Published:Updated:

எங்க கூட்டணி காமெடி கூட்டணி!

‘அம்பானி’ சங்கர் - கிங்காங்
பிரீமியம் ஸ்டோரி
‘அம்பானி’ சங்கர் - கிங்காங்

படங்கள்: சுரேஷ் கிருஷ்ணா

எங்க கூட்டணி காமெடி கூட்டணி!

படங்கள்: சுரேஷ் கிருஷ்ணா

Published:Updated:
‘அம்பானி’ சங்கர் - கிங்காங்
பிரீமியம் ஸ்டோரி
‘அம்பானி’ சங்கர் - கிங்காங்
வைகைப்புயல் வடிவேலுவின் காமெடி டீமில் அதிரிபுதிரியாக அதகளப்படுத்தியவர்களில் கிங்காங்கிற்கும், ‘அம்பானி’ சங்கருக்கும் தனியிடம் உண்டு. அதிலும் கிங்காங், நான்கு மொழி சூப்பர் ஸ்டார்களுடன் நடித்தவர். ‘அம்பானி’ சங்கர், மதுரை ஸ்லாங் தமிழில் பிச்சு உதறுபவர். தங்கள் உயரங்களைத் தாண்டிய உயரத்தைப் பிடித்தவர்கள் இவர்கள். சமீபத்தில் இவர்களின் 14 இயர் சேலஞ்ச் புகைப்படம் சமூக வலைதளங்களில் செம வைரலாக... இருவரையும் ஒரு போன்காலில் பிடித்தேன். இனிக்கும் சந்திப்பு விகடன் அலுவலகத்திலேயே நிகழ்ந்தது.
எங்க கூட்டணி காமெடி கூட்டணி!

ஸ்கூட்டியை சங்கர் ஓட்டிக்கொண்டு வர, பைக்கின் பின் சீட்டில் ஹெல்மெட் போட்டபடி இருந்த கிங்காங், பைக்கை விட்டு இறங்கியதும் ‘`நண்பேன்டா’’ என ஃபீலாக, ‘`நாலு மாசத்துக்குப் பிறகு லாங் டிரைவ் வந்திருக்கோம். வடபழனி டு மவுன்ட் ரோடு வரைன்னு என்ன்னா... ஒரு ட்ராபிக்’’ என சங்கர் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கியபடி பைக்கை ஓரங்கட்டினார். ‘`சைக்கிள் ஓட்டுறவன்கூட இவ்ளோ மூச்சு வாங்கியிருக்க மாட்டான்...’’ கிங்காங் தன் சன்கிளாஸைப் போட்டபடி சிரிக்க... சங்கரும் அதில் இணைந்துகொண்டார்.

``திடீர்னு என்ன 14 இயர்ஸ் சேலஞ்ச் போட்டோஷூட்?’’

சங்கரே ஆரம்பித்தார்... ‘`கிங்காங்கோட ரொம்ப வருஷமாவே நட்பா இருக்கேன். படங்கள்ல சேர்ந்து நடிக்கலைனாலும், நாங்க அடிக்கடி சந்திச்சுப் பேசிக்குவோம். அப்படித்தான் ஒருநாள் சந்திச்சப்ப, சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக்கிட்டோம். அதை நாங்க எங்க இன்ஸ்டாவுல பதிவிட்டோம். அதை யாரோ எடுத்து, ‘பிறவி’ன்னு ஒரு படத்துல சேர்ந்து நடிச்ச ஸ்டில்லையும் போட்டு, 10 இயர்ஸ் சேலஞ்ச்னு மீம்ஸா பண்ணியிருந்தாங்க. உண்மையில், இது 14 வருஷ சேலஞ்ச். ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ல நடிக்கும்போது கிங்காங் அண்ணனை ஸ்பாட்ல பாத்திருக்கேன். அதுல எங்க காம்பினேஷன் இல்லேனாலும், எங்க ரெண்டு பேரோட சீனையும் அன்னிக்கு ஒரே நாள்ல ஷூட் பண்ணினாங்க.’’ பக்கத்தில் புன்னகைத்த கிங்காங்கைத் தோளோடு அணைத்துக் கொண்டார் ‘அம்பானி’ சங்கர். கூலிங்கிளாஸை சரிசெய்தபடி பேச ஆரம்பித்தார் கிங்காங்.

எங்க கூட்டணி காமெடி கூட்டணி!

“திருவண்ணாமலை பக்கம் வரதராஜபுரம்னு ஒரு குக்கிராமத்துல பிறந்தேன். அப்பவும் நான் இதே உயரம்தான். ரெண்டு, ரெண்டரை அடிதான் இருப்பேன். நான் அஞ்சாவது படிக்கும் போதே நாடகத்துல பபூனா நடிச்சேன். இன்னொரு பைல வச்சிருக்கற கைப்பையில இருந்து என்னை வெளியே எடுத்துக் காட்டுவாங்க. நாடகங்கள்ல என்னுடைய இன்ட்ரோ சீன் அதான். ஜனங்க என்னை ரசிக்கவும், அப்படியே சினிமா ஆசை துளிர்விட்டுச்சு’’ எனச் சொல்லி முடிக்கவும் ‘அம்பானி’ சங்கரும் தன் கதையைச் சொல்லத் தொடங்கினார்.

“மதுரை திருமங்கலம்தான் என்னோட ஊரு. பத்தாவது முடிச்சிட்டு, கம்ப்யூட்டர் டிப்ளமோ படிச்சிருக்கேன். பாட்மின்டன், ரன்னிங்ல தேசிய அளவில கோல்டு மெடல்களும் வாங்கியிருக்கேன். சின்ன வயசில இருந்தே சினிமாவுல நடிக்கணும்னு ஆசை. அதுக்குக் காரணம், எங்க அப்பா. என்னை சினிமாவுல நடிக்க வச்சிடணும்னு விரும்பினார். நுங்கம்பாக்கத்துல இருக்கற ஒருத்தர் வீட்டுக்குப் போயிருந்தபோது அங்கே பக்கத்துத் தெருவுல பாக்யராஜ் சார் ஆபீஸ் இருக்குன்னு தெரிஞ்சது. என்னோட நல்லநேரம் சாரைப் பார்த்தேன். பாக்யா பத்திரிகையிலேயே என்னை வேலைக்குச் சேர்த்துக்கிட்டார். எட்டு மாசம் அங்கே இருந்தேன். அந்த டைம்ல லிங்குசாமி சார் பாக்யராஜ் சாரைப் பார்க்க வந்திருந்தார். அவர்கிட்ட நடிக்க வாய்ப்பு கேட்டேன். ‘ஜி’யில நடிக்க வச்சிட்டார். அங்கிருந்து வரிசையா படங்கள். சினிமாவுல நானும் பாஸாயிட்டேன்...’’ குஷியான சங்கரைத் தட்டிக்கொடுத்த கிங்காங்... தன் டர்னிங் பாயின்ட் சீன் பற்றியும் மனம் திறந்தார்.

எங்க கூட்டணி காமெடி கூட்டணி!

‘` `அதிசயபிறவி’யில் நான் பிரேக் டான்ஸ் ஆடுற சீன் ரொம்ப ரீச். அந்த சீன்ல ரஜினி சார் கட்டில்ல படுத்திருப்பார். நான் டான்ஸ் ஆடிக்கிட்டிருப்பேன். அப்ப அவர் சொன்ன ஐடியாதான், ‘டேப் ரெக்கார்டர்ல நான் அப்பப்ப பாட்டை நிறுத்துவேன். அப்படி ஸ்டாப் பண்ணும்போது, நீங்க உங்க டான்ஸையும் ஸ்டாப் பண்ணிடுங்க’ன்னார். அப்ப அவர் சொன்னதைக் கேட்டேன். அது இவ்ளோ பெரிய ரீச் ஆகும்னு நினைச்சதில்ல. அந்த சீனுக்குப் பின்னாடி ஒரு ஃப்ளாஷ்பேக்கும் இருக்கு. அதுக்கு முன்னாடி ஸ்பாட்ல கிளாப் அடிக்கும்போது தலையில பட்டு ரத்தம் சொட்ட ஆரம்பிச்சிடுச்சு. வலியோட அதுல நடிச்சு முடிச்சிட்டு அப்புறம்தான் விஷயத்தை ஸ்பாட்டுல சொன்னேன். உடனே ரஜினி சார் அவரோட உதவியாளரைக் கூப்பிட்டு என்னை அவரோட கார்லேயே ஹாஸ்பிட்டல் கூட்டிப் போய், தையல் போட வச்சார். மூணு தையல் போட்ட வலி இருந்தாலும் ரஜினி சாரோட நடிச்சதால வலியே தெரியாமல் அந்த பிரேக் டான்ஸை ஆடியிருப்பேன். பல வெளிநாடுகளுக்குக் கலை நிகழ்ச்சி போனபோதும், அந்த பிரேக் டான்ஸை ஆடச் சொல்லிக் கேட்பாங்க. சந்தோஷமா இருக்கும்’’ என குஷியான கிங்காங்கைத் தன் இடுப்பில் தூக்கி வைத்து மகிழ்ந்தார் சங்கர்.

எங்க கூட்டணி காமெடி கூட்டணி!

‘`வெறும் சங்கரா இருந்த நான், ‘அம்பானி’ சங்கர் ஆனதுக்கு காரணமே கருணாஸ் அண்ணனோட ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ படம்தான். ‘அந்த ஏழு நாட்கள்’ல பாக்யராஜ் சார் கூட காஜா ஷெரிஃப் சார் எப்படி படம் முழுக்க வருவாரோ, அப்படி நான் கருணாஸ் சாரோட படம் முழுக்க வரும் ரோல். இதுக்கு முன்னாடி படங்கள்ல சின்னச் சின்ன காமெடி ரோல்கள்ல தான் பண்ணியிருப்பேன். ஆனா, ‘அ.அ’ படம்தான் எனக்கு டர்னிங் பாயின்ட் கொடுத்த படமாச்சு.

என்னோட ரோல்மாடல்னா வடிவேலு அண்ணன்தான். ‘ஆறு’ படத்துல இருந்து அவரோட சேர்ந்து நடிச்சேன். ‘எந்த ஊருடா’ன்னார். மதுரையில திருமங்கலம்ண்ணேனு சொன்னேன். உடனே அவர் ‘எத்தனை பேருதான்டா மதுரையில இருந்து வருவீங்க’ன்னு சொல்லிட்டு, தன் அசிஸ்டென்ட்ஸ் பக்கம் திரும்பி, ‘டேய், இவன் நம்பரையும் வாங்கி வச்சிக்கங்கடா...”ன்னு சொன்னது இன்னும் ஞாபகத்துல இருக்கு. அப்புறம் ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ல வண்டிக்கு முன்னாடி கீழே விழுற சீன். நடிச்சேன். ‘இந்த ஒரு சீனுக்குத்தான் கூப்பிட்டாங்களா? கூட ரெண்டு சீன் நடிக்க வச்சிருக்கலாம்’னு அப்ப ஒரு ஃபீலிங் இருந்துச்சு. ஆனா, அந்த ஒரு சீன் என்னைப் பெரிய அளவுல ரீச் ஆக வச்சது. அவரோட நாலஞ்சு படங்கள் நடிச்சிருப்பேன். இப்போ நான் ‘thirsty crow’ என்ற பெயரில் யூடியூப்பில் பல காமெடி நிகழ்ச்சிகளைப் பண்ணிட்டிருக்கேன்’’ சங்கர் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்க... அப்பவும் அதே ஹைட்.

கிங்காங்கும் ஃபீலிங் பார்ட்டியானார். ‘`கமல் சாரோட ‘மகராசன்’ல இருந்து வடிவேலு சாரோட டிராவல் ஆக ஆரம்பிச்சேன். அவரோட நாற்பது படங்கள் சேர்ந்து பண்ணியிருக்கேன். அவரோட நடிச்ச படங்கள் அடிக்கடி டி.வி.யில போடுறதாலும், அவரோட மீம்ஸ்கள்ல நாங்களும் வந்துட்டு இருக்கறதாலும் எந்த லாக்டௌனிலும் யாரும் எங்கள மறக்கலை. சின்னச்சின்ன படங்கள் நடிச்சு முடிச்சதே ஒரு லிஸ்ட் நீளும். இப்பத்தான் தியேட்டர்கள் ஓப்பன் ஆனதால, நாங்க வெயிட்டிங்’’ என கிங்காங் சொல்ல.. ‘`பட வாய்ப்புகள் இல்லேன்னாலும் கச்சேரி, கலைநிகழ்ச்சிகள்னு சுத்துவோம். கையில கொஞ்சம் காசு தேறும். கொரோனாவினால் எங்கேயும் பறக்க முடியல. மத்தபடி வீ ஆர் ஆல் ஹேப்பி’’ என்கிறார்கள் கோரஸாய்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism