சினிமா
Published:Updated:

கோப்ரா - சினிமா விமர்சனம்

கோப்ரா - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
கோப்ரா - சினிமா விமர்சனம்

ரஹ்மானின் பின்னணி இசை படத்தின் பலம். ஆனால் பாடல்கள் இடம்பெற்றிருக்கும் இடங்கள்தான் பொருந்தாமல் சோதிக்கின்றன.

நடிப்பு, ஒளிப்பதிவு, கலை இயக்கம், பட்ஜெட் என அனைத்தும் பொருந்தி, முக்கிய ஏரியாவான திரைக்கதையில் கோட்டைவிட்டால் அதுதான் ‘கோப்ரா.’

சர்வதேச அளவில் பல கொலைகளை நிகழ்த்தும் குற்றவாளி விக்ரம் (எ) கோப்ரா. சாதாரண நாள்களில் எண்களோடு விளையாடும் ஜீனியஸ். இவர் தன் குற்றங்களில் கணிதத்தைப் பயன்படுத்துவதை ஒரு ஆராய்ச்சி மாணவி கண்டுபிடிக்க, அதை நூலாய்ப் பிடித்துக்கொண்டு முன்னேறுகிறது இன்டர்போல். அவர்கள் க்ளூ கிடைக்காமல் முட்டி நிற்கும் இடத்தில் வான்ட்டடாக வந்து ஒரு ஹேக்கர், விக்ரம் பற்றிய தகவல்களை வெளியிடுகிறார். திரைமறைவு வாழ்க்கை வாழும் விக்ரமிற்கு இதனால் சிக்கல்கள் எழ, அந்த ஹேக்கர் யார், ஏன் இவரை மாட்டிவிடத் துடிக்கிறார் என்பதை உலகம் முழுக்கச் சுற்றி, நம்மையும் சுற்றலில் விட்டு கோப்ரா கண்டுபிடிப்பதுதான் கதை.

கோப்ரா - சினிமா விமர்சனம்

ஏற்றுக்கொள்ளும் எல்லா வேடங்களுக்கும் தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் கொடுத்து நடிப்பது விக்ரமின் குணம். இதிலும் அப்படியே. விசாரணை அறையில் அவர் வெளிப்படுத்தும் ஆற்றல் ஒருசோறு பதம். அப்படியொரு மகத்தான கலைஞனை திரைக்கதை வீணடித்திருப்பதுதான் பெருஞ்சோகம்.

மீனாட்சி, மிருணாளினி, நிதி ஷெட்டி என மூன்று பெண் கதாபாத்திரங்கள். கதாபாத்திர வரைவில் ஏகப்பட்ட லாஜிக் குறைகள் இருந்தாலும் திரையில் மீனாட்சி தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாகவே செய்திருக்கிறார். மிருணாளினிக்காவது கதையில் பின்னணி என ஒன்று இருக்கிறது. நாயகி அந்தஸ்தோடு வலம்வரும் நிதிதான் பாவம். கதையில் ஒட்டவில்லை. இர்பான் பதானின் நடிப்பு ஓகே ரகம். பின்கதை எதுவுமில்லாத வழக்கமான சைக்கோ வில்லனாக வந்து போகிறார் ரோஷன் மேத்யூ. இருக்கும் நடிகர்களில் கவனிக்க வைப்பது ஆனந்தராஜ் மட்டுமே.

ரஹ்மானின் பின்னணி இசை படத்தின் பலம். ஆனால் பாடல்கள் இடம்பெற்றிருக்கும் இடங்கள்தான் பொருந்தாமல் சோதிக்கின்றன. ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு, அமரனின் கலை இயக்கம், திலீப் சுப்பராயனின் ஸ்டன்ட் வடிவமைப்பு எனத் திரைக்குப் பின்னால் பங்களித்திருக்கும் கலைஞர்களின் உழைப்பு பாராட்டுக்குரியது. இயக்குநர் பேச நினைத்த சிக்கலான உள்மன முரண்களைத் திரையில் சி.ஜி வடிவில் சரியாகக் கடத்திய குழுவின் மெனக்கெடலும் கவனிப்புக்குரியது.

கோப்ரா - சினிமா விமர்சனம்

ஆனால் இவ்வளவையும் மேற்பார்வையிட்டு சரியான திசையில் செலுத்திய இயக்குநர் அஜய் ஞானமுத்து தன் பங்களிப்பான திரைக்கதையில் போதிய கவனம் செலுத்தாததுதான் சிக்கல். முன்பின்னாய் நகர்ந்து விடைசொல்லும் காட்சியமைப்பில் போதிய தெளிவில்லாததால் பார்க்கும் நமக்கு படத்தோடு பொருந்திப் போக முடியாமல்போகிறது. கூடவே ஏகப்பட்ட ஏன், எப்படி கேள்விகள்.

எல்லாம் சரியாக அமைந்தும், திரைக்கதை என்கிற ஒற்றை மகுடி வேலை செய்யாமல் போனதால் திக்கற்றுப் பாய்கிறது இந்த ‘கோப்ரா.’