எடுத்துக்கிறாங்க?

``ஸ்டன்ட் கலைஞர்களுக்குக் கல்யாணமே கஷ்டம். எனக்கு ரொம்பக் கஷ்டப்பட்டுதான் பொண்ணு தேடிக் கல்யாணம் பண்ணி வெச்சாங்க. நான் உண்மையைச் சொல்லித்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். என் மனைவி என்னைப் புரிஞ்சுக்கிட்டாங்க. ஆனா, ரொம்பவே பயப்படவும் செய்வாங்க. வீட்டுக்குப் போனதும் ரெண்டு நிமிடம் அடி பட்டிருக்கான்னு என்னை உத்துப் பார்ப்பாங்க. எனக்கு மூணு பசங்க, பெரிய குழந்தைக்கு ஆறு வயசாகுது. என் போட்டோவைப் பார்த்துட்டு `ஏம்ப்பா நீ கேர்ள்ஸ் டிரெஸ் போட்டிருக்க, நீ பொண்ணா மாறிட்டியா'னு கேட்கும். `இல்லை, இதுதான் அப்பாவோட வேலை'னு சொன்னா, `சரி'ன்னு போயிடுவாங்க."

with Trisha
with Trisha

இதனால வெளியே உங்களுக்கு ஏதும் பிரச்னை வந்திருக்கா?

``நிறைய! ரோட்டுல துப்பட்டா கட்டிக்கிட்டு வண்டியில போனா, பின்னாடியே ஃபாலோ பண்ணி, நான் ஆம்பளைன்னு தெரிஞ்சதும் போயிடுவாங்க. சில சமயம் ஒரு விசேஷத்துக்கும் போகமுடியாது. நைட் ஷூட்டிங் நடந்தா, என்னைப் பொண்ணுன்னு நினைச்சு வம்பு பண்ணி, போலீஸ் வந்த கதையெல்லாம் இருக்குங்க."

மறக்க முடியாத ஸ்டன்ட் அனுபவம் என்ன?

`` `அடவி ராமுடு'ங்கிற தெலுங்குப் படத்தோட ஷூட்டிங். விக்ரம் தர்மா மாஸ்டர், கோதாவரி பிரிட்ஜ்ல 150 அடிக்கு பைக் ஜம்ப் பண்ணனும்னு சொல்லிட்டார். என்கூட ரூம்மேட் மணிகண்டன் இருந்தார். அவர் பிரபாஸுக்கு டூப், நான் ஆர்த்தி அகர்வாலுக்கு டூப். ஷாட்டுக்கு ரெடியாகும்போது நாங்க திரும்ப வருவோமான்னு தெரியாது. கூட இருக்கிற நண்பர்களெல்லாம் அழுதுட்டாங்க. அந்த ஜம்ப் பண்றோம், நேரா கீழே தண்ணியில விழுந்ததும் தேடுறேன், என்கூட வந்த மணிகண்டனைக் காணோம். கொஞ்ச நேரத்துல அவர் அப்படியே மிதந்து வர்றார். தலையில அவருக்கு சரியான அடி. அவர் என்கூட ரூம்ல இருந்த நினைவுகளெல்லாம் எனக்கு ஞாபகம் வருது. சரி ஏதாவது பண்ணுவோம்னு ஓங்கி அவர் நெஞ்சுல குத்துனேன். ரத்தம் வந்து மூச்சை இழுத்தார். அப்பறம்தான் எனக்கு உயிரே வந்தது. எனக்கு ரொம்ப நல்ல பெயரை வாங்கிக் கொடுத்த படம் அது."

Vikatan

உங்களுக்கு இந்தத் தொழில்ல ஏற்பட்ட விபத்துகள் பற்றி சொல்லுங்க?

``இந்தத் தொழில்ல அடி ரொம்ப சகஜம். எங்களுக்குத் தைரியம்தான் எல்லாம்! மாஸ்டர் `அந்த கிளாஸை உடை'ன்னு சொன்னா, உடைச்சிடுவோம். அது எப்படின்னு எல்லாம் தெரியாது. எனக்கு அப்படி ஒருமுறை இடது கையில பெரிய வெட்டு. அதுவும் ஒரு தெலுங்குப் பட ஷூட்டிங்லதான். அதுல நான் த்ரிஷாவுக்கு டூப்பா நடிச்சேன். ஸ்கார்பியோ சேஸ் சீன்ல கார் அப்படியே தலைகீழாக் கவிழும். அப்போ, `கையை எடுக்கணும்'ன்னு சொல்ற அளவுக்கு அடி. அதேபோல, ஷங்கர் சார் இயக்கிய `அந்நியன்' படத்துக்காக ஒரு ஸ்டேடியத்துல சண்டைக் காட்சியை எடுத்தாங்க. அப்போ, லாரி டிரைவர் டைமிங்கை மிஸ் பண்ணிட்டார். வரிசையா கயித்துல தொங்கிக்கிட்டிருந்த எல்லோரும், விசிறியில அடிச்சு விழுந்தோம். இந்த மாதிரி விபத்துகள் எல்லாம் இந்தத் தொழில்ல சகஜம். எங்களுக்கு வேலைதான் முக்கியம்னு அடுத்த படத்துல வேலை பார்க்கப் போயிடுவோம்."

With Nayanthara
With Nayanthara

உங்களுக்கு அடி படும்போது, மருத்துவ உதவிகளை யார் செய்றாங்க?

``எங்களுக்கு எல்லாமே எங்க ஸ்டன்ட் யூனியன்தான். ஸ்டன்ட் நடிகர்களுக்கு இன்ஷூரன்ஸ் கிடைக்காது. சில சமயம் தயாரிப்பு நிறுவனங்கள் உதவி பண்ணுவாங்க. சில சமயம் நடிகர், நடிகைகளும் உதவி பண்றதுண்டு."

அப்படி உங்களுக்கு உதவி பண்ணவங்கள்ல மறக்க முடியாத நபர்?

``நயன்தாரா மேடம். அந்த தெலுங்குப் பட ஷூட்டிங்ல எனக்குக் கைல அடிபட்டதும், மருத்துவமனையில சேர்த்துட்டாங்க. இதைக் கேள்விப்பட்ட நயன்தாரா மேடம், ரொம்பவே கலங்கிட்டாங்க. என்னைக் கிண்டலா `நசீம்மா'னு கூப்பிடுவாங்க. அடிபட்டது தெரிஞ்சதும், பிளாங்க் செக்கைக் கொடுத்து, `ட்ரீட்மென்ட்டுக்கு எவ்வளவு செலவாகுதோ எடுத்துக்கோங்க'ன்னு சொன்னாங்க. அவங்க நல்ல மனசு யாருக்கும் வராது. என்னைக்குமே எனக்கு அவங்க ஸ்பெஷல் ஹீரோயின்."

Stunt Dupe Artist Nazeer
Stunt Dupe Artist Nazeer

ஷூட்டிங்ல ஹீரோயினா நடிக்கிற உங்களுக்கு, ஹீரோக்களுடனான சுவாரஸ்யமான விஷயம் ஏதாவது சொல்லுங்க?

`` `தசாவதாரம்' ஷூட்டிங் சமயம். அக்ரஹாரத்துல நடக்கிற சண்டைக் காட்சியில மல்லிகா ஷெராவத்தும் நானே, அசினும் நானே! மாறி மாறி நடிக்கிறேன். ஒரு சீன்ல கமல் சார் முதுகுல ஏறி `என் பெருமாள் என் பெருமாள்'னு அசின் கத்துற சீன்ல நடிச்சது நான்தான். ரெட்டை ஜடை, தாவணின்னு அசின் மேடம் டிரஸ்ல நிற்கிறேன். கூட நிற்கிறது கமல் சாராச்சே! எனக்கு ஒரே பயம். `அசின் தைரியமா இருக்காங்க, பிசின் ஏன் நடுங்குறாரு'ன்னு கிண்டல் பண்ணிக்கிட்டே இருப்பாரு. ஆனா, அவருக்கு எங்களுக்கு அடிபடக் கூடாதுங்கிற பதற்றம் இருக்கும். கமல் சார் டெக்னீஷியனை வாழ வைக்கிற கலைஞர். அதேபோல, `எந்திரன்' படத்திலேயும், ஐஸ்வர்யா மேடம் இல்லாத 20 நாள் ஷூட்டிங்ல ரஜினி சார்கூட ஸ்டன்ட் காட்சிகள்ல நடிச்சது நான்தான். அஜித் சார், விஜய் சார், சூர்யா சார் எல்லோருமே ஸ்டன்ட் கலைஞர்கள்மேல அதிக அக்கறையோடு இருப்பாங்க."

Vikatan

இந்த வேலைக்காக என்னைக்காவது வருத்தப்பட்டதுண்டா?

``எல்லோரும் பிடிச்சுதான் இந்தத் தொழிலுக்கு வர்றோம், பிடிச்சுதான் வேலை செய்றோம். ஆனா, இதுல ரொம்பக் கஷ்டம் இருக்குங்க. ஒரு ரிஸ்க்கான காட்சியைப் பண்ணும்போது, `இதுல பத்தாயிரம் வந்தா, அடகு வெச்ச நகையை மீட்டுடலாம்'னுதான் தோணும். சில சமயம் செட்டுக்குப் பின்னாடி போய் நான் அழுதிருக்கேன். ஆனா, அது எல்லாத்தையும் தாண்டி இந்த வேலை மீது ஒரு ஆசை. என் பையன் வளர்ந்து, எனக்குப் பிறகு இந்த ஸ்டன்ட் தொழிலுக்கு வரணும்னுதான் நான் ஆசைப்படுவேன். அப்போதான் இந்தத் தொழிலைக் காப்பாத்த முடியும். அவனே வரலைன்னா வேற யாரு வருவா?!"

Nazeer with colleagues
Nazeer with colleagues

பணயம் வைப்பது உயிரை எனத் தெரிந்தும் அசாத்திய தைரியமும், தொழிலின் மீதான அபாரக் காதலும் மட்டுமே ஆண்டாண்டு காலமாக, தலைமுறை தலைமுறையாக ஸ்டன்ட் கலைஞர்களை இயக்கிக்கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது, நசீரின் வார்த்தைகள். பல லட்சம் கனவுகளை ஏந்தி நிற்கும் சினிமா துறை, நசீர் போன்ற பல்லாயிரம் கலைஞர்களின் தோள் வலிமையில்தான் நிமிர்ந்து நிற்கிறது என்றால் மிகையல்ல. அதற்காகவே அவ்வப்போது இந்த நிழல் ஹீரோக்களையும் (ஹீரோயின்களையும்) கொண்டாடுவோம்!

அடுத்த கட்டுரைக்கு