Published:Updated:

“ ‘பொன்னியின் செல்வன்’ உங்களை ஏமாற்றாது!”

விக்ரம், கார்த்தி
பிரீமியம் ஸ்டோரி
விக்ரம், கார்த்தி

நடிகர்களின் ஈடுபாடு அலாதியாக இருந்தது. கார்த்தி குதிரை ஏற்றத்தில் அவ்வளவு சரளமாக வந்துவிட்டார்.

“ ‘பொன்னியின் செல்வன்’ உங்களை ஏமாற்றாது!”

நடிகர்களின் ஈடுபாடு அலாதியாக இருந்தது. கார்த்தி குதிரை ஏற்றத்தில் அவ்வளவு சரளமாக வந்துவிட்டார்.

Published:Updated:
விக்ரம், கார்த்தி
பிரீமியம் ஸ்டோரி
விக்ரம், கார்த்தி

`பொன்னியின் செல்வன்' முதல் பாகம் திரையைத் தொடக் காத்திருக்கிறது. நாளுக்கு நாள் மணிரத்னம் ரசிகர்களுக்கு ஃபீவர் ஏற்றும் பொன்னியின் செல்வன் படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், இங்கே பட நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

‘‘65 ஆண்டுகளாக பொன்னியின் செல்வனைத் திரைப்படமாக்க முயற்சிகள் நடந்துகொண்டே இருந்தன. எம்.ஜி.ஆர் மாதிரியானவர்கள் முயன்று பார்த்தார்கள். அதற்கான வேலைகள் நடக்கும்போது இடறுகிற கல் மாதிரி ஏதாவது அவர்களுக்குத் தடை இருந்துகொண்டே இருந்தது. இத்தனை பேரின் கனவை மணிரத்னம் சாரும் கண்டிருக்கிறார். இப்படி ஒரு படத்தை மணி சார் எடுத்து முடித்ததையே பெரிய வெற்றியாகக் கருதுகிறேன்.

சில வருடங்களுக்கு முன்பு மணி சார் எனக்குக் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். திறந்து பார்த்தால், ‘ஒரு படம் செய்யலாமா... நாம் சந்திக்கலாமா’ என்று இருந்தது. உடனே போய்ப் பார்த்தேன். ‘நாம் ‘பொன்னியின் செல்வன்’ செய்யப்போகிறோம். இரண்டு பாகங்களில் படத்தை முடிக்கிறோம். உங்கள் தேதிகளைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள்’ என்றார். எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி அது.

ரவிவர்மன்
ரவிவர்மன்
“ ‘பொன்னியின் செல்வன்’ உங்களை ஏமாற்றாது!”

அடுத்தடுத்து படப்பிடிப்பிற்கான திட்டங்கள் கச்சிதமாகப் போடப்பட்டன. 130 நாள்களில் ஷூட்டிங் நடந்து முடிந்தது. தாய்லாந்துக் காடுகள், நீர்நிலைகள், குகைகளில் நடந்த படப்பிடிப்பு மிகவும் சிரமமானது. நடிகர்கள், படப்பிடிப்புக் குழுவினர் எல்லோரும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து, பிறகு நடந்தோ, படகுகளிலோ சென்றடைய வேண்டும். ஷூட்டிங் நடைபெறுவதற்கு முன்பாக இந்த எல்லா இடங்களையும் டைரக்டரோடு பார்த்திருந்தோம். அங்கேதான் கடல் காட்சிகள், சண்டைக் காட்சிகள், பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டன. அத்தனை ஆர்வமாக அங்கே நாங்கள் வேலை செய்துகொண்டிருக்க கொரோனாவின் முதல் அலை வந்தது. சென்னை திரும்பினோம். மணி சார் ஸ்கிரிப்டை இன்னும் கூர்மைப்படுத்த நேரம் கிடைத்த மாதிரி ஆகிவிட்டது.

நடிகர்களின் ஈடுபாடு அலாதியாக இருந்தது. கார்த்தி குதிரை ஏற்றத்தில் அவ்வளவு சரளமாக வந்துவிட்டார். 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிற குதிரைகளையெல்லாம் அவர் குழந்தை மாதிரி பழக்கி வைத்திருந்தார். ஒரு தடவை பெரும் வேகத்தில் வரும்போது கார்த்தி வந்த குதிரையின் பிடி சற்று விலகி அவர் விழுந்துவிட்டார். நல்லவேளை, பின்னியிருந்த கால்கள் விலகிவிட்டதால் சிராய்ப்புகளோடு தப்பித்தார். அவர் வந்த குதிரை, கேமராவின் பக்கத்தில் இருந்த நாற்காலியை உடைத்து விட்டுப் போனது.

“ ‘பொன்னியின் செல்வன்’ உங்களை ஏமாற்றாது!”
“ ‘பொன்னியின் செல்வன்’ உங்களை ஏமாற்றாது!”

விக்ரம் ஒரு சமயம் காலை ஏழு மணிக்குக் குதிரையில் ஏறி உட்கார்ந்தவர் மாலை ஆறு மணி வரை இறங்கவில்லை. மிகவும் முக்கியமான அந்த காட்சியில் இன்வால்வ் ஆகி அப்படியே இருந்துவிட்டார். ஜெயம் ரவிக்கு யானையின் மீது வருவதுபோல் காட்சிகள் இருந்தன. வேகமாக ஓடும் யானையில் மெல்லிய ஆடையுடன் அமர்ந்திருப்பதெல்லாம் கடினமான செயல். அவர் அப்படிச் செல்லும்போது யானையின் காதுகளைத்தான் பிடித்துக்கொள்ள வேண்டும். அந்தக் காட்சி முடிந்ததும் அவர் இறங்கி வருவதைப் பார்த்தாலே பாவமாக இருக்கும். ஐஸ்வர்யா ராயின் இன்வால்வ்மென்ட்டை முக்கியமாகச் சொல்ல வேண்டும். லைட்டிங் மாற்றும்போதெல்லாம் அசராமல் சிலை மாதிரி சலிப்பேயின்றி அமர்ந்திருப்பார். அதுதான் டெடிகேஷன். ஆழ்வார்க்கடியானாக ஜெயராம் பெரிய வயிற்றை இரண்டு வருடங்களாக வைத்திருந்தார். அதெல்லாம் ரொம்பவும் சிரமமானது.

நாங்கள் ஒரு கட்டத்தில் நடிகர்களின் பெயர்களை மறந்துவிட்டோம். கேரக்டர்களின் பெயர் சொல்லியே அழைத்துக்கொண்டோம். மணி சார் ஒவ்வொரு நாளும் காலை 5.30 மணிக்கே முதல் ஷாட் வைத்துவிடுவார். எல்லா நடிகர்களும் யூனிட்டும் மணி சார் கட்டளையை மந்திரம் மாதிரி ஏற்றார்கள். ஷூட்டிங் ஸ்பாட் கிட்டத்தட்ட ஒரு கிராமம் மாதிரியே தெரியும். சுமார் 5,000 பேர் இருப்பார்கள். நடிகர்கள், துணை நடிகர்கள், ஒப்பனையாளர்கள், நிர்வாகிகள் எனப் பெரும் திரளாக இருப்பார்கள். இத்தனை பேருக்கும் உணவு என ஒவ்வொரு நாளும் திருவிழா மாதிரிதான் இருக்கும். நாங்கள் வந்த காரின் நம்பர் 112 எனப் போட்டிருந்தார்கள். இதே மாதிரி குழுவின் போக்குவரத்துக்காக பஸ், லாரி, வேன், கார் என ஓடிக்கொண்டே இருந்தன. படகுகளும்கூட இருக்கும்.

“ ‘பொன்னியின் செல்வன்’ உங்களை ஏமாற்றாது!”
“ ‘பொன்னியின் செல்வன்’ உங்களை ஏமாற்றாது!”

இவ்வளவு ஏற்பாடுகளும், ஆட்களும் இருக்கும்போது என் வேலை எவ்வளவு முக்கியம் என உணர்ந்திருந்தேன். ஒருநாள் போர்க்களக் காட்சிகள் படமாகிக்கொண்டிருந்தன. கேமராவுடன் ஊடுருவிப் படம் பிடித்துக் கொண்டிருந்தேன். வீசிய வாள் என் காதில் அறைந்தது மாதிரி பட்டுவிட்டது. காதிலிருந்து ரத்தம் வடிந்திருக்கிறது. பரபரப்பில் நான் அதை கவனிக்கவில்லை. வலி இருப்பதை மட்டும் உணர்ந்தேன். ஜெயம் ரவிதான் பார்த்துவிட்டு ஓடி வந்தார். கொஞ்சம் நிறுத்தி, வடிந்த ரத்தத்தைத் துடைத்துவிட்டு மறுபடியும் படப்பிடிப்பு தொடர்ந்தது.

எல்லோரும் மணி சாரின் கண்ணசைவிற்குக் கீழே இருந்தோம். ஏதாவது பிரச்னை என்றால் கருத்து கேட்பார். சொன்னதும் கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு அடுத்த கட்ட வேலைகளை ஆரம்பிப்பார். அது அவ்வளவு சரியாக இருக்கும். போர்க்களக் காட்சிகள் நடக்கும்போது நடிகர்கள் கூடிவிடுவார்கள். விக்ரம் ஷூட்டிங் இருந்தால் ஜெயம் ரவி, கார்த்தி என வந்து அவருக்கு கம்பெனி தருவார்கள். இப்படி ஆளுக்கு ஆள் நடக்கும்.

ஷூட்டிங் தாய்லாந்திலும், இந்தியாவில் குவாலியர், மைசூர், ஹைதராபாத், பொள்ளாச்சி, மும்பை எனப் பல இடங்களிலும் நடந்தது. பாடல்களுக்காகப் பெரிய ஏரிகள், குகைகளில் படப்பிடிப்பு நடந்தது. தமிழ்ச் சூழலில் பொன்னியின் செல்வன் இப்போதும் பெருமிதப் படைப்பாக இருக்கிறது. மணி சார் அதைப் படம் எடுக்க முடிவு செய்த பிறகு இன்னும் புத்தகங்களின் விற்பனை கூடிவிட்டதாக அறிந்தேன். ஒவ்வொரு புது இளைஞனுக்கும் பொன்னியின் செல்வனைப் புரியவைக்க வேண்டிய சவால்களை நாங்கள் புரிந்து பணியாற்றியிருக்கிறோம்.

இதுவரை தமிழ் சினிமா பார்க்காத நடிகர் பட்டாளம், கல்கியின் எழுத்துக்கு இருக்கிற ஈர்ப்பு, நடிகர்கள் இதில் வேலை பார்த்த விதம், மணிரத்னம் சாரின் தீராத உழைப்பையெல்லாம் அருகிலிருந்து பார்த்துவிட்டுச் சொல்கிறேன்... ‘பொன்னியின் செல்வன்’ உங்களை ஏமாற்றாது.