Published:Updated:

``ரஜினியிடம் கால்ஷீட்தான் கேட்கலாம்... 5 கிலோ அரிசிக்குக் கையேந்தக்கூடாது''-வெடிக்கும் தயாரிப்பாளர்

ரஜினி
ரஜினி

''ரஜினி உதவ ரெடியா இருக்கார்னா, தயாரிப்பாளர் சங்கத்துக்குப் படம் பண்ணித்தரச் சொல்லிக் கேட்கலாம். அதை விட்டுட்டு அஞ்சு கிலோ அரிசிக்குத் தயாரிப்பாளரை 'அங்க வா இங்க வா'-னு கூப்பிட்டு கேவலப்படுத்தறதை எங்களால் ஏத்துக்க முடியாது.’’

கொரோனா, திரையுலகில் பல சர்சைகளுக்கும் காரணமாகிவருகிறது. ஏற்கெனவே தயாரிப்பாளர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையே ஓடிடி விவகாரத்தில் பிரச்னைகள் வெடித்திருக்கும் நிலையில் இப்போது தயாரிப்பாளர்களுக்குள்ளேயே மோதல். கொரோனா நிவாரண உதவியாக தயாரிப்பாளர் கே.ராஜன், ரஜினியிடம் உதவிகள் கேட்க அவர் அரிசி உள்ளிட்ட பொருள்களை வழங்கினார். ஆனால், சம்பளம் கொடுத்த முதலாளிகள் எப்படி ஒரு நடிகரிடம் போய் நிவாரண உதவிகள் கேட்கலாம் என ராஜனுக்கு எதிராக தயாரிப்பளர் சங்கத்துக்குள்ளேயே இப்போது பிரச்னை வெடித்திருக்கிறது.

''தயாரிப்பாளர்ங்கிறவன் நடிகனுக்கு சம்பளம் தர்றவன்; கே.ராஜனின் இந்தச் செயல் தயாரிப்பாளர்களை அசிங்கப்படுத்தற மாதிரி இருக்கு’' எனக் கொந்தளிக்கிறார்கள் தயாரிப்பாளார்களில் சிலர். இதுதொடர்பாக வாட்ஸ் அப் குழுவில் தயாரிப்பாளர்களிடையே நடந்து வருகிற காரசாரமான வாக்குவாதம் முடிந்தபாடில்லை.

கே.ராஜன்
கே.ராஜன்

ரஜினியின் உதவியை ஏற்க மறுக்கிறவர்களிடம் பேசினேன்.

‘’ரஜினிகாந்தை நாங்க குறை சொல்லலை. எங்க ஆளுங்க போய் சங்கத்தின் பெயரைப் பயன்படுத்தி உதவி கேட்டதைத்தான் நாங்க கண்டிக்கிறோம். சின்னப் படமோ பெரிய படமோ தயாரிப்பாளர்ங்கிறவன் ஆர்ட்டிஸ்ட், டெக்னீஷியன்னு அத்தனை பேருக்கும் சம்பளம் தர்றவன். அவன் போய், தான் சம்பளம் கொடுத்தவன்கிட்ட ’உதவி செய்’னு கேட்கறது நல்லாவா இருக்கு? அந்த அசிரி பருப்போட விலை 2000 ரூபாய் இருக்குமா, அதுக்கு வழியில்லாதவங்கதான் லட்சத்தை கோடியைப் போட்டுப் படமெடுக்குறாங்களா? தயாரிப்பாளர்களே தங்களோட சகாக்களை அசிங்கப்படுத்தற வேலை இது.

முன்னாடி படமெடுத்தவங்க இப்ப கஷ்டப்படறாங்கன்னு தெரிஞ்சு அவங்களுக்கு ரஜினி மாதிரி ஆட்கள்கிட்ட இருந்து உதவி வாங்கித் தந்தா, அதைக்கூடச் சத்தமில்லாம செய்யறதுதாங்க நாகரிகம். ஆனா ராஜன் தரப்பு ‘இங்க இத்தனை மணிக்கு அரிசி தர்றோம்னு ஊருக்கே விளம்பரப்படுத்திட்டிருக்காங்க. அதனாலதான் இதை எதிர்க்கறோம்.

உலகளவுல மார்க்கெட் இருக்கிற ரஜினி உதவ ரெடியா இருக்கார்னா, தயாரிப்பாளர் சங்கத்துக்குப் படம் பண்ணித்தரச் சொல்லிக் கேட்கலாம். அதுல வர்ற பணத்தைச் சங்கத்துல இருந்தே கஷ்டப்படறவங்களுக்குப் பிரிச்சுத் தரலாம். அதை விட்டுட்டு அஞ்சு கிலோ அரிசிக்கு ஒரு தயாரிப்பாளரை அங்க வா இங்க வா’னு கூப்பிட்டு கேவலப்படுத்தறதை எங்களால ஏத்துக்க முடியாது. ரஜினிகிட்ட கால்ஷீட் கேட்கலாமே தவிர அஞ்சு கிலோ அரிசி கொடுங்கன்னு போய் கையேந்தக்கூடாது’’ என்கிறார்கள்.

விஷால் தலைவரா உட்கார்ந்து 13 கோடியைக் காலி பண்ணிட்டுப் போயிட்டதால அந்த நிதியுதவி கூட கடந்த ஒரு வருஷமா வழங்கப்படலை. ரஜினிகிட்ட அரிசி வாங்கக்கூடாதுன்னு சொல்றவங்களுக்கு இந்த 13 கோடி மேட்டர்லாம் தெரியாதா?
கே.ராஜன்

அதேநேரம் வேறு சில தயாரிப்பாளர்களோ, ‘இந்த விஷயத்தைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை. சினிமா இன்னைக்கு முன்ன மாதிரி இல்லைங்கிறது முகத்திலடிக்கிற நிஜம். படமெடுத்து எத்தனை தயாரிப்பாளர் லாபம் அடையறாங்கன்னு எல்லாருக்கும் தெரியும். சினிமாவைத் தொட்டு எல்லாத்தையும் இழந்தவங்க நிறைய பேர் இங்க இருக்காங்க. அவங்க யாராவது கொடுத்தா வாங்கிட்டுப் போகட்டுமே. இந்த விஷயத்தைப் பெரிசுபடுத்துறதால ஏற்கெனவே நொடிஞ்சு போயிருக்கிற தயாரிப்பாளர்களை இன்னும் கஷ்டப்படுத்தணுமா? கூடவே, ரஜினிகாந்துக்கும் இதனால மன சங்கடம். அவரும் தயாரிப்பாளர் சங்கத்துல ஒரு உறுப்பினர்தான். சக உறுப்பினர்களுக்குச் செய்ற உதவியா நினைச்சுட்டுப் போகலாம்’ என்கிறார்கள்.

விஷால்
விஷால்

கே.ராஜனிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசினேன்.

‘’தயாரிப்பாளர் சங்கத்துல நலிவடைஞ்ச உறுப்பினர்களுக்கு 5000, 7000 ரூபாய்னு நிதி உதவி வழங்கிட்டிருந்தாங்க. மருந்து மாத்திரைக்கு இதை வாங்கிட்டுப் போன தயாரிப்பாளர்கள் இருக்காங்க. விஷால் தலைவரா உட்கார்ந்து 13 கோடியைக் காலி பண்ணிட்டுப் போயிட்டதால அந்த நிதியுதவி கூட கடந்த ஒரு வருஷமா வழங்கப்படலை. ரஜினிகிட்ட அரிசி வாங்கக்கூடாதுன்னு சொல்றவங்களுக்கு இந்த 13 கோடி மேட்டர்லாம் தெரியாதா? இப்படியான சூழல்ல அந்த மாதிரி கஷ்டப்படறவங்களுக்காகத்தானே உதவி கேட்டோம். ரஜினி, சங்க உறுப்பினர்ங்கிற முறையில அவர்கிட்ட கேட்க எங்களுக்கு உரிமை இருக்கு. செய்ய வேண்டிய கடமை அவருக்கு இருக்கு. இதுக்கு இடையில யார் என்ன சொன்னாலும் சொல்லிட்டுப் போகட்டும். ’வசதியா இருக்கேன்ங்கிறவங்க ஒதுங்கிட்டுப் போங்க. விருப்பப்பட்டவங்க வாங்கிட்டுப் போகட்டுமே’ என்கிறார்.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் செப்டம்பரில் நடக்க இருக்கிறது. இந்தத் தேர்தலில் மூன்று பிரிவினராக தயாரிப்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஒற்றுமையில்லாததால் சங்கத்துக்குள் சின்னப் பிரச்னை வந்தால்கூட பெரிதுபடுத்தி மோதிக்கொள்கிறார்கள் என்கிறார்கள் முன்னாள் மூத்த நிர்வாகிகள்.

ஜோதிகாவின் `பொன்மகள்' மட்டுமல்ல... இந்த ஹீரோக்களின் படங்களும் OTT  ரிலீஸுக்கு வெயிட்டிங்!
அடுத்த கட்டுரைக்கு