Election bannerElection banner
Published:Updated:

"வடிவேலு சர்ச்சை, `புள்ளிராஜா' விளம்பரம், இழந்த சொத்துகள்..." - கிருஷ்ணமூர்த்தி #RIPKrishnamoorthy

கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணமூர்த்தி

குறிப்பு: நகைச்சுவை மட்டுமில்லாது, பல படங்களில் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் நடித்து கவனம் ஈர்த்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் இன்று (7/10/2019) காலை மாரடைப்பால் காலமானார். சில மாதங்களுக்கு முன், விகடனுக்கு அவர் அளித்த பேட்டி இதோ... #RIPKrishnamoorthy #RememberingKrishnamoorthy

'குழந்தை இயேசு' முதல் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் காமெடியனாக நடித்தவர், கிருஷ்ணமுர்த்தி. 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு புரொடக்‌ஷன் மேனேஜராக இருந்தவர். 'கைதி', 'ஆயிரம் ஜென்மங்கள்' ஆகிய படங்களில் நடித்துவருகிறார். அவரிடம், பேசினேன்.

''நீங்கள் நடித்த படங்களில் உங்களுக்குப் பிடித்தது?''

Vikatan

''நான் நடிச்ச எல்லா படங்களும் எனக்குப் பிடிக்கும். 'மருதமலை', 'வேல்', 'நான் கடவுள்' என ஒவ்வொரு படத்திலும் காமெடி மட்டுமல்லாமல், என்னுடைய நடிப்புத் திறமையைக் காட்ட உதவியவர், வடிவேலு. 37 வருட சினிமா அனுபவத்தில், 'எலி' படத்தில்தான் நானும் வடிவேலும் அதிக டேக் வாங்கினோம். அவருக்கும் எனக்குமான சீன்களில் இரண்டு பேருமே மாறி மாறி சிரிச்சுக்கிட்டே இருந்தோம். கிட்டத்தட்ட 18 டேக் வரை போச்சு. ஆனால் , அந்த குறிப்பிட்ட சீன் சில காரணங்களால் படத்துல வரல."

''சமீபத்தில் வடிவேலு பற்றி நிறைய நெகட்டிவ் செய்திகள் வருதே?''

கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணமூர்த்தி

''நானும் அதையெல்லாம் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். என்ன பிரச்னை நடந்தது என்பது வடிவேலு சாருக்குத்தான் தெரியும். அவர் நடித்த ஒரு காமெடியில், 'தண்ணி கேட்டதற்கு, தங்க சொம்பு கேட்டதா மாறுமே... அப்படி, 'தண்ணிதான் கேட்டார்' என்பது வடிவேலுக்குத்தான் தெரியும். மத்தபடி, என்கிட்ட மீன் குழம்புதான் கேட்டார்.''

''அப்படியா... அந்த விஷயத்தைப் பற்றி?''

Vikatan

''என் மனைவி பெயர் மகேஷ்வரி. பிரபல ஃபைட் மாஸ்டருடைய பொண்ணு. நாங்க காதல் திருமணம் பண்ணிக்கிட்டோம். எனக்கு மிகப்பெரிய அட்வைசர், வழிகாட்டி அவங்கதான். வடிவேலு ரொம்பப் பாசக்கார ஆள். கூடப் பழகுறவங்களையும் சொந்த பந்தங்களா நினைப்பவர். என் மனைவியை தங்கச்சினுதான் கூப்பிடுவார். சென்னையில் இருக்கும்போது பல நாள்கள், 'தங்கச்சிகிட்ட சொல்லி திருக்கை மீன் குழம்பு வைக்கச் சொல்லு, வீட்டுக்கு வர்றேன்'னு வந்து சாப்பிட்டுப் போவார்.''

'' 'ப்ரண்ட்ஸ்' படத்தில் உங்களுக்கு நடிக்க வாய்ப்பு வந்ததா?''

கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணமூர்த்தி

'' 'உனக்கு ஒரு ரோல் தர்றேன்யா'னு வடிவேலு சொன்னார். என்ன காரணமோ தெரியல, எனக்கு வாய்ப்பு கிடைக்கல. அதற்குப் பதிலாதான் 'ப்ரண்ட்ஸ்' படத்தில் ரமேஷ் கண்ணாவுக்கு 'கிருஷ்ணமூர்த்தி'னு என் பெயரை வைத்தார். அவருக்குப் பிடித்த பெயர்களைத் தன் படத்தின் கேரக்டர்களுக்கு வைத்துவிடுவார். 'முருகேசன்' என்ற பெயரை 'சந்திரமுகி' படத்தில் வெச்சார். சென்னைக்கு வந்து முருகேசனும், அவரும் சேர்ந்துதான் பட வாய்ப்புகளைத் தேடினாங்க. என்னைப்போன்ற பலரை உருவாக்கிய பெருமை அவரைச் சேரும். வடிவேலுகிட்ட களிமண்ணா போனா போதும்; நம்மளை சிற்பமா செதுக்கிடுவார். சின்னச்சின்ன விஷயங்களையும் ரசித்து நடிச்சுக் காட்டுவார். 'கருப்பசாமி குத்தகைதாரர்' படத்துல 'படித்துரை பாண்டிகிட்டயே டோக்கனா' வசனம் வரும்போது, என் கண் நல்லா இருக்குனு 'கடையைச் சாத்திட்டுப் போகும்போது கண்ல எந்த ரியாக்‌ஷனும் காட்டாதே. ஆடியன்ஸ் அடுத்து நீ என்ன செய்யப்போறேனு கெஸ் பண்ணக்கூடாது'னு சொல்லிக் கொடுத்தார். அந்த வசனம் செம ஹிட்."

''உங்க சொந்த ஊர், எப்படி சினிமாவுக்கு வந்தீங்க?''

கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணமூர்த்தி
நடிகர்

''சொந்தமா ஊர் வெச்சுக்கிற அளவுக்கு வசதி இல்ல. நான் பிறந்து, வளர்ந்தது திருவண்ணாமலை. ஆறாம் வகுப்பு படிக்கும்போது ஸ்கூல் டிராமாவில் கலந்துக்கிட்டேன். சிவாஜி படங்கள் , கமல் படங்கள் அதிகம் பார்ப்பேன். 'சலங்கை ஒலி' என்னுடைய மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். வீட்டில் இருக்கிறவங்க எல்லோருமே என்னை என்கரேஜ் பண்ணாங்க. பத்தாம் வகுப்பு பாஸ் பண்ணி, பதினொன்றாம் வகுப்பு ஃபெயில் ஆனேன். 1981-ல் சென்னைக்கு வந்தேன். அப்போ எனக்கு 17 வயசு. இரண்டு வருடம் கழித்துதான் ஊருக்குத் திரும்பிப்போனேன். மூணு அக்கா, ரெண்டு அண்ணன். ரெண்டு பேர், பிறக்கும்போதே இறந்துட்டாங்க."

37 வருஷம் ஆகுது நான் சினிமா துறைக்கு வந்து. வருமானம் சார்ந்த பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். நல்லா இருக்காங்கனு யாரையும் சொல்லிட முடியாது. அவங்க அவங்க இருக்கிற நிலைமைக்குத் தகுந்த மாதிரி கஷ்டங்கள் இருக்கும். அதைத் தெரிஞ்சுக்க முடியாது. என் லெவலுக்கு என் கஷ்டம் இருந்தது.
கிருஷ்ணமூர்த்தி

"சினிமாவில் கடந்துவந்த பாதை, பட்ட கஷ்டங்கள்?''

''இதுவரை எனக்கு சாப்பாட்டுப் பிரச்னை கிடையாது. அது யார் செய்த புண்ணியமோ தெரியல. அசிஸ்டென்ட் மேனேஜரா இருந்தப்போ பஸ்லதான் போவேன், வருவேன். 'என்ன சார் நீங்க பஸ்ல வர்றீங்க'னுலாம் கேட்பாங்க. இப்போ எனக்கு 55 வயசு ஆகுது. உடல் நலம் சார்ந்த பிரச்னைகள் இருக்கு. கொலஸ்ட்ரால் அதிகமா இருந்ததால அறுவைசிகிச்சை பண்ணிக்கிட்டேன். இப்போ ஏன் அதைப் பண்ணோம்னு ஃபீல் பண்றேன்."

''நீங்க அதிகம் கோபப்படுவீங்களாமே?''

''நிறைய கோபம் வரும். ஆனா, கோபத்தை எனக்கு நானே காட்டிக்குவேன். பாராட்டுறதை சந்தோஷமா ஏத்துக்குவேன். திட்டுறதையும் நமக்கான அனுபவமா எடுத்துக்குவேன். அதுதான் என் வளர்ச்சிக்கு வழியா இருந்தது. எனக்கு ஊர் சுற்றுவது பிடிக்கும். எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊர் தண்ணீர் நல்ல தண்ணீரா என்பதைக் கண்டுபிடிச்சிடுவேன். அந்த அளவுக்குப் பல ஊர்களை சுத்தியிருக்கேன்."

''நீங்கள் நிறைய விளம்பரங்களில் வொர்க் பண்ணியிருக்கீங்களாமே?''

''ராகுல் டிராவிட்டை வைத்து 'ஜாம் ஜாம் ஜாமி' விளம்பரம் பண்ணினோம். அதுக்கு மேனேஜரா இருந்தேன். 'புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா' டீஸர் நாங்க பண்ணதுதான். இப்படி பல விளம்பரங்களுக்கும் புரொடக்‌ஷன் மேனேஜரா இருந்திருக்கேன்.''

''பெரும்பாலும் வடிவேலுவின் கதாபாத்திரங்கள் ஹிட்டாக காரணம் என்ன?''

''மதுரையில, 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' போர்டு இப்போவும் இருக்கு, நான் பார்த்திருக்கேன். 'சூனா பானா' என்பது சுப்பையா பாண்டியன் என்கிற பெயர். இப்போதும் பென்சிலில் மீசை வரைந்துகொண்டிருப்பவர்களை மதுரையில் பார்க்க முடியும். அப்படி வடிவேலு படத்தின் கதாபாத்திரங்களை மதுரையில் தேடினால், பத்து எபிசோடு எழுதலாம். ரிக்‌ஷாக்காரன், மூட்டைத் தூக்குபவனின் காமெடி என சகஜமாப் பேசிட்டு, சிரிக்காம கடந்து போவாங்க. ஒருமுறை ஹோட்டல்ல சாப்பிடப் போனேன். 'இந்த ஊரில் எங்கே டிபன் நல்லா இருக்கும்'னு கேட்டேன். 'பல் துலக்கிட்டு சாப்பிட்டா எங்கேயும் நல்லா இருக்கும். இல்லைனா, எங்கேயும் நல்லா இருக்காது'னு சொன்னார் ஒருவர். இப்படி தப்பா புரிஞ்சுக்கிற பல விஷயங்கள் காமெடியா மாறும்.

உதாரணத்துக்கு, 'திருச்சியில இருக்கிற மாரிமுத்துவைத் தெரியுமா... இங்கிருந்து பார்த்தா மாரிமுத்துவைத் தெரியாது. திருச்சியில போய்ப் பார்த்தா தெரியுமோ, என்னவோ!', 'ஏங்க இப்படியே மவுண்ட் ரோடு போலாமா... இப்படியேவும் போலாம், கையைப் பாக்கெட்ல வுட்டுகிட்டும் போலாம்'. இப்படி உன்னிப்பா கவனிச்சு காமெடி பண்றதாலதான், அவர் கேரக்டர் அப்படி இருக்கு."

''இத்தனை வருடங்களில் நீங்க சம்பாதிச்சது?"

''நிறைய சொத்து சேர்த்து, எல்லாத்தையும் இழந்துட்டேன். இரண்டு வீடு சொந்தமா வெச்சிருந்தேன். சில வியாபாரக் காரணங்களால அதை விற்கவேண்டியதா போயிடுச்சு. இப்போ வாடகை வீட்டுலதான் இருக்கேன். ஆனா, இதுக்கெல்லாம் நான் துளியும் கவலைப்பட்டது கிடையாது. என்ன நமக்கு விதிக்கப்பட்டிருக்கோ, அதுதானே நடக்கும். ராத்திரி 12 மணிக்கு வெளியே போய் பார்த்தா தெரியும், எத்தனை பேர் தெருவோரம் படுத்திருக்காங்க... அவங்களை நினைக்கும்போது நம்ம வாழ்க்கை எவ்வளவோ பரவாயில்லைதான்."

''இன்றைய காமெடிகளை எப்படிப் பார்க்கிறீங்க?''

கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணமூர்த்தி

''எல்லா காமெடியும் பழசுதான். இன்று ஆள்கள், இடம் மாறியிருக்கு. திருவள்ளுவர் தாடியைத்தான் இப்போ ஃபேஷன்னு சொல்லிட்டு இருக்கோம். இப்படி எல்லாப் பழைய விஷயங்களையும் புதுசு மாதிரி காட்டிக்கிட்டு இருக்கோம். நான் 1980-களில் தலை நிறைய முடியோடு, ஸ்டைலாதான் இருந்தேன். அப்போ அந்த மாதிரி கெட்டப்ல நடிக்க முடியல. இப்போ, 2019-ல் பெல்பாட்டம், விக் வெச்சு நடிக்கச் சொல்றாங்க. எப்படி வாழ்க்கை நம்மளை மாத்துது பாருங்க.''

''குடும்பம் பற்றி?'

''நான், மனைவி, இரண்டு மகன்கள். பெரிய பையன் பெயர் பிரஷாந்த். என்னை ஜெராக்‌ஸ் எடுத்த மாதிரி இருப்பார். கார் ரேஸரா இருந்தார். இப்போ, கேமராமேன் ஆக முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கார். இரண்டாவது பையன் கெளதம் இயக்குநர் ஆக முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கார்.''

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு