`மாரி செல்வராஜுக்கும் யுகபாரதிக்கும் `பண்டாரத்தி' என்பது தப்புனு தெரியாதா?' - `கர்ணன்' சர்ச்சை

`கர்ணன்' திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனத் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் தயாரிப்பாளர், இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை உயர் நீதிமன்றக்கிளை உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாதி ரீதியாக மக்கள் ஒடுக்கப்படுவதையும் இழிவுபடுத்தப்படுவதையும் தன் முதல் படமான `பரியேறும் பெருமாளி'ல் வலியோடு சொன்னவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அவர் தற்போது தன் இரண்டாவது படமான `கர்ணனி'ல் ஒரு குறிப்பிட்ட சாதியை இழிவுபடுத்திவிட்டார் என்ற சர்ச்சை ஏற்பட்டு, இவ்விவகாரம் நீதிமன்ற படி ஏறியுள்ளது.

அதைத் தொடர்ந்து, மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகும் `கர்ணன்' திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் தயாரிப்பாளர், இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை உயர் நீதிமன்றக்கிளை உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் மாதம் வெளியாகவிருக்கும் `கர்ணன்' படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல், பண்டாரம் சமூகத்தை இழிவுபடுத்துவதாக மதுரையைச் சேர்ந்த புல்லட் பிரபு என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
``கலைப்புலி தாணு தயாரித்து மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்து கர்ணன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடலில் `பண்டாரத்தி... சக்களத்தி' என்று இடம்பெற்றுள்ள வார்த்தைகள் எங்கள் சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் வகையில் உள்ளன. எங்களை மன உளைச்சலுக்கும் உள்ளாக்கியுள்ளன. எங்கள் சமுதாய மக்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மிகவும் பின்தங்கியுள்ளனர்.

இப்பாடல் தமிழகம் முழுவதும் வசிக்கும் பண்டாரம், ஆண்டிப்பண்டாரம், ஜங்கம், யோகிஸ்வரர் ஆகிய சமுதாய மக்களின் மதிப்பை கெடுக்கும் வகையில் உள்ளது. இப்பாடல் வரிகள், திரைப்படங்களுக்கான கட்டுப்பாடுகளை விதிக்கின்ற சினிமாட்டோகிராஃபி சட்டம் 1952-க்கு எதிரானது. இது குறிப்பிட்ட சமுதாயப் பெண்களை இழிவுபடுத்தியும், அவர்களின் நன்மதிப்பை கெடுக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
`கர்ணன்' திரைப்படப் பாடலில் உள்ள பண்டாரத்தி - சக்காளத்தி என்ற வரிகளை நீக்கிவிட்டு படத்தை வெளியிட உத்தரவிட வேண்டும். அதுவரை படம் வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இப்பாடலை யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும்" என தன் மனுவில் கூறியிருந்தார் புல்லட் பிரபு.

மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு, மனுதாரரின் கோரிக்கை குறித்து, தணிக்கை துறையின் அலுவலர், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
`கர்ணன்' படக் குழு தரப்போ, `பண்டாரம் என்பது பொதுவான பெயர்தான். அது எந்த சாதியையும் இழிவுபடுத்தும் வார்த்தை இல்லை' என்று கூறி வருகிறார்கள். பண்டாரம் சமூகத்தினரின் வீர சேவை பேரவையினர், `கர்ணன்' படத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், இவ்வழக்கின் மனுதாரர் புல்லட் பிரபுவின் வழக்கறிஞர் விஷ்ணுவர்த்தனிடம் பேசினோம். ``ஏப்ரல் 16-ம் தேதி விளக்கம் அளிக்க படத் தயாரிப்பாளர், இயக்குநருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கு. ஆனா, படத்துக்கு இன்னும் சர்டிஃபிகேஷன் கொடுக்காததால இடைக்காலத் தடை கொடுக்கல. அவர்கள் இப்பாடலை இணையதளத்தில் வெளியிடுவதற்கும் சர்டிஃபிகேட் கொடுக்கல.

`பண்டாரத்தி என்ற பெயர் அனைத்து சாதியிலும் வைக்கப்படும் பெயர்தான்'னு படத்தரப்பினர் சப்பைக்கட்டு கட்டுறாங்க. அப்படியே ஒரு சிலர் அப்பெயரை வெச்சாலும், பிரதானமா பார்க்கும்போது அது சாதிப் பெயர் என்றுதானே எல்லாருக்கும் தெரியும்? சினிமாவில் சாதிப்பெயரை பயன்படுத்தக் கூடாது என்பதுதான் சட்டம். நான் நேரடியாவே இயக்குநர்கிட்ட மாரி செல்வராஜ்கிட்ட பேசினேன். தன் உறவினர்கள் அந்தப் பேரை வெச்சிருந்ததால பயன்படுத்தினதா மேம்போக்கா சொன்னார். அதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், மற்ற சமூகப் பெயர்களால அந்த சமூகப் பெண்களை குறிப்பிடுற வார்த்தைகளை சினிமாவில் இப்படி `...தி' விகுதி போட்டு பயன்படுத்துவாங்களா? பண்டாரத்தியை மட்டும் எப்படி குறிப்பிடலாம்?
மாரி செல்வராஜ் வீடிருக்கும் தெருவிலேயே ரெண்டு பண்டாரம் சமூகத்தினர் வீடு இருக்கு. அது மட்டுமில்லாம, தென் மாவட்டத்துல இந்த சமூகத்தினர் பரவலா வாழ்றாங்க. இந்தச் சமூகப் பெண்களை இழிவுபடுத்துறது மாதிரி இந்தப் பாட்டு இருக்கு.
தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட சமூகப் பெண்களை இழிவுபடுத்தி பாடல் எழுதுறதை அனுமதிக்க முடியாது. சமூக ஒடுக்குமுறைகள் பற்றி பல பாடல்கள் எழுதியிருக்குற கவிஞர் யுகபாரதி ஏன் இப்படி எழுதினார், அவருக்கு தென் மாவட்ட சமூகங்களை பற்றி தெரியலையானு புரிஞ்சுக்க முடியல.
இப்போ நாங்க வைக்கிற கோரிக்கை, பாடலில் உள்ள சாதி சம்பந்தப்பட்ட அந்த வரிகளை நீக்கணும். படம் வந்த பிறகுதான், படத்தில் இந்த சாதி பற்றிய விஷயங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கா, எப்படி பதிவு செய்யப்பட்டிருக்குனு பார்க்கணும்.
டீசர் வெளியிட மட்டும்தான் சர்டிஃபிகேட் வாங்கியிருக்காங்க. ஆனா, சர்டிஃபிகேட் வாங்காம இந்தப் பாடலை சட்டவிரோதமாக வெளியிட்டிருக்காங்க. இதை யூடியூப்பிலும் வெளியிட்டிருக்காங்க.
இதுவரை சில படங்களுக்கு சாதிப்பெயர்கள் வெச்சாங்க. ஆனா, ஒரு பாடலை குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உருவாக்கியிருக்கிறது அதிர்ச்சியா இருக்கு. கதையை எல்லாம் விடுங்க. நாளைக்கு அந்த சமூகத்தை சேர்ந்த பெண்கள் போகும்போது, `பண்டாரத்தி என் சக்காளத்தி'னு இந்தப் பாடலை யாராச்சும் பாடுறாங்கனு வெச்சுப்போம்... அது அவங்களை இழிவுபடுத்துற கணக்குல வராதா?

இந்தப் பாடலால வீர சைவ பேரவையினர் பெரும் கொந்தளிப்புடன் இருக்காங்க. போராட்டம் நடத்தத் தயாராகி வர்றாங்க. சாதிய இழிவுகளுக்கு எதிராகப் பேசி வரும் மாரி செல்வராஜ், தன் பேச்சுக்கு எல்லாம் முரணாவும் எதிராவும் இந்தப் பாடலை உருவாக்கியிருக்கார். பாடலை கேட்குற சாமான்ய மக்களுக்கே, `அட, என்ன இப்படி எழுதிட்டாங்களே'னு தோணும். ஆனா மாரி செல்வராஜ், பண்டாரம் என்பது ஒரு சமூகப் பெயர், பண்டாரத்தினு பாடல் எழுதுறது அந்தப் பெண்களை இழிவுபடுத்துற மாதிரி அமையும்ங்கிற அடிப்படை சிந்தனைகூட வராமலா இந்தப் பாடலை உருவாக்கியிருப்பார்?
சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்ல `திண்ணிப் பண்டாரம்' என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு எதிரா 2018-ல நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றுள்ளோம். சாதியைச் சொல்லி இழிவுபடுத்துவது தவறு. இதுக்கு ஒரு நியாயம் கிடைக்கும்வரை சட்டப் போராட்டத்தையும், மக்கள் போராட்டத்தையும் நடத்துவோம்" என்றார்.
இது பற்றி இப்பாடலை எழுதிய கவிஞர் யுகபாரதியை தொடர்புகொண்டு கேட்டோம். ``தயாரிப்பாளர், இயக்குநர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்கள். என் மீது அல்ல. அதற்கான பதிலை அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவிப்பார்கள். மேலும், வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் பாடலுக்கான விளக்கத்தை நான் தற்போது கூற முடியாது" என்றார்.
இதுதொடர்பாக பேச இயக்குநர் மாரி செல்வராஜை தொடர்புகொள்ள முயன்றோம். அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை. அவர் விளக்கம் தரும் பட்சத்தில், அதையும் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.