சினிமா
Published:Updated:

எப்போதும் ஃபிட் ரஜினி... எல்லாமே பர்ஃபெக்ட் கமல்!

Peter Hein
பிரீமியம் ஸ்டோரி
News
Peter Hein

தர்பார்’, `இந்தியன் - 2’ என உச்ச நட்சத்திரங்களின் படங்கள் ஒரு பக்கம்; பாலிவுட் படங்கள் ஒரு பக்கம்; ‘தானே இயக்கும் பட வேலைகள் ஒரு பக்கம் எனச் சுழன்றுகொண்டிருக்கிறார் பீட்டர் ஹெய்ன்.

`சந்திக்கலாமா' என வாட்ஸ் அப் தட்டினோம். `நிறைய பேசலாம் வாங்க' என்றார். அவருடைய வீட்டில் ஒரு மீட்டிங்கைப் போட்டோம்.

‘‘ஹாய்... இவங்க என் அம்மா மேரி. இவங்க என் மனைவி பார்வதி. என் பையன் கிரண். என் பொண்ணு ஸ்வீட்டி. அப்பறம் இது பேர் ஸ்டைல், எங்க செல்ல நாய்க்குட்டி’’ எனத் தன் குடும்பத்தை அறிமுகப்படுத்தினார் பீட்டர் ஹெய்ன்.

‘`அம்மா உங்ககிட்ட இருந்தே ஆரம்பிக்கலாம்; உங்க பையனைப் பற்றிச் சொல்லுங்க’’ என பீட்டர் ஹெய்னே, அம்மா மேரியிடம் முதல் கேள்வியைக் கேட்டார். ``என் மகன் பல படங்களில் பல பெரிய ஆள்களோடு வேலை பார்த்திருக்கான். அதையெல்லாம் ஒரு தாயாகப் பார்க்கும்போது நிச்சயம் எனக்குப் பெருமையா இருக்கு. அவன் யார்னு அவனுடைய வேலையே சொல்லிடும். அவனுடைய முதல் படம் `மின்னலே’விலிருந்து `அசுரன்’ வரைக்கும் அதைத் தொடர்ந்து நிரூபிச்சிட்டே இருக்கான்’’ என அம்மா மேரி உச்சிமுகர, பீட்டர் தொடர்ந்தார்.

Peter Hein family
Peter Hein family

‘` ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 15 வருஷங்கள் கழிச்சு தனுஷோடு சேர்ந்து வேலை பார்க்கும் வாய்ப்பு `அசுரன்’ படத்தில் கிடைச்சது. இத்தனை வருஷங்களா நாங்க சேர்ந்து படங்கள் பண்ணாம இருந்தாலும், எங்க நட்பு தொடர்ந்துட்டுதான் இருந்துச்சு. வெற்றிமாறன் சார் என்கிட்ட கதையைச் சொன்னபோதே, எனக்கு பயங்கர ஆர்வமா இருந்துச்சு. `நிச்சயமா இந்தப் படத்தைப் பண்றேன் சார்’னு சொன்னேன். கமிட்டான நாளிலிருந்து நானும் சிவசாமியா வாழ ஆரம்பிச்சேன். அப்படி எனக்குள்ள இருந்த சிவசாமிதான் அசுரனை ரொம்ப அழகா செதுக்க உதவினான். இந்தப் படத்தோட இடைவேளைக் காட்சியில் வரும் சண்டையைப் படமாக்க அவ்ளோ கஷ்டப்பட்டோம். 40 டிகிரி வெயிலில் அதுவும் மண்ணுக்குள்ள உருண்டு, புரண்டுன்னு செம ரிஸ்க். அந்தச் சண்டை நல்லா வந்ததுக்குக் காரணம் தனுஷ், கென் மற்றும் என் ஃபைட்டர்கள்தான்’’ என்று பீட்டர் சொல்ல, `‘என் ஃப்ரெண்ட்ஸும் அந்தச் சண்டைக்காட்சியை ரொம்பவே பாராட்டுனாங்க’ எனக் கைத்தட்டுகிறார் பார்வதி.

``இவருடைய வொர்க்கைப் பார்த்துட்டு பல பேர் எனக்கு மெசேஜ் பண்ணுவாங்க. ஆனால், ஒவ்வொரு நாளும் இவரை வேலைக்கு அனுப்பிட்டு, நான் எவ்வளவு பயத்தோடு இருப்பேன்னு எனக்குத்தான் தெரியும். ஒவ்வொரு நாள் ஷூட்டிங் முடிஞ்சதும் இவர்கிட்ட இருந்து எனக்கு போன் வரலைனா, ஷூட்டிங்கில் ஏதோ நடந்திருக்குன்னு அர்த்தம். அப்படி ஒரு நாள் ராஜமெளலி சாரோட `மகதீரா’ பட ஷூட்டிங்கிற்குப் போனவர், எனக்கு போன் பண்ணவே இல்லை. நான் போன் பண்ணியும் எடுக்கவே இல்லை. ரொம்ப நேரம் கழிச்சு அந்த மூவி டீம்ல இருந்து எனக்கு கால் பண்ணி, ‘சாருக்கு ஷூட்டிங்ல அடிப்பட்டிருச்சு; நீங்க கிளம்பி வாங்க’ன்னு சொன்னாங்க. அங்க போய்ப் பார்த்தா, 18 எலும்பு உடையுற அளவுக்குப் பெரிய ஆக்ஸிடென்ட். இவ்வளவு பெரிய விபத்து நடந்தும் சும்மாவா இருந்தார்? 19-வது நாள் வீல் சேரோடு ஷூட்டிங்கிற்குக் கிளம்பிட்டார்’’ என ஆதங்கப்பட்டவரைத் தேற்றினார் பீட்டர்.

``நான் எப்போதுமே இறங்கி வேலை செய்யணும்னு நினைப்பேன். கனல் கண்ணன் மாஸ்டர்கிட்ட உதவியாளரா இருந்தபோதும் அப்படித்தான்; நான் மாஸ்டரானதுக்கு அப்புறமும் அப்படித்தான். `நான் மாஸ்டர், அதனால மானிட்டர் பக்கத்துல உட்கார்ந்துகிட்டு, அசிஸ்டென்ட்டை வேலை வாங்கலாம்’னு என்னைக்கும் நினைச்சதில்லை. ஒரு ஸ்டன்ட்டை கோரியோ பண்ணுனதுக்கு அப்புறம் அதை என் ஃபைட்டர்களுக்கு நானே பண்ணிக் காட்டுவேன். அப்படிச் செய்யும் போதுதான் அவங்களுக்கும் ஒரு நம்பிக்கை வரும். நான் ஃபைட்டரா இருந்தபோதும் இப்படித்தான் பண்ணுவேன்.

எனக்கு அறிவியல் ரொம்பப் பிடிச்ச சப்ஜெக்ட். அதனால அப்பப்போ ஆக்‌ஷனோடு அறிவியலைச் சேர்ப்பேன். ஒவ்வொரு பத்து அடிக்கும் ஃபைட்டுக்கு யூஸ் பண்ற க்ளாஸை வெச்சுட்டா, நாம அதை உடைச்சு, உடைச்சு விழும்போது பெருசா அடியும் படாது; பார்க்கும் போது 40 அடியில இருந்து விழுந்த மாதிரியும் தெரியும்’’ என பீட்டர் சொன்னதும், அவரின் மகள் ஸ்வீட்டியிடம், ‘‘உங்க அப்பாவோட எந்தெந்த சண்டைக்காட்சிகள் உங்களுக்குப் பிடிக்கும்?’’ என்றதும் ஒரு லிஸ்ட்டை நீட்டினார்.

‘` ‘ரன்’ படத்தோட சப்வே ஃபைட், ’அந்நியன்’ படத்தோட கராத்தே க்ளாஸ் ஃபைட், `சிவாஜி’ படத்தோட பின்னி மில் ஃபைட், இப்போ `அசுரன்’ படத்தோட இன்டர்வல் ஃபைட் இதெல்லாமே எனக்கு ரொம்பப் பிடிச்ச ஃபைட் சீன்ஸ். இதுல `ரன்’ சப்வே ஃபைட் சீன் எடுக்கும்போது எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க டாடி’’ என ஸ்வீட்டி கேட்டதும், ``என் பொண்ணுக்கு மட்டுமல்ல, பல பேருக்கு ரன் படத்தோட சப்வே ஃபைட் ரொம்பப் பிடிக்கும்னு சொல்லியிருக்காங்க. எல்லாருக்கும் அந்த சீனோட அவுட்புட்தான் தெரியும். ஆனால், அந்த ஷூட்டிங் அப்போ நான் எவ்வளவு அவமானங்களைச் சந்திச்சேன்னு எனக்குத்தான் தெரியும். நான் மாஸ்டரான புதுசுல எனக்குக் கிடைச்ச படம்தான் `ரன்.’ அதுல நான் யாருன்னு மக்களுக்குக் காட்டணும்னு வெறியா வேலை பார்த்துட்டு இருந்தேன். கதைப்படி ஹீரோயின்கிட்ட ஹீரோ பேசுறதைப் பார்த்ததும், அவனைத் துரத்துவாங்க. அவனும் பயந்து ஓடுற மாதிரி ஓடி, சப்வேவுக்குள்ள போனதும் ஷட்டரை சாத்திட்டுச் சண்டை போடுற மாதிரி கோரியோ பண்ணினேன். இதை நான் ஸ்பாட்டில் சொன்னதும், டைரக்டர் லிங்குசாமியைத் தவிர மற்ற எல்லாரும் என்னைக் கலாய்க்க ஆரம்பிச்சிட்டாங்க. `ஹீரோ அடிக்கிறதா இருந்தா ஏன் ஓடுறான்; அங்க நின்னே அடிக்க மாட்டானா, முன்னாடி நாள்தான் அடி வாங்கியிருக்கான்; அடுத்த நாள் எப்படி ஹெவியான ஃபைட் பண்ணுவான். உனக்கெல்லாம் யார் மாஸ்டர் கார்டு கொடுத்தா; இந்த சீனே வேஸ்ட்’னு சொல்லி என்னை ரொம்ப அசிங்கப்படுத்தினாங்க. நான் லிங்குசாமி சார்கிட்ட, ‘நான் இந்தப் படத்துல வொர்க் பண்ணலை சார்’னு சொல்லிட்டு, அழுதுட்டே போயிட்டேன். அடுத்தநாள் அவர் என்கிட்ட, `நீதான் இந்தப் படத்துக்கு மாஸ்டர். நீ சொன்ன மாதிரியே அந்த ஃபைட்டை எடு’ன்னு சொல்லி, பண்ண வெச்சார். நான் நினைச்ச மாதிரி அந்த சீனும் செம ஹிட்டாச்சு’’ என்று பீட்டர் சொல்ல, ‘பாஸ் பார்க்க ஹீரோ மாதிரி இருக்கீங்க; நடிப்புல ரொம்ப ஆர்வமா’ என அவரின் மகன் கிரணிடம் கேட்டோம்.

``நடிப்பு நமக்கு செட்டாகாது ப்ரோ. சின்ன வயசுல இருந்தே டைரக்‌ஷன் மேலதான் எனக்கு ஆர்வம். மூணு படங்கள் உதவி இயக்குநரா வேலை பார்த்திருக்கேன். இப்போ என்னோட படத்துக்கான ஸ்க்ரிப்ட் வொர்க்கில் இருக்கேன். அப்பா ஸ்டன்ட் மாஸ்டரா இருக்கிறதனால, அவர் பையன் ஆக்‌ஷன் படம்தான் எடுப்பான்னு பலரும் நினைப்பாங்க. எல்லா ஆக்‌ஷனுக்குமே அடித்தளமா இருக்கிறது எமோஷன்தான். அதனால முழுக்க, முழுக்க எமோஷன்ஸ் இருக்கிற மாதிரி ஒரு ஸ்க்ரிப்ட் பண்ணிட்டிருக்கேன்’’ எனக் கிரண் சொல்ல, ``நானும் இப்போதான் பாக்ஸிங்கை மையமா வெச்சு ஒரு படத்தை இயக்கிட்டிருக்கேன். வீட்டுக்குள்ளயே எனக்கு பயங்கரமான போட்டியாளர் இருக்கார். இதுவரைக்கும் கிட்டத்தட்ட 200 கதைகள் கேட்டிருப்பேன். நான் கேட்ட கதை; வேலை பார்த்த படம்னு நான் கத்துக்கிட்டதை என் பையனுக்கும் சொல்லிக்கொடுத்திருக்கேன். அவனும் இயக்குநரா உச்சம் தொடணும்’’ என்கிறார் பீட்டர் ஹெய்ன்.

பையன் கிரண்
பையன் கிரண்

‘‘ ‘தர்பார்’, ‘இந்தியன் - 2’ அப்டேட்ஸ் குடுங்க ப்ரோ...’’ என்று கேட்டேன்.

‘`ரஜினி சாரை என்னை மாதிரி யாரும் கொடுமைப்படுத்திருக்க முடியாது. `சிவாஜி’ படத்துல இருந்து `தர்பார்’ வரைக்கும் அவரை அவ்வளவு டார்ச்சர் பண்ணியிருக்கேன். ஆனால், அவர் அதை எப்போதும் டார்ச்சரா நினைச்சதில்லை. ஒவ்வொரு படம் ஆரம்பிக்கும்போதும், `நீ பண்ணுறியா’ன்னுதான் கேட்பார். `சிவாஜி’ படம் பண்ணும்போது பல ரோப் ஃபைட் வெச்சேன். ’எந்திரன்’ பண்ணும்போதும் ரோபோ மாதிரி சண்டை போட வெச்சேன். இதையெல்லாம்விட `தர்பார்’ படத்தில் தாறுமாறா வேலை வாங்கியிருக்கேன். மனுஷன் இந்த வயசுலேயும் செமையா இருக்கார். `படையப்பா’ படத்துல க்ளைமேக்ஸ் ஃபைட்ல சட்டையைக் கழட்டிட்டு சண்டை போடுவார். அப்போ அந்தப் படத்துல நான் ஃபைட்டரா இருந்தேன். அப்போ எப்படி இருந்தாரோ, கிட்டத்தட்ட 20 வருஷம் கழிச்சு அதைவிட செமையா இருக்கார். இந்தப் படத்தில் ஒரே நாளில் 50 ஃபைட் ஷாட் அவரை வெச்சு மட்டும் எடுத்தேன். ஒரு கட்டத்தில் எனக்கே கஷ்டமா இருந்துச்சு. ஆனால் அவர், ‘அடுத்தது என்ன பீட்டர்’னு ஆர்வமா கேட்டு ரெடியா இருப்பார். அதனாலதான் அவர் சூப்பர்ஸ்டார்!

`இந்தியன் - 2’ல் நானும் ஒரு வெளிநாட்டு ஃபைட் மாஸ்டரும் சேர்ந்து வொர்க் பண்ற மாதிரிதான் முதலில் இருந்துச்சு. அப்புறம் ஷங்கர் சார், ‘நீங்க மட்டுமே பண்ணுங்க’ன்னு சொல்லிட்டார். இந்தப் படத்துக்கான வர்மக்கலைகளைப் பற்றித் தேடித் தேடிப் படிச்சேன். இந்தப் படத்துல 90 வயசு முதியவரா கமல் சார் நடிச்சிருக்கார். அந்த வயசு கேரக்டருக்கு ஃபைட் கோரியோ பண்றது செம சவாலா இருக்கு. கமல் சார் ஒரு பக்கா பர்ஃபெக்‌ஷனிஸ்ட். சும்மா கையைத் தூக்குறதே 90 வயசு ஆள் எப்படித் தூக்குவாரோ அந்த நடுக்கத்தோடுதான் பண்றார். அவர் அப்படி இருக்கும்போது எனக்கு ரொம்பவே வேலை இருக்கு. ரொம்பவே ஆர்வத்தோடு அதைப் பண்ணிட்டிருக்கேன்’’ என பீட்டர் ஹெய்ன் சொல்ல, ஒட்டுமொத்தக் குடும்பமும் அவரை பெருமையாய்ப் பார்க்கிறது.