Published:Updated:

கொரோனா டைம்ஸ்... மிஸ் செய்யக்கூடாத மிக முக்கியமான கிளாஸிக் படங்கள்! #Classic Movies #Part1

கிளாஸிக் படங்கள்
கிளாஸிக் படங்கள்

அனைவரும் தனித்திருக்கும் இந்த வேளையில், சினிமாதான் சிறந்த பொழுதுபோக்குக் கருவி. எனவே, என்னென்ன சினிமாக்களைப் பார்க்கலாம் என்கிற பரிந்துரைப் பட்டியல் இதோ...

தி ஷாஷாங்க் ரிடெம்ப்ஷன் - The Shawshank Redemption (1994):

தி ஷாஷாங்க் ரிடெம்ப்ஷன்
தி ஷாஷாங்க் ரிடெம்ப்ஷன்

வெளியான சமயத்தில் வணிக ரீதியான வெற்றியை எட்டாத படம். இன்றோ IMDB தரவரிசையின் முதல் இடத்தை சிறைப் பிடித்து வைத்திருக்கிறது. 20 வருடங்களை ஒன்றாக சிறையில் கழிக்கும் இரு கைதிகளின் இடையேயான நட்பை, வாழ்வின் மீதான அவர்களின் பார்வையைக் கவித்துவமாகச் சொன்ன படம். இறுதியில், பெய்யும் அந்தப் பெரும் மழை, மனதுக்குள் நம்பிக்கை மாமழையைப் பொழியச் செய்யும்.

பல்ப் ஃபிக்ஷன் - Pulp Fiction (1994) :

பல்ப் ஃபிக்ஷன்
பல்ப் ஃபிக்ஷன்

இன்று வரையிலும் குயின்டின் டரான்டினோவின் `மாஸ்டர் பீஸ்' எனக் கொண்டாடப்படும் படம். இதன் மாறுபட்ட திரைக்கதை வடிவத்துக்காவே, பலரால் கொண்டாடப்பட்டது. டரான்டினோவின் டிரேட் மார்க் ரத்தம் தெறிக்கும் வன்முறைகளும், காது கிழியும் கெட்டவார்த்தைகளும் அடங்கிய சினிமா. ஆக, தனியாக இருக்கும் இந்நேரத்தில் பார்க்க வேண்டிய சரியான படம் இது!

ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் - Schindler's List (1993) :

ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்
ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்

இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலகட்டத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூதர்களை நாஜிப் படை நிகழ்த்திய பெரும் இன அழிப்பிலிருந்து காப்பாற்றிய ஜெர்மானிய தொழிலதிபர் ஆஸ்கர் ஷிண்ட்லரின் கதையைச் சொன்ன படம். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய, மனிதாபிமானத்தின் மகத்துவத்தைச் சொன்ன இப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்றது!

செவன் - Se7en (1995) :

செவன்
செவன்

க்ளூ கொடுத்து கொலை செய்யும் சீரியல் கொலைகாரர்களின் படங்களுக்கு எல்லாம் முன்னோடி, `செவன்'. வெற்றிகர காம்போவான இயக்குநர் டேவிட் ஃபின்சர் - நடிகர் பிராட் பிட் இணைந்து கொடுத்த வேற லெவல் படம்! பெருந்தீனி, பேராசை, சோம்பல், கடுங்கோபம், தற்பெருமை, காமம், பொறாமை போன்ற ஏழு கொடிய பாவங்களைச் செய்பவர்களை மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யும் கொலைகாரன். அவனைக் கண்டுபிடிக்கக் கிளம்பும் இரு அதிகாரிகளின் போராட்டமே கதை.

ஃபாரஸ்ட் கம்ப் - Forrest Gump (1994) :

ஃபாரஸ்ட் கம்ப்
ஃபாரஸ்ட் கம்ப்

டாம் ஹாங்க்ஸ் எனும் அதிசிறந்த நடிகனுக்கு ஆஸ்கர் பெற்றுத் தந்த திரைப்படம். புத்திக் கூர்மை குன்றிய கதாநாயகனின் வாழ்க்கை பயணத்தை நின்று நிதானமாக, அவ்வளவு அழுத்தமாகப் பதிவு செய்த படம். இப்படத்தை இப்போது இந்தியில் ரீமேக் செய்து நடித்துவருகிறார் அமீர் கான். கூடவே நம் விஜய் சேதுபதியும்!

குட்ஃபெலாஸ் - Goodfellas (1990) :

குட்ஃபெலாஸ்
குட்ஃபெலாஸ்

அமெரிக்க மாபியா தலைவன் மற்றும் அவனது நண்பர்களின் வாழ்வியலைப் பற்றிய கிரைம் சினிமா. கேங்க்ஸ்டர் திரைவரிசையில் என்றுமே இந்தப் படத்திற்குத் தனி இடம் உண்டு. நேர்த்தியான திரைக்கதை வழியாக ஓர் உண்மை மாபியா வரலாற்றை நமக்கு விருந்தளித்திருப்பார்கள். இன்றைய பல கிரைம் படங்களுக்கு இதுவே முன்னோடி.

டாய் ஸ்டோரி - Toy Story (1995) :

டாய் ஸ்டோரி
டாய் ஸ்டோரி

உலகின் முதல் முழுக் கணினி அனிமேஷன் திரைப்படம். இதன் கதையே சுவாரஸ்யமானது, ஒரு சிறுவனின் வீட்டில் இருக்கும் பொம்மைகளுக்கு உயிர் இருக்கும். ஒரு குழுவாக அவை வாழும். சிறுவனின் பிரிய பொம்மையான குழுவின் தலைவனுக்குப் போட்டியாக ஒரு பொம்மை வந்துவிட, அங்கு நடக்கும் சேட்டைகள்தான் படத்தின் கதை!

தி சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ் - The Silence of the Lambs (1991) :

தி சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ்
தி சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ்

சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருது பெற்ற படம். பெண்களைக் கொன்று அவர்களது தோலை உறிக்கும் சைக்கோ கொலையாளியைக் கண்டுபிடிக்க, FBI அதிகாரியான நாயகி, கைதியாக இருக்கும் மற்றொரு கொடூரக் கொலையாளியிடம் ஆலோசனை கேட்கிறாள். அதன் பின் நடக்கும் உக்கிரங்கள் நம்மை நடுங்க வைப்பது உறுதி!

 பிரேவ் ஹார்ட் - Brave heart (1995) :

பிரேவ் ஹார்ட்
பிரேவ் ஹார்ட்

பிரமாண்ட `வார் சினிமா' வகையறா திரைப்படம். புதிதாக திருமணம் செய்துகொண்ட தன் காதலியை ஆங்கிலேயப் படைகள் கொன்றுவிட, அன்றைய இங்கிலாந்து அரசரை எதிர்த்து ஒரு மக்கள் புரட்சியைச் செய்கிறான் ஸ்காட்லாந்தின் மாவீரன் வில்லியம் வாலஸ். அது, 12-ம் நூற்றாண்டில் ஸ்காட்லாந்து சுதந்திரப் போராட்டத்தின் வித்தாக அமைகிறது. பிரபல ஹாலிவுட் நடிகரான மெல் கிப்சன் நடித்து, இயக்கிய இத்திரைப்படம் 5 ஆஸ்கர் விருதுகளைப் பெற்றது.

தி யூஸ்வல் சஸ்பெக்ட்ஸ் - The Usual Suspects (1995):

தி யூஸ்வல் சஸ்பெக்ட்ஸ்
தி யூஸ்வல் சஸ்பெக்ட்ஸ்

மற்றுமொரு ஆஸ்கர் திரைப்படம். சாதாரணமாக ஒரு குற்றவாளியை விசாரணை செய்வதாய் தொடங்கும் கதை பின்னர் பல திருப்புமுனைகளை அடைந்து வேறு பரிணாமம் அடைகிறது. இன்றைய பல்வேறு முன்னணிக் கலைஞர்கள், ஒருசேர இணைந்து நடித்த படம் இது!

`குவாரன்டைன்' முதல் `கன்டாசியன்' வரை! - வைரஸ் அவுட்-பிரேக் பற்றிய 8 படங்கள்
அடுத்த கட்டுரைக்கு