Published:Updated:

கவுண்டமணியின் சுவாரஸ்யமான முரண் Vs வடிவேலுவின் தனித்துவம்!

வடிவேலு
வடிவேலு

ஒன்று... நன்றாகக் கவனித்துப்பாருங்கள், எல்லோருமே அன்றாட வாழ்க்கையில் ஒருநாளில் ஒருமுறையாவது வடிவேலுவின் வசனத்தை உச்சரித்துவிடுகிறோம்.

பாரதிராஜாவின் பழைய படங்களில் காந்திமதியோ வடிவுக்கரசியோ ஒவ்வொரு காட்சியிலும் பல பழமொழிகளையும் சொலவடைகளையும் பொழிந்து தள்ளுவதைப் பார்த்திருப்போம். ஆனால், கிராமத்திலிருந்து நகரத்துக்கு நாம் நகர நகர நம்மிடமிருந்து பழமொழிகளும் சொலவடைகளும் விடைபெற்றுவிட்டன. சென்ற தலைமுறைக்காரர்களே இப்போது பழமொழிகளையும் சொலவடைகளையும் சொல்வது அரிதாகிவிட்டது. ஆனால், ஒன்று... நன்றாகக் கவனித்துப்பாருங்கள், எல்லோருமே அன்றாட வாழ்க்கையில் ஒருநாளில் ஒருமுறையாவது வடிவேலுவின் வசனத்தை உச்சரித்துவிடுகிறோம்.

'வர்ரும் ஆனா வராது', 'வடை போச்சே...', 'இப்பவே கண்ணைக் கட்டுதே' என்று வடிவேலுவின் வசனங்கள் பழமொழிகள், சொலவடைகளின் இடங்களை நிரப்பி விட்டன. பழமொழிகளும் சொலவடைகளும் மொழிக்களஞ்சியம் என்றால் வடிவேலுவின் வசனங்களும் இப்போது நம் மொழிக் களஞ்சியமாக, பண்பாட்டின் அங்கமாக மாறிவிட்டன. நம் வாழ்க்கையின் எல்லாச் சூழலுக்கும் ஒரு வடிவேலு வசனம் இருக்கிறது. மீம்கள் ஆரம்பித்து நகைச்சுவை சேனல்கள் வரை அத்தனையையும் ஆக்கிரமித்திருக்கிறார் வடிவேலு. மொத்தத்தில் வடிவேலு நம் பண்பாட்டின் அடையாளமாக மாறியிருக்கிறார்...

வடிவேலு
வடிவேலு

...தமிழ் சினிமாவில் சாதனையாளர்களைப் பட்டியலிட்டால் 50 பேராவது வருவார்கள். அந்தப் பட்டியலில் வடிவேலுவுக்கும் முக்கியமான இடமுண்டு. குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள், நோயாளிகள், மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்று வடிவேலுவை ரசிக்காத தமிழர்களே கிடையாது. சரியாகச் சொல்லப்போனால் இளையராஜாவுக்குப் பிறகு எல்லாத்தரப்பு தமிழர்களாலும் கொண்டாடப்பட்ட ஆளுமை வடிவேலு.

இதற்கு முன்பும் நகைச்சுவை நடிகர்கள் செல்வாக்கு பெற்று விளங்கினார்கள். ஒரு படத்தை எடுத்து முடித்தபிறகு, 'இது ஓடுமா, ஓடாதா' என்று சந்தேகம் வந்தால் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் - டி.ஏ.மதுரம் காமெடி டிராக்கைத் தனியாக எடுத்து சேர்த்தது உண்டு. சந்திரபாபு, நாகேஷ், தங்கவேலு என்று சிறந்த நகைச்சுவை நடிகர்கள் தமிழில் உண்டு.

- சுகுணா திவாகர் எழுதியுள்ள கட்டுரையை, ஜூ.வி 2020 சிறப்பிதழில் முழுமையாக வாசிக்க > நம் பண்பாட்டின் அடையாளம் வடிவேலு! https://cinema.vikatan.com/celebrity/actor-vadivelu-is-identity-of-our-culture

80-90-களில் தமிழ் சினிமாவில் கவுண்டமணி - செந்தில் ராஜ்ஜியம்தான். கவுண்டமணியும் தனித்துவமான கலைஞர் என்பதிலும் இன்றைக்கும் கவுண்டமணி நகைச்சுவைக் காட்சிகள் ரசிக்கத்தக்கவை என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால், அடித்து உதைப்பது என்பதே அவருடைய நகைச்சுவையின் முதன்மை அம்சம். அதைவிட முக்கியமானது நிறத்தையும் தலை வழுக்கையையும் அவரது பல நகைச்சுவைகள் இழிவுபடுத்தின. செந்திலின் நிறத்தையும் வழுக்கைத் தலையையும் கவுண்டமணி விதவிதமாக வர்ணித்திருக்கிறார். இதில் சுவாரஸ்யமான முரண், கவுண்டமணியின் நிறமும் கறுப்பு; அவர் தலையும் வழுக்கை.

வடிவேலுவின் நகைச்சுவையில் பிரச்னைகள் இல்லாமல் இல்லை. ஆனால் அவரது நகைச்சுவை, அதற்கு முன்பான தமிழ் சினிமா நகைச்சுவையிலிருந்து தனித்துவம் அடைந்தது, சுய பகடிதான். எல்லா மனிதர்களுக்கும் அவரவர்கள்தான் ஹீரோ; சாகச நாயகர்கள். ஆனால், வெளியில் ஆயிரம் உதார் வீரம் காட்டினாலும் உள்ளுக்குள் அவர்கள் யார் என்பது அவர்களுக்கே தெரியும். இதைக் காட்சிப்படுத்தியதுதான் வடிவேலு நகைச்சுவையின் வெற்றி. அவர் தன்னைத்தானே கிண்டலடித்துக்கொண்டார் சார்லி சாப்ளினைப்போல. ஆனால், அது பார்வையாளர்களுக்கான சுயவிமர்சனமாக அமைந்தது.

வடிவேலு
வடிவேலு

எல்லா மனிதர்களும் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், நிறத்தின் பெயரால், பால் அடையாளத்தின் பெயரால், அரசியலின் பெயரால், பார்க்கும் வேலையின் பெயரால், பதவியின் பெயரால் அதிகாரம் செய்ய ஆசைப்படுகிறோம். ஆனால், அத்தனையும் உதார் வீரம் என்பதை வெளிப்படையாகப் போட்டுடைத்தன வடிவேலுவின் காமெடிகள். கைப்புள்ள, பேக்கரி வீரபாகு, படித்துறை பாண்டி, நாய் சேகர் முதல் இம்சை அரசன் வரை இந்த உதார் வீரத்தைக் கிண்டலடித்தன. இது பார்வையாளர்களான தங்களையும் சேர்த்தே கிண்டலடிக்கின்றன என்று தெரிந்துதான் தமிழர்கள் ஆரவாரமாக ரசித்தார்கள்...

- சுகுணா திவாகர் எழுதியுள்ள கட்டுரையை, ஜூ.வி 2020 சிறப்பிதழில் முழுமையாக வாசிக்க > நம் பண்பாட்டின் அடையாளம் வடிவேலு! https://cinema.vikatan.com/celebrity/actor-vadivelu-is-identity-of-our-culture

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு