Published:Updated:

'இன்னொரு கல்யாணம்... நிச்சயம்!’ அமலாபால் பெர்சனல்

'இன்னொரு கல்யாணம்... நிச்சயம்!’ அமலாபால் பெர்சனல்
'இன்னொரு கல்யாணம்... நிச்சயம்!’ அமலாபால் பெர்சனல்

'இன்னொரு கல்யாணம்... நிச்சயம்!’ அமலாபால் பெர்சனல்

‘‘நிச்சயமா அது எனக்கு மிகப்பெரிய வருத்தம். அந்தக் கேரக்டருக்கு என்னை மனசுல வெச்சுதான் நிறைய டிஸ்கஸ் பண்ணி வடிவம் கொடுத்திருந்தாங்க. என்னை வெச்சு கொஞ்சம் ஷூட் பண்ணியிருந்தாங்க. பிறகு, நான் தந்த தேதிகள்ல அவங்களால் ஷூட் பண்ண முடியலை. அப்புறம் அவங்க `ஷூட் பண்ணணும்'னு கூப்பிடும்போது நான் நிறைய கமிட்மென்ட்ஸ்ல இருந்தேன். என்கிட்ட தேதிகள் இல்லை.

நான் வெற்றி மாறனின் மிகப்பெரிய ரசிகை. அவர் படத்தில் நடிக்க முடியலைங்கிறது வருத்தம்தான். இருந்தாலும் நான் பண்ணவேண்டிய கேரக்டர்ல ஐஸ்வர்யா நடிக்கிறாங்கனு கேள்விப்பட்டேன். அவங்களும் சரியான சாய்ஸ்தான். வெற்றி சார்கூட எனக்கு நல்ல ஒரு புரிதல் இருக்கு. அவருக்கும் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. வருத்தப்பட்டாங்க. ‘உங்க தப்பு இல்லைம்மா’னு சொன்னார். எனக்கு இன்னொரு படம் தர்றதா பிராமிஸ் பண்ணியிருக்கார்’’ -  ‘‘ `வடசென்னை’ படத்தில் நடிக்க முடியாதது வருத்தமாக இருந்ததா?’’ என்ற கேள்விக்குத்தான் இப்படிப் பதில் சொல்கிறார் அமலாபால். விவாகரத்து விவகாரம், சுச்சி லீக்ஸ்... என ஒரு பக்கம் செய்திகளில் பரபரப்பாகப் பேசப்பட்ட அமலாபால், இன்னொரு பக்கம் சினிமாவிலும் அதே பரபரப்புடன் வலம்வருகிறார். 

‘‘மறுபடியும் உங்க ‘விஐபி’ ஃபேமிலியில் சேர்ந்திருக்கீங்க. விஐபி-2 ஸ்பெஷல் என்ன?’’

‘‘விஐபி ஷாலினி கேரக்டர் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இதுல கூடுதலா சௌந்தர்யா மேடம் சேர்ந்திருக்காங்க. அவங்க வந்த பிறகு படம் இன்னும் பெருசாகியிருக்கு. டிரெஸ்ஸிங், லுக்னு அவங்க நிறைய கவனம் எடுத்துப்பாங்க. ஹோம்லி கேரக்டரா இருந்தாலும்கூட அதுல எந்த அளவுக்கு வித்தியாசத்தைக் கொண்டுவரலாம்னு மெனக்கெடுவாங்க. ‘அம்மா கணக்கு’ படத்தைத் தொடர்ந்து பெண் இயக்குநருடன் எனக்கு இது ரெண்டாவது படம். டைரக்டர் லேடியா இருக்கும்போது அந்த ஃபீல் நல்லா இருக்கு. நினைக்கிறதைப் பேசவும், நிறைய விஷயங்களைப் பகிர்ந்துக்கவும் முடியுது. அதேபோல முதல் பாகத்திலிருந்த எல்லா கேரக்டர்களுக்கும் நல்ல தொடர்ச்சி கிடைச்சிருக்கு. ஆனால், சரண்யா மேடத்தின் கேரக்டர் என்னனு மட்டும் கேட்டுடாதீங்க. அது சஸ்பென்ஸ். நிச்சயமா முதல் பாகத்தைவிட இது இன்னும் பெட்டரா இருக்கும்.’’

 ‘‘இதில் கஜோல் கூடுதலா சேர்ந்திருக்காங்க. அவங்க கேரக்டர் எப்படி இருக்கும்?’’

‘‘அவங்களோட மூன்று நாள்தான் எனக்கு காம்பினேஷன் இருந்துச்சு. அவங்க பேட்டிகள்ல எப்படித் தன்னை வெளிக்காட்டிக்கிறாங்களோ, நேர்லயும் அப்படியே. பேசிக்கிட்டே இருப்பாங்க. அவங்களுக்குத் தமிழ் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. தனுஷ்தான் அவங்களுக்கு டயலாக் ப்ராம்ப்ட் பண்ணுவார். நல்லவிதமா நடிச்சுடணும்னு அவ்வளவு மெனக்கெடுவாங்க. நானே பயங்கர எனர்ஜி பெர்சன். ஆனா, கஜோல் மேம் என்னைவிட எக்ஸ்ட்ரா எனர்ஜி பெர்சன்.’’

‘‘விஐபி-2 படத்தின் படப்பிடிப்பை ரஜினி தொடங்கிவைக்க வந்தார். அவர்கூட பேசினீங்களா?’’

‘‘அவரைப் பார்க்கப்போறோம்கிற எக்ஸைட்மென்ட்தான் அதிகம். அவரைப் பார்த்ததும் பேச்சே வரலை. அவர் பின்னாடியே ஓடி ஓடிப்போய் நின்னுக்கிட்டேன். இன்னமும் அவர் கண்கள்ல அப்படி ஒரு இன்னொசன்ஸ் இருக்கு. அவரோடு பேசினேன்; போட்டோஸ் எடுத்துக்கிட்டேன். சந்தோஷமா இருந்துச்சு.’’

‘‘நீங்க என்ன பார்ட்-2 ஸ்பெஷலா? ‘திருட்டுப்பயலே-2’விலும் இருக்கீங்களே?’’

‘‘என் பிறந்த நாள் அன்னிக்கு வெளியூரில் இருக்கும்போது, டைரக்டர் சுசிகணேசன் சாருடன் வீடியோ சாட்லதான் இந்த ஸ்க்ரிப்டைக் கேட்டேன். கேட்டதுமே பிடிச்சிடுச்சு. இப்ப கரன்ட்ல நடக்கிற நிறைய விஷயங்களைக் கதையோடு அவ்வளவு அழகா இணைச்சு சொல்லியிருக்கார். இந்தக் கதை என் கேரக்டரைச் சுற்றித்தான் இருக்கும். அதனால் நடிக்க வாய்ப்புள்ள நிறைய காட்சிகள் இருக்கு.

‘நடிகர், நடிகைகள், ஸ்விட்ச் போட்டா நடிக்கிற மெஷின் கிடையாது’ங்கிறதை சுசி சார் சரியா புரிஞ்சுவெச்சிருக்கார். நிறைய டைம்கொடுத்து விளக்கமா சொல்லிப் புரியவெச்சு, எங்க வசதிக்கேற்ப ஷூட் பண்றார். தவிர, இதுல லைவ் சவுண்ட் பண்ணியிருக்கோம். எனக்குத் தமிழ் இன்னும் அவ்வளவு தெளிவா பேச வரலை. அதனால கொஞ்சம் கஷ்டமாதான் இருந்துச்சு. மத்தபடி பிரமாதமான படம். பாபிசிம்ஹா, பிரசன்னானு நல்ல டீம். கிட்டத்தட்ட படம் முடிஞ்சிடுச்சு. ஒரு ஃபாரின் ஷெட்யூல் மட்டும் மீதி இருக்கு.’’

‘‘மலையாளத்தில் வந்த ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ பட தமிழ் ரீமேக்கில் அர்விந்த் சுவாமியுடன் நடிக்கிறீங்க. அதில் என்ன ஸ்பெஷல்?’’

‘‘சித்திக் சார், மலையாளத்தில் முக்கியமான டைரக்டர். தமிழ்லயும் நல்ல படங்கள் பண்ணியிருக்கார். அவருடன் இதுக்குமுன்னாடி மலையாளத்துல சேர்ந்து படம் பண்ண நிறைய வாய்ப்புகள் வந்தும் பல காரணங்களால் அது தள்ளிப்போயிட்டே இருந்துச்சு. அப்படித்தான் இந்தப் பட வாய்ப்பும் எனக்கு வந்துச்சு. ‘இந்தப் படம் பண்ணணுமா?’னு ஆரம்பத்துல யோசிச்சேன். ஆனால், ஸ்க்ரிப்ட் கேட்கும்போது, மலையாளத்துக்கும் தமிழுக்கும் நிறைய மாற்றங்கள் இருந்துச்சு. என் கேரக்டரை இளமையா மாத்தியிருந்தாங்க. தவிர, நான் சில மாற்றங்கள் வேணும்னு சொல்லியிருந்தேன். அதையும் ஏத்துக்கிட்டார்.

மலையாளத்தைவிட தமிழ்ல பெரிய ஹிட் ஆகும் ராசி, சித்திக் சாரின் படங்களுக்கு உண்டு. அந்த ராசி இந்தப் படத்துக்கும் அமையும். இதில் அர்விந்த் சுவாமி ஹீரோ. இதுக்கு முன் அவரை நான் நேர்ல பார்த்ததே இல்லை. அவரின் பிசினஸ் இண்டஸ்ட்ரி உள்பட நிறைய நல்ல விஷயங்கள் பற்றிச் சொல்வார்.

இதுல நடிக்கிற இன்னொரு விஐபி, பேபி நைனிகா. இப்பக் கொஞ்சம் வளந்திருக்காங்க. நான் அவங்களை ‘எல்சா’னுதான் கூப்பிடுவேன். அது ஒரு கார்ட்டூன் கேரக்டர். நான் மேக்கப் போடுறதை வெச்சகண் வாங்காம பார்த்துட்டிருக்கிறது  அவுங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். அவ்வளவு க்யூட்டா பெர்ஃபார்ம் பண்றாங்க.’’

‘‘தமிழ்ல வேறென்ன கமிட்மென்ட்ஸ்?’’


‘‘ ‘மின்மினி’. விஷ்ணுவிஷால் ஹீரோ. தலைப்பு மாதிரி பொயட்டிக்கான படம். குழந்தைகளுக்கு நடக்கிற பிரச்னைகளைப் பற்றி பேசும் படம். கிட்டத்தட்ட ஒரு சைக்கோ த்ரில்லர்னு சொல்லலாம். இதில் நான் டீச்சரா நடிக்கிறேன். இது தவிர, தமிழ்ல ஹீரோயினை மையப்படுத்தின இன்னொரு படம் பண்றேன். அதில் எனக்கு ஃபைட்கூட இருக்கு. அதுக்காக சைனாவுல இருந்து ஸ்பெஷலா தற்காப்புக் கலைகள் சொல்லித்தர ஒரு மாஸ்டர் வர்றார். இதேபோல மலையாளத்திலும் ஹீரோயினை மையப்படுத்தின ஒரு படம். அதில் ஒரு ஃபாரன்சிக் டாக்டரா வர்றேன். அந்தக் கேரக்டர் இந்திய சினிமாவில் ரொம்பப் புதுசு.’’

‘‘100 கோடி கலெக்‌ஷனைத் தொட்ட ‘புலி முருகன்’, ஃபஹத், நிவின்பாலி, துல்கர்னு இளைய நடிகர்கள் நேரடித் தமிழப் படங்கள்ல நடிக்கிறது, நீங்க உள்பட நிறைய ஹீரோயின்ஸைத் தந்தது... இப்படி மலையாள சினிமாவுக்கு நிறைய பெருமைகள். ஆனால், சமீபகாலமா அதன் இயல்பைத் தொலைச்சுட்டு வர்ற மாதிரி தெரியுதே?’’

‘‘அங்கே நிறைய திறமையாளர்கள், நிறைய ஸ்க்ரிப்ட்ஸ் இருக்கு. அவங்களோட ஒரே பிரச்னை, பட்ஜெட் குறைபாடுதான். அதை ‘புலிமுருகன்’ போக்கியிருக்கு. இதனால் இப்ப மலையாள மார்க்கெட் பெருசாகியிருக்கு. ஆமாம், ‘புலிமுருகன்’, மலையாள இண்டஸ்ட்ரிக்குப் பெரிய நம்பிக்கையைத் தந்த சினிமா. இயல்பான படங்கள் குறைஞ்சிடுச்சுங்கிறதை நான் ஒப்புக்க மாட்டேன். அங்கே நிறைய புது முயற்சிகள் நடக்குது. இப்பகூட ‘அச்சயன்ஸ்’னு ஒரு படம். ஜெயராம் சார் ஓர் இடம், நான் ஓர் இடம்னு மொத்தம் ஐந்து கேரக்டர்கள், வெவ்வேற இடங்கள்ல நடக்கிற கதைனு போகும் நல்ல ஸ்க்ரிப்ட். பெரிய பட்ஜெட்ல ‘மகாபாரதம்’ பண்றாங்க. மலையாள சினிமா வளர்ச்சிப் பாதையில்தான் போயிட்டிருக்கு. அங்கே இருந்து வந்த நான், தென்னிந்தியாவின் எல்லா மொழிகள்லயும் நடிச்சிட்டேன்னு சொல்றது பெருமையா இருக்கு.’’

‘‘சினிமா ஓ.கே., பெர்சனல் லைஃப் எப்படிப் போயிட்டிருக்கு?’’


‘‘உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமா இருக்கேன். கடவுளின் அருளால் நிறைய நல்ல படங்கள்ல கமிட் ஆகியிருக்கேன். ‘அமலா இந்தப் படத்துக்குத் தேவை’னு நினைச்சு வரும்போது, ‘ஏற்கெனவே பண்ணின படங்களின் மூலம் நம்மை நிரூபிச்சிருக்கோம்’னு உணர்றேன். ஆமாம், கேரக்டர், லுக்ஸ்னு ஒவ்வொரு படமும் எக்ஸ்ட்ரா எனர்ஜி, எக்ஸைட்மென்ட் தருது. கனவுகள் ஒவ்வொண்ணா நனவாகிட்டு வர்ற வகையில் அமலா சந்தோஷமா இருக்கா.’’

‘‘ `சினிமா மூலமா அமைந்த பெர்சனல் வாழ்க்கையை, பாசிட்டிவான திசையை நோக்கி எடுத்துட்டுப் போகலையோ'ங்கிற வருத்தம் இருக்கா?’’


‘‘சத்தியமா இல்லை. வாழ்க்கையில் இந்த மாதிரி நிறைய விஷயங்கள் நடக்கும். ‘நான் சினிமாவுக்கு வருவேன். இவ்வளவு பெரிய நடிகையாவேன். அதன் மூலமான எனக்கு ஒரு லைஃப் வரும்...’னு நான் நினைச்சுபார்த்ததே இல்லை. எல்லாமே எதிர்பாராமல் அமைஞ்சதுதான். நம் வாழ்க்கையில் எல்லாமே சந்தோஷமா அமையாது. சில விஷயங்கள் சந்தோஷத்தையும் சில விஷயங்கள் சங்கடத்தையும் தரும். வாழ்க்கைங்கிறது ஒரு பயணம். சில சமயங்களில் அதில் எல்லாரும் இருப்பாங்க. சமயங்களில் நாம தனியா பயணப்படவேண்டி இருக்கும். இப்படி எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு அப்படியே போயிட்டே இருக்கணும். நான் வாழ்க்கையை இப்படித்தான் பார்க்கிறேன்.’’

‘‘அமலா லைஃப்ல, அடுத்து ஒரு காதல், கல்யாணம் இருக்க வாய்ப்பு இருக்கா? இருக்கணும்னு நாங்க எதிர்பார்க்கிறோம்.’’

‘‘ஏங்க அப்படி கேட்டீங்க... நான் என்ன சன்னியாசம் வாங்கிட்டு இமயமலைக்கா போகப்போறேன்? கவலைப்படாதீங்க, கண்டிப்பா இருக்கும். அப்ப திருமண இன்விடேசனோட உங்களை நிச்சயம் சந்திப்பேன்.”

அதான் அமலா பால்!
 

அடுத்த கட்டுரைக்கு