திரைப்படப் பாடல்களும் காப்புரிமையும்...! -கிறிஸ்துமஸ், புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குக் கட்டுப்பாடு

காப்புரிமைச் சட்டம் 1957ன் படி, பொது நிகழ்ச்சிகளில் ஒரு பாடலைப் பயன்படுத்தும் முன், காப்பரேட் நிறுவனமோ அல்லது தனிநபரோ, அந்த இசையின் காப்புரிமை பெற்றவர்களிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு அன்று உணவகங்கள், பார்கள், ரெஸார்ட்டுகளில் உரிய கட்டணம் செலுத்தாமல் திரைப்படப் பாடல்களை ஒலிக்கச் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
இதுகுறித்து ஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடட் என்ற நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட 30 லட்சத்துக்கும் அதிகமான சர்வதேசப் பாடல்களை, பொது நிகழ்ச்சிகளில் ஒலிபரப்ப /பாடுவதற்கான உரிமையையும் அதற்கான கட்டணத்தை வசூலிக்கும் உரிமையையும் பெற்றுள்ளது இந்த நிறுவனம்.
ஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடட் (பிபிஎல்) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ``இன்று இந்திய இசை நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால், பெரும்பாலான இந்தியர்களுக்கு தாங்கள் ரசிக்கும் இசைக்கான பணத்தைத் தர வேண்டும் என்றோ அல்லது அதுபற்றிய விழிப்புணர்வு இல்லாததுதான். இந்த துரதிர்ஷ்டவசமான உண்மைதான் உணவகங்கள், பார்கள், பொது நிகழ்ச்சி நடத்தும் நிறுவனங்கள், கஃபேக்கள் எனப் பல இடங்களில் பிரதிபலிக்கிறது. இவர்கள் பிபிஎல்லிடமிருந்து உரிய அனுமதி பெறாமல் இசையை ஒலிக்கச் செய்து தொடர்ந்து அறிவுசார் சொத்துரிமை சட்டங்களை மீறி வருகின்றனர்."
மேலும், காப்புரிமைச் சட்டம் 1957ன் படி, பொது நிகழ்ச்சிகளில் ஒரு பாடலைப் பயன்படுத்தும் முன், காப்பரேட் நிறுவனமோ அல்லது தனிநபரோ, அந்த இசையின் காப்புரிமை பெற்றவர்களிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும் என்பதை அந்த அறிக்கை சுட்டிக் காட்டியிருக்கிறது. ``காப்புரிமை பெறப்பட்ட பாடல்களுக்கான உரிமத்தை வழங்கக் காப்புரிமைச் சட்டம் பிபிஎல் அமைப்புக்கு அனுமதி அளித்துள்ளது. பிபிஎல் நிறுவனம் பெரும்பாலான இந்தி மற்றும் பிராந்திய மொழிப் பாடல்களின் உரிமைகளைப் பெற்றுள்ளது. பல சர்வதேச இசை நிறுவனங்களின் பாடல்களுக்கான பொது நிகழ்ச்சிகள் மற்றும் வானொலி ஒலிபரப்பு உரிமையையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. காப்புரிமைச் சட்டம் 1957 பிரிவு 51 மற்றும் 63ன் கீழ் எந்தக் குற்றமாக இருந்தாலும் அது சட்டவிரோதம் மற்றும் தண்டனைக்குரியது," என்கிறது அந்த அறிக்கை.