சினிமா
Published:Updated:

“இனி தென்னிந்திய சினிமாதான்!”

ஆர்.மதி
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்.மதி

‘`தமிழில் படங்கள் பண்ணணும்னு எனக்கும் ஆசைதான். ஆனா, இந்தி, தெலுங்கில் ஏற்கெனவே கமிட்மென்ட்கள் நிறைய இருக்கிறதால் அங்கே அடுத்தடுத்து ஒர்க் பண்ணிட்டிருக்கேன்.

தெலுங்குப் படவுலகில் தமிழ் சினிமாவின் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு. தமிழில் கார்த்தியின் ‘பையா’, ‘நான் மகான் அல்ல’, உதயநிதியின் ‘மனிதன்’ உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ஆர்.மதி. இப்போது தெலுங்கின் டாப் ஹீரோக்களுக்குப் பிடித்த ஒளிப்பதிவாளர் வரிசையில் கவனம் ஈர்க்கிறார். இந்தியாவின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் படமான ராணாவின் ‘தி காஸி அட்டாக்’, அனுஷ்காவின் ‘பாகமதி’, பிரபாஸின் ‘சாஹோ’வைத் தொடர்ந்து மகேஷ்பாபு, கீர்த்திசுரேஷ் நடிக்கும் ‘சர்க்காரு வாரி பட்டா’வுக்கும் ஒளிப்பதிவு அவர்தான்.

“இனி தென்னிந்திய சினிமாதான்!”

`` ‘மனிதன்’ படத்துக்குப் பிறகு இந்தி, தெலுங்குன்னு கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டீங்களே..?’’

‘`தமிழில் படங்கள் பண்ணணும்னு எனக்கும் ஆசைதான். ஆனா, இந்தி, தெலுங்கில் ஏற்கெனவே கமிட்மென்ட்கள் நிறைய இருக்கிறதால் அங்கே அடுத்தடுத்து ஒர்க் பண்ணிட்டிருக்கேன். நெல்சனோட ‘டாக்டர்’ படத்துக்கு என்னை ஒளிப்பதிவு பண்ணக் கேட்டாங்க. அப்ப பிரபாஸ் சார் படம் போயிட்டிருந்ததால, அதையும் பண்ண முடியலை. ஹைதராபாத், மும்பைன்னு சுத்தினாலும், இன்னமும் என் வீடு சென்னையிலதான் இருக்கு. படப்பிடிப்பு இல்லேனா, இங்கே வந்துடுவேன். மகேஷ்பாபுவோட படம் ‘சர்க்காரு வாரி பட்டா’ படப்பிடிப்பை முடிச்சிட்டு அடுத்து, ரவிதேஜா படம் இருக்கு. ஆனாலும் இந்த வருஷக்கடைசியில தமிழில் ஒரு படம் பண்ணுவேன்னு நினைக்கறேன்.’’

“இனி தென்னிந்திய சினிமாதான்!”

`` ‘ஸ்ரீமந்துடு’வுக்குப் பிறகு மீண்டும் மகேஷ்பாபுவோடு ஒர்க் பண்றீங்கபோல?’’

“ஆமா. சந்தோஷமா இருக்கு. மகேஷ் சாரோட ‘மகரிஷி’, ‘சரிலேரு நீக்கெவரு’ படங்களுக்கு என்னைக் கேட்டாங்க. அப்ப, நான் இந்தியில் படம் பண்ணிட்டிருந்ததால, என்னால பண்ண முடியாமப்போச்சு. ஒரு இடைவெளிக்குப் பிறகு இப்ப அவரோட ஒர்க் பண்றேன். இந்தப் படத்தின் ரிலீஸ் மே மாசம்னால, வேகவேகமா ஒர்க் போயிட்டிருக்கு. மகேஷ் சார் ரொம்ப சின்ஸியரான ஆர்ட்டிஸ்ட். எவ்ளோ டேக் போனாலும் பர்ஃபெக்‌ஷன் வரும் வரை டேக் போறது பத்திக் கவலைப்படமாட்டார். உழைக்கறதுக்கு யோசிக்க மாட்டார்.

இன்னொரு விஷயம் அவர் கேமராமேன் ஃப்ரெண்ட்லியானவர். சீன்ல என்ன லைட் வைக்கறோம், என்ன மாதிரி எடுக்கப் போறோனும் முன்கூட்டியே கேட்டுத் தெரிஞ்சு, அதுக்கேத்த மாதிரி திட்டமிடுவார். செட்ல என்னை மட்டுமல்ல, எல்லாரையுமே ‘சார்’னுதான் கூப்பிடுவார். என்கிட்ட தமிழில் நல்லா பேசுவார். கொரோனா நேரத்தில்தான் துபாய், ஸ்பெயின்னு படப்பிடிப்புக்குப் போனோம். எங்க எல்லாரையும் மாஸ்க் போடச் சொல்வதோடு, அக்கறையாகவும் பார்த்துக்கிட்டார்.’’

``அதைப்போல, ‘மிர்ச்சி’க்குப் பிறகு ‘சாஹோ’வில் பிரபாஸ்கூட படம் பண்ணியிருந்தீங்க?’’

‘`ஆமாங்க. பிரபாஸ் சார் என்மீது அன்பா இருப்பார். ‘சாஹோ’ல அவரோடு ஒர்க் பண்ணினது மறக்க முடியாத அனுபவம். யார்கிட்டேயாவது என்னை அவர் அறிமுகம் செய்து வைக்கறதா இருந்தா, ‘இவர் என் ஃபேமிலியில ஒருத்தர்’னு சொல்லி அறிமுகம் செய்து வைப்பார். ‘பாகுபலி’க்குப் பிறகு உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர்கள் கிடைச்சதால, எல்லாருக்குமான படங்களா பண்ண ஆரம்பிச்சிட்டார். ஆக்‌ஷன் சீக்குவென்ஸ்ல எல்லாம் பக்காவா செட் ஆன பிறகே அவர் ஷாட்டுக்கு வருவார். ‘சாஹோ’வை 350 கோடி செலவு செய்து எடுத்திருப்பாங்க. அந்தப் படம் அந்த லெவலுக்கு உயர பிரபாஸ் சார் கொடுத்த எனர்ஜிதான் காரணம். ஒரு தென்னிந்தியப் படம், அவ்ளோ பெரிய பட்ஜெட்ல தயாரிச்சா கூட, ரிட்டர்ன் எடுக்க முடியும்னு தைரியமா நிரூபிச்சவர். எனக்குமே இந்தப் படம் பண்ணின பிறகு ஹாலிவுட் படம் எதுல வேணாலும் ஒர்க் பண்ணிடமுடியும்னு தைரியம் வந்திருக்கு.’’

“இனி தென்னிந்திய சினிமாதான்!”

``இந்தி, தெலுங்குல முன்னாடி நம் நடிகர்கள், டெக்னீஷியன்களுக்குத்தான் டிமாண்ட் இருந்தது. இப்ப ஷங்கர், லிங்குசாமின்னு பெரிய இயக்குநர்கள்கூட அங்கே உள்ள ஹீரோக்களை இயக்க ஆரம்பிச்சிட்டாங்களே..?’’

‘`இது ஆரோக்கியமான விஷயம்தான். ஷங்கர், லிங்குசாமி, வெங்கட்பிரபுன்னு இயக்குநர்கள் தெலுங்கிற்கு வந்து படங்கள் பண்றது பெரிய சர்ப்ரைஸா இருக்கு. ‘பாகுபலி’ படம்தான் இதுக்கெல்லாம் காரணம். அது ஒரு பேன் இந்தியா படம். நாம சரியா படம் பண்ணினா, அது எங்கே வேணாலும் ஓடும், வசூலைக் குவிக்கும்னு ஆகிடுச்சு. அதுவும் ஓ.டி.டி கலாசாரம் வந்த பிறகு எல்லாரும் எல்லா மொழிப் படங்களையும் பார்த்து ரசிக்க ஆரம்பிச்சிட்டோம். மொழி ஒரு பிரச்னையா இல்ல. அதனாலதான் சூர்யா, கார்த்தின்னு இங்க உள்ள ஹீரோக்கள் படமும், இங்கே வெளியாகுற நாளில்தான் மத்த மொழிகளிலும் வெளியாகுது. பிலிம் மேக்கிங்கும் ரகசியமா இருக்கணும் என்பதற்காகவே இங்க உள்ள படங்கள் ஹைதராபாத்திலும், அங்கே உள்ள படங்கள் நம்ம ஊர்லேயும் படப்பிடிப்பு நடத்த ஆரம்பிச்சிட்டாங்க. இன்னும் அஞ்சு வருஷத்துல, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்னு எந்த மொழி ஹீரோ நடிச்சாலும் அது தென்னிந்தியப் படமாகத்தான் அடையாளம் காணப்படும். அஞ்சு மாநிலத்திலும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும். ரஜினி, கமல், விஜய்னு பலரும் பண்ற படங்கள் பேன் இந்தியா படமாகத்தான் இனி இருக்கும். இதையெல்லாம் புரிஞ்சுதான் லிங்குசாமி, ஷங்கர்னு அங்கேயும் படங்கள் பண்ணிட்டிருக்காங்க.’’

``நீங்க, இயக்குநர் சுசீந்திரன், கலை இயக்குநர் ராஜீவன்னு மூணு பேரு இணைந்து படத் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கப் போறதா சொன்னீங்களே?’’

‘`மூணு பேரும் நல்ல புராஜெக்ட்டா ஒண்ணு பண்ணலாம்னு பார்த்தோம். அப்புறம் நான் தெலுங்கில் பிஸியாகிட்டேன். அதுபோல ராஜீவனும் சுசீந்திரனும் பிஸியாகிட்டாங்க. ஆனாலும் மூணு பேரும் பேசிட்டுதான் இருக்கோம். இந்த வருஷக் கடைசியில் வேணா, படம் தயாரிக்கற வாய்ப்பு அமையலாம். வேற எதுவும் இன்னும் திட்டமிடல. ஆனா நிச்சயம் ஒரு பெரிய பேன் இந்தியா படமாகத்தான் இருக்கும்.’’