Published:Updated:

"சிம்பு - த்ரிஷா ஜோடி செட் ஆகாதுனு கெளதம்கிட்ட சொன்னாங்க. ஆனா...!?" - மனோஜ் பரமஹம்சா

'ஈரம்' தொடங்கி 'எனை நோக்கி பாயும் தோட்டா' வரை தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா.

"என் அப்பா U.V.பாபு தெலுங்குல நிறைய படங்கள் இயக்கியிருக்கார். ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல ஒளிப்பதிவுக்குப் படிச்சுட்டு, இயக்குநரானார். அதே இன்ஸ்டிட்யூட்ல என்னை ஒளிப்பதிவு படிக்க வைக்கணும்னு அவர் ஏற்கெனவே முடிவு பண்ணி வெச்சிருந்தார். அதனால எனக்கு வேற ஆப்ஷனே கொடுக்கல. நான் ஒளிப்பதிவாளர் ஆகணும்னு அப்பா முடிவு பண்ணிட்டு, அதுக்கான வழியையும் காட்டினார். அதுல நான் பெரிய லெவலுக்கு வரணும்னு வேலை செய்ய ஆரம்பிச்சேன்; செஞ்சுக்கிட்டிருக்கேன். நான் ஈஸியா உள்ளே வந்துட்டேன். ஆனா, வெளியே நிறையபேர் இதுக்காகக் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காங்க. அதனால, இந்த இடத்தின் மதிப்பு தெரியும். கிடைச்ச வாய்ப்பை சரியா பயன்படுத்திக்கணும்னு ஓடிக்கிட்டிருக்கேன்." என்று உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார், மனோஜ் பரமஹம்சா.

"யார்கிட்ட உதவி ஒளிப்பதிவாளரா வேலை செஞ்சீங்க?"

"சரவணன் சார்கிட்ட உதவி ஒளிப்பதிவாளரா வொர்க் பண்ணேன். அவர் வேலை செய்ற ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமா இருக்கும். அதனால, எல்லா ஜானர்லேயும் எப்படி வொர்க் பண்றதுனு கத்துக்க முடிஞ்சது. 2001 - 2007 வரை தமிழ், தெலுங்கு, மலையாளம்னு 15 படங்கள் அவர்கூட உதவி ஒளிப்பதிவாளரா இருந்தேன். இன்னைக்கு இருக்கிறவங்களுக்கு 15 படங்கள் உதவியாளரா இருக்கிற அளவுக்குப் பொறுமை இருக்கிறதில்லை. நான் உதவியாளரா வொர்க் பண்ண முதல் படம், `பம்மல் கே.சம்மந்தம்'. முதல் படத்திலேயே கமல் சார்கூட வொர்க் பண்ணது நல்ல அனுபவம். கேமராமேனா மட்டும் இருக்கக் கூடாது; ஒரு நல்ல டெக்னிஷீயனா இருக்கணும். அப்போதான் நீ சினிமாக்காரன்'னு அடிக்கடி சொல்வார். ஒரு படத்துல எந்த அசிஸ்டென்ட் நல்லா வொர்க் பண்றானோ, அவங்க பெயரை 'ஒளிப்பதிவு'ன்னு போட்டுட்டு, தன் பெயரை 'ஒளிப்பதிவு இயக்கம்'னு போட்டுக்குவார்."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"முதல் பட வாய்ப்பு எப்படி வந்தது?"

 Manoj Paramahamsa
Manoj Paramahamsa
Vikatan

"எனக்கு ரெண்டு நண்பர்கள். நான் சரவணன் சார்கிட்ட வொர்க் பண்ணிக்கிட்டு இருந்தப்போ, ஷங்கர் சார்கிட்ட இணை இயக்குநரா இருந்த அறிவழகன். கெளதம் மேனன் சார்கிட்ட இணை இயக்குநரா இருந்த மணிகண்டன். நாங்க மூணுபேரும் இன்ஸ்டிட்யூட்ல ஒண்ண படிச்சோம். இவங்க ரூம்லதான் நான் எப்போவும் இருப்பேன். உதவியாளர்களா நாங்க வொர்க் பண்ணிக்கிட்டு இருந்த சமயத்துல இருந்தே சினிமா பற்றி நிறைய விஷயங்களைப் பகிர்ந்திருக்கோம். அவங்களைப் பற்றி எனக்கும், என்னைப் பற்றி அவங்களுக்கும் நல்லா தெரியும். `வாரணம் ஆயிரம்' படம் பண்ணிட்டிருந்த கேப்ல, `சென்னையில் ஒரு மழைக்காலம்'னு ஒரு படத்தை ஆரம்பிக்கலாம்னு இருந்தார், கெளதம் மேனன். புது கேமராமேன் பண்ணா நல்லாயிருக்கும்னு யோசிச்சப்போ, மணிகண்டன் என்னை பரிந்துரை பண்ணி, எனக்கு அந்த வாய்ப்பு வந்தது. 40 நாள் ஷூட்டிங் பண்ணி அந்தப் படம் டிராப் ஆகிடுச்சு."

" `ஈரம்' படத்துக்குள்ள எப்படி வந்தீங்க?

" `சென்னையில் ஒரு மழைக்காலம்' டிராப்பான நேரத்துல அறிவழகன், ஷங்கர் சாருக்குக் கதை சொல்லணும். ஆனா, அதுக்கு முன்னாடி சும்மா டிரெய்லர் மாதிரி ஷூட் பண்ணலாம்னு சொன்னார். அந்தக் கதையில டிரெய்லர் ஷாட் கட் பண்றது மாதிரி இருக்கிற காட்சிகளை தனியே எழுதி வெச்சுட்டு, அதுக்கு ஒளிப்பதிவு பண்ண கூப்பிட்டார். என் நண்பன் முதல் படம் பண்ண கதை சொல்லப்போறான்னு, ஒரு நண்பனா அந்த டிரெய்லருக்கு வொர்க் பண்ணேன். ஷங்கர் சாருக்குக் கதை பிடிச்சு தயாரிக்க சம்மதிச்சுட்டார்னு அறிவழகன் சொன்னவுடன், எங்களுக்கு செம சந்தோஷம். 'கேமராமேனுக்கு அதிக ஸ்கோப் உள்ள கதை. அதனால, பெரிய கேமராமேன் பண்ணா நல்லாயிருக்கும். நீ ஷங்கர் சார்கிட்ட சொல்லு. அவரே அதுக்கு ஏற்பாடு பண்ணுவார்'னு சொன்னேன். ஆனா, 'டிரெய்லர் பண்ண கேமராமேன் இருந்தாதான் நல்லாயிருக்கும். ஏன்னா, இந்தக் கதையைப் புரிஞ்சு ஒரு டீமா செட்டாகிட்டீங்க. இந்த காம்பினேஷன்லேயே போயிடலாம்'னு சொல்லி என்னைக் கூட்டிக்கிட்டு வரச் சொல்லியிருக்கார், ஷங்கர் சார். இப்படித்தான் இந்தப் படத்துல கமிட் ஆனேன். ரிலீஸானபடி பார்த்தா, 'ஈரம்'தான் என் முதல் படம்."

" 'ஈரம்' படத்தின் ஒளிப்பதிவு எல்லோராலும் பேசப்பட்டது. அந்த அனுபவம் எப்படி இருந்தது?"

 Manoj Paramahamsa
Manoj Paramahamsa

"அறிவழகனும் நானும் இன்ஸ்டிட்யூட்ல என்ன படிச்சோமோ, அதை முறைப்படி இந்தப் படத்துல பயன்படுத்துனதுதான் இந்த வெற்றிக்குக் காரணம்னு நினைக்கிறேன். ஒவ்வொரு ஃப்ரேமும் எப்படி இருக்கணும்னு ஷூட்டிங் போறதுக்கு முன்னாடியே திட்டமிட்டுட்டோம். ஒட்டுமொத்தப் படமா நல்லாயிருக்குன்னு சொன்னா, அதுல எனக்கும் கொஞ்சம் கிரெடிட்ஸ் இருக்கு. ஆனா, விஷுவல் நல்லா வர அறிவழகன்தான் காரணம். இந்தக் காட்சிக்கு இந்த லுக் இருக்கணும், இந்த கலர் டோன் இருக்கணும்னு எழுதுனது அறிவழகன்தான். நான் இல்லைன்னாலும், அதை வேற யாராவது கொண்டு வந்திருப்பாங்க. இயக்குநர்கள்தான் விஷுவல் எப்படி இருக்கணும்னு உணர்ந்து எழுதணும். இங்கே பலரும் பெரிய கேமராமேன் பண்ணா, விஷுவல் நல்லா வந்திடும்னு நினைக்கிறாங்க. உண்மை அப்படியில்லை. உதாரணத்துக்கு, மணிரத்னம் சாருடைய எல்லாப் படங்களுக்கும் ஒரே கேமராமேன் கிடையாது. ஆனா, அவருடைய எல்லாப் படத்திலும் விஷுவல் நல்லாயிருக்கும். காரணம், அவர் எழுதுறதுதான். மணி சார் படங்கள்ல வொர்க் பண்ண பெரிய கேமராமேன் வேற படத்துல வொர்க் பண்ணும்போது, அந்த ரிசல்ட் இருக்காது. எல்லா இளம் இயக்குநர்களும் விஷுவலை ரசிக்க ஆரம்பிக்கணும். ப்ரீ-புரொடக்‌ஷனுக்கு அதிக நேரம் எடுத்துக்கணும். இதையெல்லாம் ஃபாலோ பண்ணாலே சூப்பரான அவுட்புட் கிடைக்கும்."

" `விண்ணைத்தாண்டி வருவாயா' உங்க கரியர்ல முக்கியமான படம். அந்த அனுபவம்?"

"ஜெஸ்ஸி கேரக்டர் கெளதம் மேனன் வீட்டுக்குப் பக்கத்துல இருந்த ஒரு கேரக்டர். அதைத்தான் பதிவு பண்ணணும்னு நினைச்சார். தெலுங்குல மகேஷ்பாபுவுக்குத்தான் இந்தக் கதையை முதல்ல சொன்னார். அவருக்குக் கதை பிடிச்சிருந்தது. ஆனா, ஆக்‌ஷன் கம்மியா இருக்குன்னு பண்ணல. பிறகு, தமிழ்ல பண்ணலாம்னு முடிவெடுத்துப் பண்ணதுதான், `விண்ணைத்தாண்டி வருவாயா'. த்ரிஷா கால்ஷீட் ஏற்கெனவே இருந்தது. விடிவி கணேஷ், சிம்பு இவங்ககூட கெளதம் சாருக்குப் பழக்கம். சிம்பு - த்ரிஷா ஜோடி செட்டாகாதுன்னு விமர்சனங்கள் வந்தது. அதை சவாலா எடுத்துக்கிட்டு, ரெண்டுபேரையும் நடிக்க வெச்சார். கெளதம்கிட்ட யாராவது முடியாதுன்னு சொன்னா, அதை சவாலா எடுத்துக்கிட்டு முடிச்சுக் காட்டுறது அவருக்குப் பிடிக்கும். தமிழ்ல இந்தக் கதையை எடுக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டு, நாக சைதன்யாவை வெச்சு தெலுங்குலேயும் பண்ணணும்னு சொன்னாங்க. அவருக்கு ஜோடியா சமந்தாவைத் தேர்ந்தெடுத்தோம். இந்த ஜோடி செம கெமிஸ்ட்ரியாகி, கல்யாணமே பண்ணிக்கிட்டாங்க. தமிழ்ல 70% முடிஞ்ச பிறகுதான் தெலுங்கு போர்ஷனை ஆரம்பிச்சோம். மீதமுள்ள போர்ஷனை ரெண்டு மொழியிலும் ஒரே நேரத்துல எடுத்தோம். அந்த சமயங்கள்ல சிம்பு நல்லா ஒத்துழைச்சார். `ஈரம்' வெளியாகி அடுத்த சில மாதங்களில் இந்தப் படமும் வெளியானது. முதல் ரெண்டு படமும் வெவ்வேற டோன்ல இருந்தது, எனக்குப் பாசிட்டிவா அமைஞ்சது."

"சினிமாவைத் தாண்டி கெளதம் மேனன்கிட்ட நீங்க ரசிச்ச விஷயம்?"

 Manoj Paramahamsa
Manoj Paramahamsa
Vikatan

"மியூசிக்ல அவருக்குப் பெரிய ஆர்வம். அடிக்கடி நாங்க சந்திப்போம். அவர் நண்பர்கள் நிறைய பேர் வருவாங்க. அப்போ ஒருத்தர் ஒரு டியூனை முணுமுணுக்க, மத்தவங்க அது என்ன பாடல்னு கண்டுபிடிக்கணும். இன்னைக்குவரை அவருக்கு எவ்ளோ பிரஷர் இருந்தாலும், இதை மிஸ் பண்ணமாட்டார். அப்படியொரு மியூசிக் சென்ஸ் அவருக்கு. அதனாலதான் அவருடைய படங்கள்ல பாடல்கள் ஹிட்டாகுது. `உங்க படத்துல நான் இல்லைனாலும், உங்க பாடல்கள்ல நான் இருக்கணும்'னு சொல்லியிருக்கேன். அவர் தயாரிச்ச மூணு பாடல்களுக்கும் நான்தான் ஒளிப்பதிவு. இசையை உருகி உருகி காதலிக்கிற ஆள் அவர்."

"கெளதம் மேனன்கூட பயணிச்ச நீங்க திடீர்னு ஷங்கர் இயக்கத்துல `நண்பன்' படத்துல கமிட்டானது எப்படி?"

" `ஈரம்' படத்துல டார்க் டோன் இருக்கும். அடுத்த படமான `விண்ணைத்தாண்டி வருவாயா' பிரைட் டோன். இந்தப் படத்தோட ஒளிப்பதிவைப் பார்த்துட்டுதான் `நண்பன்' வாய்ப்பு வந்தது. அப்போ அவர் `எந்திரன்' எடுத்துக்கிட்டிருந்தார். அந்த நேரத்துல ராணாவை வெச்சு கெளதம் ஒரு படம் பண்றதா இருந்தது. எனக்கு இவரை விட்டுட்டுப்போக மனசில்ல. `கெளதம் சாரோட அடுத்த படத்துல கமிட் ஆகியிருக்கேன். அதனால இப்போ வரமுடியல'ன்னு ஷங்கர் சார்கிட்ட சொல்லிட்டேன். `எந்திரன்' வெளியான பிறகு போன் பண்ணி, `இப்போ நீங்க ஃப்ரீயா'ன்னு ஷங்கர் சார் ஆபீஸ்ல இருந்து கேட்டாங்க. மூணு மாதம் கழிச்சும் வேற யாரையும் கமிட் பண்ணாம நம்மளைக் கேட்கிறாங்கன்னு கெளதம் சார்கிட்ட சொன்னேன். எதுவுமே யோசிக்காம ஓகே சொல்லிட்டார். அப்படித்தான் 'நண்பன்' படத்துல வொர்க் பண்ணேன். இத்தனை படம் பண்ணியிருந்தாலும், அவருக்கு ஒவ்வொரு படமும் முதல் படம் மாதிரிதான். 103 நாள் ஷூட்டிங்கிற்கு 250 நாள் லொகேஷன் பார்த்தோம். ப்ரீ-புரொடக்‌ஷன்ல ரொம்பத் தெளிவா இருப்பார், ஷங்கர் சார். அவரை மாதிரி சின்சியரான ஆளை நான் பார்த்ததில்லை. அதனாலதான், அவருக்கு இந்தளவுக்கு அங்கீகாரம் கிடைச்சிருக்கு."

"தமிழ்ல கிளாசிக் படங்களா பண்ணிட்டு, தெலுங்குல முழுக்க கமர்ஷியலா இறங்கக் காரணம் என்ன?"

 Manoj Paramahamsa
Manoj Paramahamsa
Vikatan

" `பூவரசம் பீப்பீ' படத்தை நான் தயாரிச்சேன். அது எல்லோருக்கும் பிடிச்சிருந்தது. ஆனா, ஸ்டார் வேல்யூ இல்லாததால, அதை எல்லாத் தரப்பு மக்களுக்குக் கொண்டுபோறது சிரமமா இருந்தது. அந்தப் படத்துல ஏற்பட்ட நஷ்டத்தை சரிசெய்யணும்னு யோசிச்சுக்கிட்டு இருக்கும்போது, தெலுங்குப்பட வாய்ப்பு வந்தது. அங்கே போனபிறகு, அவங்க என்னை விடல. அவங்க வழக்கமா பயன்படுத்துற விஷயங்களை நீக்கிட்டு, புது கலர் டோனைப் பயன்படுத்தினேன். அது எல்லோருக்கும் பிடிச்சிருந்தது. அப்படி நிறைய வாய்ப்புகள் வரத் தொடங்கியது. நானும் நிறைய கத்துக்க டோலிவுட் ரொம்ப உதவியா இருந்தது. அந்த ஊர் மக்கள் மாதிரி யாரும் சினிமாவைக் கொண்டாடமாட்டாங்க. ஒரு கட்டத்துல தமிழ்லதான் பண்ணணும், தெலுங்குலதான் பண்ணணும்ங்கிற எண்ணமே இல்லாம போயிடுச்சு."

" `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்துல வேறொரு ஒளிப்பதிவாளர்தான் ஒப்பந்தமானார். பிறகு நீங்க எப்படி வந்தீங்க?"

"ஜோமோன்தான் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர். அவர்தான் பல போர்ஷன்களுக்கு ஒளிப்பதிவு பண்ணார். சில காரணங்களால படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போச்சு. அந்தப் படத்தோட பாடல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். விஷூவல் எப்படி இருக்குன்னு பார்க்க கெளதம் சாருக்கு போன் பண்ணேன். `இன்னும் விஷூவல் எடுக்கல. நீ வந்து எடு'ன்னு சொல்லிட்டார். அப்புறம்தான் நான் எல்லாப் பாடலுக்கும், கொஞ்சம் காட்சிகளுக்கும் ஒளிப்பதிவு பண்ணிக் கொடுத்தேன். பிறகு மறுபடியும் ஷூட்டிங் தாமதமானதால, நான் வேற படத்துக்குப் போயிட்டேன். எஸ்.ஆர்.கதிர் க்ளைமாக்ஸ் காட்சிகளை எடுத்தார். படம் பார்த்தா, யார் எந்த போர்ஷனை எடுத்தாங்கனு தெரியாது. அந்தளவுக்குப் படம் நேர்த்தியா இருக்கு."

"ஒரு படத்தை பல ஒளிப்பதிவாளர்கள் கையாளும்போது, உங்களுக்குத் திருப்தியா இருக்குமா?"

 Manoj Paramahamsa with shankar
Manoj Paramahamsa with shankar

"வெளிப்படையா சொன்னா, யாரும் இதை விரும்பமாட்டாங்க. ஆனா, சூழல் அப்படியாக்கிடுச்சு. கெளதம் சாரை ரசிக்கிற நாங்க, அவர் கேட்கும்போது பண்றதுதான் நியாயம். நான் பண்ணும்போது ஜோமோன் ஷூட் பண்ண விஷுவல்களைப் பார்த்தேன். அதுக்குத் தகுந்த மாதிரி என்னைத் தயார் பண்ணிக்கிட்டேன். நான் என்ன பண்ணியிருக்கேன்னு பார்த்துட்டு, எஸ்.ஆர்.கதிர் ஃபாலோ பண்ணிக்கிட்டார். அதனால, படம் பார்க்கும்போது வித்தியாசம் தெரியாது. கெளதம் சாருக்கு இருக்கிற ஃபைனான்ஸ் பிரச்னையில, அவருக்குப் பண்ற சிறு உதவியாதான் நாங்க இதைப் பார்க்கிறோம்."

`எனை நோக்கி பாயும் தோட்டா' படத்திற்கு இந்தளவு எதிர்பார்ப்பு இருக்கிறதை எப்படிப் பார்க்கிறீங்க?

"என்ன நடந்தாலும் ரசிகர்கள் இந்தப் படத்தை மறக்காம, எப்போ வரும்னு காத்திருக்கிறதே சினிமாவின் வெற்றியாதான் பார்க்கிறேன். பத்து வருடங்களுக்கு முன்னாடி இந்த மாதிரி நடந்திருக்க வாய்ப்பில்லை. இப்போ சோஷியல் மீடியா வலுவா இருக்கு. டீஸர், டிரெய்லர்னு என்ன வெளியானது, அதோட ரெஸ்பான்ஸ் என்னன்னு நம்மால் உடனடியா தெரிஞ்சுக்க முடியுது. சினிமா எடுக்கிறது ஈஸி கிடையாது. அது எவ்ளோ சிரமம்னு நம்மளால சொல்லிப் புரியவைக்கவும் முடியாது. நானும் படம் பழசாகிடுமோன்னு பயந்தேன். ஆனா, இல்லை. இந்தப் படம் எப்போ ரிலீஸானலும் தனுஷ் ரசிகர்களுக்கும், கெளதம் சார் ரசிகர்களுக்கும் ரொம்பப் பிடிக்கும்."

இப்போ என்னென்ன படங்கள் பண்ணிக்கிட்டு இருக்கீங்க?"

"பிரபாஸுடைய அடுத்த படத்துல வொர்க் பண்றேன். 20 நாள்தான் ஷூட்டிங் முடிஞ்சிருக்கு. 1970-களில் இத்தாலியில் நடக்கிற காதல் கதை இது. தமிழ்ல விஜய் ஆண்டனியோட 'காக்கி' படத்துல வொர்க் பண்றேன். 'துருவ நட்சத்திரம்', 'சில்லுக்கருப்பட்டி'ங்கிற ஆந்தாலஜி படத்துல ஒரு கதைக்கு நான் ஒளிப்பதிவு பண்ணியிருக்கேன். 'பூவரசம் பீப்பீ' படத்துக்குப் பிறகு ஹலிதா ஷமீம் இயக்கத்துல 'மின்மினி'ங்கிற படத்தைத் தயாரிச்சேன். சின்ன பசங்களை வெச்சுப் பாதி படத்தை எடுத்து முடிச்சுட்டோம். அவங்க வளர்ந்த பிறகு, அதே பசங்களை வெச்சு மிச்சப் படத்தை எடுத்து முடிக்கலாம்னு திட்டம். அடுத்த வருடம் அந்தப் படத்தை முடிச்சிடுவோம். தவிர, 'ஆட்டோ சங்கர்' வெப் சீரிஸுக்குப் பிறகு, 'கிடாரி' பிரசாத் முருகேசன், இயக்குநர் பிரம்மாகூட ரெண்டு வெப்சீரிஸுக்கான பேச்சு வார்த்தை நடந்துக்கிட்டிருக்கு. கூடவே, எம்.எஸ்.சுப்புலட்சுமி கதையைப் படமா தயாரிக்கலாம்னு ஒரு ஐடியா வெச்சிருக்கேன்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு