Published:Updated:

விஜய்யை அடுத்து விஜய் தேவரகொண்டா! - சர்ச்சையைக் கிளப்பிய போஸ்டர்

விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்தின் போஸ்டருக்கு தெலங்கானாவில் புகார்கள் குவிந்துள்ளதையடுத்து, டொபாகோ மானிட்டர் நிர்வாகம், தெலங்கானா அரசுக்குப் புகார் மனுவை சமர்ப்பித்துள்ளது.

விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் தயாராகியுள்ள `வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில், விஜய் தேவரகொண்டா கையில் சிகரெட்டைப் பிடித்திருப்பதுபோன்ற தோற்றம் இடம்பெற்றுள்ளது.

சிகரெட்
சிகரெட்

இந்த போஸ்டர், புகையிலைக் கட்டுப்பாட்டு சட்டத்தை மீறுவதாக உள்ளது என்று 'டொபாகோ மானிட்டர்' என்ற மத்திய அரசின் செல்போன் 'ஆப்'புக்கு புகார்கள் சென்று குவிந்துள்ளன. இந்த ஆப் தனியாரால் நிர்வகிக்கப்படுகிறது. நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களும் இதை அங்கீகரித்துள்ளன. இதில் பெறப்படும் புகார்கள், மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அரசின் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அந்த வகையில், விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்தின் போஸ்டருக்கு தெலங்கானாவில் புகார்கள் குவிந்துள்ளதையடுத்து, டொபாகோ மானிட்டர் நிர்வாகம் தெலங்கானா அரசுக்குப் புகார் மனுவை சமர்ப்பித்துள்ளது. புகாரின் நகல், திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கும் அனுப்பட்டது.

இந்நிலையில், புகாருக்கு திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'கிரியேட்டிவ் கமர்ஷியல்ஸ் மூவி மேக்கர்ஸ்' வருத்தம் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளது. அதில், `எங்கள் நிறுவனம் 45 ஆண்டுகளாகத் திரைப்படத் துறையில் பயணித்து வருகிறது. முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாபு உள்ளிட்டோரை வைத்து படம் இயக்கியுள்ளோம். 'வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்' எங்களின் 47-வது படம்.

cigaratte
cigaratte
Pixabay

படத்தின் போஸ்டரில் விஜய் தேவரகொண்டா புகைபிடிப்பது போன்று வெளியாகியிருப்பதற்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். ஆனாலும் அந்தப் போஸ்டரில், 'சிகரெட் புகைப்பது உடல் நலத்துக்குத் தீங்கானது' என்ற எச்சரிக்கை வாசகத்தை வெளியிட்டிருக்கிறோம்.

4 கதாநாயகிகளுடன் `வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்' விஜய் தேவரகொண்டா! - செப் 20-ல் ஃபர்ஸ்ட் லுக்

எனினும் பொது இடங்கள், சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் எங்கள் எதிர்கால விளம்பரங்களில் இத்தகைய போஸ்டர்கள் இடம்பெறாது. சட்டம் மற்றும் விதிமுறைகளை நாங்கள் எப்போதும் பின்பற்றுவோம். இந்தப் பிரச்னையால் ஏற்பட்ட இடையூறுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். இத்தகைய நிகழ்வுகள், எதிர்காலத்தில் நிகழாது என்று உறுதியளிக்கிறோம்' என்று தெரிவித்துள்ளனர்.

Vijay Devarakonda
Vijay Devarakonda

இதற்கு முன், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'சர்கார்' படத்தின் போஸ்டரிலும் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற தோற்றம் சர்ச்சையைக் கிளப்பியது.