Published:Updated:

ரஜினிக்கு வில்லன் கமல்... 2.0 முன்கதை! #2Point0

ரஜினிக்கு வில்லன் கமல்... 2.0 முன்கதை! #2Point0
ரஜினிக்கு வில்லன் கமல்... 2.0 முன்கதை! #2Point0

ஷங்கரின் இயக்கத்தில் உருவாகிவரும் '2.0' படப்பிடிப்புத் துவக்கியபோதே '2017-ம் ஆண்டு ரிலீஸாகும்' என்ற அறிவிப்போடு ஆரம்பித்தனர். பொதுவாக, தமிழ் சினிமாவில் பூஜை போடும் நாள் அன்றே ரிலீஸ் தேதியை அறிவிக்கும் வழக்கத்தைக் கடைபிடித்து வந்தது ஏ.வி.எம் நிறுவனம். லைக்கா நிறுவனமும் அதைப் பின்பற்றியிருக்கிறது. '2.0' படத்தின் ஷூட்டிங் நைல்நதி மாதிரி நீண்டுகொண்டே போனதால், அடுத்து 'காலா' படத்துக்கு கால்ஷீட் கொடுத்தார், ரஜினி. ''எங்களது '2.0' படம் ரிலீஸான பின்னரே 'காலா' படத்தை வெளியிடுங்கள்' என்று லைக்கா வைத்த வேண்டுகோளை 'காலா' தயாரிப்பாளர் தனுஷ் ஏற்றுக்கொண்டார். பிறகு லைக்கா நிறுவனமே 'காலா' படத்தை உலகம் முழுவதும் வெளியிடுவதற்கான உரிமையைப் பெற்றுக்கொண்டது தனிக்கதை. 

2017-ம் ஆண்டு ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்ட '2.0' திரைப்படம், 2018 ஜனவரி 26-ம்தேதி வெளியாகும் என்று சொன்னார்கள். இந்தி, தெலுங்கு மொழி விநியோகஸ்தர்கள் படத்தை வெளியிடுவதற்கான அட்வான்ஸ் பணத்தை லைக்கா நிறுவனத்துக்குக் கொடுக்க ஆரம்பித்தனர். திடீரென பட ரிலீஸை எந்தவித அறிவிப்பும் இன்றி தள்ளிவைத்தனர். பிறகு 'காலா' ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளிவந்தது. வழக்கமாகத் தனது படங்களின் ஒரு போட்டோவைக்கூட யாருக்கும் தெரியாமல் ரகசியமாகப் பாதுகாப்பதில் ஷங்கர் திறமையானவர். ஆனால், அவரது கைமீறி டீஸர் எப்படி வெளியானது? என்கிற கேள்வி எழுந்தது.

லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரன் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில்தான் டீஸர் வெளியானதாகச் சொல்லிக்கொண்டனர். '2.0' படத்தைத் துவக்கிய காலத்தில் இருந்தே பிரச்னைக்கு மேல் பிரச்னைகள் தலைவிரித்தாடி வருகிறது. பொதுவாக ரஜினி நடித்து வெள்ளிவிழா கொண்டாடிய திரைப்படங்கள் அத்தனையிலும் அலட்டிக்கொள்ளாமல் கேஷூவலாக நடிப்பது ரஜினியின் பாணி. 'எந்திரன்' படத்தில் நடித்தபோது கடுமையாக கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ரோபோ வேடத்துக்காக ரஜினி முகத்தை ஸ்கேன் செய்வதற்காக அவரது முகம் முழுக்க ரசாயன திரவம் பூசப்பட்டது, அவருக்கு அலர்ஜியாகிப் போனது. ஆகவே '2.0' படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாகவே நடிக்காமல் இருப்பதற்காக  நாசூக்காகத் தவிர்த்தார், ரஜினி. ஷங்கர் தொடர்ந்து வற்புறுத்தவே, வெறுவழியின்றி நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார்.

இப்போது அக்‌ஷய்குமார் நடித்துள்ள வேடத்துக்கு முதலில் பேசப்பட்டவர் யார் தெரியுமா? கமல்ஹாசன்! ஒருமுறை '2.0' படம் குறித்து ரஜினி பேசும்போது, 'இந்தப் படத்தின் ஹீரோ நான் இல்லை, அக்‌ஷய்குமார்தான்!' என்று ஓப்பன்டாக் கொடுத்தார். முதலில் அக்‌ஷய்குமார் கேரக்டரில் நடிப்பதற்காக கமலை சந்தித்துப் பேசினார், ஷங்கர். அப்போது, 'ரஜினிக்கு வில்லனா நடிக்கிறீங்களா?' என்று கேட்டவர், கமல் நடிக்கப்போகும் கேரக்டரின் முக்கியத்துவத்தை காட்சிவாரியாகவே விளக்கியிருக்கிறார். அதுமட்டுமல்ல, ரஜினியின் கதாபாத்திரத்தையும் முழுமையாகச் சொல்லிமுடித்தார், ஷங்கர். '2.0' படத்தின் எல்லா கதாபாத்திரங்களையும் உன்னிப்பாகக் கேட்ட கமல்ஹாசன், இறுதியாக 'என்னால் நடிக்க முடியாது' என்று தவிர்த்தார். இதுவரை கமல் வாங்காத பெரும் தொகையை சம்பளமாகத் தருவதாக லைக்கா நிறுவனம் சொன்னபோதும், கமல் 'நோ' சொல்லிவிட்டார். அடுத்த சாய்ஸ் என்று அர்னால்டுவைத் தேடி அயல்நாடு பறந்தனர். தினசரி ஒவ்வொரு மணி நேரத்தையும் ஷெட்யூல் போட்டு வாழ்கின்ற அர்னால்டின் லைஃப் ஸ்டைலுக்கும், நம்ம ஊர் நடைமுறைகளுக்கும் சரிவராது என்பதால், அவரது ஷட்டர் மூடப்பட்டது. இறுதியாக அக்‌ஷய்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டு '2.0' படத்தை முடித்து இருக்கிறார், ஷங்கர்.