Published:Updated:

``கொடைக்கானல் காடு, மிட்நைட் ஷூட்... கீர்த்தி சுரேஷை சுற்றி விஷத் தேனீ!" - `பெண்குயின்' அனுபவம்

கீர்த்தி சுரேஷ் - கார்த்திக் பழனி
கீர்த்தி சுரேஷ் - கார்த்திக் பழனி

`பெண்குயின்' படத்தின் ஒளிப்பதிவுக்காக மிகவும் பாராட்டப்பட்ட கார்த்திக் பழனி, தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

கீர்த்தி சுரேஷ் திரைக்கு அறிமுகமான `கீதாஞ்சலி’யில நான் அசோசியேட் கேமராமேன். கீர்த்தி சுரேஷ், நான் ஒளிப்பதிவாளரா அறிமுகமாகிற படத்துக்கு ஹீரோயின். என்னவொரு தொடர்பு பாருங்க. ரொம்ப வருஷம் கழிச்சு, `பெண்குயின்’ ஸ்பாட்ல அவங்கள சந்திச்சதும், `கார்த்திக், நாம இதுக்கு முன்னாடியே பார்த்திருக்கோம்னு நினைக்கேன்’னாங்க. குபுக்னு சிரிச்சுட்டேன். அந்த இடத்துல கொஞ்ச நேரம், `கீதாஞ்சலி’ ஃப்ளாஷ்பேக் ஓடுச்சு" - கடகடவெனப் பேசுகிறார் கார்த்திக் பழனி. ஓ.டி.டி-யில் வெளியான `பெண்குயி’னின் ஒளிப்பதிவாளர்தான் கார்த்திக் பழனி.

``சினிமா தொடர்பு, அப்பா வழியாதான் எனக்கு வந்தது. மெஸ் கலாசாரம் தொடங்குறதுக்கு முன்னாடில்லாம் சினிமா ஷூட்டிங்னா கூடவே `குக்’கையும் கூட்டிட்டுப் போயிட்டிருந்தாங்க. அப்படி `கவிதாலயா’, `மெட்ராஸ் டாக்கிஸ்’ கம்பெனிகளின் ஷூட்டிங்குகளில் என் அப்பா சமையல்காரராக இருந்தார். சில நேரம், என்னையும் ஸ்பாட்டுக்கு கூட்டிட்டுப் போவார். `நேருக்கு நேர்’, `முத்து’ ஷூட்டிங்கைலாம் அப்பாகூட போய் வேடிக்கை பார்த்திருக்கேன்.

அப்பா ரிட்டையர் ஆனதும், இந்தத் தொடர்பு விடுபட்ட மாதிரி தெரிஞ்சது. ஆனா, கொஞ்ச காலம்தான். பச்சையப்பா காலேஜ்ல சேர்ந்து கல்ச்சுரல் செகரட்டரியா ஆனதும், நடிப்பும் நாடகமும் பழையபடி என் வாழ்க்கையில ஒட்டிக்கிடுச்சு. அப்படியே ஃபிலிம் இன்ஸ்ட்யூட்ல சினிமாட்டோகிராஃபி சேர்ந்தேன். முடிச்சதும் ஒளிப்பதிவாளர் திரு சார்கிட்ட சேர்ந்தேன். இப்படித்தான் சினிமா பயணம் ஆரம்பமாச்சு.

Keerthi Suresh - Karthik Pazhani
Keerthi Suresh - Karthik Pazhani

மலையாளம், தெலுங்குப் படங்கள், தமிழ்ல `பேட்ட' உள்ளிட்ட சில படங்கள்ல வொர்க் பண்ணியிருந்தாலும், ஒளிப்பதிவாளரா முதல் படம் `பெண்குயின்’தான்.

மொத்தம் 35 நாள் ஷூட்டிங். `கீதாஞ்சலி'யில நான் பார்த்த கீர்த்தி வேற. `பெண்குயின்'ல தேசிய விருது வாங்கிய நடிகையா பார்க்குறேன். நியூகம்மரா ஸ்பாட்ல அன்னைக்கு இருந்த அதே ஈடுபாடு, கோ ஆப்பரேஷனை அவங்ககிட்ட இந்தப் படத்துலயும் பார்த்தேன்.

கர்ப்பிணியா நடிச்சதால, உடல் ரீதியா நிறைய சிரமங்கள் அவங்களுக்கு இருந்திச்சு. அதை எதையும் ஒரு பொருட்டா எடுத்துக்காம நடிச்சாங்க. கதையின் லொக்கேஷன் மலைப்பிரதேசம். ஆனா, அந்த இடம்குறித்த அடையாளம் எதுவும் வேண்டாம்னு நினைச்சார் இயக்குநர். எனக்கும் அது சரின்னு பட்டுச்சு. அதேபோல த்ரில்லர் சப்ஜெக்ட்ங்கிறதால, `சட்’டுனு இடத்தைக் கண்டுபிடிச்சுடக் கூடாதுனு நினைச்சே ஷூட் பண்ணோம். நான் நினைச்ச மாதிரி ரிசல்ட்டும் வந்தது.

அடர்ந்த காட்டுக்குள் மகனைத் தேடி கீர்த்தி சுரேஷ் ஓடுற காட்சி. படத்துல வர்ற நாயை ஓடவிட்டு, முதல்ல ஷூட் முடிச்சுட்டோம். பிறகு கீர்த்தி வரணும். நாங்க முன்னால போயிட்டோம். சரியா கீர்த்தி ரெடியாகி வரத் தொடங்க, தொலைவுல இருந்து தேனீக்கள் கூட்டம் வர ஆரம்பிச்சிடுச்சு. பால் தேனீனு சொல்வாங்க. நாலு குழவி சேர்ந்து கொட்டுச்சுனா விஷம்னு அங்க இருந்தவங்க சொல்லியிருந்தாங்க.

Keerthi Suresh
Keerthi Suresh

தூரத்துல இருந்தபடி கீர்த்தியைப் பார்த்து வராதீங்க, திரும்பிப் போயிடுங்கன்னு கத்தறோம். அவங்க காதுல அது விழலை. அவங்கபாட்டுக்கு வந்துட்டாங்க. தேனீக்கள் கூட்டம் அவங்கள சுத்தறதுக்கும் நாங்க ரெண்டு பெரிய பெட்ஷீட்டைத் தூக்கிட்டு ஓடறதுக்கும் சரியா இருந்தது. பெட்ஷீட்டால அவங்களைப் போர்த்திட்டு, அப்படியே அந்த இடத்துல இருந்து அவங்களை பத்திரமா மீட்டு, பக்கத்துல இருந்த ஒரு காருக்குள் கூட்டிட்டுப் போனோம். அவங்க தனியா அந்தக் குழவிக் கூட்டத்துக்குள் சிக்கியிருந்தாங்கன்னா என்ன ஆகியிருக்கும்னு இப்ப நினைச்சாலும் பகீர்னு இருக்கு’’ என்கிறார் கார்த்திக் பழனி.

அடுத்த கட்டுரைக்கு