Published:Updated:

`` `சைக்கோ' படத்துக்கு ஒளிப்பதிவாளர் நான் இல்லை... மிஷ்கின் புரிந்துகொள்வார்" - பி.சி.ஶ்ரீராம்

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள `சைக்கோ' படத்தின் ஒளிப்பதிவாளர் மாற்றம்!

`துப்பறிவாளன்' படத்துக்கு அடுத்து இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் படம், `சைக்கோ'. இதற்கிடையில், `சவரக்கத்தி', `சூப்பர் டீலக்ஸ்', `சுட்டுப்பிடிக்க உத்தரவு' உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், இயக்குநர் மிஷ்கின். அவரது நடிப்பு அனைவராலும் பேசப்பட்டாலும் அவருடைய இயக்கத்தில் வெளியாகும் `சைக்கோ' பற்றி மட்டும் எந்த அப்டேட்டும் இல்லாமலே இருந்தது. இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ், இயக்குநர் ராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

P. C. Sreeram Tweet
P. C. Sreeram Tweet

மிஷ்கின் இயக்கம், பி.சி.ஶ்ரீராம் ஒளிப்பதிவு, இளையராஜா இசை என அசத்தல் காம்போவுடன் உருவாகுகிறது `சைக்கோ'. `நந்தலாலா', ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்துக்குப் பிறகு, இந்தப் படத்தில் மிஷ்கினும் இளையராஜாவும் இணைகின்றனர். சைக்காலஜிக்கல் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம் பதிவிட்ட ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், "வாழ்த்துகள் தன்வீர். படத்தின் டி.ஐ பணிகள் நல்லபடியாக நடைபெற்று வருகிறது என்பதை நான் அறிவேன். தேவைப்படும் பட்சத்தில் மிஷ்கின் உன்னை வழிநடத்துவார். அலர்ஜி காரணமாக இந்தப் படத்தில் என்னால் பணியாற்ற முடியாதது மிஷ்கினுக்குப் புரியும். இந்தப் படத்தின் 99% சதவிகித ஒளிப்பதிவு பணிகளை நீதான் செய்திருக்கிறாய். ஆகையால், ஒளிப்பதிவாளர் என்ற இடத்தில் உன் பெயர்தான் வர வேண்டும். இயக்குநர் மிஷ்கின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் படக்குழுவில் இருக்கும் அனைவரும் இதை நல்லிணக்கத்தோடு ஏற்பார்கள். உண்மை மட்டுமே மேலோங்கும். காஷ்மீர் உன்னை நினைத்து பெருமைப்படும்" என்று குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, "தன்வீர், உன்னுடைய உழைப்பிற்கு அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்க வேண்டும். அதை உறுதிப்படுத்தவே நான் ட்வீட் செய்துள்ளேன். இந்த மாதிரியான சிரமமான தருணங்களிலும் காஷ்மீர் உன்னை நினைத்து பெருமைப்படும்" என்று மற்றொரு ட்வீட்டை பதிவிட்டிருந்தார். இது குறித்து விசாரிக்க ஒளிப்பதிவாளர் தன்வீரை தொடர்புகொண்டபோது அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் காஷ்மீரில் இருப்பதாகத் தெரிகிறது.

P. C. Sreeram Tweet
P. C. Sreeram Tweet

ஆகையால், அந்தப் படக்குழுவில் இருப்பவர்களிடம் விசாரித்தபோது, பி.சி ஶ்ரீராமுக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் முழுப் படமும் அவரால் பணியாற்ற முடியாமல் போனது. அதனால், அவருடைய உதவி ஒளிப்பதிவாளர் தன்வீரை பார்த்துக்கொள்ளச் சொல்லியிருக்கிறார். `சைக்கோ' படத்துடைய மொத்த ஷூட்டிங்கில் பத்து நாள்கள் மட்டுமே பி.சி.ஶ்ரீராம் இருந்திருக்கிறார். மற்ற ஐம்பதுக்கு மேற்பட்ட நாள்கள் தன்வீர்தான் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அந்தக் காரணத்தினால்தான் தன்வீர் பெயரையே டைட்டில் கார்டில் போடச் சொல்லி ட்வீட் செய்திருக்கிறார், ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுவாகவே, இது போன்ற க்ரெடிட்ஸ் விஷயங்களில் மிகவும் கவனமாக இருப்பாராம் பி.சி.ஶ்ரீராம். இதே போன்று 'ஐ' படத்தில் 70% பி.சி.ஶ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார். மீதமுள்ள 30% அவருடைய உதவி ஒளிப்பதிவாளர் விவேகானந்த் என்பவர்தான் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். அதனால், அந்தப் பட டைட்டில் கார்டில் 'ஒளிப்பதிவு - பி.சிஶ்ரீராம், துணை ஒளிப்பதிவு - விவேகானந்த்' என்று வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தன்வீர் மிர்
தன்வீர் மிர்

யார் இந்த தன்வீர்?

இவருடைய முழுப் பெயர் தன்வீர் மிர். காஷ்மீரிலிருந்து வந்து எல்.வி.பிரசாத் இன்ஸ்டிட்யூட்டில் ஒளிப்பதிவு படித்து முடித்துவிட்டு, பி.சி.ஶ்ரீராமுடன் 'ஐ', 'ஓ காதல் கண்மணி', 'PAD MAN' உள்ளிட்ட ஏழு படங்களில் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.

இந்தப் படத்தின் அறிவிப்பு வருவதற்கு முன்பே மிஷ்கின் - இளையராஜா - பி.சி.ஶ்ரீராம் என்ற பெயர்கள் மட்டும்தான் வந்தது. அதன் பிறகுதான், படத்தின் பெயர், நடிகர்கள் பற்றிய அறிவிப்பு வெளியானது. பி.சி.ஶ்ரீராம் ட்வீட் செய்திருந்தாலும் தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னமும் வரவில்லை.

Vikatan

ஒளிப்பதிவு என்ற இடத்தில் பி.சி.ஶ்ரீராம் பெயருக்கு பதிலாக தன்வீர் பெயர் வந்தால் படத்திற்கான மார்கெட்டிங்கில் சிக்கல் வருமோ எனத் தயாரிப்பு நிறுவனம் யோசிப்பதாக தெரிகிறது. படம் வெளியானால்தான் டைட்டில் கார்டில் யார் பெயர் வருகிறது என்பது தெரியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு