Published:Updated:

‘வர்லாம் வர்லாம் வா’ என்ற பிறகும் வெளியாகாமல் காத்திருக்கும் படங்கள்!

விகடன் விமர்சனக்குழு
‘வர்லாம் வர்லாம் வா’ என்ற பிறகும் வெளியாகாமல் காத்திருக்கும் படங்கள்!
‘வர்லாம் வர்லாம் வா’ என்ற பிறகும் வெளியாகாமல் காத்திருக்கும் படங்கள்!

இப்போ ரிலீஸாகி விடும், அப்போ ரிலீஸாகி விடும் என ரொம்ப நாட்களாகவே நம்மை எதிர்பார்க்கவைத்து, இன்று வரை ரிலீஸாகாமல் இருக்கும் சில தமிழ் சினிமாக்கள் லிஸ்ட் இதோ...

ரெண்டாவது படம் :

'காதலுடன் கூடிய ஆன்மிக ஆக்‌ஷன் நிறைந்த கிராமிய அனிமேஷன் காவியம்' என ஆரம்பத்திலேயே அலப்பறையாக போஸ்டர் அடித்தார் இந்த படத்தின் இயக்குநர் சி.எஸ்.அமுதன். 'தமிழ் படம்' படத்திற்குப் பிறகு சி.எஸ்.அமுதன் இயக்கிய இந்த படத்தில் விமல், அரவிந்த் ஆகாஷ், ரிச்சர்டு, விஜயலட்சுமி, ரம்யா நம்பீசன் என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது. படத்தின் டிரெய்லரும் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. முதல் படத்தை போலவே இந்த படத்திலும் இயக்குநர் ஏதாவது பண்ணியிருப்பார் என ரிலீஸுக்காக காத்திருந்தவர்கள் நாலைந்து வருடங்களாகியும் இன்றும் காத்துக்கொண்டே இருக்கிறார்கள். கண்ணுல படத்தை காட்டுங்கப்பா...


மதகஜராஜா :

மூன்று ஆண்டிற்கு முன்பே வெளியாகியிருக்க வேண்டிய படம். இந்த படத்திற்கு பின்பு, தீயா வேலை செய்யணும் குமாரு, அரண்மனை 1, அரண்மனை 2, ஆம்பள என நான்கு படங்களை இயக்கிவிட்டு அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் சுந்தர்.சி. விஷாலுக்கும் இந்த படத்திற்கு ஹீரோவாக நடித்த 11 படங்கள் ரிலீஸாகிவிட்டது. ஆனால், இந்த படம் மட்டும் இன்னும் ரிலீசாகவே இல்லை. படத்தின் இரண்டு டிரெய்லர்களும், விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் மட்டும் சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகிவிட்டது. வா ராஜா வா வா...


இடம் பொருள் ஏவல் :

நீர்ப்பறவை படத்திற்கு பிறகு இயக்குநர் சீனுராமசாமி இயக்கிய படம். விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் இணைந்து நடித்திருக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து ரொம்ப நாட்களாகவே ரிலீஸுக்கு காத்திருக்கிறது. இந்த படத்திற்கு சீனுராமசாமி விஜய்சேதுபதியை வைத்து 'தர்மதுரை' படத்தை இயக்க, அந்த படமும் ரிலீஸாகி 100 நாட்களுக்கு மேல் கடந்துவிட்டது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்களும், படத்தின் டிரெய்லரும் சென்ற ஆண்டிலேயே வெளியாகிவிட்டது. 


வா டீல் :

தடையறத்தாக்க படத்தின் வெற்றிக்கு பிறகு அருண் விஜய் நடித்த மாஸ் கமர்ஷியல் படம். விஜய் சேதுபதியை வைத்து 'றெக்க' படத்தை இயக்கிய ரத்ன சிவா தான் இந்த படத்தின் இயக்குநர். அருண் விஜய். இந்த படத்தில் நடித்ததற்கு பிறகு என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்து, தெலுங்கு, கன்னடம் என ஒரு ரவுண்டு அடித்துவிட்டு, மீண்டும் தமிழில் 'குற்றம் 23' படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்துவிட்டார். ஆனால், இந்த படத்தின் ரிலீஸ் எப்போது என தெரியவில்லை. வா டீல் வா...


சிப்பாய் :

சிம்பு நடித்த 'சிலம்பாட்டம்' படத்திற்கு அடுத்தாக இயக்குநர் சரவணன் இயக்கிய படம். கௌதம் கார்த்திக், லட்சுமி மேனன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான இந்த படத்தின் டீசர் எப்போதோ வெளியாகிவிட்டது. தல, தளபதி ரெஃபரென்ஸ், மாஸ் சண்டைக்காட்சிகள் கொண்ட டீசர் வெளியான சமயங்களில் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு மிகுந்திருந்தது. இப்போதோ இந்த படத்தை பலரும் மறந்தேவிட்டார்கள்.


காதல் 2 கல்யாணம் :

நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா முதன்முதலாக நடித்த படம். இந்த படத்திற்கு பிறகு இவர் நடித்த புத்தகம், அமரகாவியம் என பல படங்கள் வெளியாகிவிட்டது. இந்த படத்தில் இவருக்கு ஹீரோயினாக நடித்தவர் திவ்யா ஸ்பந்தனா. இதன் மூலம், இந்த படம் எவ்வளவு காலமாக ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது என்பதை நீங்கள் அறியலாம். யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான ஆல்பம் நல்ல வரவேற்பை பெற்றது. 'நான் வெட்டப்போற ஆடு' பாடலை இன்றும் சிலர் ப்ளேலிஸ்டில் பார்க்கலாம்.


பஞ்சு மிட்டாய் :

சென்ட்ராயன், காதல் சுகுமார் நடித்த 'கலரு' என்ற குறும்படத்தின் பெரும்பட வெர்ஷன் தான் இந்த 'பஞ்சுமிட்டாய்'. மாகாபா ஆனந்த், சென்ட்ராயன், பாண்டியராஜன் ஆகியோரின் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்தார். இவரது இசையில் 'மை ஒய்ஃப் ரொம்ப பியூட்டிஃபுல்' பாடல் மட்டும் வெளியாகி பெரும் வரவேற்பைப்  பெற்றது. பஞ்சு மிட்டாய் சீக்கிரம் வரணும். டாட்.


உலா :

முரண் படத்தின் இயக்குநர் ராஜன் மாதவ் அடுத்து இயக்கிய படம். விதார்த், ராதிகா ஆப்தே, அஜ்மல், காயத்ரி, நிவாஷ் என பல பிரபல நடித்திருக்கும் இந்த படத்தின் 70 சதவிகித படப்பிடிப்பு 2014-ஆம் ஆண்டிலேயே நிறைவடைந்துவிட்டது. இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ ஆடிப்பாடி வெளியான 'ஏன்டா...' பாடலும் வைரல் ஹிட். உலா போகணும்னு காத்திருக்கோம்...

ரஜினி, கமல், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், நயன்தாரானு... 2017-ல் ஜெயிக்கப் போவது யார் படம்னு ஒரு பக்கம் எதிர்பார்ப்பு இருந்தாலும், இந்தப் படங்களும் வரணும் பாஸ்!

-ப.சூரியராஜ்