சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

“வடிவேலுவுடன் நடிக்க நான் ரெடி, அவர் ரெடியா?”

சிங்கமுத்து
பிரீமியம் ஸ்டோரி
News
சிங்கமுத்து

படங்கள்: சுரேஷ்கிருஷ்ணன்

வடிவேலுவுக்கு காமெடி ட்ராக் எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், அ.தி.மு.க பேச்சாளர் என்று அசோக ஸ்தூபி சிங்கங்கள்போல் பல முகங்களைக் கொண்டவர் சிங்கமுத்து. சமீபத்திய படப்பிடிப்பு ஒன்றில் காலில் அடிபட்டதால், இரண்டு வார ஓய்வில் இருக்கிறார் மனிதர்.

‘`எந்தப் படத்தின் ஷூட்டிங்ல அடிபட்டதுன்னு கரெக்ட்டா தெரியல. ‘கலகலப்பு 2’ல யோகிபாபுவோட நடிக்கறப்ப, யதேச்சையா யாரோ கால்ல வந்து மோதி விழுந்துட்டாங்க. அப்புறம், ஒரு ரெண்டு படப்பிடிப்பிலும் ‘பட்ட கால்லேயே பட்டுச்சு.’ யார் குற்றமும் இல்ல. நடக்க வேண்டியது நடந்துபோச்சு. அதனால, எழுந்து நடக்க முடியல. டாக்டர் அட்வைஸ் படி, இப்ப ரெஸ்ட்ல இருக்கேன் தம்பி’’ வலியை மறைத்துக் கொண்டு கலகலக்கும் சிங்கமுத்துவிடம் பேசினேன்.

“வடிவேலுவுடன் நடிக்க நான் ரெடி, அவர் ரெடியா?”

``ரஜினி மாதிரி நீங்களும் கண்டக்டராக இருந்து சினிமாவுக்கு வந்திருக்கீங்க..?’’

‘`நெசந்தான். என் குடும்பம் ரொம்பப் பெருசு. விவசாயக் குடும்பம். அக்கா, தம்பி, தங்கச்சின்னு இருந்தாலும் ஆம்பளப்பையன்னால, குடும்பத்துல மூத்தவனாகிட்டேன். எங்க அப்பாவெல்லாம் பர்மால இருந்து நடந்தே இந்தியா வந்தவர். மதுரை திருமங்கலத்துலதான் பிறந்தேன். நான் பி.யூ.சி படிச்சு முடிச்சதும், திருப்பத்தூர்ல பி.எஸ்ஸி சேர்ந்தேன். நெல்லு வெளஞ்சாதான் வருமானம், மத்தபடி வானம் பார்த்த வயலு மாதிரிதான் என் குடும்பச் சூழல். வருமானம் இல்ல. அதனால படிப்பை முதல் வருஷத்தோட நிறுத்த வேண்டியதாகிடுச்சு. நான் படிச்ச கல்லூரியில் என் பி.யூ.சி கிளாஸ்மேட் தங்கவேலு பெரிய பொறுப்புல இருந்தார். அவர்கிட்ட ஏதாவது வேலை இருந்தா குடுங்கன்னு கேட்டேன். அவர்கிட்ட பஸ்கள் இருந்ததால, என்னை கண்டக்டர், செக்கிங் இன்ஸ்பெக்டர்னு பார்க்கச் சொன்னார். அதுல நாலரை வருஷம் வேலை பார்த்தேன். ஒருநாள், என் வாழ்க்கை இப்படி கண்டக்டராகவும் டிரைவராகவுமே போயிடுமோன்னு தோணுச்சு. அடுத்த கட்டத்துக்குப் போக விரும்பினேன். ரைஸ்மில்ல கணக்குப்பிள்ளை வேலை, பால் கறந்து கடைகளுக்குக் கொடுக்கற வேலை, அரியலூரைச் சுத்தி இருக்கற 36 ரைஸ்மில்களுக்கு நெல் சப்ளை பண்ற வேலைன்னு தீயா ஏழு வருஷம் உழைச்சேன். அதன் பிறகு, சென்னை வந்தேன். எம்.ஜி.ஆர் நகர்ல அரிசி மண்டி ஆரம்பிச்சேன். அங்கேதான் சினிமாக்காரங்க நிறைய பேர் அறிமுகமானாங்க. அங்கே அறிமுகமான இயக்குநர் மனோஜ்குமார் அவரது ‘மருதுபாண்டி’ உட்பட பல படங்கள்ல எனக்கும் ஒரு கேரக்டர் கொடுத்தார். அதன் பிறகு நடிப்பையே தொழிலாக எடுக்க ஆரம்பிச்சிட்டேன்.’’

“வடிவேலுவுடன் நடிக்க நான் ரெடி, அவர் ரெடியா?”

``மறுபடியும் நடிக்க வர்றாரே வடிவேலு...’’

‘`நல்லா வரட்டுமே! அவர் பிரமாதமான நடிகர். அவரோட கூட இருந்தவன் நான். ஒரு விஷயம் சொன்னா... கற்பூரமா புடிச்சுக்குவார். ஆனா, அவர் நல்ல மனிதரா மாறணும். என்னோட பாவம்தான் அவரைப் பத்து வருஷம் பழிவாங்கிடுச்சுன்னு சொல்றதைவிட, அவரோட முற்பிறவியில் செய்த வினைகளால் நிறைய பாதிக்கப்பட்டார்னு சொல்லணும். எடுத்ததுக்கெல்லாம் சந்தேகப்படுறவர் அவர். சிங்கமுத்து நல்ல சட்டை போட்டிருந்தாலும் அது அவரோட காசுல வாங்கின சட்டையா இருக்குமோன்னுதான் நினைப்பார். அவரைப் பத்திச் சொல்லணும்னா, சொல்லிக்கிட்டே போகலாம். வேணாம். மறுபடியும் நடிக்க வந்திருக்கார். சந்தோஷம்தான். எங்களுக்கு வர்ற வாய்ப்பும் வந்துட்டுதான் இருக்கும். என் பையன் வாசன் கார்த்தி நடிக்க வந்தது, அவருக்கு சுத்தமா பிடிக்கலை.”

“வடிவேலுவுடன் நடிக்க நான் ரெடி, அவர் ரெடியா?”

``வடிவேலுவுடன் சேர்ந்து நடிக்க நீங்க தயாரா?’’

‘`நான் ரெடி. அவர் ரெடியா? எனக்கு யாரும் எதிரி கிடையாது. என்னைச் சித்திரவதை பண்ணி, கோர்ட் படியேற வச்சு... ஜெயில்லேயும் என்னை ஒருநாள் இருக்க வச்சதுல, அவருக்கே குற்ற உணர்ச்சி உண்டு. அதனால என்னைப் பார்க்கக்கூட மாட்டார். அப்ப அவர் தி.மு.க-வுக்கு ஆதரவா இருந்தார். நான் அப்ப அ.தி.மு.க-வின் பேச்சாளராக இருந்தேன். அப்ப அ.தி.மு.க ஆட்சி. எத்தனையோ பேர் ‘நீ புகார் கொடு, அவரைத் தூக்கி உள்ளே வச்சிடுறோம்’ன்னாங்க. ஆனா, நான் பழிவாங்கல. அப்ப நான் நினைச்சிருந்தா, பத்து கம்ளையின்ட் கொடுத்து, அவரைப் பத்துநாளாவது உள்ளே வச்சிருப்பேன். ஆனா, பண்ணல. ஏன்னா, அவரோட உண்மையா இருந்தேன். ஒண்ணா சாப்பிட்டிருப்போம். லொகேஷன் போயிருப்போம். பத்து வருஷமா நானும் அமைதியா இருந்தேன். இனிமேலும் அமைதியாதான் இருப்பேன்.’’

``உங்க பையன் ஹீரோவானார். அப்புறம் என்னவானார்?’’

‘` ‘மாமதுரை’, ‘அய்யன்’னு அவர் நடிச்ச ரெண்டு படங்களுக்கும் இளையராஜா சார் இசையமைச்சார். என் பையன் திடீர்னு படிக்கப் போறேன்னார். அவங்க அம்மாவும், ‘படிக்கணும்னா படி. எப்ப வேணா நடிக்கலாம்’னு சொன்னதால, டிகிரி முடிச்சார். அப்புறம் பெங்களூர்ல சட்டம் படிச்சார். ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டார். இப்ப மறுபடியும் நடிக்க ரெடியாகிட்டார்.’’