Published:Updated:

`` `காலா'ல ரஜினி பன்ச் பேசாதது சிம்பிள் லாஜிக்தான்!" - மகிழ்நன், ஆதவன் தீட்சண்யா #VikatanExclusive

அலாவுதின் ஹுசைன்

`` `காலா'ல ரஜினி பன்ச் பேசாதது சிம்பிள் லாஜிக்தான்!" - `காலா’ வசன எழுத்தாளர்கள் மகிழ்நன், ஆதவன் தீட்சண்யா பேட்டி

`` `காலா'ல ரஜினி பன்ச் பேசாதது சிம்பிள் லாஜிக்தான்!" - மகிழ்நன், ஆதவன் தீட்சண்யா #VikatanExclusive
`` `காலா'ல ரஜினி பன்ச் பேசாதது சிம்பிள் லாஜிக்தான்!" - மகிழ்நன், ஆதவன் தீட்சண்யா #VikatanExclusive

`காலா' படத்தை முடித்துவிட்டு வெளியே வந்ததும் நினைவுக்கு வந்தது, `` `காலா’ அரசியல் படம் இல்லைங்க... ஆனா, படத்துல அரசியல் இருக்குனு!" என்று படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுல ரஜினிகாந்த் சொன்ன விஷயம்தான். படத்தின் வசனங்கள் தாராவியின் நில அரசியலைக் கண்முன் நிற்க வைத்திருக்கிறது என்றால், மிகையில்லை. இதுகுறித்து ரஞ்சித்துடன் இணைந்து பணியாற்றிய  மகிழ்நன், ஆதவன் தீட்சண்யா ஆகியோரிடம் பேசினோம்.

"ரஞ்சித் எனக்கு, என் தோழரும் அவரின் உதவி இயக்குநருமான அதியன் ஆதிரை மூலம்தான் நட்பானார். `மெட்ராஸ்' படத்தின் வெளியீட்டுக்கு முன் எங்களது இதழில் 'தண்ணீக்கோழி' என்னும் தலைப்பில் சிறுகதை ஒன்றை எழுதியிருந்தார். `காலா' படத்தில் இருக்கும் நிலம் சம்பந்தமான பல கேள்விகள் அந்தக் கதையில் இருந்தன. இன்னும் நிறைய கேள்விகளும் இருக்கு!" என ஆரம்பித்தார் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா.

"அதுவரை போனில் மட்டும்தான் பேசிக்கொண்டிருந்தோம். `மெட்ராஸ்' படம் வெளியான பிறகு, சென்னையில் ஓர் ஆய்வரங்கம் நடந்தது. அப்போதுதான் நானும் ரஞ்சித்தும் முதல்முறையாகச் சந்தித்துப் பேசினோம். சமகால அரசியல் நடப்பு, இலக்கியம் என எங்கள் நட்பு தொடர்ந்தது. புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வாதாரம் பற்றிய ஒரு கதையை டிஸ்கஸ் செய்துகொண்டிருந்தோம். அப்படி உதித்ததுதான், `கபாலி' ஐடியா. ரஞ்சித்தின் நண்பர் இயக்க நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த 'பிவேர் ஆஃப் கேஸ்ட்' ஆவணப்பட திரையிடலில் 'நாங்கெல்லாம் இருக்கும்போது நீங்க சினிமாவுக்கு வர யோசிக்கக் கூடாது. நீங்க வாங்கண்ணா'னு கூப்பிட்டார். ஒருநாள் ஒரு கதையைக் கொடுத்து, `இதை முழுசா படிங்க. உங்களுக்கு எங்கெல்லாம் நெருடலா இருக்குதோ எங்கெல்லாம் மாத்தலாம்னு நினைக்கிறீங்களோ நோட் பண்ணி வைங்க. டிஸ்கஸ் பண்ணுவோம்'னு சொல்லிட்டுப் போயிட்டார். அவர் கொடுத்த கதையே நிறைவானதாக இருந்தது. படத்தின் வசனங்களை இறுதிபடுத்த நான், ரஞ்சித், மகிழ்நன் ஆகியோர் டிஸ்கஸ் செய்து வந்தோம். படத்தின் இணை இயக்குநரும் மற்றொரு வசன கர்த்தாவுமான மகிழ்நனுக்கு தாராவிதான் பூர்வீகம். அது எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. கதையின் சூழல்கள் சில நிஜ தாராவியில் நடந்திருந்தால் எப்படி நடந்திருக்கும் என ஊர்ஜிதப் படுத்துவதற்கும் உதவியாக இருந்தது" என்கிறார் ஆதவன் தீட்சண்யா. 

``தமிழ் படத்தில் அரிதாகச் சொல்லப்பட்ட கதைக்களம், ரஜினி இதுக்குமுன் ஏற்றிராத கதாபாத்திரம் எனப் பல சவால்கள் இருந்திருக்குமே?"

``படத்தில் ரஜினிகாந்த் ஒரு குடும்பத் தலைவன். அவருக்கும் சமுதாயத்துக்கும் உள்ள உறவு, அவருக்கும் அங்குள்ள மக்களுக்கும் உள்ள உறவு, மக்கள் கேட்கும் கண்ணியமான வாழ்க்கைக்கான போராட்டத்துக்கு அவர் குரலாய் இருப்பது... என ஒரு சாதாரண மனிதராகவே ரஜினி இருப்பார். அதனால், ரஜினிக்கு பன்ச் வசனங்கள் தேவைப்படவில்லை. படத்தின் ஓர் இடத்திலும் 'எங்க உரிமைதான் என்னோட சுயநலம்'னு சொல்லியிருப்பார். அதனால், தனி மனித சாகசங்கள் எதுவுமே படத்தில் இல்லை. 'காலா' ஒரு இயல்பான மனிதன்.   

ஓர் இடம் அதன் வாழ்க்கையைப் பற்றிச் சொல்ல வேண்டும் என முடிவு செய்துவிட்டோம். அந்த வாழ்வியலுக்குத் தேவையான வசனங்களைக் கதாபாத்திரங்கள் பயன்படுத்தினார்கள். தாராவி கிட்டத்தட்ட 550 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம். ரியல் எஸ்டேட் வியாபார சாத்தியக்கூறுகள் அதிகம் கொண்ட இடம். அதன் அன்றைய விலையைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது 40,000 கோடி வந்தது. அதை ஓர் இடத்தில் வசனமாகச் சேர்த்துக்கொண்டோம். பூர்வீக மக்களை அவர்கள் இடத்திலிருந்து அகற்றும் அநீதி தாராவிக்கு மட்டுமின்றி, உலகளவில் பல இடங்களுக்கு நடந்து வருகிறது. அந்த விஷயங்களைத் தாராவிக்கு மட்டுமானதாக இல்லாமல், பொதுப்படுத்துவது எங்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது.

முக்கியமாக, பத்தமடை அயூப் பாய் கரிகாலனுக்கு தன் மகள் சரினாவை கட்டிக் கொடுக்க சம்மதித்த விஷயமும் படத்தில் இடம்பெற்ற, "நாமெல்லாம் ஒண்ணா இருந்தாதான் நம்மை யாரும் ஒண்ணும் செய்ய முடியாது'னு காலா சொல்வது, இயக்குநர் ரஞ்சித்தின் கனவு!" என ஆதவன் தீட்சண்யா முடிக்க, தாராவியின் மகன் மகிழ்நன் தொடர்ந்தார். 

"நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தாராவிதான். ஏழு வருடங்களுக்கு முன்னாடி சென்னைக்கு வரும்போது எங்க மக்களைப் பற்றிப் படம் எடுக்க மாட்டாங்களானு ஏக்கத்தோடதான் வந்தேன். என் அரசியல் கண்ணோட்டம் இங்கே இருந்த பெரும்பாலானவர்களுக்கு செட் ஆகலை. பிறகு, ஒரு தனியார் தொலைக்காட்சியில வேலைக்குச் சேர்ந்துட்டேன்" என்ற மகிழ்நனிடம் சில கேள்விகள்.  

"இயக்குநர் ரஞ்சித்துடனான பழக்கம்..?"

"தோழர் ரஞ்சித் எனக்கு முகநூல் நண்பர். அவ்வப்போது நான் எழுதுவதைப் படித்திருக்கிறார். அப்பப்போ போன்ல பேசியிருக்கோம், பின்னர் உற்ற நண்பர் ஆனார். 'மெட்ராஸ்' படத்தின் வெற்றி இயக்குநர் என்ற தோரணை எதுவுமே அவரிடம் அப்போதும் இல்லை, இப்போதும் இல்லை. 'கபாலி' முடிந்ததும் ஒருநாள் போன் பண்ணி, 'தோழர் வாங்க, தாராவி போயிட்டு வருவோம்'னு சொன்னார். இணை இயக்குநர்கள் பார்த்தி, ஜெனியோடு போய் அங்கே நாங்க சந்திச்ச மனிதர்கள்தான், 'காலா' கதாபாத்திரங்கள் ஆனார்கள். 

நான் அங்கேயே பிறந்து வளர்ந்தவன் என்பதால், எனக்கு ஒவ்வொரு கதாபாத்திரமும் யார்னு சொல்ல முடியும். உதராணத்துக்கு, செல்வி கதாபாத்திரம் பல தாராவி பெண்களோட பிரதிபலிப்பாக இருந்தது. ஆரம்பத்துல என்னை வசனம் எழுதச் சொல்வார்னு தெரியாது. எனக்கு ரஞ்சித் தோழரை ரொம்பப் பிடிக்கும். நான் உதவி இயக்குநராக வேலை செய்யணும்னுதான் அவர்கிட்ட கேட்டேன். 'கொஞ்சம் பொறுங்க, உங்களுக்குனு ஒரு வேலை இருக்கு'னு சொன்னார். பிறகு, கதை விவாதத்துல இணைச்சுக்கிட்டார். வசனம் எழுதுறதுக்கு ரஞ்சித், ஆதவன் தோழர்களோடு நானும் சேர்ந்துக்கிட்டேன்." 

"நீங்க தாராவியைச் சேர்ந்தவர்னுதான் வசனம் எழுத வச்சாங்களா?"

"படம் பார்க்கும்போதுதான் எனக்கு ஏன் வசனம் எழுதுற வேலை கொடுத்தார்னு புரிஞ்சது. ரஞ்சித் தோழர்கிட்ட தாராவியைப் பத்தி நான் பல விஷயங்கள் பேசியிருக்கேன். நான் பேசுற தமிழும் திருநெல்வேலி ஸ்லாங்கும்கூட காரணமா இருக்கலாம். படத்துல இயக்குநர் காட்சிக்குத் தேவைப்படுற வசனங்களைக் கேட்பார். அவருக்குத் தேவையான வசன ஆப்ஷன்ஸ் கொடுக்கிறதுதான் என் வேலை. நல்ல வசனங்களா பார்த்துத் தேர்ந்தெடுத்ததும் திருத்தினதும் இயக்குநர்தான்." 

" 'கியாரே... செட்டிங்கா' வசனம் உருவான விதத்தைச் சொல்லுங்க, படத்துல பன்ச் வசனங்கள் கம்மியா இருக்கக் காரணம் என்ன?" 

"பாம்பேல ஷூட்டிங் பண்ணிக்கிட்டு இருந்தோம். திடீர்னு ரஞ்சித் தோழர், 'ஒரு பன்ச் வசனம் எழுதனும்'னு சொன்னார். எனக்கு ரஜினி சாருக்கு பன்ச் எழுதுற டென்ஷனைவிட, தோழருக்குப் பிடிக்கிற மாதிரி எழுதணும்னு டென்ஷன். சில ஆப்ஷன்ஸ் கொடுத்தேன். அதுல, இயக்குநர் ரஞ்சித் தேர்ந்தெடுத்ததுதான், 'கியாரே செட்டிங்கா' வசனம். மக்களோடு மக்களாக இருக்கிற காலா பன்ச் வசனங்களைவிட, மக்களோட உணர்வுகளைப் பேசணும். கதையோட எல்லையும் அதுதானே!"

"தாராவி மக்கள்ல ஒருத்தனா நீங்க சந்திச்ச பிரச்னைகளைப் படத்துல ரஜினி பேசுனதைப் பார்க்கும்போது எப்படி இருந்தது?"

"தாராவில நான் 10x10 ரூம்லதான் பிறந்தேன். பெரும்பாலான இரவுகள்ல வீட்டுக்கு வெளியே உறங்கும் நிலைதான் எனக்கு. காலா கதாபாத்திரம், தாராவி பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்கும் பல இளைஞர்களோட பிரதிபலிப்புதான். படத்தில் பேசும் அரசியல், துண்டு பிரசுரம் கொடுப்பது, சமூகம் சார்ந்து பேசுற பசங்க... என எல்லாம் நிஜ தாராவியில் நடக்கும் விஷயம்தான். சமுத்திரக்கனி கதாபாத்திரம்கூட தாராவியில் இருக்கும் பல மனிதர்களோட பிரதிபலிப்புதான்."  

"படத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு எழுதிய வசனங்கள் உள்ளதா?"            

"ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்னாடி தாராவியை டாப் ஆங்கிள் ஷாட்டில் எடுத்தார்கள். அதை எனக்குப் போட்டுக் காட்டும்போது என் கண் கலங்கிடுச்சு. படத்துல செல்வி கதாபாத்திரம் பேசுற பல வசனங்கள் எங்க அம்மா என்னை எப்படித் திட்டுனாங்கனு கேட்டு எழுதுனேன். சில இடங்களில் காலா பேசுற 'எரிச்சாலும் புதைச்சாலும் இங்கதான். இது இந்த இடத்தில வளந்த மரம்'னு சொல்லும்போது, எங்க அம்மாவுக்கு எங்க அப்பாவைப் பார்த்த மாதிரியே இருந்தது. பல பசங்களுக்கு அந்த 'விழித்திடு இளைஞர் இயக்கம்' பெயரைப் பார்த்துட்டு, தாராவி பசங்க நடத்துற விழித்தெழு இளைஞர்  இயக்கத்தோட கனெக்ட் பண்ணிக்கிட்டாங்க. என் அக்கா பையன், லெனின் கதாபாத்திரத்தோட கனெக்ட் பண்ணிக்க முடிஞ்சதுனு சொன்னான். காலா மக்களை ஒன்றுதிரட்டி, 'உடம்புதான் நம்ம ஆயுதம்'னு  சொல்லும்போது, ரொம்ப உணர்வுபூர்வமாய் இருந்தது." 

'' 'காலா' படத்துல தாராவியின் அரசியல் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கா?"

"தாராவி மிகப்பெரிய ஏரியா. அதுல பல அரசியல் இருக்கு. தாராவி ஒரு ரியல் எஸ்டேட் ஹப் மாதிரிதான். நிறைய பில்டர்ஸ் அணுகுறாங்க. அங்கே இருக்கிற எல்லோருக்கும் ஒரு நல்ல கட்டடம், வீட்டுக்குள்ளேயே டாய்லெட்னு எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கு. ஆனா, அதுக்காக நிலத்துல பாதியைத் தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்கிற திட்டத்தோடதான் வர்றாங்க. எங்க பாட்டன், முப்பாட்டன் காலத்துல இருந்து மக்கள் உருவாக்கிய நிலம் அது. அது மொத்தமும் தாராவி மக்களுக்குத்தான் சொந்தம். அந்த வகையில, 'காலா' தாராவியைப் பற்றி யாரும் பேசாத அரசியலைப் பேசியிருக்குனுதான் சொல்வேன். இப்படம் தாராவி மக்களுக்கே தாராவியைப் பற்றி எடுத்துச் சொல்ல பெரிதும் உதவியிருக்கிறது!"  என்கிறார் மகிழ்நன்.