Published:Updated:

``ஸ்பாட்ல நிஜ தாதாவை ரஜினி `பாட்ஷா’வா மிரட்டுனதைப் பார்க்கணுமே!" - கலை இயக்குநர் ராமலிங்கம்

எம்.குணா

`கபாலி', `காலா' படங்களின் கலை இயக்குநர் ராமலிங்கம், ரஜினியுடனான தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

``ஸ்பாட்ல நிஜ தாதாவை ரஜினி `பாட்ஷா’வா மிரட்டுனதைப் பார்க்கணுமே!" - கலை இயக்குநர் ராமலிங்கம்
``ஸ்பாட்ல நிஜ தாதாவை ரஜினி `பாட்ஷா’வா மிரட்டுனதைப் பார்க்கணுமே!" - கலை இயக்குநர் ராமலிங்கம்

`எனக்குப் பொழுது போகலைனா ஆர்ட் டைரக்டர் ராமலிங்கத்தைக் கூப்பிட்டுப் பேசுவேன். அவர் அம்பேத்கர், பெரியாரிலிருந்து எல்லோரைப் பற்றியும் விலாவாரியா பேசுவார்!' என்று `காலா' ஆடியோ விழாவில் ரஜினியால் பாராட்டப்பட்டவர், `காலா' படத்தின் கலை இயக்குநர், ராமலிங்கம். 

``என் சொந்த ஊர் பேராவூரில் நான் வெறிபிடித்த ரஜினி ரசிகன். ஊரில் எப்போதும் ரஜினி ரசிகர்களுக்கும், விஜயகாந்த் ரசிகர்களுக்கும்தான் கடும் போட்டி நிலவும். கோவில் திருவிழா வந்துட்டா, ஊரே அதகளமாயிடும். ரஜினி, விஜயகாந்த் ரசிகர்களுக்கிடையே யார் பெரிய ஆள்னு போட்டி நடக்கும். திருவிழாவில் முதல்நாள் விஜயகாந்த் ரசிகர்கள் கலர் டிவியில் இரண்டு படங்களை ஒளிபரப்பினார்கள். எங்களுக்கு என்ன பண்றதுனு தெரியலை. வீட்டுல அறுவடை செஞ்சு வெச்சிருந்த நெல் மூட்டையை யாருக்கும் தெரியாம விற்று, நண்பர்கள் சிலர்கிட்ட பணம் வசூல் பண்ணி, திருவிழாவின் இரண்டாம் நாள் `தனிக்காட்டு ராஜா', `தங்கமகன்', `தர்மத்தின் தலைவன்', `தளபதி'னு தொடர்ந்து நான்கு படங்களை ஒளிபரப்பினோம்.  

பொதுவாக, `சினிமா பார்க்காத... கெட்டுப்போயிடுவ. ரசிகனா சுத்தாதே, ஊதாரி ஆயிடுவ'னு திட்டுவாங்க. ஆனா, நான் சினிமா பார்த்துக் கெட்டுப்போகலை. ரஜினிக்கு ரசிகனாகி, இன்னைக்கு அவர் படத்துக்கு ஆர்ட் டைரக்டர் ஆயிட்டேன். ஒருநாள் கொட்டும் மழையில் என் கிராமத்தின் குடிசை வீட்டுக்குள் இருந்த சமயத்துல, ரஞ்சித் சார்கிட்ட இருந்து போன். `ரஜினி சாரோட `கபாலி' படத்துக்கு நீங்கதான் ஆர்ட் டைரக்டர்.  உடனே சென்னைக்கு வாங்க'னு சொன்னார். எந்த மண்ணில் ரஜினி ரசிகனாகத் திரிஞ்சேனோ, எந்த ஊரில் ரஜினி சார் படங்களை டிவி-யில ஒளிபரப்ப நெல்மூட்டையைத் திருடி விற்றேனோ... அந்த மண்ணில் இருந்தப்போ, எனக்குக் `கபாலி' பட வாய்ப்பு கிடைச்சது. யாரை நான் தலைவனா ஏற்றிருந்தேனோ, அவர் மூலமாவே என் பொருளாதாரச் சூழல்ல முன்னேற்றம் கிடைச்சிருக்கு. பேராவூரிலிருந்து ரெயின்கோட் மாட்டிக்கிட்டு பைக்கில் சென்னைக்குக் கிளம்பி வந்தேன். ரஞ்சித் சார் என்னை ரஜினி சாரிடம் அறிமுகப்படுத்தி வெச்சார். `இவர் உங்களோட ரசிகன் சார்'னு ரஞ்சித் சொல்ல, என் குடும்பம், கலை இயக்கம் குறித்து விசாரித்தார் ரஜினி சார்.  

`கபாலி' ஷூட்டிங் ஸ்பாட்ல ரஜினி சாரோட பேசும்போது, அவருடைய சின்னக் கண்கள், மூக்கு, வாய்னு காதலியின் முகத்தைப் பார்க்கிற மாதிரி ரசிச்சுக்கிட்டே இருப்பேன். ரஜினி சாருக்குள்ளே ஒரு `பாட்ஷா' ஒளிஞ்சிருக்கார். அதை `கபாலி' ஷூட்டிங் ஸ்பாட்ல நான் பார்த்தேன். உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தைச் சொல்றேன்" என்றவர், தொடர்ந்தார்.

``மலேசியாவில் டத்தோவாக இருக்கும் ஒருவர், `கபாலி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தார். ரஜினி சார் உதவியாளரிடம் தனக்கு வேண்டியவர் ரஜினிகூட போட்டோ எடுத்தே ஆகணும்னு அடம்பிடித்தார். ரஜினி சாரின் உதவியாளர் எவ்வளவோ சொல்லியும் கேட்காம, சண்டை போடுற அளவுக்குக் கோபமாயிட்டார். நடக்கிறதையெல்லாம் கேரவன் கண்ணாடி வழியா பார்த்துக்கிட்டு இருந்த ரஜினி சார், உதவியாளரை அழைத்து என்ன பிரச்னைனு கேட்டார். `நான் சொல்ற ஆளோட போட்டோ எடுக்காம நீங்க இந்த ஏரியாவைவிட்டே நகரமுடியாதுனு மிரட்டுறார்'னு அவர் விஷயத்தைச் சொன்னதும், `அவனைக் கூப்பிடு'னு சத்தம் போட்டார்.

கேரவனுக்குள் வந்த டத்தோவை உட்காரவெச்சு, மலேசியாவின் பெரும்புள்ளி ஒருவரோட பெயரைச் சொல்லி, தன் உதவியாளர்கிட்ட அவருக்கு போன் பண்ணச் சொன்னார். அவ்வளவுதான்... பயத்தில் டக்கென ரஜினி காலில் சாஷ்டாங்கமாய் விழுந்துவிட்டார், அந்த டத்தோ. `பாட்ஷா' படத்துல ஆனந்தராஜைப் பார்த்து, `இனிமே இந்தப் பக்கம் உன்னைப் பார்த்தேன், பார்த்த இடத்துலேயே குழிதோண்டிப் புதைச்சிடுவேன்'னு ஒரு வசனம் பேசுவாரே... அதே தொனியில், `` `கபாலி' ஷூட்டிங் முடியிறவரைக்கு உன்னை இந்த ஏரியாவிலேயே பார்க்கக் கூடாது. மீறி கண்ணுல பட்டா, தொலைச்சிடுவேன்!''னு ரஜினிசார் கோபமா சொல்ல, தெறிச்சு ஓடிட்டார் டத்தோ!" எனப் பழைய அனுபவம் ஒன்றின் மூலம், ரஜினியின் இன்னொரு முகத்தை விவரித்தார், கலை இயக்குநர் ராமலிங்கம்.