ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

டெய்லர் டு சினிமா ஸ்டார்! - காமெடி நாயகன் இந்திரன்ஸின் வெற்றிக் கதை

இந்திரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இந்திரன்ஸ்

எங்க ரெண்டு பேருக்கும் திருவனந்தபுரம் தான் பூர்வீகம். இவருடையது ரொம்பவே ஏழ்மையான குடும்பம்

யதார்த்தமான படைப்புகளுக்குப் பெயர் பெற்றது மலையாள சினிமா. அந்த வகையில் அண்மையில் ஓ.டி.டி தளத்தில் வெளியான ‘ஹோம்’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மொத்த படத்தையும் தாங்கிச் சுமக்கும் அப்பா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து உள்ளம் கவர்கிறார் இந்திரன்ஸ். ஆடை வடிவமைப்பு உதவியாளராக சினிமாவில் அறிமுகமாகி, மல்லுவுட்டின் நம்பிக்கை முகமாக மாறியிருப்பவரின் கதை, சினிமாவாக எடுக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற் கில்லை. இவரின் மனைவி சாந்தகுமாரி, எல்லா வகையிலும் இந்திரனுக்குப் பொருத்த மான வாழ்க்கைத் துணை. தங்களின் இனிமையான இல்லறம் குறித்து மகிழ்ச்சி யுடன் பகிர்கின்றனர் இருவரும்.

“எங்க ரெண்டு பேருக்கும் திருவனந்தபுரம் தான் பூர்வீகம். இவருடையது ரொம்பவே ஏழ்மையான குடும்பம். நாலாவதுவரை மட்டுமே படிச்சவர், அதுக்கப்புறமா டெய்லரிங் கடைக்கு வேலைக்குப் போனார். 12 வயசுலேயே தனியா டெய்லரிங் கடை ஆரம்பிச்சார். ஒருகட்டத்துல, தெரு நாடகங்கள், மேடை நாடகங்கள்ல நடிக்கும் கலைஞர் களுக்கு காஸ்டியூம் டிசைனரா வேலை செஞ்சவருக்கு, நடிகராகும் ஆசை ஏற்பட்டிருக்கு. மேடை நாடகங்கள்ல சின்னச் சின்ன வேஷங்கள்ல நடிச்சவர், வியாபாரத்தைச் சரியா கவனிக்க முடியாம, ரெண்டு முறை டெய்லரிங் கடையை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. வீட்டுல பெரும் கஷ்டம் ஏற்படவே, சினிமா ஆசையை மறந்துட்டு, ரெண்டு தம்பிகளோடு சேர்ந்து மறுபடியும் டெய்லரிங் கடையை ஆரம்பிச்சார்”

- கணவரின் ஆரம்பகால போராட்டத்துடன் பேச ஆரம்பிக்கிறார் சாந்தகுமாரி.

ஹோம் படத்தில்
ஹோம் படத்தில்

‘இந்திரன்ஸ்’ என்ற பெயரில் திருவனந்த புரத்தில் 1970-களில் தொடங்கப்பட்ட அந்த டெய்லரிங் கடை, தற்போதுவரை இயங்கி வருகிறது. அந்தக் கடையின் பெயரே, நாளடைவில் சுரேந்திரன் என்ற இவரது பெயருக்கு மாற்றாக அழைக்கப்பட்டு பிரபல மானது.

“பகதூர், ஜெகதி ஸ்ரீகுமார் மாதிரி காமெடி நடிகராகணும்னு ஆசைப்பட்டேன். இப்போ இருக்குறதைவிடவும் சின்ன வயசுல ரொம்பவே ஒல்லியா இருப்பேன். உடம்பைத் தேத்தலாம்னு ஜிம்முக்குப் போனேன். ஒருநாள் மாஸ்டர் இல்லாதப்போ வெயிட் லிஃப்ட்டிங் செஞ்சேன். திடீர்னு உள்ளே வந்த மாஸ்டர், ‘கொலை கேஸ்ல என்னை மாட்டிவிடப் பார்க்குறியா?’னு திட்டி என்னைத் துரத்திட் டார். ‘சூதாட்டம்’ங்கிற படத்துல அசிஸ்டன்ட் காஸ்டியூம் டிசைனராவும், அதே படத்துல சின்ன ரோல்ல நடிக்கவும் வாய்ப்பு கிடைச்சுது. காஸ்டியூம் டிசைனர் வேலையில சொல்லிக்குற அளவுக்கு வருமானம் கிடைக்கல.

பெரிய நடிகர்களின் படங்கள்ல வேலை செய்ய ஆரம்பிச்ச பிறகு, ஓரளவுக்கு வருமானம் கிடைச்சுது. நாலு சகோதரிகளுக்கும் கல்யாணம் செய்து வைக்குற பொறுப்பும், வயசான பெற்றோரைப் பார்த்துக்குற கடமையும் இருந்ததால, நடிக்குற எண்ணத்தை விட்டுட்டு, காஸ்டியூம் டிசைனரா மட்டுமே இரவு பகலா ஓய்வில்லாம வேலை செஞ்சேன். தம்பிகள் ரெண்டு பேரும் டெய்லரிங் கடையை கவனிச்சுக்கிட்டாங்க. இந்த நிலையில பெரிய இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் ஆக்டிங் வாய்ப்புகள் வந்துச்சு. அதுல, ஜெயராம்கூட காமெடியனா நடிச்ச ‘சி.ஐ.டி உன்னிகிருஷ்ணன்’ படம்தான் நடிகரா எனக்கு அடையாளம் கொடுத்துச்சு. அதுக்குப் பிறகு என் வாழ்க்கை யில நடந்ததெல்லாம் மேஜிக் மாதிரி தோணுது”

- வெள்ளந்தியாகப் பேசும் இந்திரன்ஸ், நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றிய நிலை யில், 1990-களில் முழுநேர நடிகராகி, 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

டெய்லர் டு சினிமா ஸ்டார்! - காமெடி நாயகன் இந்திரன்ஸின் வெற்றிக் கதை

“இவர் காமெடி கேரக்டர்லதான் அதிகம் நடிச்சிருக்கார். பெரும்பாலான படங்கள்லயும் இவரோட ஒல்லியான தோற்றத்தைக் கிண்டல் பண்ற காட்சிகளே நிறைய இருக்கும். நான் வருத்தப்படும்போதெல்லாம், ‘இது வெறும் நடிப்புதானே... என் தோற்றம் மக்களைச் சிரிக்க வைக்க உதவுதுல்ல’ன்னு சொல்லுவார்” என்று கணவரின் புகழ்பாடும் சாந்தகுமாரி இடைவெளிவிட, ‘ஹோம்’ பட அனுபவம் குறித்துப் பேசுகிறார் இந்திரன்ஸ்.

“ ‘ஹோம்’ படத்துல வரும் வெகுளியான அப்பா கேரக்டரும் என் நிஜ கேரக்டரும் ஒண்ணுதான். இப்பவும் நான் பேஸிக் மாடல் செல்போன் தான் பயன்படுத்துறேன். இன்டர்நெட் பயன்பாடுகள் பத்தி எனக்கு எதுவும் தெரியாது. ‘வாட்ஸ்அப் பயன்படுத்தவாவது கத்துக்கோங்கப்பா’ன்னு என் பிள்ளைகள் அடிக்கடி சொல்லுவாங்க. எனக்கு அதெல்லாம் சரி வராதுனு சொல்லிடுவேன். அதனால, டெக்னாலஜி விஷயங்கள் பத்தி தெரியாத அந்த அப்பா கேரக்டர்ல நடிக்குறது ரொம்பவே எளிதா இருந்துச்சு. படம் ரிலீஸானதிலிருந்து ஏகப்பட்ட வாழ்த்துச் செய்திகள் வந்துகிட்டே இருக்கு. பாராட்டி, போன்ல எனக்கு முத்தமும் கொடுத்தார் மோகன்லால் சார். ‘எனக்கு நீங்க முத்தம் கொடுக்க மாட்டீங்களா?’ன்னு அவர் கேட்க, ‘நேர்ல கொடுக்கிறேன் சார்’னு சொன்னேன். ‘பெருமைப்படுற மாதிரி நல்லா நடிச்சிருக்கீங்க’ன்னு சொன்னார் மம்மூட்டி சார். ஜெய ராம், ப்ரித்விராஜ், பஹத் ஃபாசில், மஞ்சு வாரியர் உட்பட பெரும்பாலான மலையாள சினிமா கலைஞர் களும் வாழ்த்தினாங்க”

- 20 படங்களைக் கைவசம் வைத்திருப்பவர், சிறந்த நடிகருக் கான மலையாள அரசின் விருதினை இரண்டு முறை பெற்றிருக்கிறார்.

“ ‘ஆடும் கூத்து’ங்கிற தமிழ்ப் படத்துல நடிச்சிருக்குறவர், ‘நண்பன்’ படத்துல சத்யராஜ் சாருக்கு ஷேவ் பண்ணி விடுறது உட்பட சில காட்சிகள்ல நடிச்சிருப்பார். தமிழ் உட்பட வேறு மொழி பட வாய்ப்புகளும் இவருக்கு வருது. ஆனா, மொழி தெரியாத காரணத்தாலேயே அந்த வாய்ப்புகளைத் தவிர்த்துடு றார். சிகரெட் பிடிக்கிற, மது குடிக்குற காட்சிகள்ல மட்டும் நடிக்கவே கூடாதுங்கிற என் வேண்டுகோளை இப்போவரை கடைப்பிடிக்கிறார்”

- சாந்தகுமாரியின் வார்த்தைகளில் கணவரின் மீதான மதிப்பு வெளிப்படுகிறது.

டெய்லர் டு சினிமா ஸ்டார்! - காமெடி நாயகன் இந்திரன்ஸின் வெற்றிக் கதை

“எங்களுக்குக் கல்யாணமானப்போ, எந்நேரமும் வேலையா ஓடிட்டிருந்தேன். என் சூழ்நிலையைச் சரியா புரிஞ்சுகிட்டு, மனைவிதான் பக்குவமா குடும்பத்தை வழிநடத்தினாங்க. ரெண்டு பிள்ளைகளுக்கும் கல்யாணம் செய்து, பேரப் பிள்ளைகள் பார்த்துட்டோம். வீட்டுக்குப் பக்கத்துலதான் எங்க டெய்லரிங் கடையும் இருக்கு. ஷூட்டிங் இல்லாதப்போ, வீட்டிலிருந்தே டெய்லரிங் வேலைகளைச் செய்வேன். என் எல்லா முயற்சிகளுக்கும் பலன் கிடைச்சிருக்கு. ஆனா, என்னென்னவோ செஞ்சு பார்த்தும் உடல் எடை மட்டும் கூடவே இல்ல” என்று இந்திரன்ஸ் புன்னகையுடன் கூற, வெடித்துச் சிரிக்கிறார் சாந்தகுமாரி.