Published:Updated:

நடிகர் சசிகுமார் பட ஷூட்டிங்… அவதியுற்ற அரசு மருத்துவமனை நோயாளிகள்?

நடிகர் சசிகுமார் நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கால் அரசு மருத்துவமனை நோயாளிகள் அவதி அடைந்தனர் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Theni GH
Theni GH

நடிகர் சசிகுமார் நடிப்பில், பொன்ராம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றின் சூட்டிங் கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் நடத்தப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று இரவு, தேனி அரசு மருத்துவமனையில் சூட்டிங் நடத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Theni GH
Theni GH

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில், தமிழக அளவில் கவனம் பெற்றுள்ளது தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள்.

இந்தநிலையில், சி.பி.சி.ஐ.டி போலீஸார், நேற்று ஆறு பேரை கைது செய்து தேனி அழைத்துவந்தனர். அதில், மாணவர் பிரவீன் மற்றும் அவரது தந்தை சரவணனை முதல்கட்டமாக குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதியிடம் ஆஜர் செய்வதற்காகத் திட்டமிட்டு, இருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

Theni GH
Theni GH

அங்கே, சுமார் 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அங்கும் இங்குமாக சைரன் சத்ததுடன் சென்றுகொண்டிருந்தன. அதனை பின்தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. இதனைக் கண்ட சி.பி.சி.ஐ.டி போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

மருத்துவமனை உள்நோயாளிகள் அனைவரும், இந்த சத்ததால் பெரும் அவதியுற்றனர். பலர் வேடிக்கை பார்த்தனர், அதில் இரவு நேர மருத்துவர்களும், செவிலியர்களும், ஊழியர்களும் அடக்கம். விசாரித்ததில் அந்த ஆம்புலன்ஸ்கள் அனைத்தும் நடிகர் சசிகுமார் நடிப்பில், பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் ஷூட்டிங்கிறாக பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.

நடிகர் சசிகுமார் படத்தின் ஷூட்டிங்கிற்கு மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையாக அனுமதி வாங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

`ஒரே ஏஜென்ட்... இன்னும் சிக்காத பலர்'- கேரளாவில் சி.பி.சி.ஐ.டி போலீஸுக்கு நடந்தது என்ன?

உடனே, அங்கிருந்த பொதுமக்கள், ஆம்புலன்ஸ்களை மறித்து படக்குழுவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த கானாவிலக்கு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து, ஆம்புலன்ஸ் ஓட்டுனரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அதற்குள் படக்குழு அங்கிருந்து சென்றுவிட்டனர் என்கின்றனர் அங்கிருந்தவர்கள். இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம்பெற படக்குழுவைத் தொடர்பு கொண்டோம். ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை.