Published:Updated:

" ‘சங்கத்தமிழன்’ல நான் ஹீரோ; விஜய் சேதுபதிதான் காமெடியன். ஜந்தோஷமா?!’’ - சூரி

சூரியுடன் நடத்திய ஒரு குட்டி உரையாடல்...

Actor Soori
Actor Soori

`சிவகார்த்திகேயன் - சூரி’ கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’; நீண்ட நாள்களுக்குப் பிறகு விஜய் சேதுபதியோடு நடித்திருப்பது; சிக்ஸ் பேக் - வெற்றிமாறன் படம் என எந்தக் கேள்வியைக் கேட்டாலும், தனது ஸ்டைலிலேயே பதில்களைச் சொல்கிறார், சூரி. அவருடன் நடத்திய ஒரு குட்டி உரையாடலில் இருந்து...

"உங்க காமெடிக்கு யார் ரோல் மாடல்?"

Soori with his father
Soori with his father

’’என் அப்பாதான். எங்க ஊருல இருக்கிற எல்லாரும், ‘உங்க அப்பா முத்துசாமி அளவுக்கு யாராலும் காமெடி பண்ண முடியாது; அவர் பேச ஆரம்பிச்சா, ஒரு நாள் முழுக்க உட்கார்ந்து கேட்கலாம்’னு சொல்லுவாங்க. என்னோட பாடி லாங்குவேஜ், ஸ்லாங் எல்லாமே என் அப்பாகிட்ட இருந்து வந்ததுதான். ’ச’க்கு பதிலா ’ஜ’ போட்டு, ஜந்தோஷம், ஜாம்பார்னு நான் சொல்றதெல்லாம் அவர் சொன்னதுதான். அவரோட திறமைகளில் நான் பார்த்து கத்துக்கிட்டது கொஞ்சம்தான். இன்னும் எவ்வளவோ திறமைகள் எங்க அப்பாக்குள்ள இருந்துச்சுனு எங்க ஊர்க்காரங்க சொல்லியிருக்காங்க.’’

"வெற்றிமாறன் படத்தில் ஹீரோவாக நடிக்கிறீங்களே; அதைப் பற்றிச் சொல்லுங்க..?"

’’அவரோட டைரக்‌ஷனில் நடிக்க பயங்கர ஆர்வமா இருக்கேன். ஏன்னா, அவர் ரொம்ப பெரிய டைரக்டர். அவர் சொன்ன கதையும் ரொம்ப நல்லா இருந்துச்சு. அந்த மாதிரியான ஒரு கதையில் நான் இருக்கேன்னு நினைக்கும் போது பெருமையா இருக்கு. இந்தப் படத்தைப் பற்றி இப்போதைக்கு என்னால அதிகம் சொல்ல முடியாது.’’

"சிக்ஸ் பேக்கெல்லாம் வெச்சு மிரட்டுறீங்களே..?"

Soori Six pack
Soori Six pack

‘’சிக்ஸ் பேக்னு சொன்னதும் அதுக்காக நான்பட்ட கஷ்டங்கள்தான் என் கண்ணு முன்னாடி வருது. என் உயிருக்கு உயிரான பழைய சோத்தையும், பச்ச மிளகாயையும் ரொம்ப மிஸ் பண்றேன். ஏன்னா, அது இல்லாம என்னால இருக்க முடியாது. ஆனால், சிக்ஸ் பேக் மெயின்டெயின் பண்ணணும்னு அதெல்லாம் சாப்பிடாம இருக்கேன். இருந்தாலும் இந்த மாற்றம் நல்லாத்தான் இருக்கு.’’

"ஹீரோவாகிட்டா காமெடியனா நடிக்க மாட்டீங்களா..?"

’’எனக்கு காமெடிதாங்க மெயின். ஏன்னா, கலைத்தாய் எனக்கு காமெடியன்கிற மிகப் பெரிய ரோலை கொடுத்திருக்காங்க. அதை வெச்சுக்கிட்டு நான் மக்களை சந்தோஷப்படுத்தணும். ஹீரோவா படம் வந்தா அதைப் பண்ணுவேன். அடுத்து காமெடியனாகவும் நடிப்பேன். கண்டிப்பா காமெடியனை விடமாட்டேன்.’’

" ’நம்ம வீட்டுப் பிள்ளை’ படம் எப்படி வந்திருக்கு..?"

Soori with Sivakarthikeyan
Soori with Sivakarthikeyan

’’பாண்டிராஜ் அண்ணன் படம்னா குடும்பத்தோடுப் பார்க்கலாம்னு ஒரு பேச்சு இருக்கு. அதுக்கு ஏற்ற மாதிரி இந்தப் படமும் பக்கா குடும்பப் படமா வந்திருக்கு. அண்ணனை மிஸ் பண்ற தங்கைகளும், தங்கைகளை மிஸ் பண்ற அண்ணன்களும் மறக்காம பார்க்க வேண்டிய படம். எனக்கும் சிவகார்த்திகேயன் தம்பிக்கும் இடையே இருக்கிற புரிதல் ஒவ்வொரு படத்துக்கும் அதிகமாகிட்டே இருக்கு. அது இந்தப் படத்துல பயங்கரமா வொர்க்அவுட் ஆகியிருக்கு.’’

"உங்களோட ஒவ்வொரு படம் ரிலீஸாகும் போதும் யார்கிட்ட விமர்சனம் கேட்ப்பீங்க?"

’’பல நண்பர்கள் இருக்காங்க; அவங்க எல்லாரும் போன் பண்ணி படம் எப்படி இருந்துச்சுனு சொல்லுவாங்க. என்னதான் நண்பர்கள் சொன்னாலும் நான் போய் ரசிகர்களோடு உட்கார்ந்து படம் பார்த்துதான் முடிவு பண்ணுவேன். எந்தப் படம் வந்தாலும், ஏரியாவுக்குள்ள இருக்கிற ஒரு தியேட்டரில் மக்களோடு மக்களா அவங்களுக்கு தெரியாமல் உட்கார்ந்து படம் பார்ப்பேன். எந்த சீனுக்கு என்ன ரெஸ்பான்ஸ்னு அவங்களோடு உட்கார்ந்து பார்க்கும் போது தெரிஞ்சுப்பேன்.’’

"விஜய் சேதுபதியோடு நடிச்சிருக்கிற ’சங்கத்தமிழன்’ படத்தைப் பற்றிச் சொல்லுங்க..?"

Soori with vijay sethupathi
Soori with vijay sethupathi

’’ரொம்ப நாள் கழிச்சு என் மாமா விஜய் சேதுபதிகூட நடிச்சிருக்கேன். இதுவரைக்கும் நான் பண்ணாத டைப்ல ஒரு ரோல். இந்தப் படத்தில் நாங்க ரெண்டு பேரும் நண்பர்களா நடிச்சிருந்தாலும், ’சார், சார்’னுதான் கூப்பிட்டுப்போம். இந்தப் படத்தைப் பொறுத்தவரைக்கும், நான் ஹீரோ; அவர் காமெடியன். அப்படினு சொல்லி, என்னை வெச்சி செஞ்சிருக்காங்க.’’