Published:Updated:

`` `தேவர் மகன்' படத்துல இன்னும் அந்த மிஸ்டேக் தெரியும்..!’’ - ஒளிப்பதிவாளர் திரு

தாட்சாயணி
க. பாலாஜி

ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராக இருந்த திரு, ‘மகளிர் மட்டும்’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராகி தற்போது ‘பேட்ட’ படம் வரைக்கும் சினிமாவில் பயணித்து வருகிறார். இந்த 25 ஆண்டுக்காலப் பயணம் பற்றி அவரிடம் பேசினோம்.

"இப்போதான் என்னோட முதல் படமான ‘மகளிர் மட்டும்’ வந்தமாதிரி இருக்கு. அதுக்குள்ள 25 வருடங்கள் ஓடிடுச்சுங்கிறது, ஆச்சர்யமாதான் இருக்கு. பல ஜாம்பவான்களோட சேர்ந்து வேலை பார்த்தாச்சு. ஆனாலும் ‘இவையெல்லாம் ஒண்ணுமேயில்ல! இன்னும் பண்ண வேண்டியது நிறைய இருக்கு’னு தோணுது. பி.சி சார் என்னை அவர்கிட்ட உதவியாளரா சேர்த்துக்கிறதுக்கு முன்னாடி அவர் பண்ண சில விளம்பரப் படங்கள்ல உதவியாளரா வேலை பார்க்கச் சொன்னார்.

 “ரஜினி சொன்ன ரகசியம்!” - இயக்குநர் பி.வாசு

அப்போ, அங்ககிருந்தவங்கெல்லாம் அவர்கிட்ட, ‘இவனை எப்படியாச்சும் உங்க படங்களுக்குக் கூட்டிக்கிட்டுப் போயிடுங்க. எங்களைக் கேள்வியா கேட்டுச் சாகடிக்கிறான்’னு சொன்னாங்க. அதுக்கப்புறம்தான், பி.சி சார் என்னைச் சேர்த்துக்கிட்டார். அந்தத் தேடலும் பதற்றமும்தான் என்னை வழி நடத்துறதா நம்புறேன். இதுல என் மனைவியோட பங்கும் ரொம்ப முக்கியமானது எனப் பேசத் தொடங்குகிறார், ஒளிப்பதிவாளர் திரு.

"சிவாஜியும் கமலும் சேர்ந்து ஒரு `விஷூவல் ட்ரீட்' கொடுக்கப் போகிறார்கள் என்பது தொடக்கத்திலேயே புரிந்துவிட, நம் மனம் உற்சாகத் துள்ளல் போடுகிறது! இருவரையும் நிற்கவைத்து திருஷ்டி சுற்றிப்போடுவது மாதிரியாக இளையராஜாவின் இசையமைப்பில் `போற்றிப் பாடடி பெண்ணே...' அமைந்துவிடுவது அசத்தல்! துணைக்கு 'ஜம்'மென்று ஸ்ரீராமின் காமிரா புகுந்து சுற்றி வந்து தேவர் மகனின் கம்பீரத்துக்கு முரசுக்கொட்டி பராக் சொல்கிறது!"ன்னு 'தேவர் மகன்' படத்துக்கு விகடன் விமர்சனத்துல பாராட்டினாங்க!

ஆனா படத்துக்கு மார்க் போடலையாமே? APPAPPO ஆப்ல 'தேவர் மகன்' ரிவ்யூ படிங்க...! -> http://bit.ly/thevarmagan

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உங்க குரு பி.சி.ஸ்ரீராமுடன் பணியாற்றிய அனுபவங்கள்?

"அவரோட கண் அசைவுக்கே எங்களுக்கு அர்த்தம் தெரியும். ஒருமுறை ஒரு விளம்பரப் படத்தை என்னைத் தனியா ஷூட் பண்ணச் சொல்லி பொறுப்பை ஒப்படைச்சிருந்தார். பொதுவா கேமரா டிபார்ட்மென்ட்ல ஃபோக்கஸ் வைக்கிறதுக்குன்னு தனியா ஒருவர் இருப்பார். கேமரா எந்த நிலைக்குப் போனாலும், அதுக்கேற்ற மாதிரி ஃபோக்கஸையும் பின்பற்றுவது அவரோட வேலை. குறிப்பிட்ட ஒரு மினியேச்சர் சீக்குவென்ஸ்ல அவர் அதைச் சரியா பண்ணல. நான் கேமராவை ஆப்பரேட் பண்ணிக்கிட்டிருந்தால என்னாலயும் வியூ ஃபைண்டர் வழியா அதைக் கவனிக்க முடியல. அந்த சீக்குவென்ஸ் மொத்தமாவே அவுட் ஆஃப் போக்கஸ் ஆகிடுச்சு.

பி.சி சார் என்ன சொல்லப்போறாரோனு பயந்துக்கிட்டே இருந்தேன். ஆனா, அதைப் பத்தி எதுவுமே சொல்லாம தொடர்ந்து பார்த்துக்கிட்டே இருந்தார். எனக்கு ஆச்சர்யமா இருந்தது. ஆனா, இன்னொரு இடத்துல லைட்டிங்ல இருந்த குறையைப் பார்த்துட்டு, ‘ஃபோக்கஸ் தப்பு உன் கையில இல்ல, அது தவிர்க்க முடியாதது. ஆனா, உன் கையில இருந்த ஒரு விஷயத்துல ஏன் தப்பு பண்ணுன’னு சொல்லாம சொன்னார். வாய்விட்டுச் சொல்லியிருந்தாக்கூட இவ்வளவு தூரம் மனசுல பதிஞ்சிருக்காது. அதுதான் பி.சி சார்."
ஒளிப்பதிவாளர் திரு

க்ளாஸிக் படமான ‘தேவர் மகன்’ல வொர்க் பண்ண அனுபவம்?

ஒளிப்பதிவாளர் திரு
ஒளிப்பதிவாளர் திரு

"சிவாஜி சார் மாதிரியான ஒரு லெஜெண்ட்கூட வொர்க் பண்ணுனது மறக்க முடியாத அனுபவம். தேவர் மகன்னு சொன்னாலே எனக்கு ஒரு சம்பவம்தான் ஞாபகம் வரும். படத்துல சிவாஜி சார் இறக்குற சீனை ஷூட் பண்ணும்போது ஒரு தப்பு நடந்துச்சு. அந்த சீன் ரொம்ப எமோஷனான சீன்னால, ஒரே டேக்ல எடுக்கணும்னு பிளான் பண்ணினோம். அந்த சீனில் ஒரு ட்ராலி ஷாட் எடுத்தோம். அப்போதெல்லாம் உதவி ஒளிப்பதிவாளர்கள்தான் ட்ராலி தள்ளுவோம். நானும் எம்.எஸ் பிரபுவும் ட்ராலி தள்ளும்போது, பிரபு வேகமா தள்ளிட்டு வந்து கீழ விழுந்துட்டார். `ஐயோ... ஷாட் போச்சுடா’னு நினைச்சோம். ஆனால், அது ஓகே ஆகிடுச்சு. இப்போ நீங்க அந்த சீனைப் பார்த்தாலும், அதுல ஒரு ஷேக் தெரியும். அந்த மிஸ்டேக்கைப் பார்க்கும்போதெல்லாம் அந்தச் சம்பவம்தான் எனக்கு ஞாபகம் வரும்.’’

கமலுடன் `ஹே ராம்’, `ஆளவந்தான்’ போன்ற பரிசோதனை முயற்சிகளின் அனுபவங்கள் எப்படி இருந்தன?

``கமல் மட்டும் இல்லேன்னா நாங்க மீண்டிருக்கவே முடியாது!'' - கலங்கும் மாது பாலாஜி #LetsRelieveStress

" ‘காதலா காதலா’ படம் முடிச்சுட்டு, நான் ஒரு இந்திப் படத்துல வொர்க் பண்ணிக்கிட்டிருந்தேன். அப்போ என்னைக் கூப்பிட்ட கமல் சார், ‘நான் ஒரு ஸ்கிரிப்ட் வெச்சிருக்கேன், படிங்க’னு சொன்னார். ‘ரொம்ப அற்புதமா இருக்கு சார். யாரை வெச்சுப் பண்ணப்போறீங்க’னு கேட்டேன். ‘உங்களை வெச்சுத்தான்’னு சொன்னார். எனக்கு அது செம சர்பிரைஸா இருந்தது. இப்படித்தான் ‘ஹே ராம்’ படத்துல நான் கமிட் ஆனேன். அப்போ உள்ள தலைமுறைக்கு வரலாறு பற்றிய, குறிப்பா கல்கத்தாவுல என்ன நடந்ததுங்கிறதைப் பற்றிய தெளிவு இல்லாததும், இப்போ உள்ள மாதிரி அந்தப் படத்தைப் பற்றி முன்கூட்டியே பேசித் தயார்படுத்தத் தேவையான ஊடக பலம் இல்லாததும் படம் சொல்ல வந்த கருத்தை ரசிகர்களால புரிஞ்சுக்க முடியாம போச்சு. ‘ஆளவந்தான்’ படத்திலும் நிறைய புது முயற்சிகளை செய்தோம். அதேசமயம் க்ளைமாக்ஸ்ல ரெண்டு கமலும் சண்டை போட்டுக்கிறதைப் பழைய மிக்சல் கேமராவுல, பழைய முறைப்படி மாஸ்க் செய்து படமாக்கினோம். ரெண்டுமே வித்தியாசமான அனுபவம்."

ரஜினியுடன் பணியாற்றிய அனுபவம்?

ஒளிப்பதிவாளர் திரு
ஒளிப்பதிவாளர் திரு

"ரஜினி சாரோட ‘எந்திரன்’ படத்தில் நான் வொர்க் பண்ண வேண்டியது. நான் கமிட் ஆகி, ரஜினி சாரை வெச்சு லுக் டெஸ்ட் வரைக்கும் போயிட்டோம். படத்தை ஆரம்பிக்கத் தாமதமாகிட்டே இருந்ததால, நான் வேறொரு இந்திப் படத்துக்கு வொர்க் பண்ணப் போயிட்டேன். ‘பேட்ட’தான் எங்களை இணைச்சது. ஒவ்வொரு படத்தோட தீமையும் கதையைக் கேட்டதும் முடிவு பண்ணிடுவேன். ஆனா, ‘பேட்ட’ கதையை என்னால ஒரு தீமை செட் பண்ண முடியாம இருந்தது. அப்போ வட இந்தியாவுல லொக்கேஷன் பார்க்கப் போயிருந்தேன். பொதுவா படங்களுக்கு லொக்கேஷன் பார்க்கப்போனா, அங்கே உள்ள மக்கள், ‘என்ன படம், யார் ஹீரோ’னு கேட்டுட்டு அவங்கவங்க வேலையைப் பார்க்கப் போயிடுவாங்க. ஆனா, இதுல ரஜினி சார் படம்னு சொன்னதும் அவங்க கண்கள் ஆச்சர்யத்துல விரிஞ்சதைக் கவனிச்சேன். ’எப்போ வருவார், எங்கே தங்குவார்’னு மொத்த டீட்டெயிலையும் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்போதான் முடிவு பண்னேன், இந்தப் படத்தோட தீம் ரஜினி சார்தான். ரஜினி சார் எங்கிட்ட, ‘என்ன திரு... என்ன டோன் இந்தப் படத்துல’னு கேட்டார், ‘நீங்கதான் சார் டோனே’னு சொல்ல, ‘அட சும்மா ஜோக்கடிக்காதீங்கப்பா’னு சிரிச்சார். நாங்க நினைச்ச மாதிரி, அவரோட நிழலைக்கூட மிஸ் பண்ணாம சரியா பயன்படுத்திக்கிட்டோம்."

இத்தனை வருடங்களில் ஒளிப்பதிவுத் துறையிலும், ஒளிப்பதிவாளர்கள் மத்தியிலும் நீங்க கண்ட மாற்றங்கள்?

"இப்போ எல்லோர்கிட்டேயுமே ஒளிப்பதிவின் தாக்கம் அதிகமா இருக்கு. எல்லோருமே அவங்கவங்க மொபைல்ல ஷுட் பண்ணி, நல்லாயிருக்கா, இல்லையானு ஆராய்ச்சி பண்றாங்க. இதனால, சாதாரண ரசிகர்களுக்கே ஒளிப்பதிவு பற்றி நிறைய தெரிய ஆரம்பிச்சிருக்கு. எங்களை மாதிரி ஒளிப்பதிவாளர்கள் புதுசா ஏதாவது முயற்சி பண்ணும்போது, அது அவங்க கவனத்துக்குப் போகுது. அந்த உழைப்புக்கான அங்கீகாரமும் கிடைக்குது. எங்களுக்குப் பொறுப்பு கூடியிருக்குனுதான் சொல்லணும். அதேசமயம், இந்த மாதிரியான வளர்ச்சி, ஒரு நல்ல ஒளிப்பதிவாளர் உருவாகிறதைத் தடுக்குது. எப்படின்னா, சமீபமா சினிமாவை ஒரு அறிவியலா அணுகிற மனப்பான்மை மாறி, ரொம்ப ஈஸியா நினைச்சுக்கிட்டிருக்காங்க. அதோட விளைவு, ஏதாவது ஒரு மூணு மாதப் பயிற்சியை முடிச்சுட்டு, கத்துக்கிட்டோம்னு நம்பி அவசர அவசரமா பிராய்லர் கோழிகள் மாதிரி ஒளிப்பதிவு பண்ண ஆரம்பிச்சிடுறாங்க. பிராய்லர் கோழிகளோட ஆயுள் எப்படியோ, அவங்களுக்கெல்லாம் சினிமாவுல ஆயுள் அவ்வளவுதான். புரொஃபஷனல் சினிமாங்கிறது குறைஞ்சுக்கிட்டே வருது. விவசாயத்துல குறுகியகாலப் பயிர்களைக் கொண்டுவந்து, தரமில்லாத பொருள்களை விளைவிக்க ஆரம்பிச்ச மாதிரி, சினிமாவிலும் நடக்குது."

சமீபமா இந்திய ஒளிப்பதிவுத் துறையிலும், விளம்பரப் படத்துறையிலும் வெளிநாட்டவரின் ஆதிக்கம் அதிகமா இருக்கே?

ஒளிப்பதிவாளர் திரு
ஒளிப்பதிவாளர் திரு

"இந்தியாவுல எல்லாத்துறையிலும் இருக்கிற மாதிரி, சினிமாவிலும் வெளிநாட்டுக்காரங்களோட ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிட்டே இருக்கு. இதே நிலை தொடர்ந்தா, இந்தியாவுல இருந்து பெரிய அளவுல சினிமாக் கலைஞர்கள் உருவாகமாட்டாங்க. எந்த ஒரு தொழிலுக்கும் அந்தத் தொழில் பற்றிய ஆழமான அறிவு முக்கியம். சினிமா கலைஞர்களும் ஆழமான அறிவோடு உருவாகணும். இந்தியாவுல சினிமா மூலமா எவ்வளவோ வர்த்தகம் நடக்குது. நடக்கிற அவ்வளவு வர்த்தகத்துக்கு ஏற்ற முறையான சினிமா மற்றும் விளம்பரத்துறைச் சார்ந்த ஆழமான பயிற்சிகள் இங்கு கொடுக்கப்படுறதில்லை. இருக்கிற ஒருசில இன்ஸ்டிடியூட்களும் முறையான பயிற்சிகளை வழங்குவதில்லை. அரசுதான் இதை மனசுல வெச்சுக்கிட்டு, உலகத் தரத்துல ஒரு ஃபிலிம் இன்ஸ்டியூட்டை நிறுவி நல்ல கலைஞர்களை உருவாக்கணும். காலம் காலமா நாம எல்லோரும் ஹாலிவுட்டையே வியந்து பார்த்துக்கிட்டிருக்கோம். அந்த நிலை மாறி, இந்தியாவில் இருந்தும் பல நல்ல கலைஞர்கள் வரணும்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு