Election bannerElection banner
Published:Updated:

நடிகர் அஜித்தை ஏன் குற்றம் சாட்டுகிறார் பெண் ஊழியர்... சுரேஷ் சந்திரா தரப்பு சொல்வது என்ன?! #Ajith

நடிகர் அஜித்
நடிகர் அஜித்

நடிகர் அஜித்தால் தனக்கு வேலை பறிபோனதாக குற்றம் சாட்டி வருகிறார், அப்போலோ மருத்துவமனையில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர். நடந்தது என்ன என விசாரித்தோம்.

கடந்த ஆண்டு கொரோனா லாக்டெளனின் போது நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் மருத்துவ செக் அப்பிற்காக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். அப்போது அஜித் - ஷாலினி இருவரும் மருத்துவமனை வளாகத்துக்குள் நடந்துவரும்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

தங்களுடைய மருத்துவமனைக்கு வரும் நபர்களை முன் அனுமதியின்றி வீடியோ எடுப்பது அறத்திற்கு புறம்பான செயல் என்பதால், வீடியோ எடுத்த தங்கள் மருத்துவமனையில் பெண் ஊழியர் ஃபர்ஸானாவை வேலையைவிட்டு நீக்கியிருக்கிறது மருத்துவமனை நிர்வாகம். ஆனால், ஃபர்ஸானாவோ, ''அஜித்தால் பணி நீக்கம் செய்யப்பட்டேன், அவர் நினைத்தால் எனக்கு வேலை கிடைக்கும், உதவி செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டார்'' என அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் நேற்று, தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு ஃபர்ஸானா கொடுத்த பேட்டியில் ஷாலினியிடமும், நடிகர் அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திராவிடமும் அவர் பேசிய போன் ஆடியோவை வெளியிட்டு மீண்டும் சர்ச்சைக்குள்ளானார். இது தொடர்பாக, நடிகர் அஜித் தரப்பில் விசாரித்தோம்.

நடிகர் அஜித்
நடிகர் அஜித்
பா.காளிமுத்து

"ஒரு வருடத்திற்கு முன்பு அஜித்- ஷாலினி இருவரும் அப்போலா மருத்துவமனைக்கு சென்றிருந்தார்கள். அப்போது அங்கே பணியாற்றியவர் அவர்களை வீடியோ எடுக்க அது சமூகவலைதளங்களில் பரவியது. அந்த வீடியோவை பார்த்த நிர்வாகம் சிசிடிவி ஃபுட்டேஜ் மூலம் வீடியோ எடுத்தது யார் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அப்போது அந்த வீடியோவை எடுத்தது ஃபர்ஸானா என்கிற பெண் ஊழியர் என்பதை உறுதி செய்த பின்னர், அவரை வேலையைவிட்டு அனுப்பியிருக்கிறார்கள். அந்தப் பெண்ணும் ஆறு மாதமாக மீண்டும் வேலையில் சேர கேட்டிருக்கிறார். ஆனால், நிர்வாகம் மீண்டும் அவரைப் பணியில் சேர்த்துக்கொள்ளவில்லை.

அஜித்தின் வீட்டு முகவரியை கண்டுபிடித்து அங்கு சென்றிருக்கிறார். அப்போது, அஜித் ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்த சமயம். அடுத்து அவர் ஷூட்டிங் எல்லாம் முடிந்து 'ஃப்ளையிங் கிளப்'பிற்கு செல்கிறார் என்பதை யார் மூலமாவோ தெரிந்துகொண்டு அங்கே போயிருக்கிறார். வெளியே எல்லோரும் செல்ஃபி எடுக்கும்போது, அந்தப் பெண் அஜித் அருகே ஏதோ சொல்ல வந்திருக்கிறார். அதற்கு அவர், 'நீங்க எதுவா இருந்தாலும் ஆபீஸ்ல சுரேஷ் சந்திராவை கான்டாக்ட் பண்ணுங்க' என்று சொல்லியிருக்கிறார். அந்தப் பெண்ணும் நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவுக்கு போன் செய்து நடந்ததை சொன்னதும், 'இது அந்த நிர்வாகம் எடுத்த முடிவு. அதுக்கு நாங்க என்ன பண்ணமுடியும்?' எனக் கேட்டிருக்கிறார்.

பிறகு, ஃபெப்சி அமைப்பில் இருந்து சுரேஷ் சந்திராவுக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது. அதைப் பார்த்துவிட்டு, ஃபெப்சி ஆபீஸுக்கு அவர் போன் செய்து, 'அந்தப் பொண்ணுக்கும் ஃபெப்சிக்கும் என்ன சம்பந்தம்?' எனக் கேட்டிருக்கிறார். 'ஆர்ட் டைரக்டர் சண்முகம் சாருக்கு அவங்க அப்பா தெரிஞ்சவராம். அவங்க மூலமா வந்திருக்கு' என கூறியிருக்கின்றனர். ஒரு அமைப்பில் இருந்து கடிதம் வரும்போது, சம்பந்தப்பட்டவரிடம் தெரியப்படுத்த வேண்டும் என நினைத்து, அவரும் அஜித்திடம் சொல்லியிருக்கிறார். 'அவங்களுக்கு என்ன பிரச்னைனு கேளுங்க' என அஜித் சொல்ல, ஃபர்ஸானாவுக்கு போன் செய்து பேசியிருக்கிறார் சுரேஷ் சந்திரா. அப்போது தனக்கிருக்கும் பல பிரச்னைகளைப் பற்றி சொல்லிவிட்டு இறுதியாக, 'குழந்தைக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியல' என ஃபர்ஸானா சொல்ல, இந்த விஷயத்தை அஜித்திடம் சொல்லியிருக்கிறார் சுரேஷ் சந்திரா. 'அவங்க வேலைக்கு நம்மளால் என்ன பண்ணமுடியும்? படிப்புனு சொன்னதால நம்மால் முடிஞ்சதை பண்ணுவோம். அவங்க குழந்தைக்கு ஒரு வருஷத்துக்கு என்ன ஃபீஸ் வருதுன்னு கேட்டு கட்டிடுங்க' என்று சொல்லியிருக்கிறார் அஜித். அவர் மீண்டும் ஃபர்ஸானாவுக்கு போன் செய்து ஒரு வருடத்திற்கான பள்ளிக் கட்டணம் எவ்வளவு என கேட்டிருக்கிறார். 35,000 ரூபாய் என ஃபர்ஸானா சொல்ல, 'உங்கள் குழந்தையுடைய பள்ளி முகவரியை கொடுங்க. நாங்க பணம் கட்டிடுறோம்' என சுரேஷ் சந்திரா கூறியிருக்கிறார்.

நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா
நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா

ஆனால், ஃபர்ஸானாவோ 'என்னுடைய அக்கவுன்ட் விவரங்களை உங்களுக்கு அனுப்புறேன். நீங்க அதுக்கு பணத்தை அனுப்பிடுங்க' என சொல்லிருக்கிறார். அஜித் தரப்பில் இருந்து வெளியே பணம் கொடுத்தால், அது செக்காக மட்டும் கொடுப்பதுதான் வழக்கம். அதனுடைய ஒரு காப்பி ரசீது அஜித்துடைய ஆடிட்டருக்கு சென்றுவிடும். அதனால், பணத்தை அவர்கள் கையில் கொடுக்காமல் சம்பந்தப்பட்ட இடத்தில் போய் கட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அதனால் ஃபர்ஸானாவிடம் 'சார் என்ன சொன்னாரோ அதைத்தான் பண்ணமுடியும். உங்க அக்கவுன்டுக்கு அனுப்ப எனக்கு உரிமையில்லை' என கூறியிருக்கிறார் சுரேஷ் சந்திரா. உடனே, கோபப்பட்டு என்னென்னவோ பேச ஆரம்பித்திருக்கிறார், ஃபர்ஸானா. உடனே போனை கட் செய்து அவர் எண்ணை பிளாக் செய்திருக்கிறார் சுரேஷ் சந்திரா. இதன்பிறகுதான், 'அஜித்தின் மேலாளர் உதவி செய்கிறேன் எனக்கூறிவிட்டு செய்யவில்லை' என வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் ஃபர்ஸானா. போலீஸார் விசாரணையில், மேலே உள்ள அனைத்தையும் நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கமாக அளித்திருக்கிறார்'' என்றார்கள்.

இது தொடர்பாக, சுரேஷ் சந்திராவிடம் பேசும்போது, "என்ன நடந்தது என்பதை எல்லாம் தெளிவாக போலீஸாரிடம் விளக்கிவிட்டேன். இனி இதுகுறித்து பேசுவதற்கு ஒன்றுமில்லை. அஜித் சாரின் பெயருக்கு கலங்கம் விளைவிக்க இவ்வாறு செய்கிறார்கள்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு