Published:Updated:

ஷூட்டிங் களைப்பு... மயக்கம்... பாத்ரூமில் வழுக்கி விழுந்தார்!- நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்

`என்னய்யா கழுத்தெல்லாம் ரத்தம்’ என வடிவேலு கேட்க, `அட அசந்து தண்டவாளத்துல தூங்கிட்டேன் தம்பி, நாலஞ்சு ரயில் கழுத்துல ஏறிட்டுப் போயிடுச்சு. ஆள் தூங்குறதுகூட தெரியாம ரயிலை ஓட்டிட்டுப் போறானுக’ என்றபடி கடந்து செல்வாரே... அவர்தான்.

நகைச்சுவை நடிகர்
நகைச்சுவை நடிகர்

`ஆறு’ படத்தில் வடிவேலு மற்றும் அல்வா வாசு, போண்டா மணி உள்ளிட்ட அவரது சகாக்களின் `தக்காளிச் சட்னி’ காமெடியை ரசிக்காதவர்கள் இருக்கமாட்டீர்கள். அந்தக் காட்சியில் கழுத்தில் ரத்தத்துடன் வேகமாக நடந்துவரும் ஒருவரிடம், `என்னய்யா கழுத்தெல்லாம் ரத்தம்’ என வடிவேலு கேட்க, `அட அசந்து தண்டவாளத்துல தூங்கிட்டேன் தம்பி, நாலஞ்சு ரயில் கழுத்துல ஏறிட்டுப் போயிடுச்சு. ஆள் தூங்குறதுகூட தெரியாம ரயிலை ஓட்டிட்டுப் போறானுக’ என்றபடி கடந்து செல்வாரே... அவர்தான் ஜெயச்சந்திரன்.

நகைச்சுவை நடிகரான இவர், சென்னையில் உள்ள தன்னுடைய வீட்டில் நேற்று மயங்கி விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த ஜெயச்சந்திரனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அப்போது அவர் வழியிலேயே உயிரிழந்தார்.

jeyachandran nadar with vadivelu
jeyachandran nadar with vadivelu

சினிமா ஆசையில் உடுமலைப்பேட்டையிலிருந்து சென்னைக்கு வந்த ஜெயச்சந்திரன், 100-க்கும் மேற்பட்ட படங்களில் சிறு சிறு நகைச்சுவைக் காட்சிகளில் நடித்திருக்கிறார். இயக்குநர் ஹரி இவருக்கு அதிக வாய்ப்புகளை வழங்கி வந்ததாகச் சொல்கிறார்கள். `முத்தின கத்தரிக்கா’ படம் முழுக்க இவருக்குக் காட்சிகள் உண்டு.

66 வயது முடிவடைந்த நிலையில், கடந்த சில வருடங்களாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். நேற்று முன்தினம் இரவு ஷூட்டிங் முடித்து வந்து படுத்தவர், மறுநாள் காலையில் எழுந்தபோதே மயக்கமாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். சிறிது நேரத்தில் பாத்ரூமுக்குச் சென்றபோது வழுக்கி விழுந்தவருக்கு, தலையில் பலமாக அடிபட்டிருக்கிறது.

``என்ன செய்வேன்... என் அடுத்த படத்துல கிருஷ்ணமூர்த்தி இருந்தாரே!'' - வடிவேலு

உடனடியாக குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, வழியிலேயே உயிர் பிரிந்துவிட்டதாம்.ஜெயச்சந்திரனின் மனைவி பெயர் லக்ஷ்மி. இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். சென்னை விஜயராகவபுரத்தில் உள்ள ஜெயச்சந்திரனின் வீட்டுக்கு நேற்று பிற்பகலில் வந்த ராதாரவி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். உடலடக்கம் இன்று மதியம் ஒரு மணியளவில் நடக்கவிருக்கிறது.