காமெடி நடிகராக நமக்கு பரீச்சையமானவர், நடிகர் செந்தில். கவுண்டமணி - செந்தில் காம்போ இப்போதுவரையில் கொண்டாடப்பட்டு வருகிறது. செந்திலின் மூத்த மகனான மணிகண்ட பிரபு தற்போது பல் மருத்துவராக இருக்கிறார். அவருடைய மனைவி ஜனனியும் பல் மருத்துவர். ஓர் அழகிய மழைப் பொழுதில் அவர்களைச் சந்திக்கச் சென்றோம்.
மணிகண்ட பிரபு நம்மை வரவேற்று பேசத் தொடங்கினார். "எனக்கு சின்ன வயசில இருந்தே நடிக்கணுங்கிறதுதான் ஆசையா இருந்துச்சு. எங்க குடும்பத்தில் டாக்டருக்கு யாரும் படிக்கலைங்கிறதனால அப்பா என்னை டாக்டருக்குப் படிக்கச் சொன்னாங்க. அப்பாவுடைய ஆசைக்காக நானும் டாக்டருக்குப் படிச்சேன். படிச்சிட்டு இருக்கும்போதே 'உன்னை எனக்கு பிடிச்சிருக்கு'ன்னு ஒரு படத்தில் நடிச்சேன்.
பிறகு மருத்துவத்துறையிலேயே ஆர்வம் இருந்ததனால அதில் கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டேன். அப்பாவும் அதுதான் விரும்பினார். அடுத்தடுத்து படிப்பில் என்னென்ன பண்ணனும்னு யோசிச்சு பண்ணினேன். காலேஜ் படிச்சிட்டு இருக்கும்போதுதான் ஜனனியை காதலிச்சேன்" என்றவர் தன் காதல் மனைவியை நம்மிடம் அறிமுகம் செய்து வைக்கவும், ஜனனி தொடர்ந்தார்.
"எங்களுக்குச் சொந்த ஊர் மதுரை. எனக்கு இவரை ஃபர்ஸ்ட் டைம் தெரியும்போதே இவர் நடிகர் செந்தில் பையன் என்கிற விஷயம் தெரியும். நான், என் அண்ணன்லாம் பயங்கரமான கவுண்டணி - செந்தில் ஃபேன்ஸ். அவரோட பையன்னுதான் முதலில் அவரை பார்த்தேன். அவர் எந்தவித பந்தாவும் இல்லாம இயல்பா இருந்தாரு. அப்புறம் பேசி, பேசி காதலிக்க ஆரம்பிச்சிட்டோம். ரெண்டு பேர் வீட்டிலும் பெரிய அளவில் எதிர்ப்புலாம் இல்லை. ஆனா, ஆரம்பத்தில் இவர் நடிக்கப்போன சமயத்தில் இவரும் மீடியா ஃபீல்டுக்குள்ளே போய்டுவாரோங்கிற பயம் எனக்கு இருந்துச்சு. ஏன்னா, எங்க அப்பா என்னை ஒரு டாக்டருக்குத்தான் கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும்னு உறுதியா இருந்தாரு. இவரும் நான் நினைச்ச மாதிரியே டாக்டரானதால சுலபமா வீட்ல சம்மதிச்சிட்டாங்க.
என் மாமனார் ரொம்ப அமைதியா இருப்பார். முதலில் என்னை பார்த்தாலே பேசாம போய்டுவார். நானாதான் கூப்பிட்டுக் கூப்பிட்டு பேசுவேன். இப்போ நாங்க ரெண்டு பேரும்தான் நிறைய விஷயங்கள் ஷேர் பண்ணிப்போம். என் கணவர் வீட்ல ரெண்டு பசங்கங்கிறதனால என்னையும் சரி, பிரபுவோட தம்பி மனைவியையும் சரி என் மாமனாரும், மாமியாரும் பொண்ணுங்க மாதிரிதான் ட்ரீட் பண்ணுவாங்க" என்றதும் "மூஞ்சுக்கு முன்னாடி புகழாதம்மா..." எனச் சொல்லி பிரபு தொடர்ந்தார்.
"கவுண்டமணி அங்கிள் அப்பாகூட பேசிறதில்லைன்னு நிறைய வதந்திகள் வருது. ஆனா, அப்பாவும், அங்கிளும் இப்போவரைக்கும் பேசிட்டுத்தான் இருக்காங்க. அவங்களுக்குள்ள அண்ணன் - தம்பி உறவு இப்போவரைக்கும் இருக்கு. அவங்களுடைய காம்போவை எல்லாரையும் போல நானும் நிச்சயமா மிஸ் பண்றேன்.
அப்பா வெறும் காமெடி நடிகராக மட்டும் இருக்கக்கூடாது. அவர் பல ஜானர்களில் படம் பண்ணனும்னு ஆசைப்பட்டேன். இப்போ ஒரு படத்துல வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அப்படி ஒரு கேரக்டரில் அவரை பார்க்க நான் ரொம்ப ஆர்வமா இருக்கேன். இவ்வளவு வயசாகியும் அதே எனர்ஜியோடும், தன்னம்பிக்கையோடும் நடிக்கிறார்னு எங்களுக்கு ரொம்பவே சந்தோஷம்.
விவேக் எங்களுக்குக் குடும்ப நண்பர். அவருடைய இழப்பை இப்போவரைக்கும் எங்களால ஏத்துக்க முடியலை. அவர் இறந்ததுக்கு போகணும்னு அப்பா ரொம்ப வற்புறுத்துனார். ஆனா, அந்தச் சமயம் எங்க குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் கோவிட் ஐசோலேஷனில் இருந்தோம். அதனால அவருடைய கடைசி அஞ்சலியில் எங்களால கலந்துக்க முடியாம போச்சு. அந்த வருத்தம் இப்போ வரைக்கும் அப்பாவுக்கு இருக்கு" என்றதும் ஜனனி தொடர்ந்தார்.
"மாமாவும், அத்தையும் ரொம்பவே ஸ்வீட். எங்க பொண்ணு, மாமாவை ரொம்ப படுத்துவா. இப்போ கொஞ்சம் பரவாயில்லை. எங்களுக்கு பொண்ணு பொறந்ததும் அவருக்கு அவங்க அம்மாவே மறுபடி பொறந்திருக்காங்கன்னு ரொம்ப சந்தோஷம். வீட்ல தாத்தா - பேத்தி சேட்டை அதிகமா இருக்கும்!" எனப் புன்னகைக்க... செல்ல மகள் ஓடிவந்து அவரைக் கட்டிக் கொள்ள அவர்களிடமிருந்து விடைபெற்றோம்.
படங்கள் - சுரேஷ் கிருஷ்ணா