Published:Updated:

``ஜெயம் ரவியின் 9 கெட்டப், ரவிக்குமார் சொன்ன `படையப்பா 2' அப்டேட்!'' - `கோமாளி' பிரதீப் ரங்கநாதன்

ஜெயம் ரவி - காஜல் அகர்வால்
ஜெயம் ரவி - காஜல் அகர்வால்

`கோமாளி' படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் பேட்டி.

``தினமும் நாம பார்க்கிற பல விஷயங்கள்ல, சில விஷயங்கள் நம்மளைப் பாதிக்கும். அப்படிக் கடந்துபோக முடியாத சில விஷயங்களை காமெடியா சொல்லப்போற படம்தான், `கோமாளி'.

ஜெயம் ரவி - யோகிபாபு - இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்
ஜெயம் ரவி - யோகிபாபு - இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்

சிம்பிளா சொன்னா, மனித உணர்வுகளுடைய மதிப்பை ஜாலியா எப்படிச் சொல்ல முடியுமோ, அப்படிச் சொல்லியிருக்கோம்!" என்று உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார், இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்.

``ஜெயம் ரவிகிட்ட இருந்து வந்த ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கு?"

``கதையைக் கேட்டதிலிருந்தே அவர்கிட்ட பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்தான் கிடைச்சிக்கிட்டிருக்கு. இந்தப் படத்துல ஸ்கூல் பையன் கேரக்டர் ஒண்ணு இருக்கு. அதை வேற ஒருத்தர்தான் பண்றதா இருந்தது. ஆனா, நானே பண்றேன்னு சொல்லி அதுக்காக 20 கிலோ உடல் எடையைக் குறைச்சு மெனக்கெட்டு நடிச்சிருக்கார். அந்தக் கேரக்டரைப் படத்துல பார்க்கும்போது, ஆடியன்ஸ்கிட்ட இருந்து நல்ல வரவேற்பு கிடைக்கும்னு நம்புறேன்."

``அவர் யோகி பாபுவை வெச்சு இயக்கப்போற படத்துக்காக நான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்."
இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்

``படத்துல ஜெயம் ரவி மொத்தம் எத்தனை கெட்டப்ல வர்றார்?"

``3 கெட்டப்ல அதிகமா வருவார், 6 கெட்டப் சின்னச் சின்ன சீக்வென்ஸ்ல வரும். நான் கதையைச் சொல்லப்போன சமயத்துல அவருக்கு சில பெரிய இயக்குநர்களும் கதை சொல்லியிருந்தாங்க. ஆனா, இந்தக் கதையில அவர் நடிக்கணும்னு நினைச்சதுக்குக் காரணம், படத்துல அவருக்கு இருக்கிற இத்தனை கெட்டப்தான். ரவி சாருக்குப் ஃபிலிம் மேக்கிங் சென்ஸ் அதிகம். அதே நேரத்துல இயக்குநருக்கான சுதந்திரத்தை முழுசா கொடுப்பார். அப்படி அவர் ஏதாவது சில திருத்தங்கள் சொன்னா, நாமும் அதை ஏத்துக்கிற மாதிரியான விஷயங்களாதான் இருக்கும்.

``உதவி இயக்குநராக இல்லாம, நேரடியாக இயக்குநர் ஆகும்போது என்னென்ன சவால்களைச் சந்திச்சீங்க?"

``கதை ரீதியா நான் ரொம்பத் தெளிவா இருந்தேன். அதனால, அந்தப் பிரச்னை எனக்கு இல்லை. மக்களைச் சமாளிக்கிறது கொஞ்சம் சவாலா இருந்தது. உதாரணத்துக்கு, என் குறும்படத்தை நானே எடிட் பண்ணிடுவேன், கிடைக்கிற இசையை எடுத்துப் போட்டுடுவேன். ஆனா, ஒரு சினிமாவுக்கு அப்படிப் பண்ண முடியாது. எடிட்டர், மியூசிக் டைரக்டர்னு பலபேர்கூட சேர்ந்து படத்தைத் தயார் செய்யணும். எனக்கு இருந்த முதல் பட பயத்தையும், தயக்கத்தையும் கேமராமேன் ரிச்சர்ட் சார்தான் போக்கினார். என்கூட ஆரம்பத்துல இருந்து இந்தக் கதையில பயணிச்சுக்கிட்டு இருக்கார். ஷூட்டிங் ஸ்பாட்ல கூட்டத்தைச் சமாளிக்கிறது ரொம்பப் பெரிய விஷயம். ரிச்சர்ட் சார் இல்லைனா, அது சாத்தியமே இல்லை. அதேபோல, `ஹிப் ஹாப் தமிழா' ஆதி எனக்கு மென்டர் மாதிரி ஆகிட்டார். யூத் பல்ஸைப் பிடிக்கிறதுல அவர் கில்லி!"

ஜெயம் ரவி
ஜெயம் ரவி

``காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே... ரெண்டு ஹீரோயின் இருக்காங்க!"

``ரெண்டு கேரக்டருக்கும் கதையில முக்கியத்துவம் இருக்கும். ஸ்கூல் போர்ஷன்ல வர்ற காதல் காட்சிகள்ல சம்யுக்தா இருப்பாங்க. படத்தை க்ளைமாக்ஸுக்குக் கொண்டு போறதே, காஜல் கேரக்டர்தான். இந்தக் கதையில அவங்களுக்கான ஸ்கோப் இருந்ததனாலதான் ரெண்டுபேரும் ஓகே சொன்னாங்க. எடிட்டிங்ல படத்தைப் பார்க்கும்போது, க்யூட்டா இருந்தாங்க காஜல். நான் அவங்க ரசிகன் ஆகிட்டேன்னே சொல்லலாம். ஷூட்டிங் ஸ்பாட்ல அவங்ககிட்ட சரியா பேசாம விட்டுட்டோமேனு இப்போ வருத்தமா இருக்கு."

``யோகி பாபு ஸ்பாட்ல எப்படி?"

``அவர் ஸ்பாட்டுக்கு வந்தாலே எல்லோரும் கலகலப்பாகிடுவாங்க. `இந்த டயலாக் வொர்க் அவுட் ஆகல, என்ன பண்ணலாம்'னு கேட்டேன். `நீ டயலாக்கை மட்டும் சொல்லு. நான் வொர்க் அவுட் பண்ணிக் காட்டுறேன்'னு சொல்லி அந்த மொக்கை வசனத்தைக்கூட சூப்பரா மாத்திட்டார். ரவி சாரும், யோகிபாபு சாரும் செம காம்போ. ரெண்டுபேரும் ஒண்ணா இருந்தா, என்னைக் கலாய்ச்சுத் தள்ளிடுவாங்க. `நீ என்ன பாட்டில்ல இருக்க முறுக்கு மாதிரி இருக்க, உன்னை எறும்புக்குத் தீனியா கொடுத்திடுவேன்'னு சொல்லி என்னைக் கலாய்க்கிறதுல அவருக்கு அவ்ளோ சந்தோசம்."

ஜெயம் ரவி - யோகிபாபு
ஜெயம் ரவி - யோகிபாபு

``கே.எஸ்.ரவிக்குமாரை இயக்கிய அனுபவம்?"

``ரொம்பப் பயந்து பயந்துதான் அவரை அணுகினேன். காமெடி பண்ணணும், பயமுறுத்தணும், எமோஷனலா இருக்கணும்னு அவருடைய கேரக்டர் படத்துல மிக முக்கியமானது. அந்தக் கேரக்டரை அவர்தான் பண்ணணும்னு முடிவு பண்ணி, கதை சொல்லப் போனேன். பயத்துல கதை சொல்றதுல சொதப்பிட்டேன். காமெடி கதையைச் சொல்லிட்டு இருக்கேன். ஆனா, அவர் இறுக்கமா முகத்தை வெச்சுக்கிட்டு சீரியஸா இருந்தார். கேட்டு முடிச்சுட்டு அவர் ஓகே சொன்ன பிறகுதான், எனக்கு ரிலாக்ஸா இருந்தது. ஸ்பாட்ல நம்மளை எந்தக் குறையும் சொல்லிடக் கூடாதுனு சாருடைய சீன் எடுக்கும்போது, இருநூறு சதவீதம் தயாரா வருவேன். அவர்கிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டேன். அவர் இயக்கிய படங்கள் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை அவர்கிட்ட கேட்டுக்கிட்டு இருப்பேன். 'படையப்பா 2' வருமா?'னு கேட்டேன். சிரிச்சுட்டு, 'அது கொஞ்சம் கஷ்டம். ஆனா, வேற படம் வரும்!'னு சொன்னார்."

```சந்தோஷ் சுப்ரமணியம்' படத்துல பார்த்த ரவி சாரை இந்தப் படத்துல மீண்டும் பார்க்கலாம்."
இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்

``ஜெயம் ரவி எந்த விஷயத்துல இன்னும் கொஞ்சம் தயாராகணும்னு நினைக்கிறீங்க?"

``அவர் எமோஷன் சீன்ல கலக்கிடுவார். கொஞ்சம் சில்மிஷமான காட்சிகள்ல நடிச்சா செமயா இருக்கும். இளைஞர்கள் ரசிக்கும்படியான விஷயங்கள் அவருக்கு சூப்பரா வரும். ஆனா, ஃபேமிலி ஆடியன்ஸுக்காக அதை எல்லாம் வேணும்னே தவிர்த்திடுவார். ஷூட்டிங் ஸ்பாட்ல இவரைப் பார்க்க குடும்பம் குடும்பமா வருவாங்க. 'சந்தோஷ் சுப்ரமணியம்' படத்துல பார்த்த ரவி சாரை இந்தப் படத்துல மீண்டும் பார்க்கலாம்."

அடுத்த கட்டுரைக்கு