Published:Updated:

"சாமி 2-வில் நடிக்கிறேனா?!" - கோட்டா சீனிவாசராவ் பதில்

அய்யனார் ராஜன்

விபத்தில் இறந்த மகனின் நினைப்பிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் கோட்டா சீனிவாச ராவ்

"சாமி 2-வில் நடிக்கிறேனா?!" - கோட்டா சீனிவாசராவ் பதில்
"சாமி 2-வில் நடிக்கிறேனா?!" - கோட்டா சீனிவாசராவ் பதில்

'ஏலே, சாமி நம்ம சாதிக்காரப் பயலே.. பேசறப்ப காது ஆடுச்சே கவனிச்சியா' - விக்ரமைப் பார்த்துப் பேசும் போதே சாதியைக் கண்டுபிடிக்கிற வில்லனாக `சாமி'யில் அதகளப்படுத்திய `அண்ணாச்சி' கோட்டா சீனிவாச ராவை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா? 'சாமி' ஹிட் ஆனதில் கோட்டாவின் பங்கும் மிக முக்கியமானதாக இருந்தது. இயக்குநர் ஹரி 15 ஆண்டுகள் கழித்து 'சாமி 2' இயக்கிக் கொண்டிருக்கிற இந்தச் சூழலில், என்ன செய்து கொண்டிருக்கிறார் கோட்டா?

"நான் கடைசியாச் சந்திச்சு அஞ்சாறு வருஷம் இருக்கும். சென்னைக்கு வந்திருந்தவர், 'ஹோட்டல்ல தங்கியிருக்கேன். சந்திக்கலாம்னு நினைக்கேன். வர முடியுமா'ன்னு கேட்டார். போய்ப் பார்த்தேன். அப்பவே உடல்நிலை சரியில்லைன்னு சொன்னார். ரொம்ப நேரமாப் பேசிட்டிருந்தவர், விபத்துல இறந்த தன்னோட மகன் நினைப்பாவே இருக்குன்னு சொல்லியிருந்தார். தொடர்ந்து நடிக்கறதுல கவனம் செலுத்தினா, மனம் அந்தத் துயரச் சம்பவத்தை மறக்கும்னு நினைச்சேன், ஆனா அப்படி மறக்க மறுக்குதுன்னு சொன்னார். ஆறுதலா நாலு வார்த்தை பேசிட்டுத் திரும்பிட்டேன். அதுக்குப் பிறகு அவரோட பேசலாம்னு ரெண்டு மூணு முறை முயற்சி செய்தேன். ஆனா அவர்கிட்டப் பேச முடியலை. இப்ப உடல் நிலை சரியில்லாம வீட்டோட ஓய்வுல இருக்கறதாக் கேள்விப்பட்டேன்' என்கிறார் ஆரம்பத்திலிருந்தே கோட்டாவுக்குக் குரல் கொடுத்து வந்த நடிகர் ராஜேந்திரன்.

கோட்டா சீனிவாசராவின் ஒரே மகனான வெங்கட சாய் பிரசாத்தும் சில தெலுங்குப் படங்களில் நடித்து வந்தவர். வெளிநாட்டில் வாங்கி வந்த புதுரக பைக் ஒன்றில் ஓட்டலுக்குச் சாப்பிடச் சென்று கொண்டிருந்த போது இவரது பைக் மீது லாரி ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். ஹைதராபாத் அருகே இந்த விபத்து நடந்து ஒன்பது ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனாலும் இன்னமும் மகனின் நினைப்பிலிருந்து கோட்டாவால் மீண்டு வர முடியவில்லை என்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள்.

'அந்த விபத்து இவருக்குப் பெரிய அதிர்ச்சியைத் தந்திடுச்சு. தன்னைப் போலவே பையனையும் தெலுங்கு சினிமாவைத் தாண்டியும் கொண்டு போகணும்னு நினைச்சிருந்தார். அதெல்லாம் ஒரு நொடியில முடிஞ்சு போனதுல மனம் உடைந்துபோனார். வயசும் எழுபதைத் தாண்டிடுச்சுங்கிறதால, இப்ப முழுசா ஓய்வையே விரும்பறார். அதனால உதவியாளர்கிட்ட, முக்கியமான சிலரோட அழைப்புகளைத் தவிர்த்து மத்த யார் பேசினாலும், அது சினிமா வாய்ப்புன்னாலும் தனக்குத் தர வேண்டாம்னு சொல்லிட்டதாகத் தெரியுது.  ஆனாலும் தொடர்ந்து இவரைத் தேடி சினிமா வாய்ப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. உடல்நிலையைக் கருத்தில் கொண்டு முக்கியமான சில தெலுங்குப்படங்களை மட்டும் நடிக்கவிருப்பப் படறதாச் சொல்றாங்க' என்கிறார்கள் அந்த நெருக்கமானவர்கள்.

இதற்கிடையில் 'சாமி-2'விலும் கோட்டா வருவது போல் சீன்கள் இருப்பதாகவும், அதாவது 'சாமி'யில் 'அண்ணாச்சி'க்கு ஒரு பையன் இருந்ததாகவும் அந்தப் பையன் எப்படி வந்தான் என்கிற காட்சிகள் 'சாமி2'ல் வரும் போது கோட்டா வருவார்' என்றும் பேசப்பட, நாம் கோட்டாவிடமே பேசினோம்.

"ஹெல்த் பரவால்ல. வயசாயிடுச்சில்லையா, இப்படித்தான் இருக்கும். சாமி-2 ல் நடிக்கறதைப் பத்தி நான் முடிவு செய்யலை. எண்ணமெல்லாம் சாமிகிட்டப் போயிட்ட பையன் நினைப்பாவே இருக்கு. என்ன சொல்றது?" என சில வார்த்தைகளில் முடித்துக் கொண்டார்.