Published:Updated:

ரஜினி... ரஞ்சித்.. இவர்களைத் தாண்டி ஜெயித்திருக்கிறாரா சந்தோஷ் நாராயணன்? - `காலா’ இசை விமர்சனம்

பரிசல் கிருஷ்ணா
ரஜினி... ரஞ்சித்.. இவர்களைத் தாண்டி ஜெயித்திருக்கிறாரா சந்தோஷ் நாராயணன்? - `காலா’ இசை விமர்சனம்
ரஜினி... ரஞ்சித்.. இவர்களைத் தாண்டி ஜெயித்திருக்கிறாரா சந்தோஷ் நாராயணன்? - `காலா’ இசை விமர்சனம்

பாடல்:  செம்ம வெய்ட்டு

வரிகள்: டோப்போடெலிக்ஸ், அருண்ராஜா காமராஜ், லோகன்
குரல்கள்: ஹரிஹர சுதன், சந்தோஷ் நாராயணன்

முதலில் வெளியான சிங்கிள் இதுதான். ஏற்கெனவே கேட்ட பீட் மற்றும் ஒரே ரிதமாக இருப்பது குறை. ஆனால் நடுநடுவே ரிப்பீட்டில்   ‘செம்ம வெய்ட்டு நம்ம காலா சேட்டு’க்கு முன் வரும் இசைத்துணுக்குச் சிறப்பு. இந்தி ராப், அவ்வளவாக ஒட்டவில்லை. ஆனால், தாராவியில் நடக்கும் கதைக்களத்துக்குத் தேவையானதாக இருக்கலாம். ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் தீனி.

பாடல்: தங்கச்சில
வரிகள்: அருண்ராஜா காமராஜ்
குரல்கள்: ஷங்கர் மகாதேவன், ப்ரதீப் குமார், அனந்து

ஃபீல் குட் பாடல். கேட்ட மெட்டைப் போல ஆரம்பித்தாலும், பல்லவி இரண்டாம் முறை வரும்போது உடன் ஒலிக்கும் `சசசா..’ ஆலாபனை கவர்கிறது. சரணத்தின் மெட்டிலும் எங்கோ கேட்ட ஃபீல். தபேலா இசை மாறிக்கொண்டே இருப்பது துள்ளலாக இருக்கிறது. இதிலும் இடையிடையே இந்தி வரிகள், பாட்டோடு ஒட்டாமல் இருக்கிறது. திரையில் காட்சியுடன் வரும்போது இன்னும் ஹிட்டாகும் என்று தோன்றுகிறது.   

பாடல்: கற்றவை பற்றவை
வரிகள்: அருண்ராஜா காமராஜ், கபிலன், ரோஷன் ஜாம்ராக்
குரல்கள்:  யோகி பி, அருண்ராஜா காமராஜ், ரோஷன் ஜாம்ராக்

டிரெய்லரிலேயே பற்றவைக்கப்பட்டுப் பற்றியெரிந்த பாடல். அந்த விசிலும், தொடர்ந்து கெத்தாக ஒலிக்கும் `ஒத்ததல ராவணா...’ குரலும் செம்ம வெய்ட்டு! அதுவும் நடுவில் ‘உன்னையும் மண்ணையும்’ என்று யோகி பி ஆரம்பிக்கும் இடத்தில் நரம்பு முறுக்கேறுகிறது. போதாததற்கு ‘க்யாரே செட்டிங்கா’ என்று ரஜினி வாய்ஸ் வேறு சேர்ந்து கொள்கிறது. தியேட்டரில் ரசிகர்களை சாமியாட வைக்கும் தீம்.

பாடல்: கண்ணம்மா
வரிகள்: உமாதேவி
குரல்கள்: பிரதீப்குமார், தீ, அனந்து

‘யார் டைரக்‌ஷனோ, யார் ஹீரோவோ எனக்குன்னு ஒரு பாட்டுப் போடுவேன்.. மெலடியா.. என் சிக்னேச்சரோட!’ என்பது சந்தோஷ் நாராயணன் இந்தப் பாடல்மூலம் கொடுத்திருக்கும் ஸ்டேட்மென்ட். முதல் இடையிசையின் புல்லாங்குழல் அத்தனை இதம். பல்லவியின் வரிகள் முடிவிலும், வரும் அதே புல்லாங்குழல் துணுக்கு இழுக்கிறது. 

காதலுணர்வுப் பாடல்களில் உமாதேவி, வழக்கமாய்ச் செய்யும் மாயத்தை இந்தப் பாடலிலும் செய்திருக்கிறார். அதுவும் ‘ஊட்டாத தாயின் கனக்கின்ற பால்போல் என் காதல் கிடக்கின்றதே’ என்ற வரிகளுக்காக அவருக்கு ஸ்பெஷல் பூங்கொத்து பார்சல்! பாடல் முடியும்போது ஒலிக்கிற மழையின் ஈரம், மனதுக்குள்ளும் உணர்கிறது. 

பாடல்: கண்ணம்மா - அக்கபெல்லா
வரிகள்: உமாதேவி
குரல்கள்: பிரதீப்குமார், தீ, அனந்து

‘மாயாபஜார்’ என்ற ஒரு படம்.  1995ல் வந்தது. அதில் இளையராஜா ‘நான் பொறந்துவந்தது ராஜவம்சத்திலே’ என்றொரு பாடலை இசைக்கருவிகள் இல்லாமல் அக்கபெல்லா மட்டுமே வைத்துக் கொடுத்திருப்பார். கண்ணம்மாவின் அக்கபெல்லா வெர்ஷனைக் கேட்கும்போது அது நினைவுக்கு வந்தது. ஆனால் இது மெலடி. இசைக்கருவிகள் இல்லாமலும் உருகவைக்கிறது. இறுதி விசில் இசை... வாவ்!

பாடல்:  உரிமையை மீட்போம்
வரிகள்:  அறிவு
குரல்கள்:  விஜய் பிரகாஷ், அனந்து

இந்த ஆல்பத்தின் என் ஃபேவரைட் பாடல். விஜய் பிரகாஷின் குரலுக்கு ரசிகன் நான். அவருக்குக் கஜல் பாடல்களில் ஆர்வமும், திறமையும் உண்டு. இப்படி ஒரு ‘போராட்ட’ ஜானர் பாடலை கஜல் கலந்து கொடுத்ததற்கும், அதற்கு விஜய் பிரகாஷ், அனந்துவைத் தேர்வு செய்ததற்கும் சந்தோஷ் நாராயணனுக்கு ஸ்பெஷல் சல்யூட். ஆரம்பத்திலேயே தபேலாவின் துள்ளலிசை, நம்மையறியாமல் ஈர்க்கிறது. 

“இடியா ஒரு புயலா 
வந்து எறங்கும் நம்ம படையும் - அட
தடுத்தா எந்தக் கரையும் இனி
உடையும் உடையும்” 

இப்படி, இந்தப் பாடலுக்கு, அறிவு எழுதிய வரிகள் அத்தனையும் கொஞ்சம் விட்டால் பற்றியெறிகிற பாஸ்பரஸ் வரிகள். இரண்டாம் இடையிசையில் சூஃபி ஸ்டைலும், கஜல் ஸ்டைலும் கலக்கிறது. இரண்டாம் சரணம் ஸ்பீடெடுத்து வேறு வகையில் மெட்டமைக்கப்பட்டிருக்கிறது. திரும்பத் திரும்ப ஒலிக்கும் `நிலமே எங்க உரிமை... நிலமே எங்க உரிமை’ படத்தின் மையக்கருவைச் சொல்வதோடு, நம்மைச் சிந்திக்கவும் வைக்கிறது.  

 
பாடல்: போராடுவோம்
வரிகள்: டோப்போடெலிக்ஸ், லோகன்
குரல்கள்: டோப்போடெலிக்ஸ்

படத்தின் காட்சிக்குத் தேவையான பாடலாக இருக்கலாம். (மத்த பாட்டுகளும் அப்படித்தானே? ஹி...ஹி..) ஆனால் ஆல்பத்தில் பெரிதாகக் கவரவில்லை. 

பாடல்: தெருவெளக்கு
வரிகள்: டோப்போடெலிக்ஸ், லோகன்
குரல்கள்: டோப்போடெலிக்ஸ், முத்தமிழ்

முந்தைய பாடலுக்குச் சொன்னதுதான். தவிரவும் நம்மையெல்லாம் பொறுத்தவரை, ராப் பாடலை சினிமா இசையில் கலந்து பெரிய ஹிட்டெதுவும் இல்லை. ஏ.ஆர். ரஹ்மானின் ‘பேட்டை ராப்’ மட்டும் விதிவிலக்கு. இந்தப் பாடல், ‘லவ் பேர்ட்ஸின்’ நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்’ பாடலை நினைவூட்டுகிறது. கிராமியம், கானா என்பதெல்லாம் நம் ஊரின் இசை என்பதால் எப்படியும் கவர்ந்திழுக்கும். ராப் அப்படி இல்லை என்பதால், பெரிய அளவில் ஹிட் கொடுப்பது சிரமம்தான். ஆனால் பாடல் வரிகள் பேசும் விஷயங்கள்... மிகவும் ஆழமானவை.

பாடல்: நிக்கல் நிக்கல்
வரிகள்: டோப்போடெலிக்ஸ், லோகன்
குரல்கள்: டோப்போடெலிக்ஸ், விவேக், அருண்ராஜா காமராஜ்

சந்தோஷ் நாராயணன், ‘நீங்க இறங்கி அடிங்கய்யா’ என்று டோப்போடெலிக்ஸை விட்டுவிட்டார் என்று நினைக்கிறேன். ‘கெளம்பு கெளம்பு’ என்று அடி இறங்கும்போது செம எனர்ஜி கூட்டுகிறது. ரஜினி, தேதி எல்லாம் செட் ஆகி அரசியலுக்கு வந்தால் அவரது அரசியல் மேடைகளில் ஒலிக்கலாம். எதிர்க்கட்சிகளைப் பார்த்துப் பாடுவதைப் போல, பாடிக் கொள்வார்கள். கடைசியில் பறை, தப்பட்டையெல்லாம் கலந்து அடிக்கும் அடி... கிழி... கிழி!

ஒரு ஆல்பத்தில் ஒன்பது பாடல்கள் என்பதே இசை ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்தான். ரஜினி படம், ரஞ்சித் படம் என்பதைத் தாண்டி சந்தோஷ் நாராயணன் ஸ்கோர் செய்துவிட்டாரென்றே சொல்லலாம். ‘உரிமையை மீட்போம்’, ‘கண்ணம்மா’ இரண்டுமே ஆல்பத்தின் டாப் பாடல்கள். இப்படி ஒரு கலவையான பாடல்கள் கொடுத்ததற்கு நன்றி சந்தோஷ்!