Published:Updated:

கமல்ஹாசன் vs லைக்கா... விஸ்வரூபமெடுக்கும் `இந்தியன் 2' விவகாரம்!

இந்தியன் - 2
இந்தியன் - 2

இக்கடிதத்தின்மூலம் இந்தியன் -2 படப்பிடிப்புக்கு முழு பொறுப்பும் தயாரிப்பு நிர்வாகிகளும், கமல்ஹாசனும், இயக்குநர் ஷங்கரும்தான் என்கிறது லைக்கா.

`இந்தியன் -2' படப்பிடிப்பு ஆரம்பித்ததில் இருந்தே கமல்ஹாசனுக்கும் லைக்கா நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் தற்போது படப்பிடிப்பில் நடந்த விபத்தால் இன்னும் அடுத்தகட்டத்துக்கு சென்றிருக்கிறது.

கடந்த பிப்ரவரி 19-ம் தேதி இரவு, பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஸ்டூடியோவில் இந்தியன் -2 படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பின்போது, எதிர்பாராதவிதமாக க்ரேன் விழுந்ததில் இயகுநர் ஷங்கரின் உதவி இயக்குநர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்நிலையில், விபத்துக்குக் காரணம் லைக்கா நிறுவனத்தின் அலட்சியம்தான் என குற்றம் சாட்டியிருந்தார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன். இதுகுறித்து கடிதம் ஒன்றையும் லைக்கா நிறுவன உரிமையாளர் சுபாஸ்கரனுக்கு அனுப்பியிருந்தார். லைக்கா நிறுவனம், கமல்ஹாசனுக்கு பதில் கடிதம் அனுப்பியிருக்கிறது.

கமல்
கமல்
இந்தியன் - 2 விபத்தில் 3 பேர் உயிரிழந்தது எப்படி?!- போலீஸாரிடம் விவரித்த இணை இயக்குநர்

பதில் கடிதத்தை லைக்கா நிறுவனத்தின் இயக்குநர் நீல்காந்த் நாராயண்புர் என்பவர் எழுதியிருக்கிறார். ``பிப்ரவரி 19-ம் தேதி இரவு ஏற்பட்ட விபத்து, யாரும் எதிர்பாராதது. சர்வதேச அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தும் துரதிர்ஷ்டவசமாக இதுபோன்ற விபத்து நிகழ்ந்தது அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு, நாம் எல்லோரும் சேர்ந்துதான் பொறுப்பேற்க வேண்டும். நடந்த தவற்றைச் சரிசெய்ய வேண்டும். மிகப்பெரிய அனுபவசாலியும், மிகத் தேர்ந்த தொழில்நுட்ப வல்லுநருமான நீங்களும், மூத்த இயக்குநரான ஷங்கரும் களத்தில் இருந்து வழிநடத்தும்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகச்சரியாக இருக்கும் என நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தோம். உங்கள் இருவரின் தலைமையில்தான் இதுவரையிலான ஷூட்டிங் நடந்தது என்பதையும் நினைவுபடுத்தத் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

தமிழ் சினிமாவில் நீண்டகாலமாக இயங்கிவரும் சுந்தர்ராஜன் என்பவரை நிர்வாகத் தயாரிப்பாளராக நியமித்திருந்தோம். அதேபோல், இயக்குநர் ஷங்கரின் பரிந்துரையின்பேரில் துணை நிர்வாகத் தயாரிப்பாளராக மணிகண்டன் என்பவரை நியமித்திருந்தோம். இவர்கள் இருவரும்தான் படப்பிடிப்பில் முழுமையாக இருந்ததோடு, படப்பிடிப்புக்குத் தேவையான அனைத்து லைசென்ஸ்களையும் பெற்றுவந்தனர். இந்தியன் -2 படப்பிடிப்பில் விபத்து என்றதுமே, சுபாஸ்கரனும் லைக்காவின் மூத்த நிர்வாகிகளும் உடனடியாக விமானம் ஏறி 20-ம் தேதி மதியம் 3 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தனர். நீங்கள் (கமல்ஹாசன்) மருத்துவமனைக்கு வந்துபோன 15-வது நிமிடத்தில், மருத்துவமனைக்கு சுபாஸ்கரனும் லைக்காவின் மூத்த நிர்வாகிகளும் மருத்துவமனைக்கு வந்துவிட்டார்கள். நிவாரணத்தொகை குறித்த அறிவிப்பு வெளியானதோடு, மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருபவர்களுக்கான உதவிகளும் அளிக்கப்பட்டன. இவை எல்லாமே உங்கள் கடிதம் கிடைப்பதற்கு முன்பாகவே செய்யப்பட்டவை. இவை எல்லாம் உங்கள் கவனத்துக்கு வரவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்
ஈ.வி.பி விபத்தும் பின்விளைவுகளும்... `இந்தியன் 2' ஸ்டேடஸ் அப்டேட்!

தற்போது, எல்லோரும் இணைந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்திப்போம்'' என்று அந்தக் கடிதத்தில் லைக்கா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. தற்போது, கமல்ஹாசனுக்கும் லைக்கா நிறுவனத்துக்குமான பிரச்னையே பெரிதாகியிருப்பதால், இந்தியன் -2 படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்குமா என்பதிலேயே சந்தேகம் எழுந்திருக்கிறது. ஈவிபி-யில் சண்டைக்காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டதும் மார்ச் மாத தொடக்கத்தில் இத்தாலி செல்வதாக இருந்தது படக்குழு. இந்நிலையில், திடீரென ஏற்பட்ட விபத்தின் காரணமாக படப்பிடிப்புகள் அப்படியே நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. மத்திய குற்றப்பிரிவு, இந்தியன் -2 விபத்து குறித்து தொடர்ந்து விசாரித்துவருகிறது. இந்நிலையில்தான், கமல்ஹாசனுக்கு இப்படியொரு கடிதம் அனுப்பியிருக்கிறது லைக்கா.

இக்கடிதத்தின்மூலம் இந்தியன் -2 படப்பிடிப்புக்கு முழு பொறுப்பும் தயாரிப்பு நிர்வாகிகளும், கமல்ஹாசனும், இயக்குநர் ஷங்கரும்தான் என்கிறது லைக்கா. கமல்ஹாசனும், இயக்குநர் ஷங்கரும் என்ன பதில் தரப்போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு