Published:Updated:

``ராஜா சாரைத் தொட்டுக் கும்பிட்டப்ப, தோள்ல தட்டி ஒண்ணு சொன்னார்...'' - தன்வீர் மிர்

`சைக்கோ' படத்தின் ஒளிப்பதிவாளர் தன்வீர் மிர் பேட்டி!

மிஷ்கின் இயக்கத்தில் வெளியான `சைக்கோ' படத்தின் ஒளிப்பதிவு அனைவராலும் பேசப்பட்டது. ஆரம்பத்தில் ஒப்பந்தமாகி இருந்த பிசி ஶ்ரீராம், அலர்ஜி காரணமாகப் பத்து நாள்களில் படத்திலிருந்து விலக, அவரிடம் உதவி ஒளிப்பதிவாளராக இருந்த தன்வீர் மிர், படத்தை வெற்றிகரமாக முடித்துக்கொடுத்தார். மும்பையில் இருந்தவரை தொடர்புகொண்டு பேசினோம்.

"சொந்த ஊர் காஷ்மீர். பிசி ஶ்ரீராம் சார்கிட்ட அசிஸ்டென்ட்டா `இஷ்க்', `ஷமிதாப்', `கி அண்ட் கா', `ஐ', `ஓ காதல் கண்மணி', `பேட்மேன்'னு நிறைய படங்கள்ல வேலை செஞ்சிருக்கேன்" என்று உற்சாகமாகப் பேசத் தொடங்கினார், தன்வீர் மிர்.

``உதயநிதிக்கும் எனக்கும் ஆரம்பத்துல மிஸ்மேட்ச் ஆச்சு; அது ஏன்னா..." - `சைக்கோ' கதை சொல்லும் மிஷ்கின்

காஷ்மீரிலிருந்து சென்னை வர என்ன காரணம்?

"நான் காஷ்மீர்ல பாராமுலா காலேஜ்ல விஷுவல் கம்யூனிகேஷன் படிச்சேன். என் அண்ணன் ஒருத்தர் மீடியாவுல இருந்தார். அவர்கிட்ட எனக்கு ஒளிப்பதிவு படிக்கணுங்கிற ஆசையைச் சொல்லியிருந்தேன். அவருக்கு ஒருமுறை பெங்களூர்ல ஒளிப்பதிவாளர் சன்னி ஜோசப்பைச் சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சது. அப்போ என்னைப் பத்திச் சொன்னதும், சன்னி ஜோசப் சார்தான் சென்னையில எல்.வி.பிரசாத் இன்ஸ்டிட்யூட்ல படிக்க ஐடியா கொடுத்தார். அப்படித்தான் சென்னை வந்தேன். அங்கே படிச்சுமுடிச்சிட்டு மும்பையில வெவ்வேற புராஜெக்ட்ல வொர்க் பண்ண ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல இருந்தே எனக்கு பி.சி சார்கிட்ட வொர்க் பண்ணணும்னு ஆசை இருந்தது. மும்பை வந்து வேலை செஞ்சிட்டிருந்தப்போ பி.சி சார்கிட்ட சேர முயற்சி பண்ணிட்டே இருந்தேன். ஒருநாள் அவர் என்னை வரச் சொன்னார். அப்போதான் `இஷ்க்' படத்துடைய ப்ரீ புரொடக்‌ஷன் போயிட்டிருந்தது."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிசி ஶ்ரீராம் அறிமுகம் எப்போ?

தன்வீர் மிர்
தன்வீர் மிர்

"நான் காலேஜ் படிச்சிட்டிருந்தப்போ `சீனி கம்' படம் பார்த்தேன். அதுல கேமரா வொர்க் அவ்ளோ அருமையா இருந்தது. அப்போதான் அவரைப் பத்தி தேட ஆரம்பிச்சேன். `சாத்தியா'ங்கிற இந்திப் படம் ரொம்ப பாப்புலர். ஃப்ரெண்ட் ஒருத்தன் சொல்லி அதோட ஒரிஜினல் வெர்ஷனான `அலைபாயுதே' படத்தைப் பார்த்தேன். அந்தப் படத்திலேயும் ஒளிப்பதிவு சூப்பரா இருந்தது. யாருனு பார்த்தா பி.சி.ஶ்ரீராம்னு போட்டிருந்தது. அப்பவே அவர் ரசிகனாகிட்டேன். சென்னை வந்த பிறகு, அவர் வொர்க் பண்ண படங்களா தேடித்தேடி பார்க்க ஆரம்பிச்சேன். ஒவ்வொரு சனிக்கிழமையும் எனக்கு இதுதான் வேலை. அப்படிப் பார்த்த முக்கால்வாசி படங்களுக்கு மணிரத்னம் சார்தான் டைரக்டர். அவருடைய கதை சொல்லலுக்கு பிசி சாருடைய ஒளிப்பதிவு அவ்ளோ கச்சிதமாவும், அழகாவும் பொருந்திருக்கும். நிறைய பேர் முயற்சி பண்ணவே யோசிக்கிற விஷயங்களை பி.சி சார் அசால்டா பண்ணிடுவார். தன்னுடைய ஒளிப்பதிவு மூலமா படத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டுப் போவார். அதுதான் என்னை அவர் ரசிகனாக்க காரணமா இருந்தது. அவருடைய ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் இருந்துட்டே இருக்கும். எல்லா ஒளிப்பதிவாளருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். ஆனால், இவருக்கு எந்த ஸ்டைலும் இல்லை. ஸ்பாட்ல இப்படித்தான் லைட்டிங் வைக்கச் சொல்வார்னு நினைப்போம். ஆனா, அவர் வேற மாதிரி சொல்லி ட்விஸ்ட் கொடுப்பார். அதுவே பெரிய அனுபவமா இருக்கும்.”

காஷ்மீர்ல இருக்கிறவங்களுக்கும் சினிமாவுக்குமான தொடர்பு எப்படி இருக்கும்? எந்நேரமும் என்ன நடக்கும்னு தெரியாத சூழல்ல சினிமா எப்படி சாத்தியம்?

"எங்க ஊர்ல தியேட்டர்களே இருக்காது. எங்களுக்கு டிவிதான் என்டர்டெயின்மென்ட். அதுல வர்ற படங்களைத்தான் பார்ப்போம். தியேட்டர் அனுபவம் எப்படி இருக்கும்னுகூட தெரியாது. நான் காலேஜ் படிச்சு முடிச்சிட்டு, பிரசாத் இன்ஸ்டிட்யூட்ல சேர என்ட்ரன்ஸ் எக்ஸாம் வெச்சாங்க. அதுக்காக டெல்லி வந்திருந்தேன். அப்போதான் முதன்முதல்ல தியேட்டர்ல படம் பார்த்தேன். அது அக்‌ஷய் குமார் நடிச்ச படம். மறக்கமுடியாத அனுபவம். வேற உலகத்துக்கு வந்த மாதிரி இருந்தது. என் அப்பா சின்ன வயசுல இருந்தப்போ காஷ்மீர்ல தியேட்டர் இருந்திருக்கு. அவர் அமிதாப் பச்சனுடைய தீவிர ரசிகன். அவர் தியேட்டர்ல பார்த்த படங்கள் பத்தியும், அந்த அனுபவம் பத்தியும் என்கிட்ட அடிக்கடி சொல்லிக் கேட்டிருக்கேன். ஆனா, முதன்முறையா தியேட்டர்ல படம் பார்த்தது வேற லெவல் அனுபவம்."

மணிரத்னம் ரசிகனான உங்களுக்கு அவரோட முதல் சந்திப்பு எப்படி இருந்தது?

தன்வீர் மிர்
தன்வீர் மிர்

" 'ஷமிதாப்' முடிச்சவுடனே நான் பி.சி சார்கிட்ட இருந்து வெளியே வந்துடலாம்னு இருந்தேன். அவர்தான் `இந்த ஒரு படம் பண்ணிட்டு போ' னு சொன்னார். சரினு சொல்லிட்டேன். அப்புறம்தான் அது மணிரத்னம் சாருடைய `ஓ காதல் கண்மணி'னு தெரிஞ்சது. செம சந்தோஷமாகிட்டேன். முதன்முறையா மணிரத்னம் சாரைச் சந்திச்சது மறக்கவே முடியாது. மணி சார் - பி.சி சார் ரெண்டு பேருக்குமான டிஸ்கஷனே அவ்ளோ அழகா இருக்கும். அதைக் கவனிச்சாலே நிறைய கத்துக்கலாம். ரெண்டு பேரையும் பார்த்தாலே தன்னால நமக்குள்ள எனர்ஜி வரும்."

ஷங்கர் இயக்கத்துல `ஐ' படத்துல வேலை செஞ்ச அனுபவம்?

"இந்தப் படம் எனக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. பெரிய பொருள்செலவுல உருவான படம் இது. இந்தப் படத்துடைய ஸ்டன்ட்ஸ், பாடல்கள்னு எல்லாமே வித்தியாசமான கலர் டோன்ல இருக்கும். அப்படி வொர்க் பண்ணதுல நிறைய கத்துக்கிட்டேன்."

``அஜித், விஜய் படங்கள்ல இந்த ரோல் இருக்கவே இருக்காது!"- `சைக்கோ' ப்ரீத்தம்

ஹீரோக்கள்?

மிஷ்கின் - தன்வீர் மிர் - உதயநிதி
மிஷ்கின் - தன்வீர் மிர் - உதயநிதி

"அமிதாப் பச்சன், அக்‌ஷய், விக்ரம், துல்கர்னு நான் வொர்க் பண்ண படங்களுடைய ஹீரோக்கள் எல்லாருமே வேலையில கில்லாடிகள். அதே சமயம் அன்பான மனிதர்கள். துல்கர் சல்மான் தான் ஒரு ஹீரோ, பெரிய சினிமா பின்னணினு எந்த அலட்டலும் இல்லாத தன்னடக்கமான மனிதர். விக்ரம் சாரும் அக்‌ஷய் சாரும் ஒரே மாதிரி. ஸ்பாட்ல யாரையாவது பிராங்க் பண்ணிட்டே இருப்பாங்க. உதய் பிரதர் ரொம்பவே ஸ்வீட்."

`சைக்கோ' படத்துல வொர்க் பண்ணது எப்படி இருந்தது?

"ரொம்ப அருமையான அனுபவம் இது. நிறைய இடங்கள்ல சிங்கிள் ஷாட்ல எடுத்தோம். மிஷ்கின் சார் அவ்ளோ சீக்கிரம் `கட்' சொல்லமாட்டார். அவருக்கு என்ன வேணுங்கிறதுல ரொம்ப தெளிவா இருப்பார். நடிகர்கள்கிட்டேயும், டெக்னிஷீயன்கள்கிட்டேயும் என்ன எடுக்கப்போறோம்னு தெளிவா முன்னாடியே சொல்லிடுவார். அவருடைய முந்தைய படங்கள் அதிகம் ஸ்டடி கேமரா பயன்படுத்தியிருப்பதை நான் கவனிச்சிருக்கேன். நிறைய வைட் ஷாட் இருக்கும். ஆனா, இந்தப் படத்துல நிறைய க்ளோஸ் அப் ஷாட், டிராக் ஷாட் எடுத்தோம். ஒவ்வொரு இயக்குநருக்கும் அவங்க மனசுக்குள்ள ஒரு விஷுவல் இருக்கும். அதைப் புரிஞ்சிட்டு சாத்தியப்படுத்துறதுதான் ஒரு ஒளிப்பதிவாளரோட வேலை. மிஷ்கின் சாரும், நானும் நிறைய பேசுவோம். அப்போ எனக்கான சுதந்திரத்தைக் கொடுத்துட்டு, அப்புறம் அதுல இருந்து நிறைய கேள்விகள் கேட்பார். `உன்ன நினைச்சு' பாடலை எடுக்குறதுக்கு முன்னாடி மூணு மணி நேரம் பேசினோம். கதைக்குத் தகுந்த மாதிரிதான் லைட்டிங் இருக்கணும். நல்லா பண்றோம்னு நினைச்சு ஸ்க்ரிப்ட்டை தொந்தரவு செஞ்சிடக்கூடாதுனு ரொம்ப கவனமா இருந்தேன். எனக்கும் மிஷ்கின் சாருக்கும் இடையே கெமிஸ்ட்ரி நல்லா வொர்க் அவுட் ஆகியிருக்குனு நினைக்கிறேன். என்னை அவருடைய `ஓநாயும் ஆட்டிக்குட்டியும்' படத்துலயே வொர்க் பண்ண கூப்பிட்டார். ஆனா, அந்த நேரத்துல என்னால போகமுடியலை."

அப்போ உங்களை எப்படி மிஷ்கினுக்குத் தெரியும்?

மிஷ்கின் - தன்வீர் மிர்
மிஷ்கின் - தன்வீர் மிர்

"பி.சி சார் அவர்கிட்ட இப்போ இருக்கிற அசிஸ்டென்ட்களை, நீரவ் ஷா சார், திரு சார், ராம்ஜி சார்னு அவருடைய பழைய அசிஸ்டென்ட்ஸ்கிட்ட அனுப்பி 10 நாள் வேலை செஞ்சிட்டு வரச் சொல்றது வழக்கம். அப்போதான் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும்னு அடிக்கடி சொல்வார். அப்படி என்னை சத்யா சார்கிட்ட அனுப்பினார். அவர்தான் மிஷ்கின் சாருடைய `யுத்தம் செய்' படத்தோட ஒளிப்பதிவாளர். அந்தப் படத்துல வொர்க் பண்ணும்போது என்னை மிஷ்கின் சாருக்குத் தெரியும். என் வொர்க் அவருக்குப் பிடிச்சிருந்தது. அப்படி பழக்கமாகிதான் `ஓநாயும் ஆட்டிக்குட்டியும்' படத்துல வொர்க் பண்ண கூப்பிட்டார்."

இந்தப் படத்துக்குக் கிடைச்ச மறக்கமுடியாத பாராட்டு?

"இந்தப் படத்துடைய கிரேடிங்ல நான் இருந்தப்போ மிஷ்கின் சார் போன் பண்ணி பிரசாத் ஸ்டூடியோவுக்கு வரச் சொன்னார். அங்க போனா, இளையராஜா சார் நிறைய இசைக் கலைஞர்களோட படத்துடைய பேக்கிரவுண்ட் ஸ்கோர்ல வொர்க் பண்ணிட்டிருந்தார். நான் ஒரு ஓரமா நின்னு அவர் வொர்க் பண்றதைப் பார்த்துட்டிருந்தேன். இந்தியாவுல இருக்கிற எல்லா இசையமைப்பாளர்களுக்கும் ராஜா சார்தான் பெரிய இன்ஸ்பிரேஷன். அவர் என்னைப் பார்க்கணும்னு சொன்னது என்னால மறக்கவே முடியாது. அவர் வந்து நின்ன உடனே என்னை அறியாம அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டேன். அவர் என் தோளைத்தட்டி `விஷுவல் ரொம்ப நல்லாயிருக்கு'னு சொல்லிப் பாராட்டினார்"

அடுத்த பிளான்?

தன்வீர் மிர்
தன்வீர் மிர்

" 'சைக்கோ' படத்துக்கு முன்னாடி ஒரு மராத்தி படத்துக்கு ஒளிப்பதிவு செஞ்சிருந்தேன். அது இன்னும் ரிலீஸாகலை. அந்தப் படம் வெளிவந்தா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். `பேட் பாய்'னு ஒரு இந்திப் படத்துல வொர்க் பண்ணியிருக்கேன். இப்போ தெலுங்குல ஒரு படம் கமிட்டாகி இருக்கேன். தமிழ்ல நிறைய இயக்குநர்கள்கிட்ட இருந்து போன் வந்தது ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஆனா, ஒரு நேரத்துல ஒரு படம் மட்டும் பண்ணாதான் முழுமையா கதைக்குள்ள இறங்கி பண்ண முடியும்னு நினைக்கிறேன்."

படம் பார்த்துட்டு பிசி ஶ்ரீராம் என்ன சொன்னார்?

"அவர் ரொம்ப சந்தோஷப்பட்டார். என்னைப் பாராட்டி ட்வீட் பண்ணார். ஆனா, அவருக்குத் திருப்தியா இருந்துச்சானு தெரியலை."

``சிவகார்த்திகேயன் அண்ணா மாதிரி எந்த நடிகரும் இவ்ளோ கேரிங்கா இருந்ததில்லை!'' - டான்ஸர் பிந்து

காஷ்மீர் இப்போ எப்படி இருக்கு?

"இப்போ கொஞ்சம் நார்மலாகியிருக்கு. ரொம்ப நாளா தொலைதொடர்பே இல்லாம இருந்துச்சு. இப்போதான் 2ஜி சேவை கொடுத்திருக்காங்க. சீக்கிரமே இந்த நிலைமை மாறணும்"

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு