Published:Updated:

" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..!" - இயக்குநர் சரண்

தார்மிக் லீ
" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..!" - இயக்குநர் சரண்
" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..!" - இயக்குநர் சரண்

'அமாராவதி' படத்தில் ஆரம்பித்து, 'வான்மதி', 'காதல் கோட்டை', 'உல்லாசம்', 'உன்னைத்தேடி' போன்ற படங்கள் வரை லவ் சப்ஜெக்ட்டை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார், அஜித். இதைத் தொடர்ந்து 'வாலி' படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்த இவர், தனது வழக்கமான நடிப்பில் இருந்து வேறுபட்டு, மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடிக்கத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து 1999-ல், சரண் இயக்கத்தில் வெளியான 'அமர்க்களம்' படத்தின் மூலம், 'மாஸ்' என்ற வட்டத்திற்குள் நுழைந்தார், அஜித். அவருடைய சினிமா வாழ்க்கையில் 'அமர்க்களம்' ஓர் முக்கியமான படம். நேற்றோடு (13-08-2018) அப்படம் வெளியாகி 19 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. படத்தின் சுவாரஸ்யத் தகவல்களைத் தெரிந்துகொள்ள இயக்குநர் சரணை தொடர்பு கொண்டேன். 

"அமர்க்களம் படத்துடைய தளத்தை எப்படிப் பிடிச்சீங்க?"

" 'காதல் மன்னன்' படம் சமயத்துல அஜித், 'மறுபடியும் நம்ம ஒரு படம் பண்றோம் ஜி'னு சொல்லி வெச்சிருந்தார். அந்தக் காலத்துல இன்னொரு படத்துடைய அறிவுப்பை வெளியிட்டா தயாரிப்பாளர்களுக்கு உதவியா இருக்கும். ஆனா அப்போ என்கிட்ட கதை இல்லை. 'அமர்க்களம்'ங்கிற டைட்டில் மட்டும்தான் இருந்தது. அதுவும், 'டூயட்' படத்துடைய 'அஞ்சலி அஞ்சலி' பாட்டு ரெக்கார்டிங்ல வந்த யோசனை. அந்தப் படத்துல பாலசந்தர் சாருக்கு அசிஸ்டென்ட்டா நான் வேலை பார்த்திருக்கேன். எஸ்.பி.பி சார், அந்தப் பாட்டை முடிச்சிட்டு ரஹ்மான் சார்கிட்ட 'பாட்டு... அமர்க்களம்'னு சொன்னார். அந்த வார்த்தை எனக்கு ரொம்ப பிடிச்சது. அப்போவே டைட்டிலை ஃபிக்ஸ் பண்ணிட்டேன். அப்புறம் அஜித் நடிக்கிற படத்துக்குதான் 'அமர்க்களம்'னு வைக்கிற வாய்ப்பு வந்தது. ஒரு பட்டாம்பூச்சியை சங்கிலியால கட்டியிருக்க மாதிரி ஒரு போட்டோ டிசைன் பண்ணி ரிலீஸ் பண்ணோம். பட வேலைகளை ஆரம்பிக்கிற சமயத்துல, அஜித்தை மீட் பண்ணும்போது அவருக்கு ஆபரேஷன் நடந்து முடிஞ்சிருந்தது. ஆபரேஷன் நடந்து ஒரு மணி நேரம்கூட இருக்காது. ரொம்ப மயக்க நிலையில இருந்தார். அவரால கண்ணையும், வாயையும் மட்டும்தான் லேசா அசைக்க முடிஞ்சது. அப்போ நான் அவர் பக்கத்துலதான் இருந்தேன். என்னைக் கூப்பிட்டு, 'ஃபுல் ஆக்‌ஷன் படம் ஒண்ணு நம்ம பண்றோம். அதுக்கு தகுந்த கதையை யோசிங்க. நான் ரெடியாகுறேன்'னு சொன்னார். அதைக் கேட்டதும் எங்களுக்கு செம எனர்ஜி வந்திருச்சு. அப்போ புடிச்சதுதான் 'அமர்க்களம்' படத்துடைய லைன்." 

"முழுக்கவே ஆக்‌ஷன் ஜானர்ல அஜித்துக்கு இதுதான் முதல் படம். அப்புறம்தான் மாஸ்ங்கிற வட்டத்துக்குள்ள போய் இப்போ ஒரு நல்ல இடத்துல இருக்கார். இந்த வளர்ச்சியை நீங்க எப்படிப் பாக்குறீங்க?"

" 'காதல் மன்னன்' படத்துக்காக அவர்கிட்ட பேசும்போதே, 'ஒரு நாள் இவர் திரைத் துறையில கொடிகட்டி பறக்கப்போறார்'னு உள்ளுணர்வு சொல்லுச்சு. அந்தப் படத்தைப் பொறுத்தவரைக்கும், வழக்கமான ஒரு பாணியில நடிக்கிற அஜித்தா இல்லாம, வேற மாதிரி நடிக்க வைக்கணும்னு எனக்கும் ஆசை இருந்தது, அதை சரியா அவரும் வெளிக்கொண்டு வந்தார். அவரால காதல் பண்ண முடியும், காமெடி பண்ண முடியும், சண்டை போட முடியும். 'காதல் மன்னன்' படத்துல இது ஒரு பேக்கேஜாவே இருக்கும். இப்போ அவர் இருக்கிற வளர்ச்சி, நான் அன்னைக்கே எதிர்பார்த்ததுதான். என்னைப் பொறுத்தவரைக்கும் ஆச்சர்யப்படவோ, பிரம்மிக்கவோ எதுவும் இல்லை. இப்போ அவர் இருக்கிற இடம், அவருடையதுதான்." 

"அஜித்தை வாசுவா எப்படிப் பொருத்திப் பார்த்தீங்க. படத்துல அவர் வாசுவை எப்படி வெளிக்கொண்டு வந்தார்?" 

" 'அமர்க்களம்' படத்துடைய கதை, டிஸ்கஷன்ல உருவானது கிடையாது. கை போன போக்குல அப்படியே எழுதுனதுதான். இன்னும் உண்மையை சொல்லணும்னா, இந்தக் கதை ரகுவரனுக்கும் நாசருக்கும் இடையேயான ஒரு போராட்டம். கதையில அஜித்துக்காக நிறைய விஷயங்களை மாத்துனோம். வாசு, 'தூங்கும்போது எழுப்புனா கோவப்படுவான்'ங்கிறது ஸ்க்ரிப்ட்ல இல்லாத ஒண்ணு.  ஹீரோவைப் பொறுத்தவரைக்கும், 'யாரோ சில ரௌடிங்க வருவாங்க, அவங்களை ஹீரோ அடிப்பார்'ங்கிறதைவிட, சின்ன விஷயத்துக்குக் கோவப்படுற ஒரு ஆளுக்குள்ள சொல்லப்படாத ஒரு கோவமும், யாரும் எதிர்பாக்காத நேரத்துல ஒரு வெளிப்படுத்தும் ஒரு இசையும் இருக்குணும்... இந்த ரெண்டையும் சரியான நேரத்துல வெளிக்கொண்டு வரணும்னு நினைச்சேன். முதல் விஷயம் ஆக்‌ஷன். அஜித் ஆட்டோவுல தூங்கிட்டு இருப்பார். அப்போ படத்துடைய ரீலுக்காக பிரச்னை வரும். அஜித்துடைய சுபாவம் தெரிஞ்ச தாமு, 'அந்த ஆட்டோவுல ஒரு தியாகி தூங்கிட்டு இருக்கார். முடிஞ்சா அவரை எழுப்புங்க. அவர் சொன்னா நான் மன்னிப்பு கேட்குறேன்'னு சொல்லுவார். அப்போ ஆடியன்ஸுடைய பல்ஸ் கண்டிப்பா அதிகமாகும். அதுதான் ஆக்‌ஷனுக்கான சரியான லீட். அதே மாதிரி ஹீரோயினுக்கு, ரௌடி வாசு மேல இருக்க ஒரு பிம்பம் உடைஞ்சு, அவனுகுள்ளேயும் ஒரு வலியும் இருக்கு, இசையும் இருக்குனு நிரூபிக்கிற ஒரு இடமா அமையணும். இது ரெண்டையும் சரியான நேரத்துல கொண்டு வரணும்னு நினைச்சேன். அதைச் சரியாவும் பண்ணிட்டேன்." 

"அஜித்துடைய நடிப்பு?"

"அஜித்கிட்ட அவருடைய கதாபாத்திரத்தைப் பத்தி சொன்னவுடனே, அவர்தான் அவருக்கான காஸ்ட்யூமைத் தேர்ந்தெடுத்தார். உடனே அவருடைய நண்பருக்கு ஃபோன் பண்ணி, ஒரு வேன் நிறைய உண்மையான ஆயுதங்களை இறக்கினார். முதல் ஷாட் சீனிவாசா தியேட்டர்லதான் ஆரம்பிச்சது. அஜித், காஸ்ட்யூம்லாம் போட்டு ஷாட்டுக்கு ரெடியாகிட்டார். 'என்னமோ ஒண்ணு குறையுதே ஜி. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க'னு சொல்லி, தியேட்டர் வாசல்ல இருக்க மண்ல அங்கிட்டும் இங்கிட்டும் புரண்டு எழுந்தார். 'இப்போதான் நீங்க நினைக்கிற கேரக்டர் வந்திருக்கு. வாங்க ஷாட்டுக்குப் போகலாம்'னு சொன்னார். எனக்கு இவர் பண்ணது ரொம்ப ஆச்சர்யமா இருந்தது. போக, சண்டைக் காட்சிகளுக்கும் டூப் போடாம அவரே நடிச்சார்." 

" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டு உருவான கதை பத்தி சொல்லுங்க?"

"வைரமுத்து கவிதைகள்ல 'வேண்டும் வேண்டும்'னு ஒரு கவிதை இருக்கு. அவர்கிட்ட, 'சார், 'வேண்டும்'னு இருக்க இடத்துலலாம் கேட்டேன்னு எனக்கு மாத்திக் கொடுங்க'னு சொன்னேன். அவரும் சூழலுக்குத் தகுந்த மாதிரி சில வரிகளை சேர்த்து, 'கேட்டேன்'னு மாத்திக்கொடுத்தார். இந்த ஒட்டுமொத்த பாட்டுலேயும், எஸ்.பி.பி சாருக்குத்தான் ரொம்ப சவாலா இருந்தது. இதுக்கு முன்னாடி 'கேளடி கண்மணி' பாட்டுல, சரணத்தை மட்டும்தான் மூச்சுவிடாம பாடியிருப்பார். ஆனா, இந்தப் படத்துல முழுக்கவே மூச்சுவிடாம பாடியிருப்பார். கொஞ்ச நேரம் லோ பிட்ச்ல பாடி பயிற்சி எடுத்துட்டு, சிங்கிள் டேக்லே பாடி முடிச்சிட்டார். சின்னச் சின்ன விஷயம்லாம் துள்ளியமா நோட் பண்ணி ரொம்ப கச்சிதமா மியூஸிக் பண்ணவர், பரத்வாஜ். அவருக்கும் இந்தப் பாட்டுடைய வெற்றில பெரிய பங்கு இருக்கு. படத்துல இசையும் நிறைய பேசும். இது ஆஃப் ஸ்க்ரீன்ல நடந்த விஷயம். ஆன் ஸ்க்ரீன்ல, ஷாட் போகும்போது சீரியஸா நடிச்சிட்டு, கேமரா ஆஃப் ஆனதும் ஒட்டுமொத்த யூனிட்டையுமே சிரிக்க வைக்கிறதுதான் அஜித்துடைய வேலை. மறுபடியும் ஷாட் ஆரம்பிச்சதும், சீரியஸா மாறி, எமோஷனலை கண்ல கொண்டு வந்திருவார். இன்னைக்கு வரைக்கும் அந்தப் பாட்டைப் பாக்குறவங்களுக்கு ஏதோ ஒரு சொல்லப்படாத வலி ஏற்படும். ஆனா இந்தப் பாட்டுக்கு பின்னாடி அஜித் எவ்வளவு குறும்பு பண்ணார்னு எனக்குதான் தெரியும்!" 

"அஜித் எப்பவுமே இப்படி ஜாலியாதான் இருப்பாரா?"

"நம்ம வெளியில பார்க்குற அஜித் வேற, ஸ்பாட்ல பார்க்குற அஜித் வேற. ரொம்ப ஜோக் அடிச்சிட்டு, பயங்கர ஜாலியா இருப்பார். அவர் இருக்கிற இடம் ரொம்ப கலகலப்பா இருக்கும். யாரா இருந்தாலும் அவங்களை மாதிரியே பகடி பண்ணிக்காட்டுவார். ஷாலினி கூடவே அவங்களுடைய மேக்கப் மேனும், டச் அப் பண்ற பையனும் எப்பவுமே இருப்பாங்க. அந்த ரெண்டு பேரும் என்னலாம் செய்றாங்களோ அது எல்லாத்தையுமே இவர் இமிடேட் பண்ணிக்காட்டுவார். இவர் இப்படி நடிக்கிறதும், அதைப் பார்த்து ஷாலினி சிரிக்கிறதும்தான் பெரும்பாலான நேரங்கள்ல நடக்கும். அந்த இடத்துல அஜித் தெரிய மாட்டார், அவருடைய கேரக்டர்தான் தெரியும். இதை பாராதிராஜா சாருக்கு அப்புறம் அஜித் சார்கிட்டதான் பாக்குறேன். இது எல்லாத்தையும்விட அஜித் ஷாலினிகிட்ட லவ் ப்ரப்போஸ் பண்ண விஷயம்தான் ஹைலைட். சீனிவாசா தியேட்டர் ஹால்ல ஒரு ஷாட்டுக்காக எல்லோரும் ரெடியாகிட்டு இருந்தோம். அப்போ எனக்கு இடதுபுறம் அஜித் உட்கார்ந்திருந்தார், வலதுபுறம் ஷாலினி அடுத்த ஷாட்டுக்கு டச் அப் பண்ணிட்டிருந்தாங்க. அஜித் திடீர்னு, 'சரண், மத்த படத்தைத் தள்ளி வெச்சிட்டு இந்தப் படத்துக்கே மொத்த கால்ஷீட்டையும் கொடுத்தர்றேன். சீக்கிரம் இந்தப் படத்தை எடுத்து முடிச்சிருங்க. இல்லேன்னா இந்தப் பொண்ணை லவ் பண்ணிருவேன்னு பயமா இருக்கு'னு சொன்னார். இதை சொன்ன உடனே ஒரு ஷாக் கலந்த வெட்கம் ஷாலினிகிட்ட இருந்து வந்தது. ரொம்ப ரம்யமா இருந்தது இவங்களுடைய காதல்." என்று ஜாலியாக சிரித்து, அந்த காதல் தருணத்தை கண்முன் வார்த்தைகளில் கொண்டுவந்தார்.